பயன்படுத்திய பிறகு அந்தப் பேனாவை மண்ணில் நட்டால் ஒரு மரம் வளரும். தனது “ப்யூர் லிவிங்’’ என்ற அமைப்பின் மூலம் இதைச் செய்து காட்டி இருக்கிறார் கொச்சியில் (தெற்கு கேரளம்) வசிக்கும் லட்சுமி மேனன்.
சாதாரண பால்பாய்ண்ட் பேனாவை 5 ரூபாய்க்குக்கூட வாங்க முடிகிறது என்பது உண்மைதான். ஆனால், 12 ரூபாய் என்று விலை இருந்தும்கூட பூமியின் சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்ட பலரும் இதை வாங்குகிறார்கள். இதுபற்றி இதை உருவாக்கிய லட்சுமி மேனன் கூறுகையில்,
“பேனாவைப் பயன்படுத்திய பிறகு அதை அப்படியே மண்ணில் நட்டால், பேனாவின் கீழ்ப்புறமுள்ள விதை வளர்ந்து மரமாகும். பலரும் அந்த மரங்களைப் புகைப்படம் எடுத்து எங்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள். சில பள்ளிகளுக்கு இவற்றை நான் அளித்தி ருக்கிறேன். பேனாவைப் பயன்படுத்தி விட்டு அந்தக் குழந்தைகள் ‘நட்டு வைத்த விதைகள்’ இன்று மரங்களாகக் காட்சியளிக்கின்றன.’’
“செஸ்பானியா கிராண்ட்ஃப்ளோரா (Sesbania Grandflora) என்ற தாவரத்தின் விதைகளைத்தான் நாங்கள் பயன்படுத்துகிறோம். இதை அகஸ்தியர் மரம் என்றும் கூறுகிறார்கள். இதன் விதை சிறியதாக இருப்பதால் பேனாக்களின் அடிப்பாகத்தில் இவற்றை எளிதாகப் பொருத்த முடிகிறது. தவிர வேகமாக வளரும் மரம் என்பதோடு, மருத்துவக் குணங்களும் கொண்டது.
ஏற்கெனவே பயன்படுத்திய, அச்சிடப்பட்ட நாளிதழ்களின் தாள்களைத்தான் பேனாக்கள் செய்யப் பயன்படுத்துகிறோம். ஆக மறுசுழற்சி செய்யப்பட்ட வேஸ்ட் பேப்பர்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. தவிர, இதைத் தயாரிப்பதில் பெண்களையும், மாற்றுத் திறனாளிகளையும் அமர்த்தி அவர்களது வருமானத்துக்கும் முடிந்த அளவு உதவுகிறோம்.
பத்து பேரை பணியமர்த்தி இருக்கிறேன். தினமும் 1,500 பேனாக்கள் வரை தயாரிக்க முடிகிறது.’’
மீண்டும் ரீஃபில்லைப் பொருத்திப் பயன்படுத்தக்கூடிய பேனாக்களைக் கூட நாம் ஒருமுறை பயன்படுத்தியவுடன் தூக்கி எறிந்துவிடுகிறோம். ப்ளாஸ்டிக் எனும் மட்கா குப்பை மேலும் மேலும் சேர நாம் இந்த வகையில் காரணமாக ஆகிறோம். இந்தச் சூழலில் ப்ளாஸ்டிக்கைத் தவிர்க்கும் எந்த முயற்சியும் பாராட்டத்தக்கதுதான். கூடவே இதனால் மரங்களின் எண்ணிக்கையும் பெருகுகிறது என்பதால் இது ஒரு சிறந்த படைப்பாகும்!