உண்மை’ இதழின் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்! ஒவ்வொரு இதழிலும் மனித சிந்தனையைத் தூண்டும் சிறுகதை மற்றும் சீர்திருத்த யுக்தியைக் கொண்ட பலதரப்பட்ட உண்மைகளை ஒவ்வொருவர் மனதிலும் உண்மையாகப் பதியவைக்கும் தங்களுக்கு நன்றி!
தங்கள் இதழில் வெளிவந்த “பார்வதி குளம்’’ என்ற சிறுகதை சமுதாய மாற்றம் பற்றி அருமையாக விளக்கியுள்ளது. இக்கதையின் ஆசிரியர் திரு.ஆறு.கலைச்செல்வன் அவர்களுக்கு மனங்கனிந்த பாராட்டுகள்.
– இரா.திலகம், அகரம், புதுப்பேட்டை
தலைதாழா தன்மானச் சிங்கம், தந்தை பெரியாரின் 139ஆம் பிறந்த நாள் சிறப்பு மலர் (செப் 1-_15) இதழ் முழுவதும் படித்தேன். நீதிக்கே நீதி சொன்ன அய்யா அளித்துள்ள சமூக நீதியைக் காப்பாற்ற, சட்டங்கள் மாற்றப் படுவதிலோ, தீர்ப்புகள் திருத்தப்படுவதிலோ எந்தத் தவறும் இல்லை. இது ஒரு சமுதாயத்தின் உரிமை. போராடிப் பெறுவதும் அவர்களது உரிமை. மக்கள் உரிமையை மதித்து அதை வழங்குவது அரசின் கடமை! தங்களின் தலையங்கம், இதனை நன்கு உறுதிப்படுத்துகிறது!
“தரணி போற்றும் தன்மானச் சூரியன் தந்தை பெரியார்’’ என்ற தங்களின் கட்டுரையில் சுயமரியாதை இயக்கத்தைப் பேரங்காடி(சூப்பர் மார்க்கெட்)யோடு ஒப்பிட்டிருப்பது, எளிமையான, ஆனால், ஆணித்தரமான விளக்கம்! அய்யாவின் கொள்கை உலகமயமாகியே தீருமென்பதற்கு தங்களின் இந்தக் கட்டுரையே சான்று!
“சோறு போட்டு உதை வாங்கின கதை’’ கவிஞர் கலி.பூங்குன்றனாரின் கட்டுரை, ஓர் இயக்கம் வளர பரப்புரை எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்குகிறது.
மானமிகு மஞ்சை வசந்தனாரின் கட்டுரையும், பேராசிரியர் சுப.வீரபாண்டியனாரின் கருத்துகளும், அய்யாவின் தொண்டறத்தின் சிறப்பினை நன்கு விளக்குகின்றது.
‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ படிக்கும்போது கடந்தகால கழகத்தின் பயணச் சுவடுகள் கண் முன்னே விரிகின்றன. எத்தகைய எழுச்சிமிக்க காலம் அது. இளைஞர்கள் படித்து, பயன்பெற வேண்டிய வரலாற்றுக் கருவூலம்!
‘பார்வதி குளம்’ சிறுகதை நூலகத்தின் சிறப்பையும், மற்றும் தங்களின் அண்ணாவைப் பற்றிய சொல்லோவியமும் மிக மிக கருத்துச் செறிவுள்ளவைகள்! அய்யா அறிவுக்கரசு அவர்களின் தொடர், டாக்டர் அம்பேத்கரின் உயர் எண்ணங்களின் சிறப்பு மலர், படிப்போருக்கு ஒரு கருத்துக் கருவூலம்!
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
தகுதி – திறமை?
உண்மை இதழில் (16_30, 2017) “அனிதா மூட்டிய அறத்தீ! ஆதிக்கச் சக்திகளை அழிக்கும், சமூக நிதியை மீட்கும்’’ என்ற கட்டுரை காலத்தின் அருமை கருதி வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக, சமூக அநீதியை எடுத்துரைக்கும் ஆனந்தவிகடன் கருத்துப்படம் காலத்தால் அழிக்க முடியாத கருத்தோவியமாக இருந்தது. அவை, இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
தகுதி, திறமை என்று கூப்பாடு போட்ட பார்ப்பனர்களைப் பார்த்து, “தகுதி _ திறமை’’ என்பது ஓர் மோசடிச் சொல் என்று கல்வி வள்ளல் காமராசர் சாட்டை அடி கொடுத்தார். நமது இன மக்கள் கல்வியும், வேலைவாய்ப்பும் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக சமூகநீதியை நேரடியாக எதிர்க்கத் துணிவில்லாத இன எதிரிகள் குறுக்கு வழியில் “நீட்’’டின் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வாய்ப்பை ஒழிக்கும் சதிச்செயலே இது!
எனவே, தந்தை பெரியார் போராடிப் பெற்ற சமூகநீதியை _ இடஒதுக்கீட்டைப் பேணிப் பாதுகாக்க, இன எதிரிகளின் சூட்சமத்தை முறியடிக்க இளைஞர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்து சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும்.
– சீதாலட்சுமி, வெள்ளிமேடுபேட்டை, திண்டிவனம்