வாசகர் கருத்து

செப்டம்பர் 16-30

 

 

 

                                      கருத்துக் கருவூலம் உண்மை! காத்து வளப்பது நம் கடமை!

கடை வீதிகளில் நாள்தோறும் எண்ணற்ற வார இதழ்கள், மாத இதழ்கள் கண்களைக் கவரும் வண்ணங்களில் தோரணங்களாய் அணிவகுத்து நிற்கின்றன. ஆனால், அவ்விதழ்களில் சமூக நலன் சார்ந்த கருத்துகளோ, அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான நோக்கங்களோ உள்ளனவா என்பது கேள்விக்குறியே? ஏனெனில் அவைகள் பல்வேறு வகையான விளம்பரங்களைத் தாங்கி வணிக நோக்கோடு வெளிவருகின்ற இதழ்கள் ஆகும்.

இத்தகைய நிலையில் எவ்வித விளம்பரமும் லாபநோக்கமும் இன்றி சமூக நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சமுதாயச் சிந்தனைகளையும், பகுத்தறிவுக் கருத்துகளையும் தாங்கி வெளிவருகின்ற ஒரே இதழ் “உண்மை” மாத இதழ் மட்டுமே.

எடுத்துக்காட்டாக, தந்தைபெரியார் அவர்களின் 139-ஆம் ஆண்டு பிறந்தநாள் சிறப்பு மலராக (செப்டம்பர் 1—15) வெளிவந்திருக்கும் உண்மை இதழ் எண்ணற்ற சமுதாய நலன் சார்ந்த கருத்துக்களைத் தாங்கி வெளிவந்திருப்பது இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் புதிய செய்தியாக மட்டுமன்றி செறிவான – நிறைவான செய்திகளை உள்ளடக்கியதாக இருந்தது. குறிப்பாக;

1.    ஆசிரியர் கி. வீரமணி, அவர்கள் கைவண்ணத்தில் நீட் — – மத்திய அரசின் நடவடிக்கை நம்பவைத்துக் கழுத்தறுப்பு! எனும் தலையங்கம் இன்றைய மாணவர்-களுக்கு மட்டுமன்றி வருங்கால சந்ததியினரும் பயன்பெறும் வகையில் கருத்தாழமிக்க கருத்துக்களைத் தாங்கி நின்றன.

2.    தந்தை பெரியார், சென்னையில் (10.01.1950) ஆற்றிய சொற்பொழிவு மற்றும் விடுதலை நாளேட்டில் (15.02.1960) வெளிவந்த “ஆரியக் கலாச்சாரத்தைப் புகுத்தவே சமஸ்கிருதம்! சமஸ்கிருதத்தைப் புகுத்தவே கட்டாய இந்தி!” என்ற கட்டுரை இன்றைய இளைஞர்களுக்கு தெவிட்டாத தேன்சுவை மிகுந்த அரிய செய்திகளை அள்ளிக் கொடுத்தது.

3.    தமிழர் தலைவர் கி.வீரமணி, அவர்களின் “தரணி போற்றும் தன்மானச் சூரியன் தந்தை பெரியார்!” கட்டுரையின் இறுதியில் ஜெர்மன் மாநாடு – பெரியார் கொள்கைகள் உலகம் முழுவதும் பாய்கின்ற பாய்ச்சலுக்கு முதல் பாய்ச்சல் எனும் வரிகள் மின்னும் வைரமாய் ஜொலிக்கின்றன.

4.    கவிஞர் கலி. பூங்குன்றன், அவர்களின் “சோறு போட்டு உதை வாங்கின கதை!” – தொடக்கத்திலேயே இந்தியத் துணை கண்டத்தில் சமூகத்தின் சகல பரிமாணங்களையும் சரியான கண்கொண்டு பார்த்துக் கணித்த இருபெரும் தலைவர்கள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கருமே! என்ற வரிகள் இளைஞர்கள் சிந்திக்கவும், அவர்கள் வகுத்துத் தந்த பகுத்தறிவுப் பாதையில் பீடு நடை போடவும் அச்சாரமாக அமைந்தன.

5.    எழுத்தாளர் மஞ்சை வசந்தன்,- “தொலைநோக்குச் சிந்தனையில் தலைசிறந்த தந்தை பெரியார்!” என்ற தலைப்பில் சுட்டிக் காட்டியுள்ள ‘சுயமரியாதை’ எனும் சூட்சமச் சொல்லே உலக மக்களின் உரிமைகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒப்பற்ற போர்க்கருவி என்ற வரிகள் வைர வரிகளாக மின்னுகி ன்றன.

6.    பேராசிரியர் சுப. வீரபாண்டியன், – “இருமொழிக் கொள்கை திராவிட இயக்கத்தின் தொலைநோக்கு” கட்டுரையில், இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கையன்று. இருமொழிக் கொள்கையே இன்றைய சூழலில் நம்நாட்டிற்கு ஏற்ற கொள்கை! என்ற ஆணித்தரமான அடுக்கடுக்கான எடுத்துக்காட்டுகள் இன எதிரிகளுக்கு சம்மட்டி அடியாக அமைந்துள்ளன.

7.    தோழர் கோவி. லெனின்,  “உலகமயச் சூழலில் உயர்ந்து நிற்கும் பெரியார் சிந்தனைகள்!” என்ற தலைப்பில்– இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டால், மானுடப்பற்றை முதன்மையாகக் கொண்ட பெரியாரின் புத்துலகம் முழுமையாக மலரும் என்ற வரிகள் இந்திய நாடு விரைவில் பெரியார் நாடு என்பதாக உருப்பெற்று எழும் என்ற நம்பிக்கை விதையை விதைத்தது.

8.    தமிழன் பிரசன்னா, – “கும்புடுகிறேன் சாமி” எனும் நிலை மாறி, வணக்கம், பிவீ, பிணீஹ், பீuபீமீ என்று சுதந்திரமாய்ச் சொல்லி வாழ வழி வகுத்தவர் தந்தை பெரியார். இவை வெறும் வார்த்தை மாற்றம் மட்டும் அல்ல! இவை ஒரு வர்க்கத்தின் தலைமுறை மாற்றம்! எனும் வரிகள் இளைஞர்கள்  மாணவர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றன.

இவ்வாறு சமூக அக்கறையோடு. மக்கள் நலன் சார்ந்த எண்ணங்களை பல வண்ணங்களாகத் தீட்டி, பகுத்தறிவுக் கருத்துகளைத் தாங்கி வெளிவருகின்ற தேனினும் இனிய “உண்மை” மாதமிருமுறை கருத்துக் கருவூலமாக – பாதுகாத்துப் போற்றப்பட வேண்டிய பாதுகாப்புப் பெட்டகமாகக் கருதி, அதனை ஊர்தோறும் கொண்டு சென்று பாமர மக்களிடையே பரப்புகின்ற மனிதநேயப் பணியை உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் (செப்டம்பர் -17) அன்று துவங்கிட, இளைஞர்களும் – மாணவர்களும் ஆயத்தமாகி வருகின்றனர். நாமும் அவர்களுக்கு தோள் கொடுப்போம். துணை நிற்போம்!

உண்மை மாதமிருமுறை ஊர்தோறும் பரப்புவோம்!

உலகம் போற்ற உயர்த்திப் பிடிப்போம்!

    – சீ.இலட்சுமிபதி,  
தாம்பரம்,     
சென்னை – 45.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *