சாமியார்கள் என்றாலே அவர்கள், “நெஞ்சினில் நஞ்சு வைத்து நாவில் அன்பு காட்டி’’ ஏமாற்றுகிறவர்கள் என்றே பொருள்.
இதில் போலிச் சாமியார், நல்ல சாமியார் என்பதெல்லாம் அறியாமை! எல்லாம் போலிகள்தான்.
மாட்டிக்கொண்ட சாமியார், மாட்டிக்கொள்ளாத கெட்டிக்கார சாமியார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
“காவிக்குள் ஒடுங்கிய
காம ஆமைகள்!
காலத்தை எதிர்நோக்கும்
கபட ஊமைகள்!
வாய்ப்பிற்காய் வாலசைக்கும்
மோப்ப நாய்கள்!
வளைக்காமல் சொன்னால்
வக்கிர நோய்கள்!’’
என்று சாமியார்கள் பற்றியும்,
“மன்மத பீடம்
மடமையின் கிடங்கு!
விட்டில் பெண்களை
விருந்தாய் அருந்தும்
விசித்திர விடுதி!
உள்ள அழுக்கை
தப்பினை மறைக்க
தவவேடம் புனையும்
ஒப்பனைக் கூடம்’’
என்று சாமியார்களின் மடங்கள் பற்றியும் நான் எழுதிய கவிதைத் தொகுப்பில், சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தேன். அவை இனறைக்கும் முழுதும் பொருந்துவதை நீங்கள் அறியலாம்.
சாமியார்கள் உருவான காலந்தொட்டே அவர்களின் மோசடிகளும், காமலீலைகளும் உருவாகிவிட்டன. ஆனால், இக்காலத்தில் அவை உச்சத்தில் உள்ளன. அதிலும் குறிப்பாக மதவாத பிஜேபி ஆட்சியில் சாமியார்களின் சாம்ராஜ்யமே நடக்கிறது என்று சொல்லலாம்.
மோடி ஆட்சியில் கார்ப்பரேட் முதலாளி-களும் கார்ப்பரேட் சாமியார்களுமே ஆதிக்கம் பெற்று ஆட்சி புரிகின்றனர். குறிப்பாகச் சொன்னால், அவர்களே அதிகார மையங்களாய் அமைந்து ஆட்டிப் படைக்கின்றனர். அதனால், அவர்களின் அராஜகச் செயல்பாடுகளை அடக்கவோ, தட்டிக் கேட்கவோ ஆளும் இல்லை; ஆட்சியும் இல்லை!
அதன் அடையாளம்தான் அண்மையில் ஹரியானாவிலும், பஞ்சாபிலும் சாமியாருக்காக நடந்த கலவரங்களும், உயிரிழப்புகளும்.
குர்மித் ராம் ரஹீம் சிங்
“தேரா சச்சா சௌதா’’ என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் என்ற சாமியார் வன்புணர்வு குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது இரு மாநிலங்களிலும் கலவரங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு, இன்னும் பதற்றம் தணியாத நிலை காணப்படுகிறது.
குற்றம் செய்தவனுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்குகிறது. இதுகுறித்து கலவரம் வெடித்து உயிரிழப்பு ஏற்படுகிறது என்றால் சாமியார்களின் சாம்ராஜ்யம் எந்த அளவுக்குக் கொடிகட்டிப் பறக்கிறது என்பதை எவரும் அறியலாம்!
அரியானா மாநிலத்தில் உள்ள சிர்சா என்ற ஊரில், மஸ்தான பலுஸ்த்தானி என்ற சாமியாரால், 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் நாள் “தேரா சச்சா சவுதா’’ என்ற அமைப்பு, ஆன்மீகம் மற்றும் சமூக நலத்திற்காக உருவாக்கப்பட்டது.
இந்தியாவிலும் ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபுக் குடியரசு, இங்கிலாந்து, ஆத்திரேலியா போன்ற நாடுகளிலும் இந்த அமைப்புக்கு ஆசிரமங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 6 கோடி சீடர்கள் இருக்கிறார்கள்.
அமைப்பின் வரலாறு
தேரா சச்சா சவுதா என்ற அமைப்பைத் தொடங்கிய மஸ்தான பலுச்சிஸ்தானை, அருள்மிகு பேபரவா மஸ்தானா மகராஜ் என்று பக்தர்கள் அன்புடன் அழைத்து வந்தார்கள். இவர் 1960 ஏப்ரல் 18 இல் காலமானார். அவரை அடுத்து சா சத்னம் சிங் என்பவர் தலைமை ஏற்றார். அவருக்குப் பின் மூன்றாம் அதிபதியாக குர்மீத் ராம் ரகீம் சிங் என்பவர் 1990 செப்டம்பர் 23 இல் தலைமைப் பதவியை ஏற்றார்.
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டம், கருசார் மோதியா கிராமத்தில் ஜாட் சீக்கிய குடும்பத்தில் 1967 ஆகஸ்டில் குர்மீத் ராம் ரஹீம் சிங் பிறந்தார். 7 ஆ-வது வயதிலேயே தேரா சச்சா அமைப்பில் இணைந்தார். 23- ஆவது வயதில் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
“தேரா சச்சா சவுதா”வின் தலைமை பொறுப்பை குர்மீத் ராம் ரஹீம் சிங் ஏற்ற பிறகு, அந்த அமைப்பு பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டது. சிர்ஸாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, கிரிக்கெட் மைதானம் எனப் பல வசதிகளை ஏற்படுத்தியது. 2010 இ-ல் ராம் ரஹீம் சிங்கின் அறிவுரையின்படி தேரா சச்சா சவுதாவின் 1000 தொண்டர்கள் பாலியல் தொழிலாளிகளை திருமணம் செய்தனர். இத்தொண்டுகளும், திருமணங்களும் இவரின் குற்றங்களை மறைத்து நன்மதிப்பை ஏற்படுத்தவும், நன்கொடைத் திரட்டவும் செய்யப்பட்ட கபட நாடகங்களாகும். இவருக்கு ஹர்ஜித் கவுர் என்ற மனைவியும் இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
மெஸஞ்சர் ஆப் காட் என்ற தலைப்பில் 5 திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த
2007-இல் சீக்கியர்களின் மத குருவான கோவிந்த் சிங் போன்று உடையணிந்து விளம்பரம் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக “தேரா சச்சா சவுதா” மன்னிப்பு கோரியது. 2015- ஆம் ஆண்டில் தன்னை விஷ்ணு போல சித்தரித்து வீடியோ வெளியிட்டார். இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இவர் மீது பாலியல் பலாத்கார சர்ச்சை எழுந்தபோது ஆசிரமத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் மர்ம மான முறையில் கொல்லப்பட்டார். ஆசிரமம் குறித்து எழுதிய பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி என்பவரும் படுகொலை செய்யப்பட்டார். “தேரா சச்சா சவுதா” ஆசிரமங்களைச் சேர்ந்த 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
2002 இல் வன்புணர்ச்சி குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடர்ந்து நடைபெற்ற நிலையில், பாலியல் பலாத்கார வழக்கில் இச்சாமியார் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தவுடன் ஹரியானாவிலும், பஞ்சாபிலும் கலவரம் வெடித்தது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என ஆகஸ்ட் 25 ஆம் தேதி நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவுடன் ஹரியானா மற்றும் பஞ்சாபில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் ஊடக வாகனங்கள், பேலீசார், பொதுமக்கள் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தினர். வன்முறைகளில் 30-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 250 பேர் காயமடைந்துள்ளனர். பொதுச் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.
வன்முறை காரணமாக, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் சொத்துகளை கணக்கெடுக்கும் பணியை ஹரியானா, பஞ்சாப் மாநில அரசுகள் தொடங்கியுள்ளன. “தேரா சச்சா சவுதா” அமைப்பிற்கு வங்கிகளில் இருக்கும் கணக்குகள் பற்றிய விவரங்களைத் தருமாறு வங்கிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இருமாநில அரசுகளும் தெரிவித்துள்ளன.
ஆசாராம் பாபு
குஜராத்தின் ஆமதாபாத் அருகே, ஆசிரமம் நடத்தி போலீசாரிடம் மாட்டிக்கொண்ட ஆசாராம் பாபு, லட்சக்கணக்கில் சீடர்கள் கொண்டவர். ஆசாராம் பாபு வடஇந்தியாவில் இருக்கும் பல மதகுருக்களில் ஒருவர்.
கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்ற நடவடிக்கைகளுக்காக இவர் மீது வழக்குகள் உள்ளன.
மத்திய டில்லியில் உள்ள, கமலா மார்க்கெட் காவல் நிலையத்திற்குச் சென்ற, பெயர் குறிப்பிடப்படாத இளம்பெண் ஒருவர், 72 வயதான ஆசாராம் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், பலாத்கார சம்பவம், ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள, ஆசாராம் ஆசிரமத்தில் நடந்ததாக அப்பெண் கூறியதால், வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரிக்குமாறு, ராஜஸ்தான் போலீசாரைக் கேட்டுக் கொண்டனர். புகாரையும் அங்கு அனுப்பினர்.
உத்தரப்பிரதேசம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த அவர், சாமியார் ஆசாராம் பாபுவிடம் ஆசி பெறுவதற்காக, தனது 15 வயது மகளுடன் 13.08.2013 அன்று ஜோத்பூர் சென்றுள்ளார். தனது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாகச் சொல்லி அவரிடம் சென்று முறையிட்டுள்ளார். 15.08.2013 அன்று அதற்கான சடங்குகளைச் செய்கிறேன் என்று ஆசாராம் பாபு சொல்லியிருந்தார். கிரியைகள் செய்யும்போது, நீங்கள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னாலும், அந்தப் பெண்ணின் குடும்பம் அங்கேயே தங்கி இருந்தது.
அப்போது ஆசாரம் பாபு தன்னை மானபங்கம் செய்ததாக அச்சிறுமி, தனது தந்தையிடம் கூறியதோடு இதுகுறித்து 22-.08.2013 மாலை புகார்அளித்தார். இவன் பல சிறுமிகளை வன்புணர்வு செய்து கொன்றான். அவனுடைய குற்றச் செயல்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டான்.
பதிவுபெற்ற ஆயுர்வேத மருத்துவரான அம்ருத் பிரஜாபதி 15 (1990—-2005) ஆண்டுகள், ஆசாராம் பாபுவுக்கு தனிப்பட்ட மருத்துவராக இருந்திருக்கிறார். இவரை வைத்துதான் ஆசாராம் பாபு தனது ஆயுர்வேத மருந்துகளை, சூரணங்களை, சிட்டுக்குருவி லேகியங்களுக்கு எல்லாம் அங்கீகாரம் பெற்று வெளியில் விற்பனை செய்ய முடிந்தது. ஆனால் ஆசிரமத்தில் நடக்கும் பாலியல் முறைகேடுகள், ஓபியம் பயிரிடுதல் போன்றவை கண்கூடாக தெரிய வரவே அங்கிருந்து பிரஜாபதி வெளியேறினார். வெளியில் வந்து இவற்றை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவும் துவங்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆசாராம் தரப்பு ஏழு முறை இவரைத் தாக்கியுள்ளனர். 2005—07 இல் ஆறுமுறை இவரது ஆயுர்வேத கிளினிக் முற்றிலும் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. 2005 இ-ல் ஆசாராம் பாபு ஆள்வைத்து இவரை கடத்தவும் செய்துள்ளார். ஆசாராமுக்கு எதிரான முக்கிய அரசு சாட்சி இவர்தான். ஆசாராம் பாபுவுக்கு எதிராக சாட்சி சொல்ல முற்பட்டவர்களில் இதுவரை சூரத்தில் மாத்திரம் 3 பேர் தாக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச்
16-இல் அரசு தரப்பு சாட்சியான தினேஷ் பவ்சந்தானி (39) என்பவர் மீது ஆசிட் அடித்தவர்கள் ஆசாராமின் பக்தர்கள்தான்.
2002—-05 இடைவெளியில் சூரத்தைச் சேர்ந்த இரு சகோதரிகளை தனது ஆசிரமத்தில் வைத்து ஆசாராம் வல்லுறவுக்குள்ளாகிய சம்பவம் வெளியானதைத் தொடர்ந்து அவரையும், அவரது மகன் நாராயண் சாயையும் எதிர்த்துப் போராடி வருகிறார் பிரஜாபதி. சம்பவத்தன்று, சுடப்பட்ட நிலையிலும் மரண வாக்குமூலமாக தான் சந்தேகப்படும் ஐந்து நபர்களின் பெயர்களை, செல்பேசி எண்களையும் போலீசாரிடம் பிரஜாபதி கொடுத்திருக்கிறார். எனினும் ராஜ்கோட் போலீசார் யாரையும் கைது செய்யவில்லை என்கிறார் அவரது மாமா மோடி பிரஜாபதி. உண்மையில் போலீசார் சம்மன் அனுப்பி நேரில் ஜூன் 7, 13 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வருமாறு கூறிய பிறகும் சம்பந்தப்பட்ட ஐந்து பேர்களில் யாரும் காவல்நிலையத்திற்கு வரவில்லை.
பதின்ம வயது சிறுவர்களான திபேஷ் வகீலா, அபிஷேக் வகீலா ஆகிய சகோதரர்கள் இருவரும் 2008 ஜூலை 5- ஆம் தேதி அகமதாபாத் குருகுலப் பள்ளியில் இருக்கும் ஆசிரமத்தில் மர்மமான முறையில் இறந்து போன பிறகு ஆசாராம் மீது பல குற்றச்சாட்டுகளை பிரஜாபதி முன்வைத்தார். தங்களது பிள்ளைகள் நரபலி தரப்பட்டுள்ளதாக அச்சிறுவர்களின் பெற்றோர்கள் கூறியதை தொடர்ந்து, அவர்களுடன் மருத்துவர் அம்ருத் பிரஜாபதியும் இணைந்து ஆசாராமுக்கெதிராகப் போராடத் துவங்கினார். இது பற்றி அமைக்கப்பட்ட திரிவேதி கமிசன் அறிக்கையை வெளியில் கூட விடாமல் ஆசாராம் பாபுவை பாதுகாத்தவர் இப்போதைய பிரதமரும் அப்போது குஜராத் முதல்வராகவும் இருந்த மோடி.
ஆசாராம் பாபு பிரதமர் மோடியின் தனிப்பட்ட நண்பரும் கூட. குஜராத்தில் முதல்வராக முதன்முதலில் பொறுப்பேற்ற பிறகு தான் நடத்திய முசுலீம் படுகொலை-களுக்கு பின்னர் இவரது ஆசிரமத்திற்காக பல ஏக்கர் நிலங்களை இலவசமாக வழங்கினார் மோடி. கங்கையை காப்பாற்று-வதற்காக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உமாபாரதியின் ஆதர்ச குருவும் ஆசாராம் பாபு தான். சிறையில் குளிப்பதற்கு கங்கை நீர், விசேச உணவு வகைகள், சொகுசு கட்டில், இரண்டு உதவியாளர்கள் என சிறைச்சாலையில் அவருக்கு தரப்படும் சலுகைகளை உச்சநீதி மன்ற நீதிபதிகளே கண்டித்துள்ளனர்.
ஆசாராம் பாபு
ஆசாராம் பாபு பொறுக்கி மட்டுமல்ல கொலைகார கிரிமினலும் கூட! ஆனால்,
“ஆசாராம் பாபு அப்பாவி, உண்மையான துறவி,” என்கிறார் பிரவீன் தொகாடியா. அவரது கைதை இந்து மதத்திற்கெதிரான தாக்குதல் என்கிறார் அசோக் சிங்கால். உமா பாரதியோ இதனை காங்கிரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அப்போதே சொன்னார். ஆனால், இப்போது அம்ருத் பிரஜாபதியைக் கொன்று தனக்கெதிரான சாட்சிக்கு தீர்ப்பெழுதி இருக்கிறார் ஆசாராம் பாபு.
ஆசாராம் பாபு ஒரு சாதாரண (குதிரை) ஜட்கா வண்டி ஓட்டுபவனாக வாழ்வைத் துவங்கி எப்படி எளிதில் பல நாடுகளில் 400-க்கும் மேற்பட்ட கிளைகள், 50-க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள், 1000-க்கும் மேற்பட்ட சமிதிகள், 10 லட்சம் பக்தர்கள் என தனது சாம்ராஜ்யத்தை விரிவடையச் செய்ய முடிந்தது என்பதைத் தான் நாம் முதலில் பரிசீலிக்க வேண்டும். அரசியல் பிரமுகர்கள், பெருமுதலாளிகள், அதிகாரிகளின் பினாமியாகவும், ஹவாலா மூலமும் தான் இது சாத்தியமானது. பொதுவாக சங்கராச்சாரி துவங்கி நித்தியானந்தா வரை இதுபோன்ற சாமியார்கள் தவறுகள் செய்து மாட்டும்போது அவர்கள் செய்த கொலை, பாலியல் முறைகேடுகள் மட்டும்தான் ஒரு பரபரப்பிற்காக மட்டும் ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகின்றன. ஆனால் அவர்களது கிரிமினல் குற்றங்கள், நில அபகரிப்பு, ஊழல், ஹவாலா போன்ற குற்றங்களை யாரும் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.
சட்டம் கூட டிரஸ்டு என்ற அடிப்படையில் இவர்களை காப்பாற்றுவதால் கார்ப்பரேட் சாமியார்கள் சொத்து மற்றும் வருமான வரிகளில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். காவிக்கும்பல், ஆளும்வர்க்கம், ஓட்டுப் பொறுக்கிகள், போலீசு, நீதிமன்றம், ஊடகங்கள் ஆகியவற்றின் உதவியுடன் தங்களுக்கெதிரான எல்லா வழக்குகளிலிருந்தும் எளிதில் தப்பி விடுவர். அந்த வகையில் அம்ருத் பிரஜாபதி போல சாட்சி சொல்ல முன்வரும் ஒரு சிலரை கொன்று, ஆதாரத்தை அழித்து விட்டால், ஆசாராம் பாபுவும் புனிதர் ஆகி விடுதலையாகி விடுவார். வரதராசப் பெருமாளை சாட்சியாக வைத்து சங்கரராமனை கொன்ற சங்கராச்சாரி நிராபராதியாக விடுதலையாகும் போது நம் நாட்டில் ஆசாராம் பாபு மாத்திரம் நீதிமன்றத்தால் யோக்கியனாகி விடுதலை பெற முடியாதா என்ன?
ஆசாராம் பாபு கற்பழிப்பு வழக்கு நத்தை வேகம்: குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
இரண்டு பெண்களை சீரழித்த சாமியார் ஆசாராம் பாபுவுக்கு எதிரான கற்பழிப்பு வழக்கின் விசாரணை நத்தை வேகத்தில் நடைபெற்று வருவது ஏன்? என குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரமம் அமைத்துள்ள சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு (72) என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார்.
அதில், கடந்த 2001 மற்றும் 2006-க்கு இடைப்பட்ட காலங்களில் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் இச்சம்பவம் நடை-பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் ஆசாராம் பாபுவை கடந்த 2013- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் சிறையில் அவரை அடைத்தனர். இதுதவிர, குஜராத் மாநிலத்தில் இரு சிறுமிகளை கற்பழித்தது உள்ளிட்ட குற்றச்-சாட்டு-களின் அடிப்படையில் குஜராத் மாநிலத்திலும் இவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நான்காண்டுகளாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரை ஜாமினில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஆசாராம் பாபுவுக்கு எதிராக ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணை நத்தை வேகத்தில் நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில், தனது உடல் நிலையைக் காரணம் காட்டி சிகிச்சை பெறுவதற்காக தன்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என ஆசாராம் பாபு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ ஆவணங்கள் போலியானவை என்பதைக் கண்டுபிடித்த சுப்ரீம் கோர்ட், கடந்த ஜனவரி மாதம் 30- ஆம் தேதி அவரது மனுவை தள்ளுபடி செய்து விட்டது.
சிறையில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் போலீசார் சிறையில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை அளித்தனர். ஆனால் சாமியாரோ தனக்கு இங்கு சரியாக சிகிச்சை அளிப்பதில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.
நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் சாமியார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையில் சாமியாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்-பட்டு வந்தது.
இந்நிலையில் அவர் சாப்பிடுவதற்காக மருத்துவமனை செவிலியப் பெண் ஒருவர் பிரட்டின் மீது வெண்ணய் தடவி கொடுத்துள்ளார்.
அப்போது அவர் செவிலியப் பெண்ணிடம், பிரட்டுக்கு வெண்ணை எதற்கு நீயே ஒரு உருகும் அழகிய வெண்ணை, உன் கன்னங்-களோ இனிய சாறு ஊறும் காஷ்மீர் ஆப்பிள் என்றும் தக்காளியை போன்று உள்ளது எனவும் வர்ணித்துள்ளார்.
இதை செவிலியப் பெண் மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்ததால், மருத்துவமனை நிர்வாகம் சாமியாரை கண்டித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசாராம் பாபுவை தங்களிடம் விசாரணைக்காக ஒப்படைக்க வேண்டும் என குஜராத் மாநிலப் போலீசார் ஜோத்பூர் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இதற்கு நீதிபதியும் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, அகமதாபாத் போலீஸ் துணை கமிஷனர் மனோஜ் நினாமா தலைமையிலான போலீசார் ஆசாராம் பாபுவை விமானம் மூலம் பலத்த பாதுகாப்புடன் குஜராத் தலைநகர் அகமதாபாத்திற்கு அழைத்து வந்தனர்.
அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காந்திநகர் மாஜிஸ்திரேட் கோர்ட் அனுமதி அளித்தது.
விசாரணையில் ஒருகட்டமாக ஆசாராம் பாபுவின் ஆண்மை தன்மையை உறுதிபடுத்து-வதற்காக கடந்த 16ஆ-ம் தேதி அவரை உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.
டாக்டர்களிடம் ஆண்மை பரிசோதனைக்கு தன்னால் ஒத்துழைக்க முடியாது என ஆசாராம் பாபு பிடிவாதம் பிடித்ததால் நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு பரிசோதனை நடத்தாம-லேயே போலீசார் அவரை மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில், ஆசாராம் பாபுவுக்கு மீண்டும் ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பரிசோதனை முடிவில் 72 வயதாகும் அவர் இன்னும் ஆண்மை தன்மையுடன் உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், மோடியின் நண்பரான இவருக்கு நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்க-போகிறது என்பது தெரியவில்லை!
– நேயன்