”பார்ப்பான் பண்ணையம் கேட்பார் இல்லை!”

செப்டம்பர் 16-30

 

 

 

கே:    வெளிநாடு வாழ் தமிழர்களிடம் உள்ள விழிப்புணர்வும், ஒற்றுமையும் இங்குள்ள தமிழர்களிடம் காண முடியவில்லையே ஏன்?

    – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:    என்ன செய்வது, அவர்கள் அங்கிருப்பதால் ‘கெட்டுப்போன ரத்தம்’ அவர்கள் உடம்பில் ஓடவில்லை; இங்கு அப்படி இல்லையே!

கே:    ஆசாராம், ராம் ரஹீம் போன்ற சாமியார்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், கோடிக்கணக்கில் சொத்துகள், சொந்தமாக ஆயுதக் கிடங்குகள், ஆயுதங்களைக் கையாளும் சீடர்கள் என்று பெரிய அளவில் வளர்ந்ததற்கும், அவர்கள் மீதான வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேல் நீள்வதற்கும் காரணம் என்ன?

    – கெ.நா.சாமி, சென்னை

ப:    மூலக்காரணம், மத்திய மாநில அரசுகள், குறிப்பாக பா.ஜ.க இந்துத்துவ காவி சாமியார்களை, ஹிந்து வாக்குவங்கி (Hindu vote bank) உருவாக்கப் பயன்படுத்தியதின் விளைவு காலிப் பயல்கள் பெரிய சாமியார்-களாகி கொழுத்துள்ளார்கள்!

கே:    அனிதா தன் உயிரைக் கொடுத்து ஊட்டிய உணர்வை, எழுச்சியைக் கொண்டு நீட்டை நிரந்தரமாய் நீக்கவும், கல்வியை மாநிலப்-பட்டியலுக்கு மீண்டும் கொண்டு-வரவும் அனைவரும் ஒருங்கிணையும் நிலையில் சிலர் ஒதுங்குவது ஏன்?

    – மா.கயல்விழி, மதுரை

ப:    பதவி, சுயநலம் அந்தச் சிலரிடம் குடிகொண்டிருப்பதன் விளைவு தான் அது!

கே:    சரியாகச் செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார்வசம் ஒப்படைக்கலாம் என்று நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?

    – சீதாபதி, தாம்பரம்

ப:    சரியாகச் செயல்படாத அரசுப் பள்ளிகளைச் சரியாகச் செயல்பட வைக்க வேண்டியது அரசின் வேலையே தவிர, தனியார் பள்ளியாக மாற்றுவது  என்பது சரியான தீர்வாகாது.

கே:    தமிழக முதல்வர் முதற்கொண்டு அமைச்சர்கள் வரை பிஜேபியிடம் சரணடைந்த நிலையில் நாஞ்சில் சம்பத் மட்டும் பிஜேபியை விமர்சித்து வருவதை தாங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

    – ர.சுரேஷ், வேலூர்

ப:    பரவாயில்லை, முதுகெலும்புள்ள (முன்னாள்  குற்றாலம் பயிற்சிமுகாம் மாணவர் அவர்) ஒருவராவது அங்கே உள்ளாரே மகிழ்ச்சி —— பாராட்டு ——- ஆறுதல்!

கே:    இத்தனை ஆண்டுகாலம் சமூகநீதி உள்ளிட்ட உரிமைகளைப் போராடிப் பெற்றோம் நாம். மத்திய பிஜேபி அரசு அவற்றைக் கபளீகரம் செய்து வருகிறதே! இதற்கு முடிவுதான் என்ன?

    – ப.சந்தியா, கம்மாபுரம்

ப:    மக்களைத் திரட்டி விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். எரிவதை இழுத்தால் கொதிப்பது தானே நிற்கும் என்ற பழமொழிக்கேற்ப.

கே:    மாணவி அனிதா மரணம் குறித்து சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு பேட்டியில் கூறியுள்ளதன் உள்நோக்கம் என்ன?

    – க.அரவிந்த், நெய்வேலி

ப:    பா.ஜ.கவிற்கு தன்னை விற்றுக்-கொண்டவர்களின் தன்மைபடி திசை திருப்பும் வேலை!

கே:    தேர்தலைச் சந்திக்காமல், மக்களையும் சந்திக்காமல் பிஜேயின் புகழ்பாடிக் கொண்டிருந்த நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது குறித்து தங்கள் கருத்து என்ன?

    – தமிழோவியன், கடலூர்

ப:    “பார்ப்பான் பண்ணையம் கேட்பார் இல்லை” என்ற பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் ராஜ்யத்தில் இப்படித்-தான் நடக்கும்! வியப்பென்ன?

கே:    முற்றும் துறந்தவர்கள் என்ற வேஷத்தில் காமவேட்டை நடத்திய-தோடு, மக்களை அச்சத்தில் நடுங்க வைக்கும் கலவரங்களும் செய்கிறார்கள். ஒருவர் ஆட்சிக்கே வந்து ஒரே மாதத்தில் 300 குழந்தைகளைச் சாகடித்த அக்கிரம அவல நிலை. இந்த மதவாத அரசியலை ஒழிக்க தீர்வு என்ன?
   
    – இல.சங்கத்தமிழன், செங்கை

ப:    இந்தச் சாமியார் ஆட்சி சரித்திரப் புகழ் சாதனைகள் 300 குழந்தைகள் என்ற பச்சிளம் தளிர்களின் மரணம்! உ.பி அரசு எவ்வளவு திறமையற்ற கையாலாகாத  காவி அரசு என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *