பார்ப்பான் ஒர் அன்னியனே! பெரியார்- அம்பேத்கர் ஒத்த கருத்து!

செப்டம்பர் 16-30

 

 

 

பார்ப்பனர்களைப் பொறுத்த அளவில் இந்த நாட்டில் அன்னியர்களைப் போல்தான் நடந்து கொள்கிறார்கள். பார்ப்பனர் அல்லாத மக்களின் முட்டாள்தனமும் அறியாமையுமே பார்ப்பனர்களுக்கு தங்களின் மேலாண்மையை நிலை நிறுத்திக் கொள்ள போதுமானதாகி விட்டது. கொஞ்சம்கூட இரக்கமில்லாமல் அந்த மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தி பயமுறுத்தி தங்கள் அடிமைகளாகவே பார்ப்பனர்கள் வைத்திருக்கிறார்கள்.

இந்நிலை கண்டு கொதித்தெழுந்தவர்கள் தந்தை பெரியாரும் பாபாசாகேப் அம்பேத்கரும், அதனால்தான் இவர்கள் பார்ப்பனர் அல்லாதவர்களின் மூடநம்பிக்கைகளைக் களையப் பாடுபட்டதோடு பார்ப்பனர்கள் அன்னியர்களே என்றும் நமக்கும் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தவறாமல் வலியுறுத்தி வந்தார்கள்.

பெரியார் அவர்கள், “ஆங்கிலோ இந்தியர்கள் எப்படியோ அதே போலத்தான் இந்நாட்டு பார்ப்பனர்களும், ஆங்கிலோ _ இந்தியர்கள் நம் நாட்டுத் தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்தானே, ஆனால் அவர்களுக்கே சற்றாவது நம் நாட்டு உணர்ச்சி இருக்கிறதா? நமது மக்களைப் பார்த்து, “டேய், டமில் மனுஷா’’ என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார்? எந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வரலாற்றை அறியாமல் தாம் ஏதோ அய்ரோப்பாவில் பிறந்து இங்கு வந்து குடியேறியது போல ஜாதி ஆணவத்துடன் அல்லவா நடக்கிறார்கள்?

அதைப் போலவே இந்நாட்டுப் பார்ப்பனர்-களும் மேல்நாட்டில் வந்து குடியேறிய ஆரியர்களுக்கும் நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாய் இருந்தும்கூட ஆரிய ஜாதி முறைகளையும், அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம்மைக் கீழ் ஜாதிகளாக அடிமைகளாக மதித்து நடத்துகிறார்கள்.

(‘குடிஅரசு’ 29.5.1949)

பாபாசாகேப் அவர்களும் தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களையும் அவமானங்களையும் ஏன் இப்படி என்று ஆராய்ச்சி செய்து இதற்கெல்லாம் அடித்தளம் பார்ப்பனர்களே என்றும் நமக்கு சம்பந்தமில்லாத அன்னியர்கள் என்றும் கண்டறிந்தார்.

அவர், “இந்தியாவில் பார்ப்பனர்கள் தம்முடைய படிப்பறிவில்லாத நாட்டு மக்களை நிரந்தர அறியாமையிலும் வறுமையிலும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு தத்துவத்தைக் கண்டுபிடிக்க தங்கள் அறிவை ஒழுக்கக் கேடான செயலுக்கு பயன்படுத்தியது போல் உலகில் எந்தவொரு அறிவார்ந்த வகுப்பினரும் செய்யவில்லை. ஒவ்வொரு பார்ப்-பனரும் அவர்களின் மூதாதையர் கண்டுபிடித்த தத்துவத்தை இன்றளவும் நம்புகின்றனர்.

இந்து சமூகத்தால் பார்ப்பனர்கள் அன்னியர்களாகக் கருதப்படுகின்றனர். பார்ப்பனர்-களை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள் மற்றும் தீண்டப்படாத மக்களை நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் _ இந்த இரண்டு பிரிவினரும் இரு வேறு அயல்-நாட்டினர் போல்தான் தோன்றுவர்.

ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக்-காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ அது போலவே பார்ப்பான் _ அடிமை வகுப்பினர்களான சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்-களுக்கும் அன்னியனாவான். இவர்களுக்கு அன்னியன் மட்டும் அல்ல. அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான்’’

(காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதவர்-களுக்கு செய்ததென்ன? நூலிலிருந்து)

ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த வெள்ளைக்காரன் என்னோடு கை குலுக்கிறான். தொட்டுப் பேசுகிறான். ஆனால், அடுத்த தெருவில் உள்ள பார்ப்பான் என்னைப் பார்த்தால், தொட்டால் தீட்டு என்கிறான். என்னைத் தொட்டுப் பேசுகிற வெள்ளைக்-காரன் அன்னியனா, பார்த்தால் தீட்டு என்கின்ற பார்ப்பான் அன்னியனா என்று பெரியார் கேட்டதும் பார்ப்பான் ஓர் அன்னியனே என்பதை விளக்கும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *