அறிவியலுக்கு அடிப்படை இந்துமதமா?

செப்டம்பர் 01-15

விநாயகருக்கு யானைத் தலை வைத்தது உறுப்பு மாற்று அறிவியலா?

இன்றைய அறிவியல் உலகில் மனிதனின் எந்த உறுப்பு பழுதானாலும், அதை மாற்றி வேறு ஒருவரின் கொடையாகப் பெற்ற அவ்வுறுப்பைக் பொருத்தும் மிகச் சிறந்த மருத்துவ அறிவியல் வளர்ச்சியை நாம் படிப்படியாக முயன்று பெற்றுள்ளோம்.

ஆனால், இந்துத்வா பேர்வழிகள் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு எங்கள் இந்து மதமே அடிப்படை (முன்னோடி) என்று சொல்லி விநாயகர் புராணத்தைக் காட்டுகிறார்கள். அக்கதை இதோ:

“ஒரு நாள் சிவனின் பெண் சாதியான பார்வதிதேவி, தான் குளிக்கப்போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியான ஒரு காவல் ஏற்படுத்து வதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்கைத் திரட்டி உருட்டி அதை ஓர் ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஓர் ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து _- “நான் குளித்துவிட்டு வெளியில் வரும்வரை வேறு யாரையும் உள்ளே விடாதே!…” என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும், அந்தச் சமயத்தில் பார்வதியின் புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண் டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனைப் பார்த்து, “பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால், உள்ளே போகக்கூடாது…” என்று தடுத்ததாகவும், அதனால், பரமசிவக் கடவுளுக்குக் கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போன தாகவும், பார்வதி சிவனைப் பார்த்து, “காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்…?” என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், “காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்” என்று சொன்னதாகவும், இதுகேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தைத் தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஓட்ட வைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியே வந்து பார்க்க, வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்டவைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து, பார்வதியைத் திருப்தி செய்தார்’’ என்பதே அப்புராணக் கதை. இக்கதைக்கு சிவபுராணத்திலும், கந்த புராணத்திலும் ஆதாரங்கள் உள்ளன. மேலும், விநாயகருக்கு யானைத் தலை வந்தது பற்றி இன்னொரு கதையும் உள்ளது.

“தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பியதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்தான்’’ என்பதே அக்கதை. இது தக்கயாகப் பரணி என்னும் புத்தகத்தில் இருக்கிறது.

இக்கதைகளுக்கும் அறிவியலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது உயிருடன் உள்ள மனிதனின் பழுதுபட்ட உறுப்புகளுக்கு மாற்றாக உயிர்ப்புடன் உள்ள மனித உறுப்பை எடுத்துப் பொருத்துவது.

ஆக மனித உறுப்புக்கு மாற்றாய் மனித உறுப்பே பொருத்தப்படும். வேறு விலங்கு உறுப்பு பொறுத்தப்படுவதில்லை; பொருந்தவும் பொருந்தாது.

அப்படியிருக்க, மனித உடலுக்கு யானைத் தலை பொருந்தியதாய் சொன்னது கற்பனையாகும். அறிவியலுக்கு முரணாகும்.

இரண்டாவதாக வெட்டுப்பட்ட விநாயகரின் மனிதத் தலையைத் தேடி எடுத்து வைக்காமல் காட்டில் தேடிச் சென்று யானைத் தலையை வெட்டி வந்து பொருத்தியதாய்ச் சொல்வது அறவே தப்பான கருத்து; அறிவியலுக்கு எதிரான செய்தி.

மூன்றாவதாக விநாயகர் தலை வெட்டப்பட்டவுடன் அவர் இரத்தம் முழுவதும் வெளியேறி இறந்த நிலையில், யானையின் தலையை வெட்டிவந்து பல மணி நேரம் கழித்துப் பொருத்தினால் எப்படி பொருந்தும்? பாதுகாக்கப்பட்டு தலை கொண்டு வரும் வசதி அக்காலத்தில் இல்லை. எனவே, யானை தலையும் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்பில்லை. ஆக, விநாயகர் உடலினும் உயிர்ப்பு இல்லை, யானைத் தலையிலும் உயிர்ப்பு இல்லை என்கின்ற நிலையில் அது எப்படி உயிர்ப்புடன் பொருந்தும்?

இப்படியெல்லாம் இருக்க, பொறுப்பான பதவி வகிக்கும் மத்திய மந்திரியே “உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு விநாயகரின் யானைத் தலையே அடையாளம் என்பது மிக மிக கண்டித்தக்க பிதற்றல் அல்லவா?

மேலும் விநாயகர் புராணம் இந்தக் கதையை மட்டும் சொல்லவில்லை. விநாயகர் பிறப்பு பற்றி வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது.

ஒரு காட்டில் ஆண் _- பெண் யானைகள் கலவி செய்யும்போது, சிவனும் _ பார்வதியும் கண்டு, கலவி ஞாபகம் ஏற்பட்டுக் கலந்ததால், யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதை கூறுகிறது.

பார்வதி  கருவுற்றிருக்கையில் ஓர் அசுரன் அக்கருப்பைக்குள் காற்று வடிவமாகச் சென்று அக்கருச் சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும், அதற்குப் பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகிறது.

கருப்பையில் உள்ள குழந்தையை ஒரு ஆண் உள் சென்று வெட்ட முடியுமா? அதன்பின் யானைத் தலையை கருப்பையில் உள்ள அக்குழந்தைக்கு வைக்க முடியுமா?

அப்படியிருக்க இப்படிப்பட்ட மூடத் தனமான, முட்டாள்தனமான கற்பனைக் கதைகளையெல்லாம் அறிவியலுக்கு அடிப்படை என்று அடிமுட்டாள்தனமாய்க் கருத்துக் கூறுவது அமைச்சருக்கு அழகா?

பனியுடன் விந்து சேர்ந்து கருத்தரிக்குமா?

சுப்பிரமணிய ஸ்வாமி எப்படி உருவானார் என்று இந்து மதம் கூறுகிறது தெரியுமா?
“சிவபெருமான் உமா தேவியைத் திருக் கல்யாணம் செய்து, மோகங்கொண்டு, அவளுடன் 100 தேவ வருஷம் (மனித வருஷத்தில் பல யுகம்) புணர்ந்து கொண்டிருந்தனர். அவ்வளவு காலம் கழிந்தும் பார்வதி கர்ப்பம் அடையவில்லை. அது கண்டு நான்முகன் முதலிய தேவர்கள் சிவனிடத்தில் வந்து, இவ்வளவு காலம் புணர்ந்த உம்முடைய தேஜஸ்ஸாகிய விந்து வெளிப்படுமானால் உலகம் பொறுக்க மாட்டாது. உம்முடைய விந்துவை தயவு செய்துவிடாமல் நிறுத்திக் கொள்ளும்  என்று வேண்டவும், அதற்கிசைந்த சிவன் தனது விந்துவை மற்றபடி யார் தரிப்பது? எங்கு விடுவது? என்று கேட்க, தேவர்கள் பூமியில் விடும்படிச் சொல்ல, அந்தப் படியே சிவன் பூமியின் மீது விட்டுவிட்டார்.

பூமி அதைத் தாங்க மாட்டாமல் பூமி முழுவதும் கொதி கொண்டு எழ, தேவர்கள் அந்த வீரியத்தை பூமி தரிக்க முடியாது எனக் கருதி அக்கினியிடம் சென்று வேண்ட, அக்கினி வாயுவின் உதவியால் அவ்வீரியத்திற்குள் பிரவேசித்து, பிரம்மதேவன் கட்டளைப்படி அதைக் கங்கையில் கொண்டு சேர்த்து, அவ்வீரியத்தைப் பெற்று ஒரு குழந்தை பெற வேண்டுமென்று கங்கையை வேண்ட, கங்கையும் அதற்குச் சம்மதித்து அவ்வீரியத்தைப் பெற, அவ் வீரியமானது கங்கை முழுவதும் பரவி நிறைந்துவிட கங்கை அதைத் தாங்க மாட்டாமல், மறுபடியும் அக்கினியை வேண்ட, அக்கினி மனமிரங்கி கங்கையை நோக்கி, ஏ, கங்கையே! நீ அடைந்த சிவனின் வீரியத்தைத் தாங்க முடியா விட்டால்  பனிமலை அருகில் விட்டுவிடு என்று சொல்ல, கங்கையும் அவ்வாறே அவ்வீரியத்தைப் பனிமலையின் அருகில் விட, அங்கு அது குழந்தையாகத் தோன்ற, அதை இந்திரன் பார்த்து அக்குழந்தைக்குப் பால் கொடுத்து வளர்க்க கிருத்திகா தேவிகளை ஏவ, அவர்கள் அதற்குப் பால் கொடுத்து வளர்த்து வரலானார்கள். பல இடத்தில் சிவனது வீரியம் ஸ்கலிதமானதன் பலனாக அக்குழந்தை உற்பத்தியானதால் அக்குழந்தைக்கு ஸ்கந்தன் என்றும், கிருத்திகா தேவிகள் ஆறு பேர்களுடைய பால் சாப்பிட்டதால் கார்த்திகேயன் என்றும், மேல்கண்ட ஆறு பேரின் முலையிலும் ஆறுமுகம் கொண்டு ஏககாலத்தில் பால் குடித்ததால் ஷண்முகன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.
இவ்வாறு வால்மீகி இராமாயணத்தில் சிவன் பார்வதியை புணர்ந்தது என்ற தலைப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த இந்து மதக் கதையில் சிவனின் விந்து கங்கையில் விடப்பட்டு, கங்கை அதைத் தாங்காமல் பனிமலையின் அருகில்விட அது குழந்தையானது என்றால் பனியுடன் விந்து சேர்ந்தால் குழந்தையாகுமா? பெண்ணின் சினைமுட்டை இல்லாமல் கரு தரிக்குமா? இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் கருத்து (கதை) கூறும் இந்துமதந்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
அது மட்டுமல்ல விந்து குளிர்ச்சியான திரவம். அது அக்கினியாக எரிந்தது என்பதே அறிவியலுக்கு எதிரான செய்தி. ஆக, இப்படிப்பட்ட மூடக்கருத்துகளின் தொகுப்பான இந்த இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையென்பது அசல் மோசடியல்லவா?

(சொடுக்குவோம்)
 – சிகரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *