ஒரு நாட்டின் வருங்கால வளமும் வனப்பும், வலிவும் பொலிவும் அந்நாட்டின் இன்றைய சிறார்களின் சீரான வளர்ச்சியிலும், உடல் உள்ள நலத்திலும், அறிவு வளர்ச்சியிலும் ஆற்றல் திறனிலும்தான் அடங்கியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருக்கத் தேவையில்லை. பாமரர்களுக்கும் பாடமாகிவிட்ட ஒன்றேயாகும்.
ஆனால், பசு பாதுகாப்பு என்னும் பதாகை கட்டிக்கொண்டு பாசிசக் கூத்தாடும் பி.«-ஜ.பி அரசுக்கு இது புரியவில்லையா? அல்லது புரிந்துகொண்டும் ‘ஏழை பாழைகளைப் பற்றி எமக்கென்ன கவலை?’ என்ற இறுமாப்புடன் செயல்படுகின்றனரா என்பதைச் சிந்திக்கின்ற-போது இரண்டாவது கூற்றே உண்மையென இன்று பத்திரிகைகள் பறைசாற்றுகின்ற செய்தித் சிதறல்களினின்று உணரமுடிகிறது.
இந்தியாவில் 4 கோடியே எண்பது இலட்சத்து இருபதாயிரம் குழந்தைகள் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டு வளர்ச்சி தடைபட்டு நிற்கிறார்கள் என்கிற புள்ளிவிவரம் பெருமைபடக் கூடியதா? இந்த எண்ணிக்கை கொலம்பியாவின் மக்கட் தொகைக்குச் சமமாகும்.
பெண் குழந்தைகளைப் பொறுத்த அளவில் மூன்றில் ஒருவர் சத்துக் குறைவினால் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளனர். இந்துத்துவர்களின் பார்வையில் பெண்கள் கீழானவர்கள்தானே!
சத்துக் குறைவான உணவால் வளர்ச்சி தடைபட்டவர்கள் என்கிற நிலையுடன் குழந்தைத் திருமணங்கள், இளம் வயதிலேயே பெற்றோர்களாகி விடுதல், கல்வியின்மை, குழந்தைத் தொழிலாளர்கள் உள்ள நிலை ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் குழந்தைகளின் மோசமான நிலை என்பது 172 நாடுகளின் வரிசைப் பட்டியலில் இந்தியத் திருநாட்டின் வரிசை 116இல் உள்ளது. ஆக நமக்கு முன்னாலே மேல்தட்டில் 115 நாடுகள் உள்ளன.
115 நாடுகளுக்குக் கீழான நிலையில் குழந்தைகளைப் பேணும் நிலையில் உள்ள நாம் தான் நமது இஸ்ரோவின் சாதனைகளைப் பற்றியும் வல்லரசாகும் வன்கனவு பற்றியும் பீற்றிக்கொள்கிறோம். வெட்கப்பட வேண்டாமா இந்த அரசு. நம்மைவிட பரப்பிலும் பொருளாதாரத்திலும் குறைந்த அளவில் உள்ள ஸ்ரீலங்கா 61ஆவது இடத்திலும், பூட்டான் 93ஆவது இடத்திலும், மியான்மார் 112ஆவது இடத்திலும் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது இந்த நாட்டில் மாட்டுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் பாதியேனும் வருங்காலச் சமுதாயமாகும் சிறார்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை இனியேனும் புரிந்துகொள்வார்களா?
வளர்ச்சி தடைபட்ட குழந்தைகள் எண்ணிக்கையிலும், குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கையிலும் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா முன்னணியில் உள்ளது என்பது கேவலத்திலும் கேவலமன்றோ.
வளர்ச்சித் தடை என்பது குழந்தைகள் கருவில் உருவானது முதல் 1000 நாட்களுக்கு தொடர்ந்த சத்து குறைவான உணவால் ஏற்படுகிறது என்பது மருத்துவத் துறையின் கண்டுபிடிப்பு. இந்தியாவில் 10க்கு ஒரு குழந்தைதான் இந்தப் பருவத்தில் போதுமான போஷாக்கு பெறுகிறது; என்பது இந்தியாச் செலவு ( India Spend ) நிறுவனத்தின் மே 2017 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளின் மரணம் அதிக அளவில் உள்ளது. இந்த மரணங்களில் பாதிக்கும் மேலானவை சத்தான உணவின்மையால்தான் ஏற்படுகின்றன.
ஒவ்வொரு 1000 பிறப்புக்கும் 50 குழந்தைகள் 5ஆவது பிறந்த நாளுக்குள்ளாகவே மரணமடைந்து விடுகின்றன. இது மிக மிக ஏழ்மை நிலையிலுள்ள ஆப்பிரிக்காவின் தீவு நாடான மடகாஸ்கரின் நிலையோடு ஒப்பிடக் கூடியதாக உள்ளது என்பது இந்தியாவிற்குப் பெருமைதானோ!
அடுத்து கல்வி நிலையை எடுத்துக் கொள்வோமானால் இந்தியக் குழந்தைகளில் 18.6 சதவீதக் குழந்தைகள் ஆரம்ப மற்றும் உயர்நிலைக் கல்வி பெறாதவர்களாகவும் நான்கு கோடியே எழுபது இலட்சம் இளைஞர்கள் மேல்நிலைக் கல்வியைத் தொடாதவர்களாகவும் உள்ளனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
4 வயது முதல் 14 வயது வரையுள்ளோர் பிரிவில் 11.8% பேர் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 10 லட்சமாகும்.
இந்தக் குழந்தைகள் தங்கள் கல்வி உரிமையை மட்டுமா இழக்கின்றனர். ஒட்டுமொத்தமாக, விளையாட்டு, மற்ற பொழுதுபோக்கு போன்ற குழந்தைப் பருவ மகிழ்வுகள் அனைத்தையுமன்றோ இழந்து விடுகின்றனர். இது நாட்டில் ஒழுக்கமுள்ள, நாணயமான சமுதாயத்தை உருவாக்க உதவுமா?
இந்தியாவில் 15 முதல் 19 வயதுவரை உள்ள இளம்பெண்களின் எண்ணிக்கையில் 21.1% பேர் திருமண பந்தத்தில் சிக்கி விடுவதோடு 1000க்கு 24 பெண்கள் இந்த இளம்வயதிலேயே (15 முதல் 19) தாய்மையடைந்து விடுகின்றனர் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
ஒட்டுமொத்தமாக இந்தியச் சிறார்களை இன்றைய பா.ஜ.க. அரசு 21ஆம் நூற்றாண்டிலிருந்து இராமாயண, மகாபாரத இதிகாச காலத்துக்கு இட்டுச் சென்று, தன் இந்துத்துவக் கொடியைப் பறக்கவிட முயற்சிக்கிறது என்பது பளிச்சென்று தெரிகிறது. இதை அனுமதிக்கலாமா? இந்த ஆட்சியைத்தான் சகித்துக் கொள்ளலாமா? சிந்திப்பூர்! செயல்படுவீர்!!