முதியவர்கள், உடல்நலமில்லாதவர்களின் முக்கிய பிரச்னை படுக்கையிலேயே இயற்கை உபாதைகளைக் கழிப்பது. என்னதான் பிள்ளைகளானாலும், உடன் பிறப்பானாலும், மனைவியானாலும், தாயானாலும், அவர்கள் முகம் சுழிக்காமல் பார்த்துக் கொண்டாலும், படுக்கையிலேயே இயற்கை அழைப்புகளை கவனித்து அதை சுத்தம் செய்வது என்பது கவனித்துக் கொள்பவருக்கு மட்டுமல்ல, படுக்கையில் இருப்பவருக்கும் சங்கடமான விஷயம்.
இதற்கு தீர்வாக தென்காசியைச் சேர்ந்த வெல்டர் சரவணமுத்து கழிப்பறை கட்டில் ஒன்றை உருவாக்கி உள்ளார்!
இதை யாருடைய உதவியுமின்றி படுக்கையில் இருப்பவரே பயன்படுத்தலாம் என்பது மட்டுமல்ல. தண்ணீர் குழாய்களுடன் இணைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிலில் படுத்த நிலையிலேயே சுத்தமும் செய்து கொள்ளலாம்.
இது பார்க்க சாதாரண கட்டில் மாதிரிதான் இருக்கும். ஒரு சின்ன ஸ்விட்ச் போர்டு இணைப்பு இருக்கும். அதுல டவுன் பட்டனை அழுத்தினா கட்டிலுக்கு நடுவுல கழிப்பறை வடிவ கதவு திறக்கும். அதுலயே குழாய்கள் இணைந்திருக்கும். ஃபோர்ஸா தண்ணீரும் வரும். பயன்படுத்திட்டு க்ளோஸ் பட்டனை அழுத்தினா நேரடியா கழிவுகள் கழிப்பறைக்கு போயிடும்.
டியூப்பை மட்டும் எங்க, எப்படின்னு நாம சரியா பொருத்திக்கணும். ஸ்விட்ச் பாக்ஸ் கூட மூணு மீட்டர் நீளம் உடையதா, கட்டில சுத்தி எங்க வேணும்னாலும் கொண்டு போற மாதிரி இருக்கும். அதுல ஒரு சின்ன ஷவர் கூட இருக்கு. பயன்படுத்திட்டு சுத்தமும் செய்துக்கலாம்.
இந்தக் கட்டில் மட்டும் இல்ல; கரண்ட் போனாலும் எழுதற மாதிரி லைட் பேனா, சாக்கடை சுத்தம் செய்யற மக்களுக்காக காற்றைச் சுத்தம் செய்து ஃபில்டர் பண்ணி சுவாசிக்கக் கூடிய மாஸ்க்… இதையெல்லாமும் இவர் செய்திருக்கிறார். பாராட்டப்பட வேண்டியவர்தானே!