தண்ணீரைத் தேடி…

ஆகஸ்ட் 01-15

அறிவுமணி கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு ஊரில் இருந்தான். பிறகு ஒரு வைராக்கியத்தோடு சென்னைக்கு வந்தான். இரண்டு வருடம் கழித்து ஊருக்குப் போனான். அவன் மனதிற்குள் அவன் விரும்பிய செண்பகம் சிரித்தாள். காதலை வெளிப்படுத்தாமல், நல்ல வேலையில் சேர்ந்து நேரடியாக அவள் வீட்டில் பெண் கேட்டு மணம் முடித்துக்கொள்ள வேண்டும் என்பது தான் அவன் வைராக்கியம். அம்மாவிடம்கூடச் சொல்லவில்லை.

ஒருவேளை அவளுக்கு மணமாகியிருந்தால் வாழ்த்திவிட்டு வந்திட வேண்டியதுதான். காதல் என்ற உணர்வுக்காக உயிரை விடுவது பகுத்தறிவல்ல என்பது அவன் முடிவு.

ஊருக்கு வந்து சேர்ந்தான். அம்மாவுக்கு அளவில்லா மகிழ்ச்சி. அன்பு மழையில் நனைந்தான். பிறகு தெரிந்துகொண்டான். செண்பகத்திற்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று, அம்மாவிடம் சொன்னான். சாதி ஈடுபாடு கொண்ட அவள் அப்பா கந்தசாமியும் குடும்பமும் எதிர்ப்பார்கள் என்று அம்மா கூறி வருத்தப்பட்டார்.

‘சாதி என்பது திராவிடத் தமிழனுக்கு ஆதியில் இருந்ததல்ல. பாதியில் வந்தது. சிலர் உழைக்காமல் வாழவும் பலர் உழைத்தே வாழ்வை ஓட்டிடவும் சுயநலத்திற்காக சதிகாரர்கள் உருவாக்கியதுதான் அது. இரவு இந்த நினைவுகளுடனே உறங்கினான். காலை எட்டு மணி. அவன் உறக்கம் கலையவில்லை. அவன் அம்மா தட்டி எழுப்பினாள்.

‘ஏம்மா, கொஞ்ச நேரம் தூங்கறேன்’ என்றான். ‘டேய், பத்து மணிக்கு பஞ்சாயத்து கூடுதாம். அதுக்குப் போவணும் ஊராரை நீயும் பாக்கணும். கிளம்பு’’ என்றாள் அம்மா.
எனக்குப் புரியலை, ‘எதுக்குப் பஞ்சாயத்தும்மா?’ என்றான்.

‘ரெண்டு வருஷமா, மழையில்லப்பா, அதுக்குத்தான் பஞ்சாயத்து’
‘மழைக்கு பஞ்சாயத்தா? என்னம்மா புரியலைம்மா’ என்றான்.

‘அப்பா மாதிரியே மவனும், கேள்வி கேட்கறான் பாரு, (அந்த வார்த்தைகளில் ஒரு பெருமை அம்மாவுக்கு) புது சாமியார் குட்டியானந்தா வந்திருக்கிறார். அவர் ஏதோ சொல்லியிருக்கார். அதான் பஞ்சாயத்து. ஓ… அப்பா இருந்தா இது நடக்குமாடா? ம்… காலம்’’ சலித்துக்கொண்டாள் அம்மா. அவனுக்கும் ஆர்வம் வந்துவிட்டது. ஏதோ… ஏமாத்தப் போறான். அப்பாவி மக்கள் திருட்டுப் பையன் காவி போட்டவுடன் நம்புது. போய்ப் பார்ப்போம் என்று எண்ணியவாறு எழுந்தான்.

அரச மரத்தடியில் பஞ்சாயத்து கூடியது. ஊர்த்தலைவர், பஞ்சாயத்தார்கள், ஊர் மக்கள் வந்து இருந்தனர். தலைவர் வேகமாகப் பேசுகிறார், “நம்ம ஊரில் இரண்டு வருஷமா மழையே பேயல. கோயில் விழாக்கள் நடத்திப் பாத்துட்டோம். நம்ம அய்யனார் கோபம் தீர்ந்தும் மனசு வைக்கல, அதனால் நம் ஊருக்கு வந்த புது சாமியார், அய்யனாருக்கும் மேல இருக்கும் சாமிக்கு பூஜை செய்யணும்னு சொல்லி பூஜை புனஸ்காரங்களைச் செய்ய வழிமுறைகளைக் கூறியுள்ளார். அதன்படி செய்திட பஞ்சாயத்து முடிவெடுத்துள்ளது. ஊருக்கு சொல்லதான் இந்தக் கூட்டம்’’ என்று நிறுத்தினார். “நமக்கு மழைதான் முக்கியம். என்ன செய்யணும்னு சொல்லுங்க அய்யா?’’ ஊர் குரல் ஒன்றாக ஒலித்தது. தலைவர் பதட்டமாகவே சொன்னார், “நம் ஊர் திருமணம் ஆகாத பெண் யாராவது வர பௌர்ணமி அன்று நிர்வாணமாக ஊரை சுற்றி வந்து சாமிக்கு பூஜை செய்தால் மழை நிச்சயம் என்று சாமி சொல்லியுள்ளார்’’ என்றார்.

மூடநம்பிக்கையின் முடைநாற்றம். நம்பிக்கையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தேர்வுக்கு சீட்டு குலுக்கப்பட்டது. அறிவுமணியும் அவன் நண்பர்கள் குரலும் அடக்கப்பட்டது. “இந்த அறிவிலித்தனத்தை எப்படியாவது தடுக்க வேண்டும்’’ என அறிவுமணி யோசிக்கும்போது, தலைவர்,  குழந்தையின் கையிலிருந்த சீட்டை வாங்கி பெயரைப் படிக்கிறார். அவனுக்கு பேரதிர்ச்சி, செண்பகம் பேரையல்லவா அறிவித்துள்ளார். ‘அய்யோ முடியாது நான் ஒத்துக்க மாட்டேன்’ என்று அழுகிறாள் செண்பகம், அவனால் கட்டுப்படுத்த முடியாமல், இந்த முட்டாள்தனத்தை நிறுத்துங்கள். காவிச் சாமியாரை அடித்து விரட்டுங்கள்’ என்று ஆவேசமாகப் பாய்ந்தான். அவ்வளவுதான் ‘யார்ரா அவன்… ஓ… நம்ம கருப்புச் சட்டை கன்னியப்பன் மவனா… தம்பி ரெண்டு வருஷமா ஊர்லயே இல்லை நீ, பேசாம இரு! இல்ல ஒடிப்போயிடு. ஆமாம்… அவ அப்பனே பேசாமயிருக்கான்’’ என்று அவனை விரட்டினார். செண்பகம் குடும்பம் தலைகுனிந்து விம்மியது. அவள் தந்தை முரட்டு கந்தசாமி வெளிரிப் போய் நின்றான். எல்லாம் கருமாந்திர கடவுள் சித்தம்.

பூஜைக்கு ஏற்பாடுகள் நடந்தன. பவுர்ணமி மறுநாள். முதல்நாள் இரவு அறிவுமணி தோட்டத்து பாழடைந்த கிணற்றில் குதிக்க யாரோ முயல்வதைப் பார்த்து ஓடினான். பிடித்து நிறுத்திப் பார்த்தால் ‘செண்பகம்’. அம்மாவும் வந்து வீட்டிற்குள் இழுத்து வந்தாள். ‘இனி நான் எங்க போக முடியும்? என் வீட்ல இழவு விழுந்துவிட்டது போல இருக்கு. அப்பாவே முடங்கிக் கிடக்கிறார். நான் செத்துப் போறேன். அறிவு, அந்தச் சாமியாரை சும்மா விடாதீங்க. வேணும்னா வாங்க அவனை நானே வெட்டிக் கூறுபோடறேன்’’ என்று கொந்தளித்தாள் செண்பகம்.

உணர்ச்சிவயப்பட்ட அவனும், “நீ வெட்ட வேண்டாம். நானே அவனை முடிச்சிடறேன். செண்பகம் நீ கவலைப்படாத வா…’’ என்று ஆவேசமாக பேசியபடியே அவள் கையை உரிமையுடன் பிடித்தான்’’. அவன் காதலை அறியாத அவள் அவனை உணர்ந்தவளாகப் பார்த்தாள். பார்வை, ‘கைவிட்டு விடாதே’ என்று சொல்வதாக இருக்க அவன் இன்னும் அழுத்தமாகப் பிடித்தான்.

அவன் தாய் கேட்ட கேள்வியில் செண்பகம் ஆச்சரிய அதிர்ச்சிக்குப் போய்விட்டாள்.
“செண்பகம், என் மவனை கட்டிக்கிறியா?’’ கேட்டுவிட்டு அவளையே பார்த்தாள் அம்மா. செண்பகம் சம்மதத்தை தலையாட்டி தெரிவித்த வினாடி. சாதி பார்க்கும் கந்தசாமி வீட்டிற்குள் நுழைந்தான்.

‘எதுக்கு வந்தீங்க… மவள பிணமா பாக்கவா? ஊர்ல நிர்வாணமா ஓட வைக்கவா? நான் வாழ்க்கை தரேன். சாதி பாத்து என்னைவிட்டு அவள பிரிக்கப் போறீங்களா? எதுக்கு வந்தீங்க? என்றான் அறிவு ஆவேசமாக.

கந்தசாமி ஒரு கணம் ஆடிப்போயிட்டான்.

‘டேய் அறிவு. ஒங்கப்பாவை எனக்குத் தெரியும்’ பெரிய மனுஷன். ஒங்கம்மா மாதிரி ஊருக்கு உதவ ஓடி வரவங்க யார் இருக்கா? செண்பகம் வீட்ல இல்லைன்னு சொன்னவுடன் நான் தேடினேன். எங்க தெரியுமாடா ஊர் கிணறுகளிலும், குளத்திலும் தண்ணீரைத் தேடித்தான் என் பொண்ணு போயிருப்பா… சாக முடிவு பண்ணிதான்டா வீட்ல கத்திகிட்டு வந்திருக்கா. எவனோ, ஒரு சாமியார்பய சொன்னான்னு, ஊர் கூடி ஒரு பொண்ணை நிர்வாணமா ஓட வைச்சி, அந்த நாய்க்கு பூஜை செய்யணும்னு சொல்லி என் பொண்ணை அதுக்கு பலியாக்கினபோது கொந்தளிச்சி போயிட்டன்டா. அவனவன் தங்கள் வீட்டு பொண்ணுயில்லேன்னு சந்தோஷப்பட்டானுங்க. சாதிக்காரன் கோபப்படல நீதாண்டா வீரமா எதுத்த… அப்பவே முடிவு பண்ணிட்டேன். ஒங்ககூட சேர்ந்து இந்த கேவலமான வேலையை நிறுத்தணும்னு, மானமுள்ள குடும்பத்து பொண்ணு என் கண்ணு செண்பகம். சாகப் போறேன்னு வந்துட்டா. ஆளுக்கொரு திசையா தேடறோம். உங்க வீட்டு கிணத்தைப் பாக்க வந்தேன். “நீர் இல்லா ஊர்ல, நீர் இருக்கற கிணறாச்சே…’’ சற்று நிதானித்து கந்தசாமி. “காலையிலே அம்மாவை அழைச்சிகிட்டு வந்து என் வீட்ல பொண்ணு கேளு. எவன் என்னா சொன்னா நமக்கென்ன’’ என்று கூறி அறிவு தோளில் தட்டிக் கொடுத்தார்.

அறிவும், அவன் அம்மாவும், ஏன்? செண்பகமே எதிர்பார்க்காத மாற்றம் கந்தசாமியிடம்.
“அய்யா, உங்களை எப்படி சொல்றதுண்ணே தெரியலே. என் உயிர் உள்ளவரை செண்பகத்தைப் பிரியமாட்டேன்’’ அவன் கைப்பிடித்து பாசத்தைக் காட்டினான் அறிவு.

“ஏற்கனவே இரண்டு கொலை, பல கொள்ளைகள், கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்டவன், காவி ஆடையில் மதவாதக் கட்சியில் பொறுப்பு வாங்கிக் கொண்டு இதுநாள் வரை ஏமாற்றித் திரிந்தவன் கிடைத்துவிட்டான்’’ என்று இன்ஸ்பெக்டர் மாறன் ஊர்த் தலைவரிடம் கூறி புதுசாமியார் பயலை காவி வேடத்துடன் கைது செய்து இழுத்துச் சென்றார்.
ஊர் கூடியது.

தலைவர் பேசுகிறார், “எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க. காவி, பண்டாரம், பரதேசி என்று எவன் வந்தாலும் கால்ல விழுந்து கும்பிட்டவன்தான் நான். கேவலமான செயலை சாமியார்ப்பய சொல்லி செய்ய இருந்த கொடூரம்.. எம்மா செண்பகம், என்னை மன்னிச்சிடும்மா.. நேத்து ராத்திரி சாமியாரும் கூட வந்தவனும் பேசினதை கேட்ட நான்தான் போலீசுக்குச் சொன்னேன். நல்லதா போச்சி. மழைக்கும் மூடநம்பிக்கைக்கும் சம்பந்தமில் லேன்னு அறிவுமணி சொன்னப்ப எதிர்த்து பாய்ஞ்சது எவ்வளவு மடத்தனம்னு தெரியுது. எல்லோரும் சந்தோஷமா வீட்டுக்குப் போங்க’’ என்றார்.

‘எல்லோரும் நில்லுங்க’ என்ற கந்தசாமி சத்தமா, ‘ஒரு நிமிடம்.. தம்பி அறிவுமணிக்கும் எம்மவ செண்பகத்திற்கும் நாளைக்கு காலைல ஊர்ப் பொது பெரியார் சமூகக் கூடத்திலே கல்யாணம். தலைவரே நடத்தி வைப்பார்’ என்று மகிழ்வுடன் சொல்லி எல்லோரையும் அழைத்தான்.
‘மழை பெய்வதற்கு, நாளைக்கு கல்யாணப் பரிசாக ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்று தாருங்கள். இருக்கும் மரங்களைக் காப்போம்! மேலும், மரம் நடுவோம்! மழை பெறுவோம்! தண்ணீர் நம்மைத் தேடி வரும்’ என்று முடித்தான் அறிவுமணி.

– பு.ர. காவியச்செல்வி, நார்வே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *