இன்று உலகில் பொருளாதாரத்தில் உயர்ந்த நாடாக இருக்கும் சிங்கப்பூரை உருவாக்கியவர்களில் தமிழர்களும் உண்டு. கடல் கடந்து சென்றாலும் தமிழை மறக்காமல் இருப்பவர்கள் அவர்கள். 1940-50களிலேயே அங்கு தமிழ்ப் பள்ளிகளை நிறுவியுள்ளனர். அந்தப் பள்ளிகளில் தந்தை பெரியார் பெயரில் ஒரு பள்ளி நிறுவப்பட்டு சில ஆண்டுகள் நடந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. அந்த வரலாற்றை விளக்குகிறது இந்தக் கட்டுரை :-
சிங்கப்பூரில் 40-க்கு மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இருந்தாலும் அதன் வரலாறு சிறப்பாகக் கிடைக்கவில்லை. 1983-இல் பலரைச் சந்தித்துப் பேசியபோது கிடைத்த குறிப்புகளைக் கொண்டே தமிழ்ப் பள்ளிகளின் வரலாற்றை எழுதி வருகிறேன். பெரியார் ஈ. வெ. இராமசாமி அவர்கள் காங்கிரசு கட்சியிலிருந்து பிரிந்த பிறகு திராவிடர் கழகம் என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தார். ஜாதியில்லை, மதமில்லை, சாமியில்லை என்பன அதன் அடிப்படைக் கொள்கைகளில் சில. சின்னா பின்னமாகக் கிடந்த தமிழர்களுக்குப் பெரியாரின் கொள்கை பிடித்திருந்தது. அதனால் தமிழர்களில் பலர் திராவிட இயக்கத்தில் சேர்ந்து கொண்டனர். சிங்கப்பூருக்கு வந்த பின்னரும் அவரின் மீதிருந்த மரியாதையால் திராவிடர் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார்கள். பெரியார் ஒரு பட்டதாரி இல்லை என்றாலும் கீதை என்ற நூல் முதல் ஏராளமான நூல்களைப் படித்து அறிந்த ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக விளங்கினார்.
பெரியார் ஈ.வெ.ரா. சமதர்ம தமிழ்ப் பாடசாலை பிரஞ்சு சாலையில் 1946_இல் தொடங்கப்பட்டது. இப்பள்ளியின் கூரை தகரத்தால் போடப்பட்டது. பக்கவாட்டில் பலகைகளால் தடுக்கப்பட்டுள்ளது. பி. டபிள்யு டி. சிட்டி கவுன்சில் போன்ற அரசாங்கத் துறைகளில் வேலை செய்தவர்கள்தான் தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்கியவர்கள். அவர்களின் பிள்ளைகள்தான் அப்பள்ளிகளில் படித்தார்கள். 1947_1948_இல் 50_க்கும் மேற்பட்ட பிள்ளைகள் படித்துள்ளனர். இரண்டு ஆசிரியர்கள் கற்பித்துள்ளனர். வெள்ளையுடை அணிந்திருப்பவர் திரு.வீ.இராசகோபால். அவரின் இடது புறம் இருப்பவர் திரு. தி.சு.மோகனம். இப்படம் 1947- இல் எடுக்கப்பட்டது.
இப்பள்ளியின் இடதுபுறம் சிறிய ஆறு ஓடியதாம், வலதுபுறம் பி.டபிள்யு.டி டிப்போ இருந்ததாம். பின்புறம் அத்தாப்பு (கம்போங்) வீடுகள் இருந்ததாம். இப்பள்ளியை திரு. கி. பெ. சுப்பிரமணிய மண்டோர் அவர்கள் தொடங்கியுள்ளார்கள். திரு. கலியபெருமாள் என்பவர் திரு. கி. பெ.சுப்ரமணியம் அவர்களுக்குப் பேருதவியாக இருந்துள்ளார். இவர்கள் தி.க.வின் தொண்டர்கள்.
திரு. கி.பெ.சுப்ரமணியம் அவர்களின் முயற்சியில் ஆங்கிலேய அதிகாரியின் உதவியால் அந்த இடத்தை இலவசமாகப் பெற்றுக் கட்டியுள்ளார்கள். பள்ளியின் இருபுறமும் தொழிலாளர்களின் குடியிருப்புகள் இருந்துள்ளன. 1946-1947லேயே பள்ளிச் சின்னம் இருந்துள்ளது. திரு.தி.சு.மோகனம் அவர்களும் மாணவர்களில் சிலரும் பள்ளிச் சின்னம் அணிந்திருப்பதை நீங்கள் படத்தில் காணலாம். இப்பள்ளி 1952இல் மூடப்பட்டுள்ளது. அப்போது படித்த மாணவர்களில் சிலரை வாசுகி தமிழ்ப் பள்ளிக்கும் மற்றுஞ் சிலரை வேறு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளனர்.
திரு.தி.சு.மோகனம் அவர்களோடு ஓரளவிற்குப் பழக்கம் உண்டு. அந்த வகையில் இவர் மிகுந்த தமிழ்ப் பற்றும் இனப்பற்றும் உள்ளவர். அன்போடும் பண்போடும் பழகக்கூடியவர். இவர் வேறு பள்ளிகளிலும் படிப்பித்துள்ளார். ஆசிரியர் தொழிலை விட்ட பின்னர் வானொலியில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்.
திரு.தி.சு.மோகனம் அவர்கள் 1948, 1949 ஆகிய ஈராண்டுகள் ஆசிரியர் பயிற்சி பெற்றுச் சிறந்த முறையில் வெற்றி பெற்றுள்ளார். அதற்குரிய சான்றிதழ்களை நீங்கள் கீழே காணலாம். இவர் திருக்குறளில் மிகுந்த ஈடுபாடுள்ளவர். தமது ஓய்வு நேரத்தில் திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் திருக்குறள் பற்றிப் பேசுவது, குறள் கற்பது, கற்பிப்பது எனப் பல விதங்களில் உதவியுள்ளார். அங்கு நடைபெற்ற சொற்பயிற்சி மன்றத்தில் நான் கலந்து கொண்டபோது இவரோடு பலமுறை பேசியுள்ளேன்.
1950- களில் நல்ல தமிழ்ப் பற்றுடன் வாழ்ந்தார்கள். அதனால்தான் எல்லா நிகழ்ச்சிகளையும் தமிழிலேயே நடத்தினார்கள். அவற்றில் திருமணமும் ஒன்று. இதற்கு திராவிடர் கழகம் தக்க துணையாக இருந்துள்ளது. அதற்கு இந்தத் திருமண உறுதிமொழி இதழ் தக்க சான்றாகும். இதை என்னிடம் கொடுத்தவர் திரு. தி.சு.மோகனம் அவர்கள் ஆவார்கள். அவர்கள் இன்று நம்முடன் இல்லாவிட்டாலும் எனது உள்ளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பள்ளியின் வரலாற்றை எழுதுவதற்கு முன்னர் திரு. சுப்பிரமணியம் மண்டோர் அவர்களின் மகன் திரு. சமதர்மம் அவர்களுடன் கலந்து பேசினேன். அவர் மிகுந்த ஆர்வத்துடன் தனக்குத் தெரிந்த விவரங்களுடன் அவருக்குத் தெரிந்தவர்களிடமும் தகவல்களைப் பெற்றுத் தெரிவித்தார்.
நன்றி : தமிழ் அமுதம் (-சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் இதழ்)