இன்றைக்குள்ள அறிவியல் கண்டு-பிடிப்புகள் சில நூற்றாண்டுகால அறிவியலாளர்-களின் முயற்சியின் விளைவாகும். ஆனால், இந்துத்வா பேர்வழிகள், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இந்து மதமே அடிப்படை என்கின்றனர். வானூர்தி, உறுப்பு மாற்று அறுவை, குளோனிங் என்று எல்லாவற்றிற்கும் எங்கள் இந்துமதமே முன்னோடி என்கின்றனர். எனவே, இந்து மதம் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையா? என்று அறிய வேண்டியது அவசியமாகிறது. அதன் அடிப்படையிலே இத்தொடர். ‘இந்து மதம் என்ன சொல்கிறது?’
உலகைப் படைத்தது கடவுளா?: ஆதியில் பிரமன் மண்ணுலகைப் படைக்க எண்ணி முதலில் நீரைப் படைத்தார். திருமால் அப்பொழுது தீயவர்களான மதுகைடவர்களை வெட்டி வீழ்த்த நேர்ந்தது. வெட்டுண்ட அவ்வுடல்கள் பிரமன் படைத்த நீரில் வீழ்ந்து மிதந்தன. நான்முகன் அதைக் கண்டார். நீரும் அவ்வுடற்றசைகளும் ஒன்றாக இறுகி மண்ணுலகம் தோன்றுமாறு சிவபெருமானை வேண்டினார். சிவபெருமாள் ஒரு மலை வடிவாகத் தோன்றி எதிர் நின்றார். மலவரவன் அதனை அறியாது தான் வேறு பல மலைகளைப் படைத்தார். தான் படைத்த மலைகளுக்கு இருக்க இடம் இல்லை. பெரிதும் வருந்தி மயங்கி நின்றார். பிரணவக் கடவுள் தோன்றிக் குறிப்பால் உண்மையை உணர்த்தினார். நான்முகன் நல்லறிவு பெற்று உடனே மலைவடிவாய் நின்ற சிவபெருமானை வழிபட்டுப் பூசித்தார்.
சிவபெருமான், மேதையும் (தசையும்) நீரும் ஒன்றாக இறுகி மண்ணுலகம் தோன்றுமாறு செய்தார். அதற்கு மேதினி என்று பெயரிட்டார். மலரவன் படைத்த மலைகளுக்கும் இடம் தந்தார். மலரவனை நோக்கி, “-ஏ அறிவிலி! நாமே இம்மலை வடிவாகத் தோன்றி நின்றோம். நான் வேறு இம்மலை வேறு இல்லை. இந்த மலை தோன்றிய பின்னரே உன்னால் பல மலைகள் தோன்றின. ஆதலின், நம் மலைக்குப் பழமலை என்றே பெயர் வழங்குவதாக. மற்றும், இப்பழமலை மண்ணுலகுக்கு அச்சாணியாக அழுந்தி நின்று மேலே சிவலிங்கமாக விளங்கி நிற்கும். இதனை வழிபடுவோர் எவரும் விரும்பிய பயனை எய்தி இன்புறுவர்’’ என்று அருள்செய்து மறைந்தருளினார் என்பர்.
உலகு தோன்றிய விதம் பற்றிப் பைபிள் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:
“ஆதியில் கடவுள் வானத்தைப் படைத்தார். பூமி உருவமற்று வெறுமையாய் இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. கடவுளின் ஆவி தண்ணீரின்மேல் அசைந்து கொண்டிருந்தது. வெளிச்சம் உண்டாகுக என்று கடவுள் சொன்னார்; வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சத்தையும் இருளையும் கடவுள் வெவ்வேறாகப் பிரித்தார். வெளிச்சத்துக்குப் பகல் என்று கடவுள் பெயரிட்டார். இருளுக்கு இரவென்று பெயரிட்டார், இது முதல் நாள்.
தண்ணீர் நடுவே ஆகாயமண்டலம் உண்டாகுக. அது தண்ணீர்களின்று தண்ணீர்களைப் பிரிக்கக் கடவதென்று கடவுள் சொன்னார். கடவுள் ஆகாய மண்டலத்தை உண்டாக்கினார். ஆகாய மண்டலத்துக்கு கடவுள் வானம் என்று பெயரிட்டார். அது இரண்டாம் நாள்.
வானத்தின் கீழுள்ள தண்ணீர்கள் ஓரிடம் சேர்க. வெட்டாந்தரை காணப்படுக என்ற கடவுள் சொன்னார். அப்படியே ஆயிற்று. பூமியின் மேல் புல்லையும் விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்களின் தங்கள் விதைகளையுடைய கனிகளைத் தங்கள் ஜாதியின்படியே தரும் கனி மரங்களையும், பூமி முளைப்பிக்கக் கடவதென்று கடவுள் சொன்னார். அப்படியே ஆயிற்று. அது மூன்றாம் நாள்.
பகலை ஆளப் பெரிய சுடர் ஒன்றையும் (சூரியனையும்) இரவை ஆளச் சிறிய சுடர் ஒன்றையும் (சந்திரனையும்), நட்சத்திரங்களையும் கடவுள் உண்டாக்கினார். இது நான்காம் நாள்.
திரள்திரளான ஜீவஜந்துக்கள் தண்ணீரிலே உண்டாகுக! ஆகாய மண்டலத்தின் கீழே பறவைகள் பறந்து திரியக் கடவதென்று கடவுள் சொன்னார். அவ்வாறே உண்டாயிற்று. இது அய்ந்தாம் நாள்.
ஜாதி ஜாதியான ஜீவ ஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊர்வனவற்றையும், காட்டு மிருகங்களையும் தோன்றும்படிக் கடவுள் சொன்னார். அப்படியே ஆயிற்று. நமது சாயலின்படி நமக்கொப்பான மனிதனை உண்டாக்குவோமாக, மற்றைய உயிரினங்களை அவர்கள் ஆளக் கடவர்கள் என்று கடவுள் சொன்னார். அவ்வாறே மனிதர்கள் உருவானார்கள். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். பூமியின் மேலுள்ள சகல தாவரங்களும், விலங்குகளும், பறவைகளும், மனிதனுக்கு உணவாக அமையட்டும் என்று கடவுள் சொன்னார். அவ்வாறே ஆயிற்று. இது ஆறாவது நள்.’’ இவையே உலகம் தோன்றிய விதம் பற்றிப் பைபிள் கூறுவனவாகும்.(ஆதி ஆகமம்: 1-.1.1931)
ஆக, இரண்டு மதமும் இரண்டு முரண்பட்ட செய்திகளைக் கூறுகின்றன. உண்மைதான் ஒன்றாக இருக்கும். கற்பனையும் பொய்யும் பலவாறாகத்தானிருக்கும். மதக் கருத்துகள் பொய்யானவை, கற்பனையானவை என்பதால்தான் இப்படி பலவாகவும் முரண்பட்டும் இருக்கின்றன.
அண்டத்தில் உள்ள அனைத்தும் யாராலும் படைக்கப்பட்டவையல்ல. இருப்பவை எப்போதும் இருக்கின்றன. அதில் இரசாயன, இயற்பியல், உயிரியல் மாற்றங்கள் ஏற்பட்டு மாற்றமும் வளர்ச்சியும் ஏற்படுகின்றன என்பதே அறிவியல்.
பரிணாம வளர்ச்சியிலே உயிரினங்கள் தோன்றி மனித இனம் வரை பெருகின. இவை ஒரு நாளிலோ, ஆறு நாளிலோ கடவுளால் படைக்கப்பட்டவை அல்ல.
சிவனின் இழிநிலை
அடுத்து இந்து மதம் இவ்வுலகில் தங்கம், வெள்ளி எப்படித் தோன்றியது என்று கூறுகிறது. அதைப் படியுங்கள். அப்போது உங்களுக்குப் புரியும். இந்துமதம் அறிவியலுக்கு அடிப்படையா? என்று.
பண்டிதர் இஞ்சிக்கொல்லை ஆர். சிவராமசாஸ்திரியார் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘பாகவத தமிழ் வசனம்’ என்னும் புத்தகத்தில் எட்டாவது ஸ்கந்தம் 12_ஆவது அத்தியாயத்தில் ‘பரமசிவன் விஷ்ணுவின் மோகினி ரூபத்தைப் பார்க்க விரும்பியது’ என்ற தலைப்பில் எழுதியிருப்பதை அப்படியே கூறுகிறேன்.
“-ஸ்ரீமகாவிஷ்ணு மோகினி வேஷங்கொண்டு அசுரர்களை மோகிக்கும்படிச் செய்து தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட பரமசிவன் கைலாயத்திலிருந்து பார்வதியுடன் விஷ்ணுவிடம் வந்தான்.
சிவன் மகாவிஷ்ணுவின் மோகினி வடிவத்தைப் பார்க்க விரும்பி மோகினி வடிவை மீண்டும் எடுக்கும்படி மகாவிஷ்ணுவை வேண்டினான்.
அதைக் கேட்ட மகாவிஷ்ணு, “அது அசுரர்களை ஏமாற்ற எடுத்த வேஷமானதால், அதைக் காண்பவர்களை மோகிக்கச் செய்யும். மன்மதனை அதிகப்படுத்தும். காமுகர்கள்தான் அதை தோத்திரம் செய்வார்கள்’’ என்று சொல்லி மறைந்து, ஒரு நந்தவனத்தில் பந்தாடிக் கொண்டிருக்கும் அழகிய பெண்ணாகத் தோன்றினார்.
சிவனும், பார்வதியும் நான்கு புறமும் விஷ்ணுவைத் தேடிப் பார்த்துக் காணாமையால், நந்தவனத்திற்குச் சென்றனர். அங்கு ஒரு பெண் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். சிவன் புத்தி கலங்கி, பார்வதியும், சிவகணங்களும் பக்கத்தில் இருப்பதைக் கூட நினைக்காமல் அவள் மீது மோகங் கொண்டான்.
மோகினி வேஷத்துடன் இருந்த பெண் பந்தடிக்கும் கவனத்தில் தனது ஆடையைப் (சேலையை) பைய நழுவ விட்டாள். அதைப் பார்த்த பரமசிவனுக்குக் காமம் அதிகரித்து விட்டது. பார்வதி பார்க்கிறாளே என்ற வெட்கங்கூட இல்லாமல் மோகினிக்கு அருகில் சென்றான் சிவன்.
மோகினி ஒரு மரத்தடியில் மறைந்து-கொண்டாள். சிவன் ஓடோடி அவளைப் பிடித்தான். அவள் திமிரிக்கொண்டு வேகமாக ஓடினாள்.
சிவன் வேகமாக ஓடி அவள் மயிரைப் பிடித்து இழுத்து இரு கைகளால் ஆலிங்கனம் செய்துகொண்டு பலவந்தம் செய்தான்.
அவள் அவிழ்ந்த தலைமயிருடன் ஆடையின்றிச் சிவனிடமிருந்து நழுவி ஓட்டமெடுத்தாள்.
சிவன் புத்தியிழந்து, காமங்கொண்ட ஆண் யானையின் விந்து கீழே சிந்துவதுபோல் தன்னுடைய விந்தை நிலத்தில் சிந்தவிட்டுக்-கொண்டு பின்னே ஓடினான்.
சிவனுக்கு விந்து வெளிப்பட்டவுடன், மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணு மறைந்தார். சிவன் ஏமாந்துவிட்டான்.’’
சிவனின் இந்திரியம் நிலத்தில் எங்கெங்கு விழுந்ததோ அந்த இடமெல்லாம் தங்கம், வெள்ளி விளையும் சுரங்கங்கள் ஆயின.
அந்த விந்து எங்கெங்குக் காடுகளிலும், மலைகளிலும், நதிகளிலும், குளங்களிலும் விழுந்ததோ அங்கெல்லாம் சிவனின் சன்னிதானம் விளங்குகிறது. மகரிஷிகளும், தேவர்களும் அங்கு விளங்குகிறார்களாம்!
இப்போது சொல்லுங்கள்! இப்படித்தான் தங்கமும், வெள்ளியும் உலகில் தோன்றினவா? அறிவியல் அப்படியா சொல்கிறது?