அளவாக காபி அருந்தினால் அளவற்ற பயன்கள்!

ஆகஸ்ட் 01-15

காபி குடிப்பது உடம்புக்கு நல்லது என்று சிலர் கூறுகிறார்கள். ஒரு சிலர் அது உடம்புக்குப் பல்வேறு தீமைகளை உருவாக்கும் என்கிறார்கள். காபி நல்லதா, கெட்டதா என்ற கேள்விக்கு, உண்மையில், காபி நல்லதா? காபியில் என்னதான் இருக்கிறது?  ஒரு நாளைக்கு எத்தனை காபி குடிக்கலாம்? எவ்வளவு குடிக்கலாம்?

மூளையில் அடினோசின் (Adenosine) என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மனதை அமைதியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது. காபி குடிக்கும்போது அதில் உள்ள கெஃபைன், அடினோசின் ஆதிக்கத்தைக் குறைப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

 ஒரு நாளைக்கு 250 மில்லி கிராம் கெஃபைன் உட்கொள்வது உடலுக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. கெஃபைனை ஏற்கும் அளவு, வயது, உடல்நிலை, வளரும் சூழலைப் பொறுத்து மாறுபடலாம். ஒரு கப் காபியில் 80-165 மி.லி கிராம் அளவு கெஃபைன் உள்ளது.

காபி, வளர்சிதை மாற்றத்தையும் (Metabolism), குடல் அசைவுச் (Bowel Movement) செயல்பாடுகளையும் அதிகரிக்க உதவுகிறது. குடல் அசைவு அதிகரிப்பதால் மலம் எளிதாக வெளியேறும். ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்யும் தன்மை இருப்பதால், பல வலி நிவாரண மாத்திரைகளிலும் கெஃபைன் சேர்க்கப்படுகிறது.

இதுதவிர, அல்சைமர் (Alzheimer),  நரம்புத்தளர்ச்சி நோய் (Parkinson’s disease – PD), இதயநோய், சர்க்கரை நோய் மற்றும் கல்லீரல் நோய்களைத் தடுக்கும் ஆற்றலும் காபிக்கு உண்டு. அது மட்டுமல்ல, மன அழுத்தத்தையும் குறைக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், இதுபற்றிய ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

காபிக்கு அடிமையாகி அதிகமாகக் குடிக்கும்போது, கெஃபைன்  உடலில் அதிகமாக சேரச்சேர பக்க விளைவுகள் அதிகமாகும்.

தூக்கமின்மை, தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகள் உண்டாகின்றன. பசியின்மை ஏற்படலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்குத் தலைச்சுற்றல் வரும் வாய்ப்புகள் அதிகம்.

காபியை அதிகமாக உட்கொள்ளும்போது, பொட்டாசியம் அளவு அதிகரித்துப் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகிறது. ரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகரித்தால், Hyperkalemia, சிறுநீரகப் பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான சத்துகள் கிடைக்க பால்தான் சிறந்தது. அதேநேரத்தில், தேயிலையில் கெஃபைன் அளவு குறைவாக இருப்பதால் டீ குடிக்கலாம். அல்சர், செரிமானப் பிரச்னைகள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் காபி குடிப்பதைத் தவிர்த்தல் நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்களும் சர்க்கரை சேர்க்காமல் காபி சாப்பிடலாம்.

காலையில் எழுந்ததும் குடிக்கலாம். சாப்பிடுவதற்கு முன்போ, பின்போ குடிக்கக் கூடாது. குறைந்தபட்சம் ஒரு மணி நேர இடைவெளி அவசியம்.  தூங்குவதற்கு முன்பாகக்  காபி குடிக்கக் கூடாது. மேலும் தூக்கம் குறைவாக உள்ளவர்கள் காபியைத் தவிர்ப்பது நல்லது. தலைவலி மாத்திரையைக் காபியுடன் விழுங்கக் கூடாது. மாத்திரைகளின் வீரியத்தைக் காபி குறைத்துவிடும்.

வறுக்கப்படாத பச்சையான காபிக் கொட்டைகளைப் பயன்படுத்தும்போது அதிகளவு கசப்புத் தன்மை இருக்கும். ஆனால், அதில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகளவு இருப்பதால் மற்ற காபிகளை விடச் சிறந்தது. பால், சர்க்கரை சேர்க்கப்படாததால் சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்களுக்கு இதுவே ஏற்றது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *