`நீட்’ தேர்வு நிரந்தரமாய் நீக்கப்பட் வேண்டும்!

ஆகஸ்ட் 01-15

“நீட்’’ தேர்வு கல்லூரிப் படிப்புகளுக்கான தகுதித் தேர்வு என்ற நோக்கில் கொண்டுவரப்-பட்டது அல்ல. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் அடுத்தத் தலைமுறையைத் தலைதூக்க விடாமல் அழுத்தி அடிமையாக்கும் சூழ்ச்சிகள் அதில் அடக்கம்.

சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவம் படிக்கலாம் என்ற ஒரு சூழ்ச்சியான நிபந்தனை வைத்து பார்ப்பனரைத் தவிர மற்றவர்கள் மருத்துவம் படிக்க இயலாத நிலையை உருவாக்கியவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள். தந்தை பெரியாரின் முயற்சியால் நீதிக்கட்சியின் ஆட்சியால் அது விலக்கப்பட்டு அனைவரும் மருத்துவம் பயில வாய்ப்பு வந்தபின், குலக்கல்வியைக் கொண்டுவந்து கல்வியைப் பறிக்க இராஜாஜி மூலம் முயன்றனர் பார்ப்பனர்கள். அதையும் பெரியாரின் பெரும் போர் தகர்த்தது.

ஆரியப் பார்ப்பனர் வயிற்றெரிச்சல்:

அதன்பின் காமராசர் ஆட்சியிலும், திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் பள்ளிகளும் கல்லூரிகளும் தமிழ்நாடெங்கும் தொடங்கப்பட, வீட்டுக்கு ஒரு பொறியாளர், ஊருக்கு சில மருத்துவர், சட்டதாரி, பட்டதாரி என்று உருவாகி, உள்நாட்டிலும், அயல்-நாடுகளிலும் இலட்சக்கணக்கான தாழ்த்தப்-பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வேலையும், வருவாயும் பெற்று தங்கள் சமுதாய நிலையையும், வருவாய் நிலையையும் உயர்த்தினர்.

ஆரிய பார்ப்பனர்களை அறவே புறந்தள்ளி எல்லா தேர்விலும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களே முதலிடம் பெற்றனர்.

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.ஆர்.எஸ்., சார்ட்டர்டு அக்கவுண்ட்டண்ட் என்று எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்று உயர் பதவிகளை எட்டினர்.

தந்தை பெரியாரும், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும் விழிப்போடிருந்து பெற்று காத்த இடஒதுக்கீடு, அடித்தட்டு மக்களை உயர்கல்வியும் பெறச் செய்தது.

கம்ப்யூட்டர் துறையிலும், விண்வெளி ஆய்விலும், கால் பதித்துச் சாதித்தனர். திராவிட ஆட்சிகள் மருத்துவக் கல்லூரிகளை அதிகம் திறந்து, மருத்துவமனைகளைத் தரமாக உருவாக்கி இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்தன.

சூத்திர இழிவை மெல்ல மெல்ல அகற்றி, உயர்கல்வி, உயர்பதவி என்று பார்ப்பனர் அல்லாதார் தமிழகத்தில் தொடர்ந்து சாதித்து உயர்வது கண்டு பொறாத ஆரியப் பார்ப்பனக் கூட்டம், தமிழர்களின் இந்த உயர்வுகளுக் கெல்லாம் காரணங்களான, உதவித் தொகை, நுழைவுத் தேர்வு நீக்கம், நேர்முகத் தேர்வு அமுலாக்கம், இடஒதுக்கீடு போன்றவற்றை எதிர்த்து ஒவ்வொரு கட்டத்திலும் ஓயாது போராடி வந்த நிலையில், மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இவற்றை முற்றாக ஒழிக்க முடிவு செய்தனர்.

முதலில் உயர்கல்வியில் ஒடுக்கப்பட்டோரை நுழைய விடாமல் தடுத்து, நுழைந்தாலும் நீடிக்க விடாமல், நீடித்தாலும் சாதிக்க விடாமல் சதி செய்தனர். ஆர்.எஸ்.எஸ். காலிகளை கல்வி நிறுவனங்களில் நுழைய விட்டு, அடிதடி, மோதல் என்று வன்முறைகளை அரங்கேற்றினர்.

இடஒதுக்கீட்டை ஒழிக்க, தனியார் துறைகளை (கார்ப்பரேட்களை) உருவாக்கி அரசுத் துறைகளை நசுக்கினர், மூடினர்.

‘நீட்’ தேர்வு ஒரு சூழ்ச்சித் திட்டம்:

அப்படியிருந்தும், மருத்துவத் துறையிலும், பொறியயில் துறையிலும் பார்ப்பனரல்லாத, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் தகுதி பெற்று, வேலை பெற்று உயர்ந்து வருவது கண்டு பொறுக்காத ஆரியப் பார்ப்பன மோசடிக் கூட்டம், இவற்றை ஒரே அடியில் தகர்க்க உருவாக்கிய சதித் திட்டமே ‘நீட்’ தேர்வு. இது அவர்களின் பல இலக்குகளை அடையவும், பார்ப்பனரல்லாதாரை பல வகையில் ஒழிக்கவும் உருவாக்கிய மோசடி ஆயுதமாகும்.

நீட் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்படி நடத்தப்படும் என்பதே பளிச்சென்று தெரியும் மிகப்பெரும் சதியாகும்.

5% பேர் படிக்கும் மத்திய சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தின்படி தேர்வு என்றால், 95% பேர் படிக்காத பாடத்திட்டத்தில் இத்தேர்வு நடத்தப்படுகிறது என்பது பொருள். அப்படியென்றால் 95% மாநில பாடத்திட்ட மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். பார்ப்பனர்களும் பணக்காரர்களும் அதிகம் படிக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் மட்டும் இதனால் பயன் பெறமுடியும்.

‘நீட்’ தேர்வால் ஏற்படும் பாதக விளைவுகள்:-

இதன் விளைவாய் அரசுப் பள்ளிகளிலும், மெட்ரிக் பள்ளிகளிலும் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்த 95% பெற்றோர், தங்கள் பிள்ளைகளையும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படிக்க       வைக்க முற்படும்போது, மெட்ரிக் பள்ளிகளும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக மாறும்; அரசுப் பள்ளிகள் மூடப்படும். இறுதியில் எல்லாம் சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாற, மாநிலத்தின் கல்வி உரிமை அறவே பறிபோகும்; மத்திய அரசின் ஏகபோகத்தில் கல்வி வந்துவிடும்.

இரண்டாவதாக, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தியும், சமஸ்கிருதமும் கட்டாயமாக இருப்பதால், தமிழ் அறவே புறக்கணிக்கப்பட, இந்தியும், சமஸ்கிருதமும் மாணவர்கள் கற்கும் மொழியாகி, இறுதியில் தமிழே அழியும்.

மூன்றாவதாக, நீட் தேர்வு பொறியியல் படிப்புக்கும் கொண்டுவரப்பட இருப்பதால், ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் இனி, பொறியியலும் படிக்க முடியாமல் போக, பட்டப்படிப்புகள் படித்து வேலை பெற முடியாது என்பதால் அவர்கள் படிப்பு பள்ளிப் படிப்போடு நிற்கும்.

நான்காவதாக, பள்ளிப் படிப்போடு நின்றால், கூலியாட்களாகத்தான் போகவேண்டிய கட்டாயம் வந்து தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் பழைய சூத்திர நிலைக்குத் தள்ளப்படுவர்.

ஆக, 100 ஆண்டுகளாய் முயன்று பெற்ற கல்வி, இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு, தமிழ் வளர்ச்சி, சாதி ஒழிப்பு என்று எல்லாவற்றையும் தகர்த்து, அவாளுக்கு மட்டும் கல்வி, வேலை தந்து, அவாள் மொழியை வளர்க்கும் ஒரே ஆயுதம் ‘நீட்’ தேர்வு ஆகும்.

எனவே, நீட் தேர்வு வெறும் மருத்துவப் படிப்பை தடை செய்வது மட்டுமல்ல; மாறாக, ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட, கிராமப்புற சமுதாயத்தையே அடி ஆழத்தில் தள்ளி நசுக்கி, அவர்களை அன்றாடக் கூலிகளாய் ஆக்கும் சூழ்ச்சிப் பொறியுமாகும்.

பல பாடத்திட்டம் ஒரே தேர்வு என்பது நீதியா?

இந்தியா முழுமைக்கும் பல மாநிலங்களிலும் பல்வேறு பாடத் திட்டங்கள் உள்ள நிலையில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மட்டும் கேள்வி கேட்டால், மற்ற பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் எப்படித் தேர்வு எழுத முடியும்? இது எந்த வகையில் நீதி, நேர்மை?

மாநில உரிமை என்னாவது?

பொதுத் தகுதித் தேர்வு மூலம், கல்வி தரும் உரிமையை மத்திய அரசே எடுத்துக்கொள்வது மாநில அரசின் உரிமையை அறவே பறிக்கும் பாஸிசச் செயல்பாடாகும்.

உயர்கல்விக்கு எப்படி மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது மாநில அரசுக்கே உரியது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு இது எதிரானது அல்லவா?

12 ஆண்டுகள் படித்த படிப்பிற்கு என்ன பயன்?

பன்னிரண்டு ஆண்டுகள் படித்து கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று விருப்பப் பாடங்களை எடுத்து மருத்துவம், பொறியியலுக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்ட மாணவர்களுக்கு, அக்கல்வியை முற்றாகப் புறந்தள்ளி, ஒரு மாத பயிற்சியின் அடிப்படையில் எழுதும் தேர்வே அவனுக்கு உயர்கல்வி வாய்ப்பைத் தீர்மானிக்கும் என்பது அநியாயம் மட்டுமல்ல அயோக்கியத்தனமும் அல்லவா?

உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு என்ன பதில்?

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு வந்து, நீட் தேர்வு முடிவை வெளியிடக்கூடாது – இது நியாயமாக நடைபெற்ற தேர்வும் அல்ல. ஒரே கேள்வித்தாளும் கிடையாது. தமிழகத்திற்கு ஒரு கேள்வித்தாளும் – குஜராத்திற்கு வேறு ஒரு கேள்வித்தாளும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இங்கே கொடுக்கப்பட்ட கேள்வித் தாள்கள் கடினமாகவும், குஜராத்தில் கொடுக்கப்பட்ட கேள்வித் தாள்கள் சுலபமாகவும் இருந்தன என்று நீதிபதிகள் கூறி, சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திற்கு ஆறு கேள்விகளை முன்வைத்தனர்.

1. இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி?

2. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வு நடத்தாததற்கு காரணம் என்ன?

3. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதன் காரணம் என்ன?

4. கல்வித்தரம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாட்டுடன் இருக்கும் நிலையில், நீட் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்?

5. கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கும் இடையில் கல்வித்தரம் வேறுபடும்போது அனைவரும் சி.பி.எஸ்.இ. தேர்வை எப்படி எதிர்கொள்ள முடியும்?

6. மாநில மொழிகளில் உள்ள வினாத்தாளுக்கும், இந்தி, ஆங்கிலம் மொழியில் உள்ள வினாத்தாளுக்கும் வேறுபாடு எப்படி வந்தது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழ்நாட்டிற்கு மட்டும் கடினமான கேள்வித்தாள்!

நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள், இந்தியா முழுக்க ஒரே தேர்வு – ஒரே வினாத்தாள். இங்கே ஆங்கில மொழியில் வினாத்தாள்கள். வடக்கில் ஆங்கிலம் தெரியாத வர்களுக்கு ஆங்கில வினாத்தாளை இந்தியில் மொழி பெயர்த்தால், அதே கேள்விகள்தானே இருக்கவேண்டும்? ஆனால், குஜராத்தில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாள் எளிமையாக இருந்தது. தமிழ் நாட்டில் மட்டும் மிகவும் கடினமான கேள்வித்தாள். அதனால், நம்முடைய பிள்ளைகள் அந்தத் தேர்வில் 5 விழுக்காடு கூட தேர்வாகவில்லை.

எனவேதான், இன்றைய சூழலில், கிராமப்புறங்களைச் சேர்ந்த பிள்ளைகள் டாக்டர்களாக முடியாத சூழல் உள்ளது.

200-க்கு 191 கட்-ஆப் மதிப்பெண் பெற்றிருக்கிறார் ஒரு ரிக்க்ஷா தொழிலாளியின் பிள்ளை. ஒரு சாதாரண தொழிலாளியின் பிள்ளை இதற்கு மேல் எப்படி மதிப்பெண்கள் பெற முடியும்? அந்த மாணவரால் நீட் தேர்வில் தேர்வாக முடியவில்லை.

எனவேதான், இந்த நீட் தேர்வு என்பது சமூகநீதியை ஒழிப்பதற்காக திட்டமிட்டு கொண்டு வந்த ஒரு சூழ்ச்சிப் பொறி,  கண்ணிவெடி. அதனை எதிர்த்துதான் நாம் போராடியாக வேண்டும்.

பயிற்சி பெற பல ஆயிரம் ரூபாய் பணத்திற்கு ஏழை எங்கே போவான்?

நீட் தகுதித் தேர்வுக்கு பயிற்சி தரும் நிறுவனங்கள் அதை ஒரு இலாபகரமான தொழிலாகச் செய்யும் நிலையில் பல ஆயிரம் ரூபாய் கட்டணமாகக் கேட்கின்றனர். அன்றாட கூலிகளின் பிள்ளைகளும், ஏழை எளிய குடும்ப பிள்ளைகளும் எப்படி பணம் செலுத்தி பயிற்சி பெற முடியும்?

அது மட்டுமல்ல, அப்படிப்பட்ட பயிற்சி வகுப்புகள் நகரங்களில் மட்டும் கிடைக்கும் நிலையில் கிராமப்புற மாணவர்கள் பயிற்சி பெறுவது எப்படி?

99% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி மறுக்கப்படலாமா?

1200க்கு 1190 மதிப்பெண் பெற்று, கட் ஆப் மதிப்பெண் 196.6 பெற்ற மாணவர்களுக்குக் கூட மருத்துவ இடம் இல்லை என்றால், இதைவிட அநியாயம், அக்கிரமம் வேறு உண்டா?

அப்படியே அவர்களுக்கு இடம் ஒதுக்கினாலும் சுயநிதிக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கி அங்கு 50 லட்சம் ரூபாய் கேட்கும்போது அந்த ஏழை மாணவன் எப்படிப் பணம் தரமுடியும்?

இப்படி எத்தனையோ நடைமுறைக் கேடுகளை மறைத்து, நீட் தேர்வை நடத்துவது இளைய தலைமுறைக்கு இந்த அரசு செய்யும் மாபெரும் அநீதியாகும்.

இரத்தத்தால் கையொப்பம்:

இக்கொடுமைகளைக் கண்டு கொதித்துள்ள மாணவர்கள் முதல் கட்டமாக இரத்தத்தால் கையொப்பம் இட்டு குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். இதைவிட அவர்கள் தங்கள் கொதிப்பையும் எதிர்ப்பையும் எப்படிக் காட்ட முடியும்? இதற்குத் தீர்வு இல்லையென்றால் விளைவு மோசமாகுமே!

திராவிடர் கழகத்தின் போராட்டமும் எழுச்சியும்!

அறைகுறையாக செய்திகளைத் தெரிந்து கொண்டு, தகுதித் தேர்வு நடத்துவது நல்லதுதானே? அதில் என்ன தவறு என்று பேசித் திரிந்த பேர்வழிகளுக்கும் குழம்பி நின்ற மக்களுக்கும் திராவிடர் கழகம் தனது துண்டறிக்கைகள், பிரச்சாரங்கள், போராட்டங்கள் மூலம் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன் விளைவாய் பெற்றோரும் மாணவர்களும், அரசியல் கட்சியினரும் மிகப் பெரிய அளவில் விழிப்பும், தெளிவும், உணர்வும் பெற்றுள்ளனர்.

குடியரசுத் தலைவருக்குக் குவியட்டும் கடிதங்கள்:

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், மற்றக் கட்சித் தலைவர்களும் சேர்ந்து எடுத்த முடிவின்படி, குடியரசுத் தலைவருக்குக் கீழ்க்கண்ட வாசகங்களைக் கொண்ட கடிதங்களை அனைவரும் அனுப்பி கோடிக்கணக்கில் கடிதங்கள் குவிய வேண்டும்.

நீட் தேர்வு நிரந்தரமாய் ஒழிக்கப்பட வேண்டும்.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டி தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி சில மாதங்கள் ஆகியும் மத்திய அரசு அதை அப்படியே கிடப்பில் போட்டு தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றது.

பொதுப் பட்டியலில் உள்ள கல்வியில், மாநில அரசுக்கு எல்லா உரிமையும் உண்டு. அதை முழுமையாக மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்தக்கொள்ள முடியாது. எனவே, தமிழகம் மிகப் பெரிய அழுத்தத்தை மத்திய அரசுக்குத் தந்து ‘நீட்’ தேர்வை நிரந்தரமாக விரட்ட வேண்டும்.

அனைத்துத் தரப்பும் ஒன்று சேர்ந்து அயராது போராட வேண்டும்

ஒப்புக்காக போராட்டங்கள், எதிர்ப்புகள் என்ற நிலையில்லாமல், முழு முனைப்பில், நீட் தேர்வை ஒழிக்க அனைவரும் போராட்டத்தில் இறங்க வேண்டும்.

மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், அரசியல் கட்சிகள் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, நீட் தேர்வை நிரந்தரமாய் விலக்கிக் கொள்ளும் வரைப் போராட வேண்டும்.

நீட் தேர்வில் ஓராண்டு, ஈராண்டு விலக்கு வேண்டுவதற்கு மாறாய், நீட் தேர்வையே விலக்கப் போராடுவதும் அதில் வெற்றி பெறுவதுமே சரியான தீர்வாகும்.

பல்வேறு பாடத்திட்டம் பல்வேறு தரமுடைய கல்வி நிறுவனங்கள் உள்ள நிலையில் பொதுத் தகுதித் தேர்வு என்பது நேர்மைக்கும், மனித உரிமைக்கும், சமூக நீதிக்கும் எதிரானதாகும். எனவே, அதை நிரந்தரமாய் ஒழிப்பதே நிரந்தரத் தீர்வாகும்.

-மஞ்சை வசந்தன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *