உண்மை இதழில் வெளிவந்த “புத்தி வந்தது’’ என்ற சிறுகதை சிறப்பாக இருந்தது.
இக்கதையின் ஆசிரியர், “சக்தி என்பது ஒவ்வொரு மனிதனிடமும் அமைந்துள்ளது இயற்கையே. அந்த மாபெரும் சக்தியின் மீது அறிவுக்கண்ணை செலுத்தி அந்தச் சக்தியை வெளிக்கொணர்ந்து செயல்பட்டால் விபரீதமான முடிவுகளிலிருந்து தன்னையும், நாட்டையும் காத்து நிற்க முடியும்’’ என மனவெழுச்சியை தட்டி எழுப்பியுள்ளார். ஆறு.கலைச்செல்வன் அவர்களுக்குப் பாராட்டுகள்.
இரா.திலகம்,
9/12, நல்லம்பலபிள்ளை தெரு,
பரங்கிப்பேட்டை.
* * *
நான் உண்மை இதழ் ஜூன் 16-_30, 2017 படித்தேன். அதில் நீதிக்கட்சி ஆட்சிக்கு முன் அரசுப் பணிகளில் இருந்த பார்ப்பனர் மற்றும் நம்மவர் நிலை குறித்த புள்ளிவிவரங்கள் கண்டேன். பார்ப்பனர் ஆதிக்கத்தை விளக்கும் இப்புள்ளி விவரங்கள் அனைவரும் அறிய வேண்டியதாகும்.
அதிலுள்ள அனைத்துச் செய்திகளும், கட்டுரைகளும் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. தொடர்ந்து படிப்போர், “மானமும் அறிவும் பெற்று உயர்வர்! என்பது உறுதி!’’
க.பழநிசாமி,
தெ.புதுப்பட்டி(கி.அ),
திண்டுக்கல் கோட்டகை
* * *
“இவ்விதழில் (1-_15 ஜூலை) அய்யா மஞ்சை வசந்தன் அவர்களின், “ஜோதிடப் புரட்டு’’, சு.அறிவுக்கரசு அவர்களின், “அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?’’ என்ற காத்திரமான சான்றுகளுடன் வைத்திடும் விவாதம்! போன்றவை சிந்தைக்கு விருந்தாகும். “ஜாதகம் பெண்களுக்குப் பாதகம்’’ என்ற கட்டுரை _ அறிவற்ற மூடப்படிப்பாளிகளின் மூளையில் வெளிச்சம் பாய்ச்சட்டும்! நான் பங்குபெற்ற கவியரங்கம், சொற்பொழிவுகளில் இவற்றைத் தோலுரித்துக் காட்டியுள்ளேன்! நல்லவை தொடர்க! மூடநம்பிக்கையின் முகமூடி கிழிந்திட ‘உண்மை’ ஈட்டிகள் பாயட்டும்!
கவிஞர் சா.கோவி,
விளாத்திகுளம்,
3.7.2017