ஜாதகம் பெண்களுக்குப் பாதகம்!

ஜூலை 01-15

முப்பது வயதைக் கடந்தும் மண வாழ்க்கையில் நுழைய முடியாமல் தவிக்கும் பெண்கள் மிகுதியாக உள்ளனர்.

இவர்களுக்கு மண வாழ்க்கை அமையாமல் இருப்பதற்குக் காரணங்கள் பல இருந்தாலும், மிக முக்கியமான காரணம் ஜோதிடம்.

“பொருத்தம் சரியில்லை’’, “செவ்வாய் தோசம்’’, “நாக தோசம்’’ என்றெல்லாம் கூறி, ஜோதிடம் குறுக்கிடுவதால், அவர்களுக்கு அமைய வேண்டிய அருமையான வாய்ப்புகள் நழுவிப் போய்விடுகின்றன. மீண்டும் ஒரு வாய்ப்புக்கு அவர்கள் நீண்டகாலம் காத்திருக்க நேரிடுகிறது.

ஜோதிடத்தின் மூலம் செவ்வாய் தோசம் என்பதும், பத்து பொருத்தங்கள் சரியாக இருந்தால்தான் திருமணம் என்பதெல்லாம் உலகில் வேறு எந்த நாட்டுப் பெண்களுக்கும் இல்லாதபோது, தமிழ்ப் பெண்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கொடுமையான தண்டனை?

ஒரு பெண்ணும் ஆணும் மணம் புரிந்துகொண்டு வாழ வாய்ப்பு உண்டா? இல்லையா? என்று முடிவு செய்ய வேண்டிய மிக மிக முக்கியமான பொறுப்பினைப் பெற்றோர் ஒரு ஜோதிடரிடம் ஒப்படைக்-கின்றனர்.

மாப்பிள்ளை நல்லவனா? கெட்டவனா? இரக்க முடையவனா? முரடனா? சிக்கன மானவனா? செலவாளியா? குடிப்பழக்கம் உள்ளவனா? அதேபோல் மணப்பெண் பொருத்தமானவளா? சரியானவளா? என்பதைப் பற்றியெல்லாம் முதலில் ஆராயாமல், அவர்கள் முதலில் கேட்பது ஜோதிடம்! எதிர்பார்க்கும் பிறந்த நேரம் போன்ற குறிப்புகளைத்தான்.

ஜோதிடர் சொல்வதை அப்படியே ஏற்கும் பெற்றோர், திருமணத்தை செய்து முடிக்கின்றனர். ஆனால், ஜோதிடர்கள் வழிகாட்டுதலோடு நடைபெறும் திருமணங்கள் பல தோல்வியில் முடிகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

ஜோதிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள என் நண்பர் ஒருவர், ஜோதிடர் சொன்னபடியே தன் மகள் திருமணத்தை நடத்தினாராம். ஆனால், மணமான நான்கு மாதங்கள்கூட முடியாத நிலையில், அவர்கள் மண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்களாம்.

நண்பர், அந்த ஜோதிடரிடம் போய் நீங்கள் எல்லாம் சரியாக இருப்பதாகச் சொன்னதை வைத்துத்தானே திருமணம் செய்து வைத்தேன். இப்போது அவர்கள் பிரிந்து போகும் நிலை ஏற்பட்டு விட்டதே என்று முறையிட்டாராம். அதற்கு ஜோதிடர் சொன்ன விளக்கம் இது:

விதி என்று ஒன்று இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒருவர் பிறக்கும்போது, அவர் வாழ்க்கையில் இன்ன இன்னது நடக்கும் என்று இறைவன் தலையில் எழுதி விடுவதால், அந்த தலைவிதிப்படிதான் எல்லாமே நடக்கும் என்று விளக்கம் கொடுத்தாராம்.

எல்லாம் இறைவன் விதித்த விதிப்படிதான் நடக்கும் என்றால் ஜோதிடம் எதற்கு? எண் கணிதம், பரிகாரம், அதிர்ஷ்டக்கல் என்ப-தெல்லாம் எதற்கு? இவையெல்லாம் மனித வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் என்றால், இறைவன் வகுத்த விதி என்ன ஆவது? என்று கடுமையாகப் பேசிவிட்டு, அதன் பிறகு ஜோதிட நம்பிக்கையை விட்டு விட்டதாகக் கூறினார் நண்பர்.

செவ்வாய் தோசம் என்றால் திருமணம் செய்யக்கூடாது என்கிறார்கள். செவ்வாய் தோசம் கழிப்பதாகச் சொல்லி, பலரும் பணத்திற்காக ஏமாற்றுகிறார்கள். செவ்வாய் தோசம் கழிக்கப்பட்டும் திருமணம் ஆகாதப் பெண்கள் ஏராளம். இதையெல்லாம் அறியாத நம் மக்கள் பணத்தை வீணே அள்ளியிறைக்-கின்றார்கள்.

கணவன் ஜாதகத்தில் நீண்ட ஆயுளோடு இருப்பான் என்றிருந்தால் செவ்வாய் தோசம் என்ன செய்யும்?

ஒரு தம்பதியரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் ஜாதகத்தை இரண்டொரு நிமிடங்-களில் பார்த்துவிட முடியாது. கூர்ந்து நோக்கி, ஆராய்ந்து பார்த்து உள்ளுணர்வோடும், தெய்வ அருளோடும் சொல்ல வேண்டிய விஷயம் இது. அப்படிப்பட்ட ஜோதிடர்களைத் தேடினால் நூற்றில் ஐவர் கூடத் தேறமாட்டார்கள்.

இவ்வாறு கூறுகின்றார் வித்வான் இலட்சுமணன். நூறு ஜோதிடர்களில் ஐவர்தான் தேறுவார்கள் என்றாலும் அந்த ஐந்து ஜோதிடர்களையாவது எப்படி அடையாளங் காண்பது?

முப்பது ஆண்டுகளாக ஜோதிடத் தொழில் செய்துக் கொண்டிருக்கும் தேர்ச்சி பெற்ற, ஜோதிடத்தை நன்கு அறிந்த ஒருவர் குறித்துக் கொடுத்த,

“சுக்கில பட்சமும் துவாதசி திதியும் அசுவணி நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.15_க்கு மேல் 11.50_க்குள் கும்ப லக்கணத்தில்…

நடைபெற்ற திருமணம் தோல்வியில் முடிந்து தம்பதிகள் பிரிந்துவிட்டனர்.

ஜோதிடக்கலை என்பது அறிவியல் சார்ந்தது என்றும் அந்த அறிவியல் கதையை முறையாகக் கற்ற ஒரு ஜோதிடருக்கு ஒரு குழந்தையின் பிறந்த நேரம் துல்லியமாகக் கிடைத்தால், அவர் கணித்து எழுதும் ஜாதகம் நூறு விழுக்காடு சரியாக இருக்கும் என்கிறார்கள் ஜோதிடக்கலை வல்லுனர்கள்.

குழந்தை பிறந்த நேரம் என்பதை எந்தச் சூழ்நிலையை வைத்து முடிவு செய்வது என்பதிலும் ஒரே குழப்பம். அதாவது, குழந்தையின் தலை வெளியே வந்துவிட்டது.

ஆனால், குழந்தையின் பிற பகுதி தாமதித்து, பிறகு முழுமையாக வெளியே வருகிறது. இதில் குழந்தை பிறந்த நேரம் என்பது குழந்தையின் தலை மட்டுமே வெளிவந்த நேரமா? அல்லது உடல் முழுதும் வெளியே வந்த நேரமா? குழந்தையின் தலை மட்டும் வெளியே வந்தபோது இருந்த கிரக நிலை, உடல் முழுதும் வெளியே வந்தபோது மாறியிருக்கும்.

இவ்வாறு குழந்தை பிறந்த சரியான நேரம் என்பதில் ஒரு குழப்ப நிலை இருக்கும்போது, இதையெல்லாம் அறிந்திராத ஒரு மருத்துவச்சி தன் விருப்பப்படி ஐந்து, பத்து நிமிடங்கள் முன்னோ பின்னோ எழுதித் தரும்-போது அந்த “சரியில்லாத’’ குழந்தையின் பிறந்த நேரத்தை வைத்து ஒரு குழந்தையின் ஜாதகத்தை துல்லியமாக எழுத முடியுமா?

மனிதர்கள் வாழ்வில் கோள்கள் (கிரகங்கள்) ஆதிக்கம் செலுத்துகின்றன என்கிறது ஜோதிடம். பல கோடி மைல்களுக்கப்பால் உள்ள மிகப்பெரிய பருப்பொருளைக் கொண்ட கோளங்கள், மனிதர்களின் வாழ்வில் எவ்வாறு குறுக்கிட முடியும் என்பது ஒருவரின் கற்பனைக்கும் எட்டாததாக உள்ளது.

வானில் உள்ள ஒன்பது கோள்கள் (நவகிரகங்கள்) மனிதனை ஆட்டிப்படைப்பதாக ஜோதிடர்கள் நம்புகிறார்கள். ஆனால், அறிவியல் மட்டத்தில் இதுகுறித்து கருத்துரைக்கிறார் இந்திய அறிவியல் மாமேதை, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மதிப்புமிகு அப்துல் கலாம் அவர்கள்.

“ஜோதிடம் ஒரு கலை என்பதற்கு எதிராக நான் எந்தக் கருத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆனால், அது அறிவியல் என்ற போர்வையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நான் வருந்தவே செய்கிறேன். இந்த கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள் ஆகியவை மனித உயிர்கள் மீது ஆற்றல்செலுத்த இயலும் என்ற கட்டுக்கதைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை நானறியேன்.

விண்வெளியில் உள்ள இவற்றின் சரியான இயக்கத்தைச் சுற்றி குழப்பம் மிகுந்த கணக்குகளைக் கற்பனையில் உருவாக்கி, அவற்றிலிருந்து மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் பற்றிய முடிவுகளைப் பெறுவது என்பது சரியானதென எனக்குத் தோன்ற-வில்லை. நான் காணும் வரை பூமி ஒன்றே ஆற்றல் மிகுந்த சுறுசுறுப்புடன் இயங்கும் கோளாகும்…’’ என்று கூறுவதின் வழி மனிதர்கள் மீது கோள்களின் ஆதிக்கம் என்பது கட்டுக்கதை என ஒதுக்குகிறார் மதிப்புமிகு அப்துல் கலாம்.

– நாரண. திருவிடச்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *