26.01.1981 அன்று குடும்ப நலத்துறை _ பெரியார் நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய “குடும்ப நல பயிற்சி முகாம்!’’ பெரியார் நூலக ஆய்வகத்தில் என் தலைமையில் துவங்கியது.
எங்களைப் பொருத்தவரையில் குடும்ப நலத் திட்டப் பிரசாரத்தை அன்றாடக் கடமையாகக் கருதி, திராவிடர் கழகக் கூட்டங்களிலும், பகுத்தறிவாளர் கூட்டங்களிலும் சுயமரியாதைத் திருமண நிகழ்ச்சிகளிலும் அன்றாடம் வலியுறுத்தி கடந்த 50 ஆண்டுகளாகச் செய்து வருகிறோம்.
“80 ஆண்டுக் கால அனுபவம் எனக்கு இருக்கிறது’’ என்று தந்தை பெரியார் அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டார்கள். தனது அனுபவ அறிவால், தந்தை பெரியார் ஆராய்ந்து, பொது ஒழுக்கத்தை, பொதுநலனை முன்னிட்டு குடும்பக் கட்டுப்பாடு அவசியம் என்றார்! வெறும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை தாம் பார்க்கவில்லை என்றார்.
1950ஆம் ஆண்டுக்கு முன்பே தந்தை பெரியார் எழுதிய, “பெண் ஏன் அடிமையானாள்’’ என்ற நூலில், (இந்நூல் பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது. பல பதிப்புகள் கண்டது.
ஆங்கிலம், பிரெஞ்சு, கன்னடம், மலையாளம், போன்ற பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. “கர்ப்பத்தடை’’ என்று ஒரு அத்தியாயத்தையே எழுதி பெண்களுக்கு கர்ப்பத்தடை அவசியம் என்று வற்புறுத்தினார்.
“பெண்கள் விடுதலை பெற வேண்டுமானால் பிள்ளை பெறுவதையே அடியோடு நிறுத்த வேண்டும் என்று இன்றைக்கு 46 ஆண்டுகளுக்கு முன் சொன்னார்.
அது மட்டுமல்ல. ஆண்களும் சுயேச்சையாக சுயமரியாதையாக வாழ, கர்ப்பத் தடை அவசியம்’’ என்று வற்புறுத்தினார்!
காமராசர் சிறப்பாக ஆட்சி செய்தார் என்றால் அவர் மொட்டை மரமாக இருந்தார் என்பதால்தான் என்று தந்தை பெரியார் கூறினார். எனவே, பொது வாழ்க்கையில் தூய்மையுடனும், தனி வாழ்க்கையில் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கு குடும்பக் கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும்.
இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் முதலில் தாங்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டு மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும்.
28.01.1981 அன்று கல்லூரிகளில் உதவித் தொகை பெறும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் வருகைப் பதிவை 90 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாகக் குறைக்குமாறு _ நான் வேண்டுகோள் விடுத்து ‘விடுதலை’யின் மூலம் வலியுறுத்தினேன்.
“கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவித் தொகை அவர்களுக்குக் கிடைக்க வேண்டு-மானால் கல்லூரி வருகைப் பதிவு (Attendance) 90 சதவீதம் இருக்க வேண்டும் என்று அரசு போட்ட ஓர் ஆணைக்கு எதிராக அதை எழுதினேன்.
ஏனெனில் பல ஊர்களில் கல்லூரிக் கட்டிடங்கள் நகருக்கு வெளிப்புறத்தில் தொலைவில் அமைந்துள்ளன. மாணவர்கள் 10, 15 மைல்களுக்கு அப்பால் இருந்து பல்வேறு குடும்ப வேலைகளுக்கு இடையே படிக்க வருகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் 90% வருகைப் பதிவு அவர்களுக்கு கட்டாயமாக்குவது அவர்களின் படிப்பைத் தடுக்கும்.
எனவே, முதல்வர் அவர்கள், வருகைப் பதிவு 75 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் சைதை எம்.பி.பாலு அவர்களின் மகள் பூங்கொடிக்கும், நெய்வேலி எஸ்.தண்டபாணி அவர்களின் மூத்தமகன் பாண்டியன் டி.எம்.ஈ.க்கும் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்னுடைய தலைமையில் 01.02.1981 அன்று சென்னை மயிலாப்பூர் வடக்கு மாடவீதியில் உள்ள வேலூர் லட்சுமி அம்மாள் மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது.
என்னுடன் விழாவில் மறைந்த கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மற்றும் மாநில மகளிரணி அமைப்பாளர் க.பார்வதி, வ.ஆ.தெற்கு மாவட்டத் தலைவர் வேல்சோமசுந்தரம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காக அரசு அலுவலர்கள் வீடு வீடாக வர இருந்த சூழ்நிலையில் நான், 07.02.1981 அன்று, ‘விடுதலை’யில் முதல் பக்கத்தில் ‘நாத்திகன் என்று சொல்லுங்கள்’ என்று தலைப்பிட்டு கழகத் தோழர்கள் பக்கத்தில் இருந்து நம் மக்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று எழுதினேன்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் 48ஆவது மாநில மாநாடு பிரம்மாண்டமான அளவில் பெரியார் திடலில் 07.02.1981 அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிலே உரிமையோடு கலந்து கொண்டு பேசினேன்.
தந்தை பெரியார் அவர்கள் போராடிப் பெற்ற சமூகநீதி அமுலாக்கப்பட்ட நிலையில் அதன் உருவங்களாக நீங்கள் இங்கே அமர்ந்திருப்பதைக் காணும்போது பெருமையடைகிறோம்.
ரகசியக் குறிப்பேட்டு முறையை ஒழிக்க தந்தை பெரியார் அவர்கள் நீண்ட காலமாகப் போராடி வந்தார்கள்.
கலைஞர் ஆட்சிக் காலத்தில் அந்த ரகசியக் குறிப்பேட்டு முறையை ஒழித்து அதற்காக பாராட்டுக் கூட்டம் ஒன்றையே தந்தை பெரியார் அவர்களை அழைத்து என்.ஜி.ஓ.சங்கம் நடத்தியது. அந்த ரகசியக் குறிப்பேட்டு முறை இப்போது மீண்டும் நுழையத் துவங்கி-யிருக்கிறது. அந்த ஆபத்தை முறியடித்தாக வேண்டும்!
மாநாட்டின் முன், ஊர்வலம் வரும் வழியில் அண்ணாசாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கும், அறிஞர் அண்ணா சிலைக்கும், என்.ஜி.ஓ. சங்கத் தலைவர், ஒலிமுழக்கங் களிடையே மாலை அணிவித்தார். சங்கத் தலைவர் சிவ.இளங்கோ, துணைத் தலைவர் பழனியாண்டி, கருப்பசாமி, கண்ணன், பொருளாளர் புண்ணியக்கோடி, முன்னாள் பொதுச் செயலாளர் சுப.சீதாராமன், மேலும் மாவட்டப் பொறுப்பாளர்கள் அணிவகுத்து வந்தனர்.
09.02.1981 அன்று திருச்சி சின்னக்கடை வீதியில் நடைபெற்ற பார்ப்பன ஆதிக்கக் கண்டன ஊர்வலத்திற்குப் பிறகு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். மாநாடு போல் திரண்டிருந்த அந்த பிரமாண்ட பொதுக்-கூட்டம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாகும்.
15.10.1957 குளித்தலை, 10.03.1957 பசுபதி-பாளையம், 20.10.1957 திருச்சி டவுன் ஹால் மைதானம் ஆகிய முன்று இடங்களில் தந்தை பெரியாரவர்கள் பேசிய பேச்சுகளுக்காக அய்யா அவர்கள் மீது அன்றைய காங்கிரஸ் அரசாங்கத்தினராலே, பக்தவச்சலம் உள்துறை அமைச்சராக இருந்தபோது வழக்குப் போடப்பட்டது.
அய்யா பின்வாங்கிடவில்லை. “ஆம் பேசினேன். ஆனால், என்னுடைய திட்டம் என்ன?’’ என்று நீதிபதி முன் சொல்லுகின்ற நேரத்தில் தெளிவாக ஒன்றைச் சொன்னார்கள்.
“ஜாதி உடனடியாக ஒழிய வேண்டும் என்று சொன்னால் பார்ப்பனர்களை குத்தினால்தான் ஜாதி ஒழியும் என்ற நிலை ஏற்பட்டால், அக்கிரகாரத்திற்கு தீ வைத்தால்தான் ஜாதி ஒழியும் என்ற நிலை ஏற்பட்டால் எங்களுக்கு ஜாதியை ஒழிக்க வேறு வழி இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்ற காலகட்டம் ஏற்படுமேயானால், நான் அதைச் சொல்வேன்.
நிச்சயமாக அதைச் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றார். பார்ப்பனர்களை ஒழித்தாவது ஜாதியை ஒழிப்போமே தவிர நாங்கள் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டோம் என்று நான் பேசினேன்’’ என்று தந்தை பெரியார் அவர்கள் ஒரு ஸ்டேட்-மெண்டு மூலமாக கோர்ட்டுக்கு விளக்கம் கொடுத்தார்.
அய்யா அவர்கள் எதிர் வழக்காடவில்லை. எதிர் வழக்காடாத நிலையிலே அய்யா அவர்கள் இதனை எடுத்துச் சொன்னார்கள்!
“நான் உடனடியாக பார்ப்பனர்களை குத்தச் சொல்லவில்லை. உடனடியாகக் கொல்லச் சொல்லவில்லை. இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் சொல்வேன் என்றுதான் சொன்னேன்’’ என்று கூறினார்கள்.
இந்த வழக்கில் நீதிமன்றத்திலே நீதிபதி அவர்கள் தண்டித்தார். எப்படி தண்டித்தார் என்றால் ஒவ்வொரு பேச்சுக்கும் ஆறு ஆறு மாதம் வீதம் மூன்று பேச்சுக்களுக்காக ஒன்றரை ஆண்டு தண்டித்தார்.
அந்த ஒன்றரை ஆண்டுக் காலம் என்பது 3 வழக்குகளுக்கும் ஆகிய தண்டனை என்ற காரணத்தால் “கன்கரண்ட்’’ தண்டனை ஏக காலத்திலே அனுபவிக்க வேண்டும் என்று சொன்ன காரணத்தால் அய்யா அவர்கள் மூன்று ஆறுமாத தண்டனையினை ஆறமாத தண்டனையாக அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி தனது தீர்ப்பில்,
“எதிரிக்கு (பெரியாருக்கு) வயது 78 ஆகின்றது, அவர் இன்னும் நீண்ட காலம் தாம் வாழ்வோம் என்று நினைக்கவில்லை; பொது வாழ்வில் இருக்கும் அவருக்கு வயது ஏற ஏற விரைவில் லட்சியத்தை அடையத் துடிக்கும் அவரது உணர்ச்சியும் பெருகிக் கொண்டே வருகின்றது என உணருகிறார்.
இந்த 78ஆம் வயதில் இலட்சியத்தைப் பெறுவதற்கான இறுதிக் கட்டத்தை அடைந்து தீரவேண்டும் என்றும், இதில் வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் இறுதிக் கட்டத்தை அடைந்து இரண்டில் ஒன்று பார்த்தே ஆகவேண்டும் என்று உணருகிறார்.
மேலாக காட்டப்பட்ட முறையில் அவரது மனப்போக்கும் எண்ணங்களும் அதை ஒட்டிய அவருடைய திட்டங்களும் அமைந்துள்ளன’’ என்று நீதிபதியே தனது தீர்ப்பில் எழுதுமளவிற்கு பெரியாரின் வேகமும் நெஞ்சுறுதியும் சமூக அக்கறையும் 78 வயதில் இருந்தது. வழக்கு நடக்கையில் நான் ஒவ்வொரு தடவையும் அய்யாவுடன் இருந்தேன்.
இந்த ஒப்பற்ற தலைவர் தமது 95 வயதிலே எவ்வளவு வேகமாக செயல்பட்டார்கள். அவர்கள் இறுதியாக நடத்திய சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு நமக்கெல்லாம் நினைவில் இருக்கிறது என்று பல்வேறு வரலாற்றுரீதியாக சம்பவங்களை விரிவாகவும் தெளிவாகவும் அந்த மாநாடு போல் திரண்டிருந்த பொதுக்-கூட்டத்தில் எடுத்துக் கூறினேன்.
15.02.1981 அன்று கடலூரில் எங்கள் மூத்த அண்ணன் மக்கள் திருமணங்கள் ஆயிர வைசிய திருமண மண்டபத்தில் நடைபெற்றன. அவ்விழாவில் கலந்துகொண்டேன். என்னுடைய அண்ணன் கி.தண்டபாணி அவர்களது மகள் அன்புமொழி, சென்னை பாடியைச் சேர்ந்த கழகத் தோழர் கோவிந்தராசன் அவர்களது மகன் அறிவழகன் ஆகியோருக்கும், கி.தண்டபாணி அவர்களின் மகன் பொன்-மொழி, தகடி கணபதி அவர்களது மகள் பாரதி ஆகியோருக்கும், என்னுடைய மூத்த அண்ணனும் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான கி.கோவிந்தராசன் அவர்களது மகன் செல்வமணி, ஆக்கூர் கோவிந்தசாமி அவர்களது மகள் செல்வராணி ஆகியோருக்கும் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் சிறப்புடன் நடந்தேறியது. என்னுடன் திராவிடர் கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்கள், மணமக்கள் உறுதிமொழி கூறச் செய்து வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைத்தார்.
விழாவில், நான் வரவேற்புரையாற்றுகையில், இந்தக் குடும்பம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் அடியொற்றி வரும் திராவிடர் இயக்கக் குடும்பம்.
தந்தை பெரியார், டாக்டர் கலைஞர் ஆகியோர் எங்கள் குடும்பத் திருமண விழாக்களை இதற்கு முன் நடத்தி வைத்துள்ளார்கள். மூன்று திருமணங்கள் ஒரே மேடையிலே இங்கே நடைபெற்றன. இது ஒரு வகையிலே மிகுந்த சிக்கனமானதாகும். திருமணங்கள் மிகச் சிக்கனமாக நடைபெற வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் கருத்து.
அப்பொழுதெல்லாம் தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளுக்கு எதிர்ப்பு கடுமையாக இருந்தது. இன்றைய தினம் எவரும் அவரது கொள்கைகளை ஏற்றுத் தீர வேண்டும் என்கிற அளவுக்கு நிலைமைகள் மாறியுள்ளன. இது தந்தை பெரியாரின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
சுயமரியாதைத் திருமணத்திற்கு, யார் தலைமை வகித்தாலும், யார் முன்னிலை வகித்தாலும் சரி, தந்தை பெரியார் தலைமையிலும், அறிஞர் அண்ணா முன்னிலையிலும் அந்தத் திருமணம் நடக்கிறது என்றுதான் பொருள்.
எங்கள் குடும்பத்தின் மீதும், என் மீதும் அன்புகொண்டு இவ்வளவு பெருந்திரளாக வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என்று குறிப்பிட்டேன்.
கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி அவர்கள் வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைத்து உரையாற்றும்போது, பார்ப்பனர் நம்மை சூத்திரர்கள் என்று சொல்லும் இழித்தன்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும், ஆணுக்குப் பெண் அடிமை என்கிற தன்மையை மறுத்து ஆண்-_பெண் சரிநிகர் சமத்துவம் என்கிற நிலையை ஏற்படுத்துவது, மூடநம்பிக்கைகளை ஒழித்துக் கட்டி, பகுத்தறிவு சிந்தனையை வளர்ப்பது இம்மூன்றும்தான் சுயமரியாதைத் திருமணத்தின் கொள்கையாக தந்தை பெரியார் அவர்கள் நமக்குத் தந்து-விட்டுப் போயிருக்கிறார்கள் என்று கூறினார்.
திருமணத்திற்கு முன்னிலை வகித்து நடத்திக் கொடுத்த, புதுவை மாநில வீட்டுவசதி வாரியத் தலைவர் எம்.ஏ.சண்முகம் அவர்கள் தனது உரையில், பகுத்தறிவும், சுயமரியாதையும் உடையவராக இருப்பவர் யாராக இருந்தாலும், அவர்கள் கண்டிப்பாக தந்தை பெரியார் அவர்கள் பகுத்துத் தந்த இந்த திருமண முறையைத்தான் ஏற்றுக்கொண்டு தீரவேண்டும்.
கடுகளவு சுயமரியாதை உள்ளவனும் ஆரிய முறையை ஏற்றுக் கொள்ளவே மாட்டான் என்றார்.
விழாவில், கடலூர் நகரத் தி.மு.க. செயலாளர் சவு.பத்மநாபன், கிழக்கு முகவை மாவட்ட தி.க. தலைவர் வழக்கறிஞர் இரா.சண்முகநாதன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராசன், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் எஸ்.ஜனார்த்தனம் (பின்னாளில் உயர்நீதிமன்ற நீதிபதி), தி.மு.க. விவசாயப் பிரிவு தலைமை நிலையச் செயலாளர் நெல்லிக்குப்பம் கிருட்டிணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் ராஜாங்கம், வழக்கறிஞர் கோ.சாமிதுரை, கடலூர் நகர திராவிடர் கழகத் தலைவர் க.சண்முகம், டாக்டர் குழந்தைவேல் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க., தி.க. கழக நிர்வாகிகளும், தோழர்களும், நண்பர்களும் வெளி மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
23.-02.-1981 அன்று பெரியார் திடலில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு பி.வேணுகோபால் அவர்கள் தலைமையில், திருவாளர்கள் ராசபூசனம்-_குணாவதி ஆகியோரின் செல்வன் பரஞ்சோதி பி.ஏ., பி.எல்., (நீதித்துறை இரண்டாம் நிலை குற்றயியல் நீதிபதி _ விளாத்திகுளம்) அவர்களுக்கு, இராசபாளையம் திருவாளர்கள் அய்யாசாமி _ கமலா ஆகியோரின் மகள் டாக்டர் சாந்தா எம்.பி.பி.எஸ். அவர்களுக்கும் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஏராளமான நண்பர்களும் உறவினர்களும், அலுவலக நண்பர்களும் வந்திருந்தனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் எம்.எம்.இஸ்மாயில், மாண்புமிகு ஜஸ்டிஸ் இரத்தினவேல் பாண்டியன் மற்றும் ஏராளமான நீதித்துறை, அரசுத்துறை அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.
விழாவில் நான் கலந்துகொண்டு அனைவரையும் வரவேற்று உரையாற்றினேன். இந்த மணவிழாவைப் பொறுத்தவரையில் மணமகன் இந்த இடத்திற்கும் இல்லத்திற்கும், குடும்பத்திற்கும் நிரந்தரமாக உரியவர்.
அவருடைய இளமைக் காலம் முதற்கொண்டு நாங்கள் ஒரே குடும்பமாகப் பழகி இருக்கின்ற காரணத்தாலும், மாணவர் பருவம் முதற்-கொண்டு இந்த உணர்வோடு அவர் இருக்கின்ற காரணத்தாலும் அவருடைய வாழ்க்கைத் துணை ஒப்பந்த நிகழ்ச்சி இங்கே நடை-பெறுகிறது என்று குறிப்பிட்டேன்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஜஸ்டிஸ் பி.வேணுகோபால் அவர்கள் உரையாற்றுகையில், சம்பிரதாயத் திருமணங்-களில், மணமகன் தாலி கட்டும்போது மணமகள் காலை மிதித்துக் கொண்டுதான் கட்டுவான். ‘நான் ஆண்மகன், நீ எனக்கு அடிமை’ என்று பெண்ணைப் பார்த்து ஓர் ஆண் சொல்லாமல் சொல்வதை வலியுறுத்துகிறது இந்தச் சடங்கு.
இந்தத் திருமணச் சடங்குகள் ஒரு காலத்திலே பொருத்தமுடையவையாக இருந்திருக்கலாம். இன்றைய தினம் எவ்வளவோ கால மாறுபாடு ஏற்பட்டுள்ளது. நாமும் அத்தகைய மாற்றத்-திற்கு ஆளாகித்தான் இருக்கின்றோம்.
உணவிலே மாறுதல், உடையிலே மாறுதல், இருப்பிடத்திலே மாறுதல் என்று இன்னும் எத்தனையோ வகைகளிலே மாறுதல் அடைந்திருக்கின்ற இந்தச் சமூகம் சடங்கு-களிலே, சம்பிரதாயங்களிலே மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்பதால்தான் இத்திருமணத்திலே எந்தவிதமான சடங்குகளும் இடம் பெறவில்லை என்று குறிப்பிட்டார்கள்.
உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு சாமிக்கண்ணு அவர்கள் தன் உரையில், நம்முடைய சிறந்த அறிவானது, சிந்திப்பதின் விளைவாகத்தான் கிடைக்கிறது என்று அய்யா அவர்கள் கூறுவார்கள். அத்தகைய அடிப்படை தத்துவத்தை தன் வாழ்வின் குறிக்கோளாக வைத்துக்-கொண்டிருக்கும் திருவாளர் பரஞ்சோதி அவர்கள் நீண்டநாள் வாழ-வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டார்.
(நினைவுகள் நீளும்)