செய்யக் கூடாதவை

ஜூலை 01-15

சர்க்கரை நோயாளி பூண்டு சாப்பிடத் தவறக்கூடாது

தொடர்ந்து பூண்டு சாப்பிட்டால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும். பூண்டிலுள்ள அமினோ அமிலம் இப்பணியைச் சிறப்பாகச் செய்கிறது.

வெந்தயம் ஊற வைத்துத் தினம் சாப்பிட வேண்டும். ஆவாரம்பூ துவையல், பாகற்காய், வேப்பிலை, சிறுகுறிஞ்சான், நாவற்பழ விதை போன்றவை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
ஆங்கில மருந்தின் அளவைக் குறைப்பதோடு சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து காக்கும்.

50 வயதுக்கு மேல் பகலில் 15 நிமிடம் தூங்கக் தவறக் கூடாது

பகலில் தூங்குவது உடல் பருமனை உண்டாக்கும் என்பது உண்மைதான். ஆனால், பகலில் 15 அல்லது 20 நிமிட நேரம் தூங்கும் குறுந்தூக்கம் மாரடைப்பைத் தடுக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.

அந்தக் குறுந்தூக்கம் பகலில் ஏற்பட்ட பதற்றம், இரத்த அழுத்தம் இவற்றைக் குறைத்து உடலைச் சீராக வைக்கிறது. அதைத் தூக்கம் என்பதைவிட புத்துணர்ச்சி பெறல் எனலாம்.

உண்மையில் இந்தச் சிறு ஓய்வு உடலுக்கும் மூளைக்கும் அதிக அளவு புத்துணர்ச்சியைத் தரும். அலுவலகங்களில் பணியாற்றுகின்ற வர்கள்கூட தங்களுக்குக் கிடைக்கும் 1 மணி நேர உணவு இடைவேளையில் உணவு உண்பதற்கு முன் 20 நிமிடம் அமைதியாய் கண்மூடி அமர்ந்து ஓய்வெடுத்துவிட்டு, பின் முகம் கழுவிக் கொண்டு சாப்பிட்டுவிட்டுப் பணியைத் தொடரலாம்.

அவர்கள் அலுவலகப் பணியாற்றுவதால் படுத்து உறங்கக் கூடாது. அதற்குரிய வாய்ப்பு இருந்தால் படுத்து உறங்கலாம். உணவு இடைவேளையில்தான் அது செய்யப்பட வேண்டும்.
மற்ற பணி நேரங்களில் உறங்கினால் பணி நீக்கத்திற்குரிய குற்றமாக அது ஆகும்.

மயக்கம் அடைந்தவர் படுக்கும்போது தலைக்குத் தலையணை வைக்கக் கூடாது

திடீர் என மயக்கம் போட்டு ஒருவர் விழுந்தால், அவரைச் சுற்றிக் கூட்டம் இல்லாமல் காற்றோட்டமாக விட வேண்டும்.

அறையாய் இருந்தால் ஜன்னல்களைத் திறந்து விட வேண்டும். அவரைப் படுக்க வைக்க வேண்டும். தலைக்குத் தலையணை வைக்கக் கூடாது. காரணம், மயக்கமடைந்தவர் மூளைக்கு உடனடியாக இரத்தம் தேவைப்படும்.

தலையணை வைத்தால் மூளைக்கு வரும் இரத்தவோட்ட வேகம் குறையும். மயக்கம் அடைந்தவரை மல்லாக்கப் படுக்க வைத்து முகத்தை ஒரு பக்கம் திருப்பி வைக்க வேண்டும். அவரது ஆடைகளைத் தளர்த்திவிட வேண்டும்.

மயக்கம் அடைந்தவர்க்கு வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது. மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்கு வந்த பின் ஆரஞ்சு சாறு, டீ அல்லது காபி சிறிது கொடுக்கலாம்.

கனவு பலிக்கும் என்று கவலைப்படக் கூடாது

கனவுகள் என்பது நமது கற்பனை, பழைய சிந்தனைகள், கேட்டது, பார்த்தது, அவற்றோடு தொடர்புடையது இரவில் கனவாக வரும். மற்றபடி இதில் பயப்பட ஒன்றும் இல்லை.
பகலில் கண்டால் பலிக்காது. விடியற்-காலையில் கண்டால் பலிக்கும் என்பதெல்லாம் உண்மையல்ல.

50 ஆண்டுகள் 44,000க்கும் மேற்பட்ட கனவுகளை ஆய்வு செய்த சோலியத் நாட்டு (ரஷ்யா) நிபுணர் Dr.Vasily Kasatkin என்பவர் கனவுகள் பலிக்காது, அவை நினைவு அல்லது கற்பனைகளின் வெளிப்பாடுதான் என்பதை உறுதி செய்துள்ளார்.

தேவைக்கு அதிகமாய் சத்தத்துடன் பேசக்கூடாது

அதிக சத்தத்துடன் பேசுவது அடுத்தவர்க்கும் கேடு, பேசுசின்றவர்க்கும் கேடு. அதிக சத்தத்துடன் பேசுகின்வரின் குரல்வளை 16 விதங்களில் பாதிக்கப்படுவதாய் ஆய்வுகள் கூறுகின்றன.

மேடைப் பேச்சாளர், ஆசிரியர், பாடகர் போன்றோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கூவி விற்கின்றவர்களும் இதனால் பாதிக்கப்படுவ-துண்டு.

அதிக ஓசையைக் கேட்கின்றவர்களுக்கும் உள ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அதிக ஓசையுடன் பேசுவோர், கேட்போர் என்று இரு தரப்பாரையும் பதற்றம் அடையச் செய்கிறது. எனவே, பேசுவோர்க்கும் கேட்போர்க்கும் இதமான அளவுக்கே ஓசை இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *