கவிக்கோ அப்துல் ரகுமான் மறைந்தாரே!

ஜூன் 16-30

‘வானம்பாடி’ இயக்கக் கவிஞர்களில் முக்கியமானவராகத் திகழ்ந்தவர். திராவிட இயக்கத்தோடு எப்போதும் நீங்காத் தொடர்பிலிருந்தவர்; இணைந்து இயங்கியவர்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோர் மீது மாறாத பற்றுடையவர். நம்மீது எப்போதும் மாறாத பாசம் கொண்டவர். தாம் மட்டும் என்றில்லாமல், அடுத்தடுத்த தலைமுறையிலும் ஏராளமான புதுக்கவிஞர்களுக்கு வழிகாட்டியும், ஏராளமான, தரமான தமிழ் மாணவர்களை உருவாக்கியும் தமிழ்ப் பணியாற்றியவர். பாவலர் அறிவுமதி போன்றோர் கவிக்கோவின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் அவர் படைத்த இலக்கியங்களும், பன்னாட்டு இலக்கியங்களிலிருந்தும், பன்னாட்டு இலக்கிய மரபிலிருந்தும் அவர் தந்த செழுமையான படைப்புகளும் நீங்காப் புகழுடையவையாகும்.

தமிழ்நாடு அரசின் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது ஆகியவற்றோடு, இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருதினையும் தன் கவிதை நூலுக்காகப் பெற்ற பெருமகனார்.

தமிழில் புதிய கவிதை முயற்சிகளை செய்து காட்டியவர். அவரது மறைவு தமிழ் இலக்கியத் துறைக்குப் பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், மாணவர்களுக்கும், தமிழ்க் கவிதை உலகத்திற்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆசிரியர்,
கி.வீரமணி

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *