பசுபசு பாதுகாப்பு, பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். கட்டளைக்குக் கீழ்படியும் பா.ஜ.க. அரசு, பசு, ஒட்டகம், எருமை மாடு – இவைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது சந்தைகளில் என்கிறது.
ஒரு கல்லால் இரு மாங்காய்களா?
அப்படி இந்த மிருகங்களை விற்பனை செய்வோர் இறைச்சிக்காக விற்கப்படவில்லை என்ற சான்றிதழ் உரிய அதிகாரிகள் குழுவிடம் பெற்றுத்தான் விற்க முடியும் என்று அரசு ஆணை போட்டதானது – மறைமுகமாக இந்த இறைச்சி விற்பனையைத் தடை செய்வதாகத்தான்.
காரணம், இறைச்சிக்கு – பால் தராத, வறட்டு மாடுகளை விற்றுத்தான், ஏழை விவசாயிகள் மீண்டும் பால் கறவை மாடுகளை வாங்குவது வழக்கம். அதைத் தடுத்து விடுவது அந்த ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதுடன் – ஒரு கல்லால் இரண்டு மாங்காய் என்பதுபோல் இந்த இறைச்சி உண்பதையும் தடுக்கும் லாவகமான திட்டமும் ஆகும் இது.
மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனைகள் – கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பல துறைகளில் பெருமையுடன் குறிப்பிடும்படி எதுவும் இல்லாததோடு, இப்படி ஒரு பிரச்சினையைக் கிளப்பினால், திசை திருப்பிவிட்டு, ஹிந்துத்துவா ஆட்சியை – பெரும்பான்மை இந்துக்கள் என்ற மதவெறியைத் தூண்டி விட்டு, இந்து வாக்கு வங்கியை ஒரு முனைப்படுத்த 2019 தேர்தலுக்கு இப்போதே வித்தூன்றும் திட்டமும் உள்ளது!
விஷம் கக்கும் வி.எச்.பி. பேர்வழி
பூனைக்குட்டி வெளியே வந்தது என்பதுபோல், வடநாட்டில் பெரோசாபாத்தில் பஜ்ரங்தள் அமைப்பினரின் பயிற்சி முகாம் நடந்து முடிவடையும் நிலையில், அதில் கலந்துகொண்டு விசுவ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) சர்வதேச கூட்டுச் செயலாளர் என்ற பதவி வகிக்கும் சுரேந்திர ஜெயின் பேசியுள்ளார்.பசுவதையைத் தடுக்க காவல்துறையினர் தயங்கினால், அப்படிச் செய்வோரை நாங்களே நெஞ்சைப் பிளப்போம்; தமிழ்நாட்டில் (அய்.அய்.டி.) மாட்டுக்கறி விருந்து நடத்தியவர்கள்மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்களைப் பாராட்டுகிறோம்.
பசுவைக் கொல்லுவோரும் உங்கள் கத்திகளைத் தயாராக வைத்திருங்கள்; அவற்றைப் பயன்படுத்தியே இனி அவை பசுவை அறுப்பதற்குப் பதிலாக உங்கள் கழுத்துகளை அறுப்பதற்கே நாங்கள் (விசுவ ஹிந்து பரிஷத் – பஜ்ரங் தளத்தினர்) பயன்படுத்துவோம்! இனி பசு வதையை நாங்கள் ஒருபோதும் அனுமதியோம்!
அதுபோலவே இஸ்லாமி யர்களும், இந்துக்களும் லவ் ஜிகாத் – காதல் மணங்களை செய்து கொள்வதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்! சிறுபான்மைச் சமூகத்தினர் எங்கள் பெண்களை மணந்தால், அவர்களிடமிருந்து திரும்ப எங்கள் பெண்களை மீட்டெடுக்கத் தயங்க மாட்டோம்” என்றெல்லாம் பகிரங்கமாகப் பேசி ஏடுகளில் வெளிவந்துள்ளது!
(இது ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, 1.6.2017 ஏட்டில், 11ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது).
ஒரு ஜனநாயக நாட்டில், இப்படி பகிரங்கமாகக் கொல்லுவோம், குத்துவோம், பெண்களைத் தூக்கி வருவோம் என்று பேசுவதை மத்திய – மாநில அரசுகள் எப்படி அனுமதிக்கின்றன?
உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய செய்தி, மதக்கலவரத்தைத் தூண்டி _- முன்பு பாபர் மசூதி இடிப்பை வைத்து ஹிந்து வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொண்டது போல், சட்டம், ஒழுங்கை அவர்களே கையில் எடுத்துக்கொண்டு தங்கள் வெறியாட்டத்தைத் தொடங்கி விட்டனர்; பிரதமர், மத்திய – மாநில அரசுகள் தங்கள் மவுனத்தின்மூலம் இப்பணிக்கு கண் சிமிட்டி உசுப்பி விடும் நிலை உள்ளதோ என்ற நியாயமான அய்யத்திற்கு என்ன பதில்?
சிவில் யுத்தம் தொடக்கமா?
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் 30.5.2017 சென்னை பெரியார் திடலில் பேசும்போது இவர்கள் ஒரு சிவில் யுத்தத்திற்கு இதன்மூலம் வித்திடுகிறார்களா என்று கேட்டார்; அவர் பேசிய சில மணிநேரத்தில் வடக்கே உ.பி.யில் அவர்கள் ஆட்சியிருக்கிறது என்ற அசட்டுத் துணிச்சலில் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இந்தப் போர்ப் பிரகடனத்தைச் செய்கின்றனர்.
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெறும் கடைசி நாளில் ஒரு பார்ப்பன நீதிபதி (ஷர்மா) இந்திய அரசியல் பிரமாணத்திற்கு எதிராக, புனித பசுவை இந்தியாவின் தேசியச் சின்னமாக அறிவியுங்கள் என்று கூறியுள்ளார்.
நாடு எங்கே செல்கிறது?
வேலிகளே பயிரை மேயும்’ இந்த அநியாயம்பற்றி உலக நாடுகள் என்ன கருதும்?
காவிக் கூட்டம், கருத்து மோதலைக் கைவிட்டு, கைகலப்பு, கொலைத் தூண்டல்களைச் செய்யலாமா?
சட்டம் வேடிக்கை பார்ப்பதா?
இனியும் ஏமாறாதீர் இளைஞர்களே!
இளைஞர்களே, வளர்ச்சிக்கு வாக்களிக்கிறோம் என்று சொல்லி, பிரதமர் மோடி கட்சிக்கு வாக்களித்தீர்களே,
இதற்குத்தானா?
இனி ஒருமுறையும் பகிரங்க மதவெறித் தூண்டிலைத் தூக்கிப் புறப்பட ஆயத்தமாகிவிட்டனர்!
சிறுபான்மை – பெரும்பான்மை பிளவை முதலீடாக மாற்றி – வெற்றி பெறும் வியூகம் வகுத்து விட்டனர்!
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
-கி. வீரமணி ஆசிரியர்