“ஜோக்கர்’’ திரைப்படத்திற்கு
தேசிய விருது!
ஜோக்கர் திரைப்படம் வெளியானபோது, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உட்பட முக்கியமானவர்-களை அழைத்து தனித்திரையரங்கில், அப்பட இயக்குநர் “இராஜூமுருகன்’’ அவர்கள் திரையிட்டுக் காட்டினார். படத்தைப் பார்த்த பின் ஆசிரியர் அவர்கள் “இப்படம் மிகச் சிறப்பாக, சமூக அக்கறையுடன் ஒப்பனைகள் இன்றி உள்ளது உள்ளவாறு காட்சிப்-படுத்தப்பட்டுள்ளது’’ என்று கூறி இயக்குநருக்குத் தமது தனிப்பட்ட பாராட்டையும் தெரிவித்தார்.
உண்மை இதழும் தனது திரைப்பார்வையில் இப்படத்தைச் சிறப்பாகச் பாராட்டி விருதுக்குத் தகுதி உடைய படம் என்று கணித்திருந்தது. எதிர்பார்த்தபடியே இப்படம் தேசிய விருது பெற்றது மகிழ்வளிக்கிறது.
நூல் மதிப்புரை
நூல்: பயிரை மேயும் வேலிகள்! (கவிதை நூல்)
ஆசிரியர்: கோ.கலைவேந்தன், எம்.ஏ.
வெளியீடு: தேங்கனி பதிப்பகம், குத்தாலம், அ.கு.எண்: 609 801. தொலைபேசி: 8940230310
பக்கம்: 124 விலை: ரூ.50/-
அறுபத்து நான்கு கவிதைகள் பல்வேறு தலைப்புகளில். பகுத்தறிவோடு கவிதைகளை எழுதிய அவரது இலக்கு பாராட்டுக்குரியது. ஆழமாகவும், நுட்பமாகவும் சிந்திக்கச் செய்கிறார்.
“மணிக்கோயில் உடல் பேணீர்; அழுக்குமீது
மணிப்பூச்சும் பூசிடுவீர்; மாந்தம் நம்பீர்
அணிக்கோயில் பலச்சென்று செலவு செய்தும்
பணம் பறிக்கும் சிவப்புகளைக் கோயில் என்பீர்’’
என்று கோயில், பக்தி பற்றியும்,
“மலத்தழுக்கும் நிலத்தழுக்கும் சேர்ந்த நீரைப்
பொற்குடத்தில் ஏந்திவந்தே, குடங்கள் தம்மைப்
பெருமுழுக்குச் செய்வதற்குப் புனிதமென்று
என்று குடமுழுக்குப் பற்றியும் சாடுகிறார்.
“நீராக அவனிருப்பின் _ நீரில்
உயிர்சாவே ஆகலாமோ?
-……..
நிலமாக அவனிருப்பின் _ அதில்
நிலநடுக்கம் நிகழலாமோ?’’
என்று கடவுள்பற்றியும் சிந்திக்கச் செய்கிறார்.
இவரை ஊக்குவிப்பது தமிழரின் கடைமையாகும்.
– நுண்ணோக்கி
பகுத்தறிவுப் பாடகர் சுந்தர
அய்யாருக்கு தேசிய விருது!
இப்படத்தில் “ஜாஸ்மின்’’ என்ற பாடலை சிறப்பாகப் பாடிய பகுத்தறிவுப் பாடகர் சுந்தர அய்யாருக்கு தேசிய விருது கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு நமது பாராட்டுகளும் வாழ்த்துகளும். கர்நாடக இசை பாடும் மேல்தட்டுப் பாடகர்கள் பெறும் விருதை, தெருப்பாடகர் பெற்றது சாதனையிலும் சாதனையாகும்.
இவருக்கு 64_ஆவது தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது இவர் கோவில்-பட்டியைச் சேர்ந்த ஒரு விழிப்புணர்வு நாடகக் குழுவிற்காக தார்வார் வடக்கு கர்நாடக மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விழிப்-புணர்வுப் பாடல் ஒன்றை பாடிக்கொண்டிருந்தார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்காடு தாலுகாவில் உள்ள வெள்ளிச்சந்தை என்ற கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் சிறு வயதில் இருந்தே பாடல்களைப் பாடி வருபவர். ஜோக்கர் படத்திற்கு ஒரு சாமானிய நாட்டுப்புறப் பாடகருக்கான குரலோசை கொண்ட ஒருவரை தேடிக்கொண்டிருக்கும் போது ஜோக்கர் பட இசை அமைப்பாளர் சியான் ரொய்டனுக்கு இயக்குநர் ராஜு முருகன் இவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இவரது மனைவி கவிதா கூறும்போது இவருக்கு என்றாவது ஒருநாள் இந்திய அளவில் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று உறுதியாக நம்பினேன். இன்று இவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது என்று கூறினார்.