பொருத்தமான கல்யாணமே!
– கைவல்ய சாமியார்
(தந்தை பெரியாரிடம் மிகுந்த மதிப்புக் கொண்ட உற்ற தோழரான, பகுத்தறிவுக் களஞ்சியம் கைவல்யம் அவர்களின் விளக்கம்: இதையும் படியுங்கள்).
பெரியார் அவர்களின் கல்யாணத்தைப் பெரும் குற்றமாகச் சொல்லுகிறோம். வயதுப் பொருத்தம் வாலிபப் பொருத்த மில்லாத கல்யாணங்களை எழுத்திலும், பேச்சிலும் குற்றம் சொல்லி வந்திருக்கிறோம். முப்பது வயதிற்கும், எழுபது வயதிற்கும் அதிக வித்தியாசம். அப்படியிருக்க, நம் தலைவரே இந்த விதமான கல்யாணம் செய்து கொண்டால் அது குற்றத்திலும், பெரிய குற்றமென்று சொல்லுகிறோம். நெடுநாள் உங்களைச் சேர்ந்தவனாதலினால் என் அபிப்பிராயத்தையும் சொல்லுகிறேன். உங்கள் எண்ணத்துடன் இதையும் ஆலோசித்துப் பாருங்கள்.
வயதான கல்யாணங்களை ஏன் குற்றம் சொல்லுகிறோம்? அதிலுள்ள துன்பங் களினால், அதாவது போக போக்கிய சுகக் குறைவு, சுவாந்திரியமாக இருப்பதிலுண் டாகும் தடைகளினால் ஏற்படும் தொல்லை, வய தானவர்களின் சமீப மரணம் முதலியவைகள் அதிலிருப்பதால் பெண்ணிற்கு எந்த விதத்திலும் மன நிம்மதியில்லை. எல்லாம் துக்கமாகவே யிருக்கிறது. அதனால் இவ்வித கல்யாணங்களை பொருந்தாக் கல்யாணம் என்கிறோம். பொருந்தாக் கல்யாணத்திற்கு துக்கக் காரணமாகவிருக்கும் விஷயங்கள் பெரியார் கல்யாணத்தில் எவ்வளவு பொருந்தியிருக்கிற தென்பதை ஆலோசிப்போம்.
பெரியார் கல்யாணம் பொருந்தாக் கல்யாணமல்ல. பொருந்தும் கல்யாணமென்பதே என் எண்ணம். இந்தக் கல்யாணத்திலுள்ள எல்லாவற்றையும் பொருத்திப் பார்த்தால் 30 வயது. 70 வயது என்கின்ற கணக்கு குற்றமாக முன்னால் தோன்றுகிறதே யல்லாமல் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் வயதின் குற்றம் அடங்கி விடுகிறது. பெண்ணிற்கும், மாப்பிள்ளைக்கும் வயதின் குற்றத்தைப் பற்றின கவலையே இல்லை. பெண்ணின் சுற்றத்தாரோ, அறிமுகக் கூட்டமோ பெண் கிழவனுக்கு கொடுக்கப்பட்டு விட்டதே என்று கவலைப்படுகிறவர்களோ, அங்கலாய்க்கிறவர் களோயில்லை. பெரியாரிடம் எல்லா வசதியும், பெருமையும் இருக்கிறதென்பதை நேரில் கண்டு அனுபவிக்கிற பெண்; பெரியாருடைய பிரியத்தை தன்னூழியத்தால் வசப்படுத்திக் கொண்ட பெண்; நாணம், கூச்சம், அசூயை, அருவெறுப்பு எல்லாம் விட்டு ஆறு வருடம் அன்னியோன்ய மாகப் பழகின பெண்; குமாஸ்தா வேலையிலிருந்து சமையல்காரி வரையிலும் வெறுப்பில்லாமல் பிரியத்தோடு செய்து வருகிற பெண்; பெரியாரிடம் வருகிறவர்களை உபசரிப்பதிலும் முகம் சுளிக்காத பெண், பெரியாருடைய செட்டும், சிக்கனமும் தெரிந்து கொண்ட பெண், நாகரிகமுமில்லை, விருப்பமுமில்லை.
பெரியாரிடம் பக்தியும், பிரியமுமிருந்தா லொழிய, அபிப்ராயத்தாலும், நடிப்பாலும் முடியாத காரியம். ஆறு வருடமாக நடித்து வருவது சாத்தியமில்லை. குற்றம் காணும் பெரியாரை ஏய்ப்பதும் சுளுவல்ல. ஆனதால் இதில் உண்மையான பிரியமும், நட்புமிருக்க வேண்டும். மறையும் ஏமாற்றுமொன்றுமில்லை. பக்குவமாகிப் பதினாறு வருடம் சென்ற பெண்ணிற்கு உலக சங்கதிகளில் எது தெரியாமலிருக்கும்? முப்பதும், எழுபதும் உள்ள கணக்கில் போக சுகங்கள் குறைவு படுமே என்கின்ற விஷயம் ஆறு வருடம் அன்னியோன்யமாகப் பழகின ஆணிற்கும், பெண்ணிற்கும் தெரியாத கணக்கும், திருப்தியும் நமக்கு எப்படித் தெரியும்? வீண் வம்புக்கு நாமேன் போக வேண்டும்? பெண் கவலையற்று திருப்தியோடு சந்தோஷமாகவிருக்கிறது. அதைப் பார்க்கிறோம். எதையோ நினைத்துக் கொண்டு எதையோ பேசுவது நியாயமா?
ஆண் விஷயம் வயது சென்ற காலத்தில் தன்னைப் போஷிக்கத் தகுந்த இடம் வேண்டும். அதற்குத் தகுந்த ஒரு பெண்ணும் கிடைத்தது. அன்னை தயவும், அடியாள் பணியும் என்றபடியாகவும் கிடைத்தது. அது பெரியார் பட்ட கஷ்டத்திற்கு ஏற்ற கூலி யென்றே சொல்ல வேண்டும். பெரியார் நோய் வாய்ப்பட்டால் உபசரணை செய்ய எத்தனையோ பேர்களிருக்கிறார்கள் என்கிறது திராவிட நாடு பத்திரிகை. வாஸ்தவம் தான். அல்வாவும், ஆரஞ்சும் வாங்கிக் கொடுக்க உபயோகப்படும். அறை சொறிந்தால் அதைத் தெரிந்து சொறிகிறவர்கள் யார்? நர்சுக்குப் பகல் இருபது, ராத்திரி இருபது கொடுப்பதற்கு பெரியார் பெட்டிச் சாவியை எடுத்துக் கொள்ளும் வாரிசுகளுக்குப் பெரிய பாடமல்லவா? இதெல்லாமொரு புறமிருக்க, பெரியார் கல்யாணத்தின் காரணத்தைப் பெரியார் விளக்கி எழுதி விட்டாரே, காணப்படும் பொருள்களில் மகன் பிரியமாம், மகனிலும் உடல் பிரியமாம், உடலிலும் உயிர்பிரியமாயிற்றே.
அதைக் காப்பாற்ற இந்த வழி அவருக்குத் தோன்றிற்று. அந்த வழியும் தகுந்தபடி அமைந்தது. அதில் நமக்கென்ன நஷ்டம்? குடும்பத்தாருக்கு கவலையிருக்கலாம். குடும்ப அன்னியோன்யமும், விவகாரங்களும் நமக்கென்ன தெரியும்? குடும்பத் தர்ம சொத்தில் மாதம் 300 ரூபாயும், அதற்கு மேற்பட்ட இரண்டு மூன்று லட்சமுமிருக்கிறது. அதுவுமில்லாமல் கழகப் பணமிருக்கிறது. இவைகளையெல்லாம் சுயமான வழியில் நிலைநிறுத்த அவர் சில நாள் இருக்கத் தானே வேண்டும்? முக்கியமானவர்களின் எச்சரிக்கையாலும், தான் கண்ட சில சம்பவங்களாலும் பயந்தார். ஒரு வாரிசை உண்டு பண்ணிக் கொண்டார். அதனால் நமக்கெல்லாம் என்ன கஷ்ட நஷ்டம்? மணியம்மை பின்னால் கைகட்டி சேவை செய்ய யாரையும் சொல்லவில்லை. எந்த ட்ரஸ்டியிலும் தன் ஆள் ஒருவரை நியமிப்பது வழக்கம் தானே? உழைப்பும், புத்தியுமுடையவர்கள் பெரியவர் களாகிறார்கள். பழைய ஏட்டுப் பிரதியிலிருந்து பார்த்துப் படித்து, எழுது, பேசு என்று பெரியாருக்கு யாராவது பழைய ஏட்டை பெரியார் கையில் கொடுத்தவர்களுண்டா? எல்லாம் ஆலோசித்துப் பாருங்கள்.
பெரியார் மனதில் உண்மை என்று பட்டதைக் கண்டிப்பாய் பேசுகிறவர், எழுதுகிறவர். அவருடைய அந்தப் பேச்சிலும் எழுத்திலும் தான் சுயமரியாதைச் சங்கமும் திராவிட நாடும் உண்டாயிற்று. ஒரு ரூபமாகத் தோன்றிற்று.
அதைச் சிதைக்க நாம்தான் பலதைப் பேசுகிறோமே ஒழிய, கல்யாணம் ஒன்றும் செய்யவில்லை. நம்மையொன்றும் செய்யாது; கழகத்தையும் ஒன்றும் செய்யாது. நம்மில் எத்தனையோ வீரர், சூரர்கள் இருக்கையில் கல்யாணம் கழகத்தை எப்படித் தூக்கிக் கொண்டு போக முடியும்?
ஈரோடு தேவஸ்தானத்தை பத்தொன்பது வருடம் பார்த்து வந்தார். அய்ம்பதினாயிரம் ரூபாய் மிச்சப்படுத்தினார். பின் பட்டக்காரரிடம் ஒப்புவித்தார். பழைய கோட்டைப் பட்டக்காரர் செலவு செய்தார். லோபி என்கிற பெயர்தான் பெரியாருக்குக் கிடைத்தது. கழகப் பணத்தில் ஒரு காசு கூட அனாவசியமாகச் செலவு செய்திருக்க மாட்டார். சுயமரியாதை சங்கத்தைப் பற்றியும், திராவிடர் கழகத்தைப் பற்றியும் நமக்கெல்லாம் எவ்வளவு தெரியுமோ அவ்வளவும் மணியம்மைக்குத் தெரியும். தெரியாததைச் சொன்னால் தெரிந்து கொள்ளும் புத்தியுமிருக்கிறது. இஷ்டம் போல் பேசவும், எழுதவும் வேண்டாம். இதில் நமக்கு நன்மை இல்லை. (‘விடுதலை’ 19.7.1949)
துவேஷப் புயல்!
மணவை திருமலைசாமி
பெரியாரின் அறிக்கையிலுள்ள எந்த வாக்கியங்கள் அவர்களை (ரகளைக்காரர்களை) அப்படி மனம் பதறச் செய்து விட்டன தெரியுமா? கேளுங்கள்!
இயக்க விஷயத்தில், என்னைப் போல பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுடையவர்கள் கிடைக்கவில்லை.
ஆதலால் எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி அவர் மூலம் ஏற்பாடு செய்து விட்டுப் போக வேண்டுமென்று அதிகக் கவலை கொண்டிருக்கிறேன்.
நம்பிக்கையான ஒருவர் எனக்குக் கிடைக்கவில்லை என்றால், அதற்கு யாரும் கோபித்துக் கொள்ளக் கூடாது. கோபிக் கிறவர்களோ, குறை கூறுபவர்களோ அப்படிப்பட்ட ஒருவரைச் சொன்னால் நான் ஏற்கத் தயாராய் இருக்கிறேன். நம் இயக்கத்துக்குத் தொண்டாற்ற, பொறுப் பேற்க முழு நேரத் தோழர்கள் தங்களை முழுதும் ஒப்படைப்பவர்கள் யார் இருக்கிறார்கள்? யார் இருந்தார்கள்?
எனக்கும் எனது பொருளுக்கும் சட்டப்படியான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசரமும், அவசியமுமாகி விட்டது.
ஆகையால், நான் 5, 6 வருஷ காலமாகப் பழகி நம்பிக்கைக் கொண்டதும், என் நலத்திலும், இயக்க நலத்திலும் உண்மையான பற்றும், கவலையும் கொண்டு நடந்து வந்திருக்கிறதுமான மணியம்மையை எப்படியாவது வாரிசுரிமையாக ஆக்கிக் கொண்டு, அந்த உரிமையையும், தனிப்பட்ட தன்மையையும் சேர்த்து மற்றும் சுமார் 4, 6 பேர்களையும் சேர்த்து இயக்க நடப்புக்கும் பொருள் பாதுகாப்புக்குமாக ஒரு டிரஸ்டு பத்திரம் எழுத ஏற்பாடு செய்திருக்கிறேன்.
இந்த வாக்கியங்கள் தான் வெறும் வாயை மென்று கொண்டு, செய்வது இன்னதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந் தவர்களின் வாய்க்குக் கிடைத்த அவல் மாதிரி அகப்பட்டு விட்டது.
வாய்ப் பந்தல்
பெரியார் ஏற்பாட்டை ஜக்பந்தி அமைத்து கட்டுப்பாடாக எதிர்க்கும் கோஷ்டியார், பத்தி பத்தியாகவும், பக்கம் பக்க மாகவும் வியாக்யான வர்ணனையோடு எவ்வளவுதான் தாக்கியபோதிலும், தவறு என்று அவர்கள் எடுத்துக் காட்டும் குறியீடுகள் இரண்டே தான்.
முதலாவது, வாரிசாக ஆக்கிக் கொள்வதற்கு மணியம்மை யாரைப் பதிவுத் திருமணம் செய்து கொள்வது என்பது பொருந்தாத் திருமணம் வகையைச் சேர்ந்தது; இது இயக்கக் கொள்கைக்கே முற்றும் முரணானது.
இரண்டாவது, கட்சியின் தலைமைப் பதவிக்கும் மணியம்மையை வாரிசாக நியமிப்பது ஜனநாயக முறைக்கு மாறானது.
இந்த இரண்டையும் தூண்களாக நிறுத்தித் தான் எதிர்ப்பாளர்கள், என்னென்னவோ விதமான ஜோடனைகள் பண்ணி வாய்ப்பந்தல் போடுகின்றார்கள். உட்புகுந்து பார்ப்போ மானால், அவர்களின் ஆர்ப்பாட்டங்கள் அத்தனையும் அஸ்திவாரப் பலம் இல்லாத போலிப் பந்தல் பொய்மான் வேட்டை என்பது தெளிவாகத் துலங்கும்.
ஏதோ கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் துரும்பைத் தூணாகப் பெருக்கி, பாமர மக்களுக்கு பிரமிப்பை ஊட்டி, அதன் மூலம் பெரியார் மீது சவாரி செய்தாக வேண்டுமென்று கொண்டிருந்த, வெளியே தெரியாத பழைய மாச்சர்யத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது பகுத்தறிவாளர் களுக்குப் பளிச்சென்று விளங்கும்.
சொல்லிக் கொடுத்த பாடம்
பொருந்தாத் திருமணமாம்! பொடலங்காய்! எது திருமணம்? பெரியாரிடம் அரிச்சுவடி யிலிருந்து படித்து மனிதரானவர்கள், பெரியாரிடம் கற்ற பாடத்தைக் கொண்டே, பெரியாரிடம் பாணாவரிசை போட்டுப் பார்க்கிறார்கள். பெரியாருக்குத் தெரியாதா 31 வயதுள்ள குமரியை 72 வயதுடைய கிழவர் திருமணம் செய்து கொள்வது தப்பு என்று? பெரியாரும், மணியம்மையும் ஒத்த வயதினரல்லர் என்பதைப் பெரியார் அறியாரா? அப்படியென்ன மிருக இச்சை பொங்கி, அறிவுக் கண்களை மறைக்கும் காளைப் பருவத்தில் வாலிப முறுக்குடன் இருக்கிறார் பெரியார்? பெரியாருடன் பல வருஷங்களாகப் பழகிய இன்றைய எதிர்ப்பாளருக்கு இந்தப் பகுத்தறிவு கூட உண்டாகவில்லை என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன். நல்ல தீக்ஷணிய புத்தி உடையவர்கள் தான் அவர்கள். அந்த வகையில் அவர்களின் தரத்தை மட்டப்படுத்திக் கூற முடியாது. அப்படியானால் ஏன் இப்படி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் என்றால், வேண்டுமென்றே, பெரியாரின் கியாதிக்கும் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, வெளியாருக்கும், கழகத் தாருக்கும் விகாரப்படுத்திக் காட்ட வேண்டுமென்ற ஒரு காரணத்துக்காகவே அப்படிப்பட்ட பொய்ப் பந்தலை கேடயமாகக் கையில் பிடித்துக் கொண்டு கல்லெறிகின்றார்கள்.
ஒத்த வயது, ஒத்தக் கல்வி, ஒத்த உரிமை இவை திருமணத்திற்கு இன்றியமையாத இலக்கணங்கள் என்று பெரியார் சொன்னதையே பெரியாருக்கு எடுத்துக் காட்டுகிறார்கள் கழக எழுத்தாளர் சிலர். தள்ளாத கிழவருக்கும், இளங்குமரிக்கும் திருமணம் நிகழுமானால், அந்தக் குமரி திருமண வீட்டின் மதிற்சுவரை ஏறிக் குதித்தாவது தப்பித்து ஓடி விடும்படி செய்ய வேண்டியதே சுயமரியாதைக்காரர் கடமை எனப் பெரியார் கூறியதையே பெரியாரிடம் இடித்துரைக்கிறார்கள் அவர்கள்.
இவ்வளவுதானா? இன்னும் எத்தனை எத்தனையோ எடுத்துரைத்துள்ளார் பெரியார். அவற்றை அவர் மறுக்கவு மில்லை, மறைக்கவுமில்லை. மறக்கவுங் கிடையாது. காமாந்தகார விகாரத்தால் அந்தக் கொள்கைகளுக்கெல்லாம் சமாதி கட்டி விட்டார் என்று மற்றையோர் மதிக்கும்படி ஆலோசனை காட்டி, எதிர்ப்பாளர்கள் எழுதுவதும், சொல்லித் திரிவதும் சுத்தப் படுகாளித்தனம்.
ஒத்த வயது எப்போது?
புருஷன், மனைவி சம்பிரதாயத்தைத் தழுவி, ஸ்திரீ இச்சை மிகுந்து, பெரியார் திருமணம் செய்து கொள்ள முனைவாரானால், இந்த எதிர்ப்பாளர் போடும் கூச்சலில் நியாயம் காண முடியும். ஒத்த வயது என்ற இலக்கணத்தைக் காட்டிப் பிரஸ்தாபத் திருமணத்தைத் தடுக்க வேண்டியதும் அவசியந்தான். பெரியாரோ அந்த நிலைமைக்கு அப்பாற் பட்டவர். இளமையை லௌகீகத்தில் துப்பறக்கழித்தவர். கலவி சுவையை உச்சி எல்லை வரைக் கண்டவர். இதற்கு அவரது சரித்திர நூல் சாக்ஷியம் அளிக்கும்.
பெரியார், இப்பொழுது ஸ்திரீ புருஷ சுக சம்பிரதாயத்தைக் கடந்து சிறு குழந்தை போன்ற பருவத்திலிருப்பவர். அத்தகைய ஒருவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றால், அதற்கு ஏதாவது ஸ்திரீ புருஷ லௌகீக வாழ்வு சம்பந்தம் அல்லாத காரணம் இருக்க வேண்டும் என்பதை ஊகித்து உணர வேண்டும். இளங்குமரியின் கூட்டுறவால் தளர்ந்த வாலிபத்தை மீட்கலாம் என்பது கூட இயற்கைக்குப் பொருந்தாது. பெரியாரின் அறிக்கைகள், மற்றவர் ஊகித்துணர வேண்டு மென்ற அவசியத்துக்குக்கூட விட்டு வைக்கவில்லை. அதாவது சொந்தப் பொருளுக்குச் சட்டப்படிக்கான வாரிசு ஏற்படுத்துவதற்காகவே இந்தத் திருமண ஏற்பாடு என்று சொல்லியுள்ளார். அப்படிப் பட்டவர்த்தனமாகச் சொல்லி விட்ட பிறகும், பொருந்தாத் திருமணம், ஒத்த வயது, கொள்கைக்குத் துரோகம், மன்னிக்க முடியாத தவறு என்பதாக வார்த்தைகளை, விவஸ்தை கெட்டு, வாரி இறைப்பதற்கு, இயக்கக் கொள்கையில் உண்மையான பற்றும், தலைவர் மீது மனப்பூர்வமான விஸ்வாசமும் கொண்ட தொண்டர்களோ, தோழர்களோ, சகாக்களோ ஒருக்காலும் ஒருப்படவே மாட்டார்கள்.
காரணார்த்த சொற்செருகல்
ஆணுக்கோ, பெண்ணுக்கோ சம்மதமில்லாமல் நடைபெறும் பலவந்த சுய சம்மதமற்ற பிறர் திருப்திக்காக இணங்கும்படி செய்யப்பட்ட திருமண சம்பந்தமாய்க் கூறி வந்துள்ள சுயமரியாதைப் பிரசார சுலோகத்தை இருவரும் மனப்பூர்வமாய் சம்மதித்து ஏதோ காரணார்த்தமாக கணவன், மனைவி என்ற வார்த்தைகளை ஊடே சேர்ப்பதால் லௌகீகத்தில் ஏற்படுகின்ற ஒரு மாறுதலுக்காக அந்த வார்த்தைகளல்லாமல், வேறெந்த சொற்களாலும், இதர முறைகளாலும், சரியான முறையில், அவசியமான மாறுதலை, சட்ட சம்மதத்தோடு பூர்த்தி பண்ண முடியாதிருக்கிறதே என்பதற்காக செய்ய விரும்பும் ஏற்பாட்டை அசைக்க முடியாமல் வலுப்படுத்துவதற்காக மேற்கண்ட சொற்களை அதாவது, கணவன், மனைவி என்பதான பந்தத்துவ மிகுந்த சொற்களை உபயோகப்படுத்திக் கொள்வதற் காகச் செய்யப்படும் ஒரு ஏற்பாட்டுடன் இணைத்து, அதை பொருந்தாத் திருமணம் என்று ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்களே, அதனால் கப்பலே கவிழ்ந்து விடும் என்று எழுதுகோல் கண்ணீர் (மை) சிந்துகிறார்களே, இது வேண்டு மென்றே செய்யப்படும் அக்கிரமப் பிரசாரம் என்பதல்லாமல் வேறு என்ன?
இல்லற இன்பம் என்று சொல்லப்படுகிறதே, அந்த சுக வாழ்வை அனுபவிப்பதற்காக பெரியாரிடம் மணி யம்மையார் வந்து சேரவில்லை. ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கு முன் அதே காரணத்துக்காக 5, 6 வருஷங்களாக போகுமிடமெங்கும் மணியம்மையாரை அழைத்துச் செல்லவில்லை பெரியார். பெரியாரும் அந்தப் பருவத்தைக் கடந்து விட்டவர். இயக்க சேவை என்பதோடு நில்லாமல், பெரியாருக்கு சிஷ்ருக்ஷணை செய்வதில் திருப்தியும், மனச் சந்துஷ்டியும் கொண்டவர் மணியம்மை. பெரியாரின் புது ஏற்பாட்டை எதிர்ப்போர் அத்தனை பேரும் இதை ஒத்துக் கொள்வார்கள்.
விடுதலை பத்திரிகை நடத்துவது முதல், வீடு மனை வாங்கும் வரைக்கும் மணியம்மை மீது தஸ்தாவேஜும் ஏற்படுத்தி வந்திருக்கிறார் பெரியார். மற்றவர்களுக்காவது மனைவி மக்கள் கவலை, வீடு வாசல் சிரத்தை, சொத்து சுகம் சேகரிப்பு வேலை முதலியன உண்டு. மணியம்மைக்கு அந்த விதமான பற்று எதுவும் இல்லை. அவைகள் எதுவுமே வேண்டாம் என்ற மனத்துடனேயே பெற்றோர்களை விட்டு, பிறந்த வீட்டைத் துறந்து, பெரியார் போகுமிடமெல்லாம் அவருக்குப் பெட்டி படுக்கை சுமந்து திரிகிறார். மணியம்மை யின் கபடமற்ற தன்மையையும், குண விசேஷத்தையும் சென்ற 5, 6 வருஷங்களாகவே கண்டறிந்து வந்திருக்கிறார் பெரியாரும்.
பெரியாரும் லேசுப்பட்ட ஆசாமி அல்ல. லகுவில் யாரையும் நம்பிவிட மாட்டார். பெரியார் ஏமாந்து விட்டார் என்பதாக, இத்தனை வருஷ காலமாக, ஒரு சேதி கூட கேள்விப்பட்ட தில்லை. இப்பொழுதும் மணியம்மையாரிடம் ஏமாந்து விட்டார், ஏமாறுகிறார் என்று எவரும் சொல்ல முடியாது. ஒரு மங்கையிடம் மயங்கி அல்லது முயங்கி ஏமாறும் தன்மையோ, வயதோ உள்ளவரல்லர். அவர். நல்லவை, கெட்டவைகளை நன்றாய் அறிந்தவர்; அறிந்து கழிப்பன கழித்து, கொள்வன கொண்டவர். அத்தகைய ஒரு அனுபவப் பழம், காட்டில் ஒரு காலும் வீட்டில் ஒரு காலுமாக இருக்கிறேன் என்று அடிக்கடி சொல்லி வரும் ஒரு மூதறிஞர், திருமணம் என்ற வார்த்தையை காரணார்த்தமாக உபயோகிக்க விரும்புகிறார் என்றால், அதைப் பொருந்தாத் திருமணம் என்றும், 72 வயது கிழவருக்கும் 27 வயது குமரிக்குமா திருமணம் என்றும் அவருடைய மனதிலும் ஒரு மாது புகுந்து விட்டாளே என்றும், தாத்தாவுடன் என்றும் எழுத்து ஜோடனை பண்ணி இழிவுபடுத்துகிறார்களே, எவ்வளவு மடத்தனமான பிரச்சாரம் பாருங்கள்!
(நூல்: துவேஷப் புயல்)