இயக்க வரலாறான தன்வரலாறு (175)

ஏப்ரல் 01-15

அய்யாவின் அடிச்சுவட்டில்…

இயக்க வரலாறான தன்வரலாறு (175)

பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார்

வரலாறு நெடியது…

 

திருச்சி மாவட்டம் பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டை என்ற கிராமத்தில் இரண்டு சிறுவர்கள் நரபலி கொடுத்த அசல் காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கை செயல் குறித்து நாம் கடுமையான கண்டனத்தை தெரிவித்ததோம். அது சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.

இதுகுறித்து 20.07.1980 அன்று ‘விடுதலை’ இதழில், “நாவலர் மீது பார்ப்பனர் பாய்ச்சல்’’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தேன்.

இந்தக் காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கை செயல்குறித்து சட்டமன்றத்தில் உள்ள பல்வேறு கட்சிக்காரர்களும் அரசின் கவனத்தைத் தகர்க்கும்வண்ணம் கவன ஈர்ப்புத் தீர்மானம் (Calling Attention Motion) கொண்டு வந்ததை ஒட்டி சட்டப்பேரவையின் முன்னவரான நிதிஅமைச்சர் நாவலர் திரு.நெடுஞ்செழியன் அவர்கள், “இதுகுறித்து அரசு குற்றவாளிகளைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கத் தேவையான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது’’ என்றும், “இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட அநாகரீக மூடநம்பிக்கை காட்டுமிராண்டிச் செயல்கள் நடைபெறுவது தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைப் பிரச்சாரம் மேலும் தீவிரமாக்கப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்துவதாக இருக்கிறது’’ என்றும் சட்டப்பேரவையில் குறிப்பிட்டிருந்தார்.

தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை இன்னும் தீவிரமாகச் செய்ய வேண்டும் என்று நிதி அமைச்சர் டாக்டர் நாவலர் அவர்கள் பேசியது கண்டு பார்ப்பனர்களுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வருகிறது.

இதற்கு முன்பாக 19.7.1980 அன்று ‘இந்து’ ஏட்டில் வெளிவந்துள்ள ஒரு கடிதத்தில் நெய்வேலி பார்ப்பனர் ஒருவர் நாவலரின் இந்தக் கூற்று குறித்து, “The observation of one of our Ministers Mr.V.R.Neduchezhiyan in this Connection that the Rationalist Movement has to take deep roots is therefore redundant and unwarranted”…  

“இப்படிக் கூறும் நமது அமைச்சர்களில் ஒருவரான திரு.நெடுஞ்செழியன் இது சம்பந்தமாக பகுத்தறிவு இயக்கம் ஆழமாக வேரூன்ற வேண்டும் என்று கூறியது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட தேவையில்லாத ஒரு கூற்றாகும்.’’

இது பழங்காலக் காட்டுமிராண்டித்தனமான சின்னமே தவிர இதற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை என்று வக்காலத்து வாங்குகிறார். இந்த நெய்வேலி பார்ப்பனர். வேப்பந்தட்டையில், “நரபலி பக்தி பூசை’’ என்ற பெயரால்தானே நடந்தது.

இந்து மதத்தில் நரபலியே இல்லை என்று இந்தப் பார்ப்பனர் சொல்லுகிறாரே அதை நிரூபிக்க முடியுமா? என்று நாம் சவால் விட்டு கேட்க விரும்புகிறோம் என்று அந்த அறிக்கையில் கண்டனத்தையும் தெரிவித்திருந்தேன்.

இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகள் வளரும் சூழலில் தந்தை பெரியார் பற்றியும், அவரது சிந்தனை பற்றியும் மாணவர்கள் அறிய, தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தந்தை பெரியார் அவர்களின் ஒலி _ ஒளி நாடகத்தை மாநிலம் முழுவதும் தமிழக அரசு ஒலிபரப்ப ஏற்பாடு செய்து இருந்தது. இது மிகவும் வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்கதாக இருந்தது. ஆனால், இடையில் கவர்னர் ஆட்சியின்போது இது நிறுத்திவைக்கப்பட்டது.

நாம் அதைக் கண்டித்து இதில் கட்சிக் கண்ணோட்டம் அரசியல் கண்ணோட்டம் கூடாது என்று கூறினோம். அரசின் ஆலோசகராக இருந்த திரு.லட்சுமிநாராயண அய்யர் அவர்கள் நிறுத்தி வைக்கவில்லை யென்று தந்திரமாகக் கூறிக்கொண்டே, பெரியார் ஒலி, ஒளி நாடகம் நடத்தாமல் பார்த்துக் கொண்டார்! மீண்டும் நடத்த முன்வந்தது குறித்து விடுதலை அறிக்கையில் (29.06.1980).

“தஞ்சை மாவட்டத்தில் மீண்டும் நடத்த ஆணை பிறப்பித்த தமிழக அரசையும், குறிப்பாக முதல்வர் மற்றும் செய்தித்துறை அமைச்சரையும் மனமாரப் பாராட்டுவதுடன், இந்த ஒலி _ ஒளி நாடகத்தினை பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் பார்க்கும் வண்ணம் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்புவதும் அவசியம் என்று கூறி  வரவேற்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.

தந்தை பெரியாரின் முதன்மை இலக்கான சமூகநீதியை நிலைநாட்டும் வகையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் பற்றி சரியான அணுகுமுறையைச் செயல்படுத்தினேன்.

உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி நியமனத்தில் தற்போதுள்ள முறையை மாற்றி,  மத்திய அரசு, ஒவ்வொரு உயர்நீதிமன்றத்திலும் உள்ள நீதிபதிகளுள் எவர் மூத்தவரோ, அவரை நீதிபதியாக நியமிக்கும் தற்போதைய நடைமுறையை மாற்றி, ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திலும் உள்ள நீதிபதிகளுள் ஒட்டுமொத்தமாக எவர் மூத்தவரோ அவரை நியமிக்கத் திட்டமிட்டதை அறிந்து, அதைக் கண்டித்து 23.07.1980 விடுதலையில், ‘ஆபத்தான யோசனை’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டேன்.

(1) பல மாநிலங்களிலிருந்தும் உள்ள மூத்த நீதிபதிகளைக் கொண்டு உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பதவி நிரப்பப்படுகிறது என்ற நிலை ஏற்பட்டால், ‘சீனியாரிட்டி’ என்ற பெயரால் ஒரே மாநிலத்திலே இருந்து பல தலைமை நீதிபதிகள் பல்வேறு மாநிலங்களில் திணிக்கப்படும் பேரபாயங்களும் இதனால் ஏற்படும். இரண்டாவது, மூன்றாவது நிலையிலே இருக்கக்கூடிய நீதிபதிகளோ, அவர்களுக்கு தலைமை நீதிபதியாகக் கூடிய வாய்ப்பு அந்த மாநிலத்தில் இல்லை என்பது மட்டுமல்ல; ஒட்டுமொத்த ‘சீனியாரிட்டியை’ கணக்கிடும் போது வேறெங்கும் ஆகமுடியாத சூழ்நிலை ஏற்படும்.

(2) மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பெரும்பாலோர், மாவட்ட நீதிபதிகளிலிருந்தும் நியமிக்கப்படுகிற முறை இருக்கிற காரணத்தால், அவர்களுக்கும் வாய்ப்பு வெகுவாகக் குறையும்.

(3)          வெளிமாநிலத்திலிந்து ஒரு தலைமை நீதிபதியோ அல்லது வேறு நீதிபதியோ, அந்த வட்டார மொழி தெரியாதவராக வருவாரேயானால், அவர் தன்னுடைய பணியைச் செய்ய பெரிதும் மொழிபெயர்ப்பாளர் களைத்தானே நம்பவேண்டியிருக்கும்.

எனவே, இம்முறை கூடாது என்று வலியுறுத்தினேன்.

பார்ப்பனர்_பார்ப்பனர் அல்லாதார் போராட்டம் நீண்டது என்பதை நாகபுரி காங்கிரஸ் தீர்மானத்தைக் காட்டி விளக்கினேன்.

31.07.1980 விடுதலை தலையங்கத்தில் பார்ப்பனர்களின் நம்பிக்கைத் துரோகம் என்பது பற்றி விரிவாக எழுதினேன் அதில், “பார்ப்பனர் _ பார்ப்பனரல்லாதார் என்கின்ற உணர்வை ஏதோ நாம் இன்று தோற்றுவிக்கிறோம் என்பது போல, பார்ப்பன ஏடுகளும், பார்ப்பனரின் கைக்கூலிகளும் எழுதுகின்றன.

இந்நாட்டு வரலாற்றை அவர்களில் பலர் மறைக்கலாம் என்று கனவு கண்டே இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகபுரி காங்கிரசிலேயே

பார்ப்பனர்-_பார்ப்பனரல்லாதார் பேத உணர்வு என்பது, ஒத்துழையாமை இயக்கத்தினைத் துவக்குவது என்ற முடிவை மேற்கொண்ட 1920 நாகபுரி காங்கிரஸ் கூடிய காலத்தல் எவ்வளவு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தத் தீயாக இருந்தது என்பது வரலாற்றுப் புகழ்வாய்ந்த ஒத்துழையாமை திர்மானத்தின் (Non-cooperation) வாசகங்களிலேயே இது இடம் பெற்றிருக்கின்றது என்பதிலிருந்து நடுநிலையாளர் எவருக்கும் தெளிவாக விளங்க வேண்டும்.

1920இல் நாகபுரியில் கூடிய காங்கிரசின் இரண்டாவது தீர்மானமாகிய ஒத்துழையாமை தீர்மானத்தில்,

“…. பஞ்சாப், கிலாபத் முதலிய கொடுமைகளுக்குப் பரிகாரமும், ஒரு வருடத்துக்குள் இந்நாட்டில் ஸ்வராஜ்யமும் ஏற்படும்படி ஒத்துழையாமை இயக்கத்தைத் தீவிரமாக நடத்துவதற்கு தேசத்திலுள்ள சகல ஜனங்களும் வகுப்பு, மத பேதமின்றி ஒற்றுமைப்பட வேண்டியது மிகவும் அவசியம். ஆதலால், தேசத்திலுள்ள சகல பொது ஜனங்களும் ஒற்றுமையுடன் வேலை செய்ய முன்வந்து, ஹிந்து_முஸ்லிம் ஒற்றுமையை நன்கு பலப்படுத்தியும், பிராமண _ அப்பிராமண பிணக்கைத் தீர்த்து வைத்தும், தீண்டாமை யென்னும் பாவத்தை ஹிந்து மதத்திலிருந்து அப்புறப்படுத்தியும் தேச ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டுமென்று காங்கிரஸ் மகாசபை கேட்டுக்கொள்கிறது.

“பிராமண_அப்பிராமண (Brahmin-Non Brahmin) பிணக்கைத் தீர்த்து வைத்தும்’’ என்பதற்குரிய இங்கிலீஷ் வாசகங்களை அப்படியே தருவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அதை அப்படியே தருகிறோம்.

“to advance Hindu-Muslim unity and the Hindu delegates of this congress call upon leading Hindus to settle all disputes between brahmin and Non-brahmins, wherever they may be existing,”

பார்ப்பனரல்லாதார் மீது பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்ற உணர்வு காரணமாகத்தான் அவ்விருசாரார் இடையே பிணக்குகள் ஏற்பட்டன என்பதை மிகத் தெளிவாக ஒப்புக்கொண்டு இதைத் தீர்த்து வைக்க இந்துக்களில் பிரபலமான பெருமக்கள் முன்வர வேண்டுமென்று அவர்களுக்கு ஒரு கட்டளை இட்ட இத்தீர்மானம் எல்லா தரப்பு மக்களின் ஒத்துழைப்பும் இருந்தால்தான் காங்கிரசின் ஒத்துழையாமை இயக்கம் வெற்றிபெறும் என்று நம்பி எழுதப்பட்ட தீர்மானம் ஆகும்.

யார்? யார்?

இம்மாநாட்டிற்குத் (நாகபுரி காங்கிரசுக்கு) தலைமை தாங்கியது யார் தெரியுமா? சேலம் சி.விஜயராகவாச்சாரியார் அவர்கள்.

இந்த மேடையில் இருந்த முக்கியஸ்தர்களில் சிலர் பெயரைப் பாருங்கள்; காந்தியார், பண்டித மாளவியா, பண்டித நேரு, அலிசகோதரர்கள், சர்.போஸ், ஜின்னா, தேசபந்துதாஸ், ஸ்ரீசங்கராச்சாரிய சுவாமிகள், கரவீரபீடம் ஸ்ரீசங்கராச்சாரிய சுவாமி (இரண்டு சங்கராச்சாரிகள்), கஸ்தூரிரங்க அய்யங்கார் (‘இந்து’ பத்திரிகை ஆசிரியர்), ஏ.ரங்கசாமி அய்யங்கார் (‘சுதேசமித்திரன்’ ஆசிரியர்), சத்தியமூர்த்தி அய்யர், சி.இராஜகோபாலாச்சாரியர், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், டாக்டர் மூஞ்சே (இந்து மகாசபைத் தலைவராக பின்னால் வந்த பார்ப்பனர்), வ.வெ.சு.அய்யர், டி.வி.வெங்கட்ராம அய்யர், என்.எஸ்.இராமசாமி அய்யங்கார், பி.வி.நரசிம்ம அய்யர் மற்றும் பலர் ஆவார்கள்.

 கடந்த 1920 முதல் 1980 வரை 60 ஆண்டுகள் ஆகிவிட்டனவே. பார்ப்பனர்_பார்ப்பன ரல்லாதார் பிணக்குகள் தீர்க்கப்பட்டனவா? பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தில் ஒரு சிறு பகுதியைக்கூட விட்டுக் கொடுக்க இப்போதும் தயாரில்லை என்பதை, பார்ப்பனரல்லாத மக்களே உணர்ந்து உங்கள் ஆதரவினைத் திராவிடர் கழகத்திற்கு _ இனநலக் காப்பு இயக்கத்திற்கு _ சுயநலம் அறியாத கருப்பு மெழுகுவர்த்திகளுக்கு அளியுங்கள்!

பார்ப்பனர்களே, உங்களை சாத்திர ரீதியாகவும், சரித்திர ரீதியாகவும், சட்டரீதியாகவும் புரிந்தவர்கள் நாங்கள். எனவே, எங்களை நீங்கள் மிரட்டிவிடலாம், அடக்கிவிடலாம் என்று பகற்கனவு காணாதீர்கள் என்று எச்சரித்தேன்.

முதலமைச்சர் அவர்களது கவனத்துக்கு..

பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு ஒதுக்கி, தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவிகிதம் ஒதுக்கி எஞ்சியுள்ள 32 சதவிகிதத்தில் _ திறந்த போட்டியில் எல்லா சமூகத்தினரும் “தகுதி’’ அடிப்படையில் _ அதாவது வாங்கியுள்ள மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற இந்த உத்திரவினை எதிர்த்து இந்த அமைச்சரவை அமைந்த நாள் முதலாக, பார்ப்பன ஏடுகள் _ குறிப்பாக ‘இந்து’, ‘எக்ஸ்பிரஸ்’, ‘தினமணி’ போன்ற நாளேடுகளும் பார்ப்பனர்களும் தொடர்ந்து ஒரு ‘பனிப்போர்’ நடத்தி வருகின்றனர் _ அதுவும் மிகுந்த நம்பிக்கையுடன் நடத்தி வருகின்றனர்!

சரியான புள்ளி விவரம் அல்ல

50 சதவிகித இடம் என்பது பிற்படுத்தப் பட்டோருக்கு ஏதோ அள்ளிக் கொடுக்கப்பட்ட அளவீடு அல்ல; மக்கள் தொகை விகிதத்தில் பிற்படுத்தப்பட்டோர் 54 சதவிகிதம் உள்ளனர் என்று நேற்று கூட சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக உள்ள திரு.நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் குறிப்பிட்டுள்ளது நமக்கு வியப்பைத் தருகிறது. பிற்படுத்தப்பட்டோர் தொகை மக்கள் விகிதத்தில் சுமார் 70 சதவிகிதம் ஆகும். அமைச்சர் அவர்களுக்குத் தரப்பட்ட புள்ளிவிவரம் சரியானதல்ல என்பது நமது உறுதியான கருத்தாகும்.

இதுகுறித்து பார்ப்பனர்களிடமும் _ பார்ப்பனர் அல்லாதவர்கள் _ பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் ஆகிய பலரிடமும் பல்வேறு கருத்துகள் நிலவக்கூடும்.

பார்ப்பனர்களைப் பொறுத்தவரை அவர்களது ஒரே கருத்து வெறும் பொருளாதார அடிப்படையில்தான் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சலுகை கொடுக்க வேண்டுமே தவிர, சமூக அடிப்படையில்(Socially and Educationally) என்ற அடிப்படையில் தரவே கூடாது என்பதுதான்! காரணம் அந்தப்படிக் கொடுத்தால்தான் அவர்கள் தங்கள் விகிதாச்சாரத்திற்குமேல், பல மடங்கு _ ஏன் 100க்கு 80 சதவிகிதம் ஏகபோகமாக, கடந்த பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அனுபவித்து வந்ததைப்போல அனுபவிக்க முடியும் என்ற ஒரே நோக்கம்தான்.

வகுப்புவாரி உரிமைத் தத்துவப்படி 100க்கு 3 பேர்களாக உள்ள பார்ப்பனர்களுக்கு இதர “முன்னேறிய’’ சமூகம் என்பவர்கள் 10 சதவிகிதம் (எல்லாரும் சேர்ந்து) என்றாலும்கூட 13 சதவிகிதத்திற்கு மேல் அவர்களது விகிதாச்சாரம் கிடையாதே! அப்படி இருக்கையில் ஏன் அவர்கள் இப்போது ஏதோ தங்களது உடமை பறிபோனது போல் கூச்சல் போடவேண்டும்?

மத்திய அமைச்சர்கள் கருத்து

மத்திய அரசின் சார்பில் போடப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷனுக்கு ஆக புதுடில்லியில் கருத்துகள் தெரிவித்தபோது மத்திய சட்ட அமைச்சர் திரு.சிவசங்கர், மத்திய வேளாண்மைத்துறை இராஜாங்க அமைச்சர் திரு.ஆர்.வி.சாமிநாதன் ஆகியோர் பிற்படுத்தப்பட்டோரை நிர்ணயிப்பதில் பொருளாதார அடிப்படை என்ற அளவுகோல் கூடாது; ‘சமூக மற்றும் கல்வி’ Socially and Educationally) என்ற அடிப்படைதான் அளவுகோலாக இருக்க வேண்டும் என்று சில வாரங்கட்கு முன்பு குறிப்பிட்டுள்ளது இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

“பார்ப்பனரல்லாத இளைஞர் சங்கங்கள்’’ முளைக்கட்டும்!

இதே பக்கத்தில் பிறிதோர் இடத்தில் வெளியிடப்பட்டுள்ள அச்சகம் குறிப்பிடாது அச்சிடப்பட்ட (சட்டப்படி இது குற்றம்; காவல்துறையினர் இதுகுறித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கப் போகிறார்களோ என்னவோ தெரியாது) ஒரு துண்டு அறிக்கையை, ஒவ்வொரு பார்ப்பனரல்லாத _ தமிழன், திராவிடன், “சூத்திரன்_பஞ்சமன்’’ எல்லோரும் நன்றாகப் படிக்க வேண்டும்.

அண்மைக்காலத்தில் குறிப்பாகக் கடந்த 2 மாதங்களாக பார்ப்பனர்கள் ஏதோ புதிய பொற்காலம் தங்களுக்கு உதயமாகிவிட்டது போன்ற எண்ணத்தை தங்கள் இதயத்தில் உருவாக்கிக் கொண்டு மிகவும் முனைப்போடு செயல்படுகின்றனர்!

தமிழ்நாட்டின் எல்லா பெருநகரங்களிலும் உள்ள பார்ப்பனர்கள் இப்படி தங்கள் இனவெறி அமைப்பினை பிராமண இளைஞர் சங்கம், வைதீக பிராமண சமாஜம் என்பது போன்று பலவிதமான பெயர்களில் ஆரம்பித்து தீவிரமான அமைப்பினை ஏற்படுத்தி வருகிறார்கள்!

பார்ப்பன கைக்கூலிகள்

பார்ப்பன கைக்கூலிகள் நம்மைப் பார்த்து சாதியற்ற, மதமற்ற, மனிதாபிமானம் மேலோங்கக் கூடிய ஒரு புதிய சமுதாயத்தை ஏற்படுத்த விழைகின்ற திராவிடர் கழகத்தினரைப் பார்த்து, சிறிதும் வெட்கம், மானமில்லாமல் “வகுப்புவாதிகள்’’, “சாதித் துவேஷத்தைக் கிளப்புகிறவர்கள்’’ என்று எழுதுகிறார்கள், பேசுகிறார்கள் என்றால் இந்த “ஜென்மங்களை’’ப் பற்றி நாம் என்ன கூறுவது என்பதே நமக்குப் புரியவில்லை!

பார்ப்பன சமுதாய இளைஞர்கள் ஒன்று சேருகிறார்கள். இதற்குமுன் சேரவில்லையா? உணர்வால் ஒன்றியவர்கள் இப்போது யாரை மிரட்டத் துவங்கியுள்ளார்கள்? இதை இந்த அரசு முதல் சாதாரணமானவர்கள் வரை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

காந்தியைக் கொன்ற “கோட்சே கும்பல்’’ மீண்டும் அணி திரள்கிறது என்றால் எதற்காக திரள வேண்டும்? நமது முதல்வர் முதல் சாதாரண சாமான்யர் வரை எல்லோரும் கொஞ்சம் நிதானமாகச் சிந்திக்கட்டும். ‘வகுப்புத் துவேஷம், சாதித் துவேஷம்’ கிளப்புவோர் என்று நம்மைப் பார்த்து நாக்கில் நரம்பில்லாமல் கூறும் எவரும் கூறட்டும். மனிதாபிமான இளைஞர் சங்கத்தையா நிறுவப் புறப்பட்டுள்ளனர்! இல்லையே!!

நாம் “சூத்திரர்’’ தானே!

“பிராமண இளைஞர் சங்கம்’’ என்ற பெயரில்தான் அவர்கள் ஆயத்தமாகிறார்கள். அவர்கள் “பிராமணர்’’. ஆனால், மற்றவர் “சூத்திரர்’’தானே _ “பஞ்சமர்’’தானே? இதுபற்றி நம் இன இளைஞர்கள் மானத்தோடும் அறிவோடும் சிந்திக்க வேண்டாமா? பார்ப்பனர்கள் வெளியிட்டுள்ள துண்டறிக்கையில்,

“பிராமண சமுதாயத்தினருக்கு சகல துறைகளிலும் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்கவும்; சமூக, கலாச்சார, பொருளாதார துறைகளில் உதவவும், மத, கலாச்சார கோட்பாடுகளைக் கட்டிக்காக்கவும்,  காஞ்சிப் பெரியவரின் அருளாசியினை வேண்டி நகரின் பல பகுதிகளிலும் உள்ள எல்லா பிராமண இளைஞர்களையும் மொழி வேறுபாடு இன்றி, ஒன்றிணைத்துச் செயல்பட வேண்டும் என்ற நீண்ட நாளைய கனவு ஓர் செயல்வடிவமாக உருவெடுத்துள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் சிலர் பொறுப்பேற்று இதனைத் தொடங்கி நகரில் உள்ள பிராமண இளைஞர்களின் ஆதரவையும் பிராமணப் பெரியவர்களின் ஆசியினையும் பெரிதும் நம்பி இப்பெரு முயற்சியினில் இறங்கியுள்ளோம்.

…. நம் சமுதாயத்தின் கேடயமாக விளங்கும் இவ்வமைப்பில் உடனடியாக உறுப்பினராகும்படி மீண்டும் வேண்டிக் கொள்ளுகிறோம்.

குலக்கல்வி:

சூத்திரர்கள் படித்து மேல் வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிக்கவாதிகளான ஆரியப் பார்ப்பனர்கள் குலவழித் தொழிலே சிறந்தது என்பதை இன்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

02.08.1980 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் சிருங்கேரி சங்கராச்சாரியார் சாதியை பச்சையாக ஆதரித்து “மங்கை’’ பத்திரிக்கையில் எழுதியுள்ள கருத்தை அப்படியே புகைப்படம் எடுத்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகத்தைப் பார்த்து இனவெறியைத் தூண்டுவதாகக் கூறும் பார்ப்பனர்களே! பார்ப்பன பாதந்தாங்கிகளே! கண்திறந்து பாருங்கள்! என்று விளக்கியிருந்தோம். இதனை விளக்கி அறிக்கையை வெளியிட்டிருந்தேன்.

சிருங்கேரிச் சங்கராச்சாரி வர்ணாஸ்ரம தர்மத்தை (குலத்தொழிலே செய்ய வேண்டும் என்று பச்சையாக ஆதரித்தது),

“நம் நாட்டில் முற்காலத்தில் தட்டாருடைய பிள்ளை தட்டானாகவும், தச்சருடைய பிள்ளை தச்சனாகவும், சிற்பியின் பிள்ளை சிற்பியாகவும் இருந்து வந்திருக்கிறார்கள். வம்ச பரம்பரையாக வரும் கல்வியைக் கற்பதிலும் தொழிலை நடத்துவதிலும் அதிக சிரமமிருக்காது. மேலும் இதனால் போட்டி குறைந்து அவரவர் பரம்பரைத் தொழிலைநடத்தி எல்லாரும் க்ஷேமமாக யிருந்தார்கள். இக்காலத்திலோ அதற்கு நேர்மாறாக யாரும் எத்தொழிலையும் செய்யலாம் என்கிற நிலையைக் காண்கிறோம். நம் ப்ராசீனர்கள் படிப்பு விஷயத்திலும் வம்ச பரம்பரையாக வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதைப் பற்றி இப்போது சொன்னால் அது பலருக்கு ருசிக்கிறதில்லை. ஆனாலும் ஹிதமான விஷயத்தை சொல்லத்தான் வேண்டும்.

தங்கத்தில் எவ்வளவு செம்பு கலந்திருக்கிறது என்பதை ஒரு கெமிஸ்ட் கூட திராவகங்களை வைத்துக் கொண்டு சோதனை செய்துதான் கண்டுபிடிக்க முடியும். ஆனால், பழைய காலத்தில் ஒரு தட்டாருடைய பையன்கூட லேசாகத் தட்டிப் பார்த்தோ அல்லது நிறத்தைக் கொண்டோ உடனே சொல்லி விடுவான். அவனுக்குத் தந்தையுடன் கூட வேலை செய்யும்பொழுது பார்த்துப் பழக்கம். இது பரம்பரையாக வந்த அறிவு’’ என்று கூறியுள்ளார்.

என்று அந்த அறிக்கையில் எடுத்துக்காட்டி, திருநெல்வேலியில், பார்ப்பனர்களும், சில முன்னேறிய “சைவ’’ சுயநலக் கும்பலும் சேர்ந்து நடத்திய ஊர்வலம் திராவிடர் கழகத்திற்கு எதிராகவோ, “வீரமணிக்கு’’ எதிராகவோ நடத்தப்பட்டதில்லை. இதுமுழுக்க முழுக்க பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் பெற்று வரும் எழுச்சிக்கும் ஏற்றத்திற்கும் எதிராகவே கிளப்பப்பட்ட முயற்சியாகும்.

பார்ப்பனர்களும் _ சில சுயநல சைவத் திருமேனிகளும் (அந்தச் சமூகத்தைச் சேர்ந்த எல்லோரும் அல்ல) ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பனர்களும், இம்முயற்சியின்போது என்னென்ன பேசினார்கள். திட்டம் தீட்டினார்கள், ‘என்பது நமக்கு மிகவும் தெளிவாகத் தெரியும், வெளியிட வேண்டிய நேரத்தில் அத்திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று குறிப்பிட்டிருந்தேன்.

‘சைவத்’ தமிழர்களும் இன உணர்வுள்ள பலர் இப்படி ஒரு எட்டப்பன் கூட்டத்தினராக சைவர்கள் ஆகிவிடக் கூடாது என்ற கவலையோடு போஸ்டர்கள், துண்டறிக்கைகள், தட்டி எழுத்துகளும் எழுதி இந்த சுயநலமிகளுக்கும் பெரும்பாலான சைவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக அவர்களையும் நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்’’ என்று எழுதியிருந்தேன்.

(நினைவுகள் நீளும்)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *