சட்டப்படி, நியாயப்படி போராடினால்
கட்டாயம் கச்சத்தீவை மீண்டும் பெறலாம்!
கே: கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் தலைக்கு ஒரு கோடி விலைபேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவரின் குற்றத்திற்கு உரிய சட்டரீதியான தண்டனை என்ன?
– சீ.லட்சுமிபதி, தாம்பரம்
ப: இ.பி.கோ சட்டப்படி 7 ஆண்டுகளுக்கு மேல் தரலாம். மற்றபடி நீதிபதிகளைப் பொறுத்தது!
கே: குளிர்பான நிறுவனங்களுக்குச் சாதகமாய் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பற்றித் தங்கள் கருத்து என்ன?
– வே.முத்தமிழ்அரசி, திண்டிவனம்
ப: சட்டப்படி சரியாக இருந்தாலும் சமுதாயக் கண்ணோட்டத்தில் சரியானதல்ல.
கே: திராவிட ஆட்சியின் 50 ஆண்டுகள் நிறைவையொட்டி திராவிட ஆட்சிகளின் சாதனைகளையும் அவற்றில் தாய்க்கழகத்தின் பங்கையும் இளைஞர்கள் அறியும் வகையில் நூல் வெளியிடுவீர்களா?
– கெ.நா.சாமி, சென்னை-72
ப: பொறுத்திருந்து பாருங்கள்.
கே: வடமாநில தேர்தல்களில், “முதலில் பெரும்பான்மை பலத்தில் வெற்றி என்றனர்; பின் தொங்கு சட்டசபை அமையும் என்றனர்; அடுத்து தோற்றாலும் மத்திய ஆட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை’’ என்ற பி.ஜே.பி.யின் பிதற்றல் பற்றித் தங்கள் கருத்தென்ன?
– இல.சங்கத்தமிழன், செங்கை
ப: எதற்கு ஹேஷ்யங்கள்; இவ்வேடு வெளிவந்து படிக்கும்போது உண்மை தெரிந்துவிடும் _ முடிவுகள் வந்துவிடும்.
கே: தமிழக மாணவர்கள் _ இளைஞர்களின் ‘நீட்’க்கு எதிரான எழுச்சியை மறைத்து, ‘நீட்’ ஆதரவுப் பேட்டிகளை, ஹைட்ரோகார்பன் எதிர்ப்புப் போராட்டத்தை மட்டும் காட்டுவதன் நோக்கம் என்ன?
– க.க.தென்றல், ஆவடி
ப: பார்ப்பன ஊடகங்கக்கு திசைதிருப்பல் கைவந்த கலையாகும்.
கே: மீண்டும் பெரியார் அஞ்சல் வழிக் கல்வியைத் தொடங்கினால் என்ன?
– த.மணிமேகலை, வியாசர்பாடி
ப: பெரியார் _ மணியம்மை பல்கலைக்கழகங்களில் நடைபெற்று வருகிறதே!
கே: ஆர்.எஸ்.எஸ்.; பி.ஜே.பி.க்கு எதிராய் குரல் கொடுப்போரை, தீவிரவாதிகள் என்னும் மதவெறி வன்முறைக் கூட்டத்தின் கூக்குரல் எப்படிப்பட்டது?
– ந.முல்லைவேந்தன், காஞ்சி
ப: பார்ப்பன நரித் தந்திரங்களில் இது முதன்மையானது. முன்பு ஈழத் தமிழர் பிரச்சினையில்கூட இப்படித்தான் திசைதிருப்பினார்கள்.
கே: நீதிபதி ஏ.கே.ராஜன் கச்சத்தீவைத் தாரை வார்த்தது சட்டப்படி செல்லாது என்கிறார். எனவே அதை மீண்டும் மத்திய அரசு பெற்று தமிழரின் நலன் காக்கப் போராடினால் என்ன?
– தமிழ்இனியன், பழவந்தாங்கல்
ப: சட்டப்படி, நியாயப்படி போராடினால் வெற்றி நிச்சயம்! ஸீ