– கி. வீரமணி
பெரியாருக்கு வாழ்த்துக் கூறும் எம்.ஜி.ஆர் |
9.9.73 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் உரையாற்றினேன். அப்போது, விலைவாசி உயர்வைக் கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், சுதந்திரா கட்சியும் இந்த மேடையிலே இருக்கிறது. திராவிடர் கழகமும் இங்கே இருக்கிறது.
கருத்து வேறுபாடுகள் எங்கிருந்தாலும் மனித சமுதாய நோக்கோடு இந்த மாமேடை அமைந்திருக்கிறது. இங்கே இல்லாத சில கட்சிகளும் இருக்கின்றன. பொதுவாக விலைவாசி ஏறியிருக்கிறது என்பதிலும், கட்டுப்படுத்த வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. அதைப்பற்றி கூடி காரியமாற்ற இங்கே கூடியிருக்கிறோம் என்று குறிப்பிட்டேன்.
17.9.73 திங்கள் அன்று தமிழர் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 95 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழகத் தலைநகராம் சென்னையிலே மிகச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டது.
காலை 6 மணிக்கெல்லாம் அய்யா அவர்களை அம்மா குளிக்கவைத்து புத்தாடை அணிவித்து பிறந்தநாள் விழாவிலே அய்யாவைக் காணவரும் தோழர்களைக் கண்டு அளவளாவ ஆயத்தப்படுத்தினார்கள்.
இதுதான் அய்யா அவர்கள் தொண்டர் களோடும் தோழர்களோடும் கலந்து கொண்ட கடைசிப் பிறந்தநாள் என்பது யாருக்குத் தெரியும்?
அய்யாவைக் குளிக்கவைத்து புத்தாடை உடுத்தி, அவர்களை கட்டிலின் மீது உட்கார வைத்து சிற்றுண்டியைத் தந்தார்கள்.
உண்டபிறகு, எங்களைப் போன்ற தொண்டர்கள் அய்யாவைப் பார்த்து அன்பளிப்புகளைத் தந்தோம். எங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது போலும்!
அய்யா என்னை அழைத்து ஒரு பணமுடிப்பு ஒன்றை எனக்குத் தந்தார்கள். இதற்குமுன் எப்போதும் அப்படி நடந்ததில்லை. நான் வாங்குவதற்கு மறுத்தேன். அம்மாவும் வற்புறுத்தி வாங்கிக்கொள்ளச் சொன்னார்கள். பிறகு வாங்கிக் கொண்டேன்.
அதில் பத்தாயிரம் ரூபாய் இருந்தது! அன்றைய நிலையில் பத்தாயிரம் ரூபாய் என்பது எவ்வளவு பெரிய தொகை – அதுவும் அய்யா அவர்கள் தந்தது என்றால் எனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
நமது இயக்கம்பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு, பெரியார் திடலில் ஆய்வு செய்ய வசதியாக ஆய்வகம் – நூலகம் ஒன்றை நிறுவிடவேண்டும் என்று நான் அய்யாவிடம் கூறினேன்.
டெல்லி ஆராய்ச்சியாளர் டாக்டர் சரஸ்வதி (பார்ப்பன அம்மையார்) போன்றவர்கள் எனது ஆசிரியர் அறையில் அமர்ந்துதான் குறிப்புகளை எடுத்தனர் – பழைய விடுதலை வால்யூம்களி லிருந்து. இந்நிலையைமாற்றிட தனியே திடலில் ஒரு நூலகம் – ஆய்வகம் (Research Centre) தேவை என்பதை மகிழ்ச்சியுடன் அய்யா ஏற்றார்கள்!
அன்று மாலை மிகச் சிறப்புடன் பெரியார் திடலில் நடிகர் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களின் நாதசுவரக் கச்சேரியுடன் விழா துவங்கியது!
மிகப் பிரபலமான அந்த நாதஸ்வர வித்வான் திருவாவடுதுறை இராஜரத்தினம், திருவெண்ணி சுப்ரமணியம், காரக்குறிச்சி அருணாச்சலம், இவர்களின் வரிசையில் வைத்து எண்ணப்பட்ட புகழ்பூத்த நாதஸ்வர வித்துவான்! பணம் ஏதும் வாங்காமலேயே வந்து வாசித்தார்கள். சென்னை (அகில இந்திய வானொலி, தொலைக்காட்சி இயக்குநராக இருந்து ஓய்வுபெற்ற திரு ஏ. நடராஜன் அவர்களது மாமனார் அவர்) நிகழ்ச்சி முடிந்தவுடன் அய்யா அருகில் அவரை (வித்துவானை) அய்யாவின் கட்டிலின் அருகிலேயே உட்கார வைத்தார்!
நாதஸ்வர சக்ரவர்த்தி என்ற பட்டம் தந்தை பெரியார் அவர்கள் கையினால் அவருக்கு அவ்விழாவில் வழங்கப்பட்டதை அவரது வாழ்நாள் பெருவாய்ப்பாகக் கருதி இறுதிவரை அவர்கள் மகிழ்ந்தார்கள்!
செட்டிநாட்டரசர் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தர் ராஜா சர். முத்தய்ய செட்டியார் அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்ப எப்படியோ தவறிவிட்டது!
ஒவ்வொரு ஆண்டும், அய்யா சென்னையில் இருந்தால் பிறந்தநாள் விழாவில் தவறாது கலந்து கொள்ளுவார்கள் செட்டிநாட்டரசர்!
என்றாலும் விழா நடந்து கொண்டிருந்த போதே பெரிய ஜரிகை மாலையுடன் மேடையை நோக்கி வந்துவிட்டார் ராஜா சர் முத்தய்ய செட்டியார்! அழைப்பிதழ் எப்படியோ தவறி விட்டதற்காக அவர்களிடம் நாங்கள் மன்னிப்புக் கேட்டோம்! அய்யாவும் வருந்தினார்கள். அவர்கள் அய்யாவின் கட்டிலிலேயே அருகில் அமர்த்தப்பட்டார்கள்!
ஒருபுறம் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், மறுபுறம் ராஜா சர் முத்தய்ய செட்டியார்! கழகத் தோழர்கள் நிகழ்ச்சி நிரல்படி பேசவிட்டார்கள்! பல ஆண்டுகளுக்கு முன்பு செட்டி நாட்டு கானாடுகாத்தான் என்ற ஊரில் தோளில் வியர்வையைத் துடைக்கும் வட்டில் துண்டு ஒன்றைப் போட்டதற்காக அவ்வூர் நகரத்தார் கள், திருமண ஊர்வலத்தில் – மதுரை சிவக் கொழுந்து என்ற பிரபல நாதஸ்வர வித்துவான் வாசித்ததை எதிர்த்து ரகளை செய்தனர்!
அது துண்டல்ல, வியர்வையைத் துடைக்க ஒரு சிறு துணி என்றெல்லாம் வெகுவாக கூறியும் இடையறாமல் மறுத்தார்கள்!
எதிர்பாராமல் தந்தை பெரியாருடன் அவ்வூருக்கு வேறு பணிகள் காரணமாகச் சென்ற, பட்டுக்கோட்டை தளபதி அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி கச்சேரி கேட்கப் போனவர் இந்த ஜாதித் திமிரை எதிர்த்துக் குரல் கொடுத்தார்.
சிவக்கொழுந்து, வாசியுங்கள் அங்கேயே உட்கார்ந்து வாசியுங்கள்; நாங்கள் உங்கள் பக்கம் உள்ளோம் என்றார். மாப்பிள்ளை ஊர்வலம் நடு ரோட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
தந்தை பெரியார் இதை அறிந்து அழகிரிசாமியின் அறப்போராட்டத்தை ஆதரித்தார். வேறு வழியின்றி நாதஸ்வர வித்வான் சிவக்கொழுந்தை துண்டுபோட்டுக் கொண்டே நாதஸ்வரம் வாசிக்க மணமகன் வீட்டு செட்டியார் அனுமதித்தார். அழகிரி அவருக்குப் பக்கத்தில் நின்று விசிறிக்கொண்டு வந்தார்.
ஜாதி ஆணவத்திற்கு அப்போது முடிவு அங்கே ஏற்பட்டது.
ஆனால், அய்யாவின் 95ஆம் ஆண்டு பிறந்தநாளில் ஒரு புறம் நாதஸ்வரக் கலைஞர், மறுபுறம் இராஜா சர் என்பது நிகழ்ந்தது என்றால் எப்படிப்பட்ட அமைதிப் புரட்சி பார்த்தீர்களா? இப்படி எத்தனையோ வெற்றிகளைத் தம் வாழ்நாளிலேயே கண்டு பூரித்து மகிழ்ந்தார் தந்தை பெரியார் அவர்கள்!
அய்யாவின் கடைசிப் பிறந்தநாள் விழாவிலும் இப்படி ஒரு விசித்திர நிகழ்வு நடந்தது என்பதை எண்ணி எண்ணி பெரியார் மகிழ்ந்தார் – மனநிறைவு கொண்டார்! மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தார்கள்!
அன்று வசூலான நன்கொடை எல்லாவற் றையும் புதிய நூலகம் – ஆய்வகம் கட்ட அப்படியே அளித்தார். அதுதான் அதற்கு (Corpus Fund) மூலதனம். அடுத்த ஆண்டே அம்மா அதை திடலில் கட்டி முடித்தார்கள். மூன்றடுக்கு மாளிகையின் ஆற்றல் உண்டு!
தமிழகத்தின் சகல பகுதிகளிலிருந்தும் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாய் இனக்காவலராம் அய்யா அவர்களைக் கண்டு, மலர் மாலைகளை மாலைக் குவியலாக்கி அன்பு அளிப்புகளை ஆறாக ஓடச்செய்தனர்.
தமிழினங்காத்த தன்மானத் தந்தையே! நீங்கள் நீடு நீடு வாழிய! வாழிய!! என்று வாய்திறந்து, மனந்திறந்து மகிழ்ச்சியின் எல்லையில் நின்று வாழ்த்துரைத்துச் சென்ற வண்ணம் இருந்தனர்.
அந்நாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ். இராமச்சந்திரன் அவர்கள் தமது துணைவியாருடன் வருகை தந்து மலர் மாலை சூட்டி அய்யா அவர்களுடன் அளவளா வினார்.
தொழிலாளர்துறை அமைச்சர் மாண்புமிகு க. ராசாராம் அவர்கள் அய்யா அவர்களுக்கு மலர்மாலை சூட்டினார். தமிழக முதல்வர் அய்யா அவர்களுக்கு அனுப்பி இருந்த வாழ்த்துச் செய்தியைக் கொடுத்தார். சேலத்திலே இருந்து பிரத்தியேகமாக தந்தை பெரியார் வாழ்க! என்று ஆங்கிலத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பிறந்தநாள் கேக்கை அமைச்சர் க. ராசாராம் அவர்கள் தந்தை பெரியாருக்குப் பரிசாக அளித்தார்கள். அய்யா அவர்கள் எல்லோரது மகிழ்ச்சிக்கும் குதூகலத்திற்கும் இடையில் பிறந்தநாள் கேக் வெட்டினார்கள்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எம்.ஜி.ஆர்., மற்றும் மதியழகன், நாஞ்சில். மனோகரன், எஸ்.டி. சோமசுந்தரம் எம்.பி., மா. முத்துசாமி எம்.பி., பி.டி. சரஸ்வதி பி.ஏ.பி.எல்., ஆகியோர் புடைசூழ சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து அய்யா அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினர். எம்.ஜி.ஆர். அவர்கள் அய்யா அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி ரோஜாமாலை அணிவித்து அன்பளிப்பாக ரூ. 5000/-(ரூபாய் அய்யாயிரம்) பரிசளித்து, அடுத்த ஆண்டு அய்யா அவர்களின் பிறந்த நாளில் சென்னையில் தன் கட்சியின் சார்பாக அய்யா அவர்களுக்குச் சிலை எழுப்பப் போகிறோம். அதற்கு அய்யாவின் ஒப்புதல் வேண்டும்என்றும் கேட்டார். அதன்படியே எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆன பிறகு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களை அழைத்து, பெரியார் சிலை திறக்க ஏற்பாடு செய்தார்.
உங்கள் அன்பு அபரிதமானது என்று அய்யா அவர்கள் குறிப்பிட்டார்கள். நண்பகல் பன்னிரெண்டு மணிக்கு கல்வி அமைச்சர் டாக்டர் நாவலர் அவர்கள் வருகை தந்து அய்யாவுக்கு மலர் மாலை சூட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். மாண்புமிகு அமைச்சர் என்.வி. நடராசன் அவர்களின் செல்வர்கள் என். வி.என்.சோமு, என்.வி.என் செல்வம் அவர்களும், மாண்புமிகு அமைச்சர் சத்தியவாணி முத்து அவர்களது சார்பில் அவரது மகனும் தந்தை பெரியார் அவர்களுக்கு நல்வாழ்த்தின் சின்னமாக மலர் மாலைகள் சூட்டி விடைபெற்றனர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு ப.உ.சண்முகம் அவர்கள் வெளியூர் பயணத்திலிருந்து நேரே வந்து பகுத்தறிவுப் பகலவரைக் கண்டு மலர் மாலை சூட்டி மகிழ்ச்சிப் பெருக்கைத் தெரிவித்தார். கேசவலு எம்.எல். ஏ., நாச்சியப்பன் எம்.எல்.ஏ., ஏ.பி. ஜனார்த்தனம் எம். எல்.சி., கவிஞர் கருணானந்தம், துணைமேயர் கன்னியப்பன், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் நீலநாராயணன், சென்னை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்வராஜ், முன்னாள் மேயர் குசேலர், தருமபுரி மாவட்ட தி.மு.க. செயலர் அரூர் முருகேசன் ஆகியோரும் அய்யா அவர்களுக்கு மலர் மாலை சூட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.
பெரியாரின் முன்னிலையில் நாதசுரம் வாசித்த நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்
உயர்நீதிமன்ற ஜஸ்டிஸ் ஏ. வரதராசன் அவர்களும், ஜஸ்டிஸ் நாராயணசாமி அவர்களும், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் தமது துணைவியாருடனும் வருகை தந்து அய்யா அவர்களுக்கு மலர் மாலை சூட்டித் தன் இனிய வாழ்த்துகளைச் சேர்த்தனர்.
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவர் இராம சுப்ரமணியம், நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர் சி. வி. பத்மநாபன், தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் ஏ.பத்மநாபன், அய்.ஏ. எஸ்.பல்லவன் போக்குவரத்துக்கழக நிருவாக இயக்குநர் தில்லை நாயகம், குடியிருப்புவாரிய தலைமைப் பொறியாளர் லோகவிநாயகம், பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளர் நமசிவாயம், அரசாங்க பிளீடர் மோகன், கல்வித் துறை இயக்குநர் சிட்டிபாபு, கால்நடை வளர்ப்புத் துறை இயக்குநர் டாக்டர் வெங்கடாசலம், தஞ்சை மண்டல கால்நடை வளர்ப்புத்துறை துணை இயக்குநர் டாக்டர் பி.சின்னதுரை, பொதுப் பணித்துறை மேற் பார்வைப் பொறியாளர் பி.கே. கந்தசாமி, மண்டல குடும்ப நலப்பயிற்சி நிலைய முதல்வர் டாக்டர் சம்பூர்ணம் துணைவியாரு டனும், பப்ளிக்பிராசிக் கூட்டர் இரத்தினவேல் பாண்டியன், அடிசனல் பப்ளிக்பிராசிக்கூட்டர் டி. இராசமாணிக்கம் ஆகியோரும் இன்னும் ஆயிரக்கணக்கான அரசு அலுவலர்களும் விழி திறந்த வித்தகராம் நமது தந்தை அவர்களுக்கு நன்றியின் சின்னமாக மலர் மாலைகள் சூட்டிச் சூட்டி மரியாதையையும் வணக்கத்தையும் தெரிவித்துச் சென்ற வண்ணமே இருந்தனர்.
பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு. சுந்தரராசலு அவர்கள் தந்தை பெரியார் அவர்களுக்கு மலர் மாலை சூட்டி, இங்கிலாந் திலிருந்து வாங்கிவந்த லென்ஸ் ஒன்றை அய்யா அவர்களுக்குப் பரிசளித்தார். பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அலுவலகத்தைச் சேர்ந்த ஊழியர்கள், சூப்பிரண் டெண்டு கோபால் தலைமையில் அய்யா அவர்களுக்கு 95 ஒரு ரூபாய் நோட்டு மாலை அணிவித்தனர்.
விடுதலை அலுவல கத்தின் சார்பில் அய்யா அவர்களுக்குக் கலைக்களஞ்சியம் நூல்கள் பரிசளிப்பாக வழங்கப் பட்டன. விடுதலை அலுவலக ஊழியர்களுக்கு அய்யா அவர்கள் பிறந்த நாள் பரிசளிப்பு வழங்கி னார்கள். சேலம் கழகத் தோழர் சின்னதம்பி உயர்ந்த இன நாய்க் குட்டி ஒன்றை வழங்க, அய்யா அதை மிகவும் மகிழ்ச்சிப் பூரிப்போடு பெற்றுக்கொண்டார்கள். எஸ். ஆர். எம். யூ. தோழர்கள் அய்யா அவர்களுக்கு மலர்மாலை சூட்டியும், பழங்கள் அளித்தும் தங்கள் இதய வாழ்த்தைச் சூட்டி மகிழ்ந்தனர். பூண்டி திராவிடர் கழகத்தினர் அய்யா அவர்களுக்குச் சுதந்திரத் தமிழ்நாடு உருவ மாடலும் – அதில் பெரியார் அவர்கள் கம்பீரமாக நிற்பதுபோலவும் அமைக்கப்பட்டு அதை ஒரு அழகிய கண்ணாடிப் பெட்டியில் வைத்துப் பரிசாக வழங்கினார்கள்.
சென்னை மாவட்ட திராவிட மாணவர் கழகத் தோழர்கள் ஏராளமாக வருகை தந்து இனத் தலைவரைக் கண்டு நன்றி உணர்வை வெளிப்படுத்தி மலர் மாலைக்குப் பதில் ரூபாய்கள் வழங்கி மகிழ்ந்தனர். வேலூர் நாராயணன் ஆள் உயர ரோஜா மாலை அணிவித்து, தனது வணக்கத்தைத் தெரிவித்தார்.
தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தின நாளை முன்னிட்டு 500 பேர்களுக்கு மதியம் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. விருந்தில் ஆடு, மாடு, பன்றிக்கறிகளும் இடம் பெற்றன. அய்யா அவர்களுடன் அமர்ந்து அமைச்சர் பெருமக்கள் மாண்புமிகு ப.உ. சண்முகம், மாண்புமிகு எஸ். இராமச்சந்திரன் ஆகியோர் மதிய உணவருந்தினர்.
தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றும்போது காலப் போக்கில் எவ்வளவோ மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இசைத் துறையில் நல்ல மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. நமது நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களது திறமை நமது நாடு அறியும். இன்றைய தினம் அவரைப் பாராட்டும் பெருமையை நான் பெற்றேன் என்று சொல்ல வேண்டும். இசையைப் பற்றி எனக்கு ஒன்றும் அதிகம் தெரியாது. நமது பழைய காலத்தில் இது போன்ற இசைக் கலைஞர்களுக்கு மரியாதை இல்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பு செட்டிநாடு கானாடுகாத்தான் என்ற ஊரில் செட்டிமார் திருமணம் நடைபெற்றது.
அதில் மதுரை சிவக்கொழுந்து எனும் புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் திருமண ஊர்வலத்தில் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டு போனார். அப்போது அவர் உடலில் சட்டை கூடப் போட வில்லை. தோளில் ஒரு துண்டு மட்டும் போட்டு இருந்தார். அதுகூடப் பொறுக்கவில்லை உயர் ஜாதியினருக்கு. அந்தத் துண்டை எடு என்றனர்.
இது சும்மா வியர்வை துடைக்கத்தான் என்று சமாதானம் கூறிப் பார்த்தார்.
முடியாது எடுக்கத்தான் வேண்டும் என்று வற்புறுத்தி னார்கள். அப்போது அந்த ஊர்வலத்தில் இருந்த அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி சிவக்கொழுந்து துண்டை எடுக்காதே! என்று குரல் கொடுத்தார். குழப்பமாகிவிட்டது, நான் பக்கத்தில் தங்கி இருந்தேன். அழகிரி என்னிடம் வந்து நடந்ததைக் கூறினார். நானும், விடாதே ஒருகை பார்! என்றேன். போய் தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டார். துண்டை எடுக்காமல்தான் நாதஸ்வரம் வாசிக்க வேண்டும் என்றார். தானே தனது கையாலேயே அவர் உடலில் இருந்த வியர்வையை எல்லாம் துடைத்ததோடன்றி, அவருக்கு வழி நெடுக விசிறிக்கொண்டே வந்தார். ஜாதி வெறியர்கள் அடங்கிவிட்டார்கள். அந்த அளவுக்கு அந்தக் காலத்தில் இந்த இசைக் கலைஞர்களுக்கு இழிவு சுமத்தப்பட்டு இருந்தது.
பெரியாருடன் ராஜா சர்.முத்தையா, கி.வீரமணி
பார்ப்பானாக இருந்தால் அவன் மாமா வேலை பார்ப்பவனாக இருந்தாலும் அவனை சாமி சாமி என்று கும்பிடுவோம். நம் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் மதிப்பதில்லை. இது தவறு. நம் இனத்தவர்களை நாம் கை தூக்கிவிட வேண்டும்.
நமது நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று இந்த இசையின் புகழைப் பரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இசைச்சக்ரவர்த்தி நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களைப் பாராட்டுகிறேன் என்றார்.
– நினைவுகள் நீளும்…