சட்டம் சாதிக்குமா?

மார்ச் 01-15

 

 

 

தாய்வழிச் சமுதாயம் தகர்ந்தது முதல் தற்காலம் வரை பெண்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிவருகின்றனர். பாலியல் வன்முறை. குடும்ப வன்முறை, குறிப்பாக வரதட்சணைக் கொடுமை – பெண்சீண்டல் (ஈவ்டீசிங்) உடன் கட்டை ஏற்றப்படல், கன்னிச் சோதனை, கருச்சோதனை, பிறப்புத்தடுப்பு அறுவை என்று பல்வேறு கொடுமைகளுக்கு, இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

காலம் கடக்கக் கடக்க – காலத்திற்குக் காலம் பெண்ணின் மீதான வன்முறைகளும், பாதிப்பு-களும் புதிது புதிதாய் நிகழ்த்தப் படுகின்றனவே தவிர, குறைக்கப்பட்ட, தவிர்க்கப்பட்ட, தடுக்கப்பட்ட நிலையில்லை. இவற்றைத் தடுக்க அல்லது குறைக்க அவ்வப்போது அரசு சட்டங்களை இயற்றிக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், இக்காகிதச் சட்டங்கள் கண்ணீரைத் தடுக்கும் தகுதியும் ஆற்றலும் உள்ளவையா? என்பதைப் பெண்கள் மனதில் கொள்ள வேண்டும்; ஆராயவேண்டும்! பெண்களுக்காக இயற்றப்படும் சக்தியற்ற சட்டங்களைக் காட்டிலும் மனித நேயங் கொண்ட பொதுமக்களின் போராட்டங்களும், எதிர்ப்புகளும் பாதுகாப்புமே பெண்ணினத்தைக் காக்கும்; காக்க முடியும்!

காரணம், சக்தியற்ற சட்டங்கள் மட்டுமல்ல, இதயச்சுத்தியற்ற நீதிபதிகளும் அமர்ந் துள்ளார்கள். சாதாரண நீதிபதிகள் அல்ல. இந்திய உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாய் அமர்ந்திருந்தவருக்கே சமநிலையும், சட்ட மதிப்பும், சமூக நீதி மனப்பான்மையும் இல்லை.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் ரங்கநாத் மிஸ்ரா (பார்ப்பனர்) என்பவர். இந்தியாவிலுள்ள நீதி மன்றங்கள், நீதிபதிகளுக்கெல்லாம் தலைமையானவர். பெண்கள் உரிமையில், நீதியில் அவர் என்ன கூறியுள்ளார் பாருங்கள். சட்டத்தில் உள்ள ஆண், பெண் சமத்துவத்தைப்பற்றிச் சிந்திக்காதீர்கள். ஆண், பெண் சமத்துவச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முயலாதீர்கள்.

நமது மதக் கோட்பாட்டிலும், நமது நாட்டுப் பாரம்பரியத்திலும் நிச்சயமாகப் பெண்களுக்குக் கூடுதலான மேலாண்மை இருக்கிறது. பெண்ணாகவும், தாயாகவும், சகோதரியாகவும் அவர்கள் மேலாண்மை பெற்றிருக்கிறார்கள்.

இன்றைய தேவை என்னவென்றால், பெண்கள் அலுவலக வேலையை விட்டுவிட்டு, வீட்டில் இருக்கவேண்டும். பெண்கள் உயர்ந்தால் உலகம் உயர்ந்து விடாது. பெண்கள் பெண்களாக இருந்தால் உலகம் உயரும்.

பெண்கள் சமத்துவத்திற்கு முயற்சி செய்தால் அன்பு அழிந்து  போகும். கடவுள் ஆண்-களையும் பெண்களையும் சமமாகப் படைக்கவில்லை. சட்டம் இயற்றப்பட்ட போது பெண்கள் தங்களுக்கு ஆண்களைப் போன்ற உரிமை கோரினர். இதன் மூலம் தங்களுடைய அந்தஸ்தைக் குறைத்துக் கொண்டார்கள். சமத்துவத்தைப் பேசிப் பாரம்பரியமாகத் தங்களுக்கு இருந்த மேலாண்மையிலிருந்து கீழே இறங்கிவிட்டார்கள் என்று கூறினார். (ஜிவீனீமீs ஷீயீ மிஸீபீவீணீ நவம்பர் 18, 1990)

இப்படிப்பட்டவர்கள் கையில் சட்டமும் நீதியும் இருக்கும் வரை சட்டப்படியான, சரியான பாதுகாப்பு பெண்களுக்கு எப்படிக் கிடைக்க முடியும்? இவர்களெல்லாம் மனித நேய எதிரிகள் அல்லவா? மானுட எதிரியான மனுவின் வாரிசுகள் அல்லவா? இந்தியாவின் நீதிக்கே அதிகாரியாய் நின்றவரின் சிந்தனையில் எவ்வளவு சீர்கேடுகள், சீழ் நாற்றங்கள்.

பெண்கள் சமத்துவம் கோரக்கூடாதாம்; நமது மதமே பெண்களுக்கு மேலாண்மையைக் கொடுத்துள்ளதாம். இதைவிடப் பித்தலாட்டப் பேச்சு வேறு இருக்கமுடியுமா? நமது மதமும், பாரம்பரியமும் பெண்ணை என்ன பாடுபடுத்தி வதை செய்து வருகிறது என்பதை இதற்கு முன் விரிவாகப் பார்த்தோமே!

இறந்த கணவனோடு இட்டு எரிப்பதும்; கணவன் இறந்ததும் கழித்து ஒதுக்குவதும்; பண்டமாக, பரிசுப்பொருளாக ஆக்கியதும்; பணயப் பொருளாகவும் வைத்து சூதாடியதும் இந்துமதம் அல்லவா? இந்நாட்டு பாரம்பரியம் அல்லவா?

பெண்கள் காம வெறிபிடித்தவர்கள், அடுத்த ஆண்களுக்காக அலைபவர்கள், பகல் இரவு எந்நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டியவர்கள் என்று மனு கூறுவதுதான் பெண் மேலாண்மையா?

கையழுகி, கால் அழுகி, உடல் முழுக்க நாற்றங்கண்ட நிலையில் தாசி வீட்டிற்குச் செல்லத் தவித்த கணவனைக் கூடையில் சுமந்து தாசிவீட்டிற்கு போனாளே நளாயினி! அதுதான் பெண்ணின் மேலாண்மையா?

அவள் சொன்னதும் சூரியனே உதிக்க-வில்லை என்று கதைவிட்டுப் பெண்ணினத்தை ஏமாற்றினார்களே, அந்த ஏமாளி நிலைதான் மேலாண்மையா? உனது பிறப்புக்குரிய சேவை பதிசேவை; இதை நீ சிறிதும் வழுவாமல் கடைப்பிடித்தால், நீ சுமங்கலியாகக் கணவனுடன் கோடானு கோடி ஆண்டு-வாழ்வாய் என்றும்,

உனக்கென்று அறிவு கூடாது! கணவனது அறிவையே நீ நம்பிவாழவேண்டும்; உனக்குச் சகலமும் கணவனே. உனக்கென்று எதுவும் இல்லை என்றும் –

கணவன் அடுத்தவனுக்கு உன்னைக் கூட்டிக் கொடுத்தாலும் மறுப்பேதும் சொல்லாமல் செல்லவேண்டும் என்றும் இந்து மதம் கூறுகிறதே அதுதான் பெண்ணுக்கிருந்த மேலாண்மையா?

இந்துமதம் பெண்ணுக்கிழைக்கும் அநீதியை எடுத்துவைத்தால் அது தனி நூலாகவே விரியுமே! அப்படிப்பட்ட அநியாய சாஸ்திரங்கள்தான் பெண்ணுக்கு உயர்வு கொடுத்தனவா? இவ்வளவு காலமும் அந்த மதமும், பாரம்பரியமும்தானே பெண்ணின் வாழ்வைத் தீர்மானித்தன? பெண்ணின் நிலையென்ன?

ஆதிக்க நிலையில் அதர்மச் சூட்டில், அடிமைச் சேற்றில், வேதனையை வெளிப்படுத்த முடியாமல் வெந்து, நொந்து, தவித்தார்களே பெண்கள். அதுதான் அவர்களுக்கு மேன்மையான வாழ்க்கையா?

அந்த அதிமேதாவி சொல்கிறார், பெண்கள் அலுவலக வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருக்க வேண்டுமாம். பெண்கள் உயர்ந்தால் உலகம் உயர்ந்துவிடாது, பெண் பெண்ணாய் இருந்தால்தான் உலகம் உயரும் என்று.

அடிமுட்டாள் சொல்வானா இவ்வாறு? மக்கள் தொகையில் பாதி பெண்கள்! பாதியை முடக்கி முடமாக்கி, இந்த உலகம் உயரும் என்றால் எவ்வாறு உயரும்? கல்வியென்பதே ஒருகுறிப்பிட்ட ஜாதிக்காரர்களுக்கு (சதிகாரர்களுக்கு) என்று எடுத்து ஏப்பம் விட்டவர்கள் அல்லவா? அந்த நப்பாசையில் நாவசைக்கிறார் போலும்!

உலகம் உயர, உழைப்பாளியும், ஆற்றல் உள்ளவரும், அறிவாளியும், முயற்சியாளரும் நேர்மையாளருமே வேண்டும். இவர்கள் எந்த ஜாதியில் இருந்தால் என்ன? ஆண், பெண் யாராய் இருந்தால் என்ன?

ஆரியர்கள் மட்டுமே படிப்பார்கள் என்ற அனுமானத்தை, அவர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்ற அநியாயத்தை இன்றைக்குத் தாழ்த்தப்பட்டவனும், பிற்படுத்தப்பட்டவனும், தகர்த்தெறிந்து சாதிக்கவில்லையா? ஆரியப் பார்ப்பனர்களைவிட அறிவாளியாயும் ஆற்றல் உள்ளவர்களாகவும் மிளிரவில்லையா?

ஆண்களை விடப் பெண்கள் இன்று அனைத்துத் துறையிலும் சாதிக்கவில்லையா? அப்படியிருக்க, பெண்ணினம் அலுவலகம் போகாமல் அடுப்படியில் அடங்கினால் உலகம் உயருமாம்? இவர் காலத்தில் உச்சநீதிமன்றம் என்ன பாடுபட்டிருக்கும்! நீதி எப்படி நிலைகுலைந்து போயிருக்கும்! யாருக்கு எதைச் செய்யத் தகுதியும் ஆற்றலும் உள்ளதோ அவர்கள் அதைச் செய்தால் உலகம் உயரும்., அதைவிடுத்து இன்ன ஜாதி செய்யவேண்டும் – அப்போதுதான் உலகம் உயரும் என்பது உன்மத்த உபதேசம் அல்லவா?

பெண்கள் சமத்துவம் கேட்டால், அன்பு போய்விடுமாம்! கடவுள் பெண்ணையும் ஆணையும் சமமாகப் படைக்கவில்லையாம்! கடவுள் யார்? இவர்களின் பாட்டன்களால் படைக்கப்பட்டதுதானே! இவர்களைப் போல அதுவும் அநியாய அக்கிரமப் பேர் வழியாகத் தானேயிருக்கும்! அவ்வாறு மனிதர்களை ஏற்றத் தாழ்வாய்ப் படைத்தால் எப்படி கடவுளாக இருக்க முடியும்?

கடவுள் செய்கையால் எல்லாம் நடக்கிறது; அவர் நியாயவான் என்றால், இவரெல்லாம் தலைமை நீதிபதியாக வந்திருக்க முடியாதே! ஆண் பெண் என்ற பாகுபாடு ஓரிரு உறுப்பால் மட்டுமே. பெண் வலிமையற்றவள் என்பது முட்டாள்தனம். பயிற்சி பெற்றால் ஆணையே அவர்கள் வீழ்த்துவர் – வீழ்த்தியும் உள்ளார்கள் என்பதை முன்னமே சான்றுகளோடு பார்த்-தோம். எனவே இவரது கூற்று மூடத்தனத்தில் முகிழ்த்தது அல்லது மோசடியில் விளைந்தது என்று மட்டுமே கூற முடியும்.

சம உரிமையைச் சட்டப்படி பெண்கள் பெற்றதால், தங்கள் மேன்மையை இழந்து விட்டதாகவும் இவர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார், பெண்கள் உரிமைபெற்றால் விழிப்பு பெற்றால், மேன்மைபெற்றால், சுதந்திரமாய் வாழ்வர். காதல் மணமும் கலப்பு மணமும் வந்துவிடும் அதன் மூலம் ஜாதி அழியும், இவர்களது சாக்கடை சாஸ்திரங்கள் செல்லாக்காசாகும். இவர்கள் ஆதிக்கம் அழியும் என்பதால், பெண்களை அடிமைப்படுத்தியே இவற்றைக் காப்பாற்ற நினைக்கின்ற ஆதங்கத்தில், துடிப்பில் இவர்கள் இப்படி பேசுகிறார்கள். இவர்கள் விவரம் தெரியாதவர்கள் அல்ல.

பெண்கள் வேலைக்குப் போகாமல், அரிசிபொறுக்க வேண்டும் என்றார் செத்துப்-போன காஞ்சிப் பெரிய சங்கராச்சாரி. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெண்கள் வேலைக்குப்போகாமல் சமைக்கவேண்டும். என்கிறார். ஆக, மடத்தில் இருந்தாலும் நீதிமன்றத்தில் இருந்தாலும் ஆரியப் பார்ப்பனர்கள் ஒன்றாகவே சிந்திக்கிறார்கள் பாருங்கள்!

நீதிபதி + காவல்துறை + அரசியல்வாதி இவர்களின் சீர்கேடே சமூகச் சீர்கேடு என்பது எனது அசைக்கமுடியாத கணிப்பு. இந்த மூவரும் இன்னமும் மத ஆதிக்கத்திலும் மடமையிலும், ஆணாதிக்க மனப்பான்மையிலும், ஊழலிலும் பெரும்பாலும் இருப்பதால் இவர்களுக்கெதிரான போராட்டமே பெண்களுக்கான போராட்டத்தின் சரியான போர் முறையாகும்.

பாலுறவுக் குற்றங்களில் சட்டமும் நீதிமன்றமும், ஆண் உறுப்பை வலுக்கட்டாய மாகத் திணித்தல் மட்டுமே பாலியல் வன்முறை என்று கருதுகின்றன. மற்றதெல்லாம் சாதாரணம் என்று கொண்டுவிடுகின்றன.

5 வயது சிறுமி (குழந்தை) 18 வயது இளைஞனால் கட்டாய உடலுறவு கொள்ளப்பட்டாள். குப்புறப்படுத்திருந்த அச்சிறுமியின் பின்புறத்திலிருந்து அந்த அயோக்கியன் உடலுறவு கொண்டான். அதனால் அக்குழந்தை கடுமையாகக் காயப்பட்டாள்.

ஆனால், இச்செயல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டபோது, அந்த இளைஞன் தன்விரலைத்தான் அக்குழந்தையின் பிறப்புறுப்பில் நுழைத்தான் என்று கூறி, இதை ஒரு,  ஆபாசத் தாக்குதலாக மட்டுமே பதிவு செய்தனர் (சட்டம் 354 வது பிரிவின் கீழ்). விரலுக்கும்,  ஆண்குறிக்கும் வேறுபாட்டை குழந்தை அறியாது என்பதைக் காரணங்காட்டிக் குற்றவாளியைத் தப்பிக்கவிட்டனர். இதற்கு 2 ஆண்டுகள் மட்டுமே தண்டனை. இதுவே பாலியல் வன்முறையாக இருந்தால் ஆயுள் தண்டனை. ஆயுள் தண்டனைக் குற்றத்தை 2 ஆண்டு குற்றமாக மாற்றுகின்ற ஜால வித்தைகள் இங்குச் சர்வசாதாரணம்!

பச்சைக் குழந்தையிடம் பாலியல் உறவு கொண்டது எவ்வளவு பெரிய கொடுமை. அவனைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்ற தீவிரம் இந்தச் சட்டத்திற்கு வராமல், விரலை விட்டானா? அல்லது வேறு… என்று ஆராய்ச்சிசெய்து தண்டிக்கிறார்கள் என்றால், அது அயோக்கியம்தனமல்லவா? குற்றவாளியை விடக் கொடியவர்கள் அல்லவா இவர்கள்!

காவல்துறையிலும், நீதிமன்றங்களிலும் இதுபோன்ற ஆராய்ச்சிகள்; வக்கிர விசாரணைகள் நடைபெறுவதால்தான், பாதிக்கப்பட்ட பலபெண்கள் புகார் கொடுக்கவே அஞ்சுகின்றனர். இதனால் 99.1 குற்றங்கள் மறைக்கப்படுகின்றன. இது வன்முறையாளர்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்குகிறது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *