கே: சல்லிக்கட்டுக்காக இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தை இடதுசாரிகளும், திராவிட இயக்கங்களும் தூண்டி விடுவதாக இந்து மதவெறிக் கூட்டம் கூச்சல் போடுவது பற்றி தங்கள் கருத்து என்ன?
– சீத்தாபதி, சென்னை-45
ப: பா.ஜ.க.வைச் சார்ந்த அமைச்சர் மரியாதைக்குரியவர், மன்னிப்புக் கேட்டார். இப்போது நடத்த முடியவில்லை. நான் வாக்குறுதி அளித்ததுபோல் என்று.
ஆனால், தமிழகத்தில் திராவிடர் ஆட்சி, தமிழ்நாட்டு மக்கள் பெருந்திரள் எழுச்சியால் _ சாதித்துக் காட்டியுள்ளது பொறுக்குமா அவர்களால்? அதனால்தான் இந்த கூச்சல் ‘தேசவிரோத சக்திகள், சமூக விரோத சக்திகள்’ என்ற கூச்சல்.
காவிரி நதிநீர்ப் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தும்கூட அதற்குக் கட்டுப்பட மறுக்கும் நிலையையும், அதனைக் கண்டும் காணாது அவர்களுக்கே சார்பான நிலையும் எடுக்கின்ற மத்திய அரசையும், தேச ஒற்றுமைக்கு வருந்தும், நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.
கே: வடநாட்டு ‘இந்தியா டுடே’ தொலைக்-காட்சியில் குழந்தைத் திருமணத்தை மரபு என்று ஆதரிக்க முடியுமா? அப்படித்தானே சல்லிக்கட்டும் என்று ராஜ்தீப் கேள்வி எழுப்பியது எதைக் காட்டுகிறது?
– நா.குமரேசன், பூம்புகார்
ப: மூளை மழுங்கிய உதாரணம்! பண்பாட்டுக் கலாச்சாரப் பாதுகாப்பு வேறு; பழைய பத்தாம் பசலித்தன மரபு காத்தல் என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொண்டவரின் தப்பான தர்க்கம் அது!
கே: “இந்து’’ பத்திரிகை ராம் இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தை ஒரு நாடகம் என்றும், ஆளும் கட்சி விவசாயிகள் பிரச்சினையை மறைக்க இப்போராட்டத்தை பின்னின்று நடத்துகிறது என்றும் அப்பட்டமாக பொய் சொல்லுவது பற்றி தங்கள் கருத்து என்ன?
– கு.வடிவுக்கரசி, கும்பகோணம்
ப: பாவம்! ‘இந்து ராம்’ -_ –யார் அவருக்கு இம்மாதிரி தவறான தகவல்களைக் கூறினார்களோ, குறைந்தபட்சம் அவரது ‘தமிழ் இந்து’ நாளேட்டின் கட்டுரைகளைக் கூடவா படிக்க மாட்டார்?
கே: தன்னெழுச்சியாக வந்த இளைஞர்கள் போராட்டம் கட்டுப்பாட்டோடு நடந்தாலும், முடிவு “வழவழா கொழகொழா’’ என்றானது வழிகாட்டுதல் இல்லாததுதானே காரணம்?
– சு.அறிவழகி, சேலம்-2.
ப: சிலர் விளம்பரம் தேடுவதில் முனைப்பாக இருந்தனர் என்பதைத் தவிர அதில் குறை காண ஒன்றுமில்லை. அவர்கள் ஒருநாள் முன்னதாக அவசரச் சட்டம் சட்டமாகும் என்பதைப் புரிந்து முடித்திருந்தால் இந்த விமர்சனங்கள்கூட வந்திராதே!
கே: தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் தன்னெழுச்சிப் போராட்டத்தை சல்லிக்கட்டுப் போராட்டமாக மட்டும் குறுக்கிக் காட்ட சில ஊடகங்கள் முயற்சிப்பது ஏன்?
– கு.பாலமணி, சீர்காழி.
ப: “உரிமைகளைப் பறிக்கும் தேசியர்களின்’’ பிம்பங்களாகும் நிலையை அவர்கள் எடுத்தார்கள் போலும்!
கே: ‘மீண்டும் பார்ப்பனப் பெண்ணை முதல்வராக்கிவிட வேண்டும்’ என்று “நைசா’’ நஞ்சைப் பாய்ச்சும் சகுனி எழுத்தாளர்கள் நடுநிலைபோல காட்டும் பேனா நர்த்தனம் நடத்துகின்றனரே?
– இல.சங்கத்தமிழன், செங்கை
ப: குழப்பம் _ குதர்க்கம் _ இதுதான். பல கட்சிப் பாய்ச்சல் மூலம் எழுத்துக்களை வாரி இறைப்பவர்கள் இப்படித்தான் ‘தனித்தன்மையோடு’ எழுதுவார்கள்.
கே: “போராட்டம் நடத்திய பிறகுதானே சட்டம் போட்டீர்கள்? மக்கள் உணர்ச்சியைப் புரிந்துகொண்டு முதலிலேயே செய்திருக்-கலாமே?’’ என்ற மக்களின் கேள்வி நியாயம்தானே?
– த.ம.மணி, வியாசார்பாடி
ப: 100க்கு 120 விழுக்காடு நியாயமானது. ‘அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ என்பது பழமொழி. மக்கள் போராட்டங்கள் ஆட்சிகளை அசைய வைக்கும் என்பது ஜனநாயகப் பாடம்.
கே: மீண்டும் கம்பனைத் தூக்கிப் பிடிக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டனவே?
– அனலரசு, அரியலூர்
ப: ‘கம்பன் செய்த இனத்துரோகம்’ என்ற தலைப்பில் பிப்ரவரியில் சென்னையில் ஒரு சிறப்புரை கருத்தரங்கம் நடத்தப்படும்.
கே: லாலு, நிதீஷ் போன்றோர் இனஉணர்வுடன் அமைத்த கூட்டணி போன்று முலாயம்சிங் முயலாததுடன் தன் கட்சி ஒற்றுமையையே காக்கத் தவறியது எதைக் காட்டுகிறது?
– கெ.நா.சாமி, சென்னை-72
ப: பரவாயில்லை. உ.பி.யில் அகிலேஷ்_காங்கிரஸ் கூட்டணி அநேகமாக பா.ஜ.க.வை தடுக்கும். அதுபோலவே மாயாவதி அம்மையார் பகுஜன் சமாஜ் கட்சி -_ முஸ்லீம்களின் கட்டுக்கோப்பு ஆகியவை பா.ஜ.க.வுக்குப் பெரும் அறைகூவலாக அமையக்கூடும்!