ஜாதகம் ஒன்பது பொருத்தம் எல்லாம் பார்த்து கோவில் சந்நிதானத்திலேயே திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் எல்லாம் ஓகோ என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; பொருத்தம் பார்க்காமல், ஜாதி பார்க்காமல், இராகு காலத்தில் திருமணம் செய்துகொண்டவர்கள் எல்லாம் அய்யோ என்று போய்விட்டார்கள் என்று சொல்லுவதற்கு இந்த சோதிடர்களிடமோ சங்கரமடங்களிடமோ ஏதாவது ஆதாரங்களும், புள்ளி விவரங்களும் இருக்கின்றனவா?
நல்ல நாள் பார்த்து சாஸ்திரோத்தியமாகப் பட்டம் சூட்டிக்கொண்ட காஞ்சி சங்கரர் ஜெயேந்திர சரஸ்வதியாரே ஒருவருக்கும் தெரியாமல், இரவோடு இரவாக மடத்தில் தண்டத்தையும் விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டாரே!
ஊரும், உலகமும் கைகொட்டிச் சிரித்ததே!
நல்ல நாளும், சாஸ்திரங்களும் அவருக்கே கைகொடுக்கவில்லையே!
இராமன் பட்டாபிஷேகம் சூட்டிக்கொள்ள நல்ல நாள் பார்த்துக் கொடுத்தவர் ‘திரிகால ஞானியாகிய’ வசிட்ட முனிவர்தானே. அந்நாளில் இராமன் பட்டாபிஷேகம் சூடிக்கொள்ளாமல் காட்டுக்கல்லவா சென்றான்?
வசிட்ட முனிவர்களைவிட இந்தச் சில்லறைக் காசு சோதிடர்கள் கெட்டிக்காரர்களா?
இன்னும் நவ (ஒன்பது) கிரகங்களுக்குத் தானே பலன் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?
புதுப்புது கிரகங்களை நாளும் கண்டுபிடித்துக் கொண்டு போகிறார்களே. அதற்கெல்லாம் பலன் என்ன?
ஆக ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. முட்டாள்தனத்தின் பலன் இந்த சோதிடம்தான்!