வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

டிசம்பர் 16-31

சேட்டு

இது தூய தமிழ்க் காரணப் பெயர். வடமொழியின் கிளைமொழி என்று எண்ண வேண்டாம். தமிழ்ச் சொற்கள் பண்டு பிறமொழியாளர் பலரால் எடுத்தாளப்பட்டன. அவற்றில் இதுவும் ஒன்று என உணர்தல் வேண்டும்.

நடுவு நிலைப் பொருட்டாகிய செம்மை என்ற பண்புப் பெயரினின்று தோன்றிய செட்டு என்பது முதல் நீண்டு சேட்டு ஆனது. செட்டி என்பதும் செம்மையிற் தோன்றியதே.

இனிச், செட்ட என்பதன் திரிபாகிய சட்ட என்ற சொல் பற்றிச் சிவஞான போத உரையாசிரியர் செம்மைப் பொருட்டாவதோர் அகர வீற்றிடைச் சொல் என்று சொல்லி-யுள்ளதும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

சேட்டு, நடுவு நிலைமைக் கொள்கையின் அடிப்படையில் ஆவதோர் வாணிகம். வாணிகனை உணர்த்தும்போது ஆகுபெயர் என்க.

திருமதி

சீமதி என்ற வடசொற்றொடரிலுள்ள மதிக்கும், திருமதி என்ற தொடரிலுள்ள மதிக்கும் தொடர்புண்டா?

மதி என்ற சொல் தமிழிலக்கியங்களில் தனக்கென ஒரு பொருளில்லாத இடைச் சொல்லாகவும்-அசைச்- – சொல்லாகவும், தனக்கென ஒரு பொருள் கொண்ட தனிச் சொல்லாகவும் வரக் காண்கின்றோம்.

கேண்மதி, இறக்குமதி என்பவற்றில் காண்க. மதிப்பு என்பதின் முதனிலையாகிய மதி என்பதைக் காண்க.

மதி என்பது பற்றிப் பேராசிரியர் மறைமலையடிகளார் ‘இது தமிழ்ச் சொல், அளப்பது, காலத்தை வரையறுப்பது என்பன அச் சொல்லின் பொருள்கள்’ என்று கூறியிருக்கின்றார்கள். அளப்பதும் வரையறுப்-பதும் மதிப்பு என்பது தான். இது ஆகுபெயரால் மதிப்புடைய திங்களையும் குறிக்கும். மதித்தல் ஆகிய ஓர் அறிவையும் குறிக்கும்.

எனவே திருமதி என்பதற்குத் திருவால் மதிப்புடைய ஒரு பெண் எனப் பொருள் கொள்ளுதலிலும், திருவும் அழகும் உடைய ஒரு பெண் என்று பொருள் கொள்ளுதலிலும் இழுக்கென்னை!

அவ்வாறு பொருள் கொள்ளுங்கால் முன்னது மூன்றாவதன் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை என்றும், பின்னது உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை என்றும் ஆகும்.

எனவே, திருமதி என்பது தூய தமிழ்ச் சொற்றொடர் என்று கடைப்பிடிக்க.
(குயில்: குரல்: 2, இசை: 17, 3-11-1959)

ஆயுள்

ஆயுசு என்பது வடசொல் என்றும், ஆயுள் அதன் திரிபு என்றும் கூறுவர் வடவர்.

ஆயுசு, ஆயுக, ஆயுள் என்பன அனைத்தும் தூய தமிழ்க் காரணப் பெயர்களேயாகும். ஆய்+உ+சு=முதனிலை சாரியை தொழிற் பெயர் இறுதிநிலை. ஆயுசு என்பதும் அது, ஆயுள் என்பதும் அது! அதில் உள்ள இறுதிநிலை! இது, தல் இறுதிநிலை ஏற்று ஆய்தல் என வருதலும் காண்க. ஆயுள் என்பதற்கு ஆராய்தல் என்பன பொருள்கள் காண்க. மக்களுக்கு உண்டான ஆண்டு வாழ்நாளின் இடை-யிடையே ஆராயப்படுவது அன்றோ? ஆயுள் செயப்பாட்டு வினை செய்வினையாய் வந்தது என உணர்க.

எனவே ஆயுள் (ஆயுசு) வடசொல் அன்று, தூய தமிழ்க் காரணப் பெயர்.
(குயில்: குரல்: 2, இசை: 20, 24-11-1959)

வேதனை

இதை வடசொல் என எண்ணுவோரும் உள்ளார். இதுவும் தமிழ்க் காரணப் பெயரே.

வே. முதனிலை! த் எழுத்துப்பேறு! அன் சாரியை, ஐ தொழிற்பெயர் இறுதிநிலை, மனவேக்காடு பற்றிவரும், துன்பம் என்பது பொருள்.

பொருத்தனை, கொடுப்பனை என்பவற்றை ஒப்பு நோக்குக!

(குயில்: குரல்: 2, இசை: 24, 22-12-1959)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *