யாமம்
இது வடமொழி அன்று, தூய தமிழ்க் காரணப் பெயர், யா – -காட்டு, அதனடியாகப் பிறந்த தொழிற் பெயர் யாமம். யா என்ற அடி ம் என்ற சாரியையும், அம் என்ற தொழிற்பெயர் இறுதிநிலையும் பெற்றது.
சேது
அணைக்கும் செய்கரைக்கும் சிவப்புக்கும் பெயர். செம்மையின் அடியாகப் பிறந்த தூய காரணப் பெயர். தேக்கம் சிதையாமல் செம்மைப்படுத்தப்பட்டது என அணைக்குச் சேது என்று பெயர் வந்ததை நோக்குக. செய் கரைக்கும் அவ்வாறு. செம்மை சிவப்பு ஆதல் தெளிவு.
இதை யறியாது சேது என்பது, வடசொல் என்பர். சொல்லுவார் சொல்லினும் கேட்பார்க்கு மதியிருத்தல் வேண்டுமே.
(குயில்-, குரல்: 2, இசை: 9, 8-9-59)
திருடன்
இது த்ருஷ்டி, அதாவது பிறர் பொருளில் கண் வைப்பவன் என்று காரணம் கூறி, திருஷ்டி என்றதன் அடிப்படையாகப் பிறந்து திருடன் ஆதலால் அது வடசொல் என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடி போடுவர் வடவர்.
திரு செல்வம், பிறர் செல்வமே கருதி வாழ்வோன் திருவன். திருவன் என்பதே திருடன் எனத் திரிந்தது என அறிதல் வேண்டும். தமிழ்ச் செய்யுட்ளில் திருவன் என்று வருவதே பெருவழக்கு.
மூலம்
வடசொல்லன்று, மூ – மூத்த தன்மை. காரணம் மூ என்பதன் அடியாக மூலம் என்ற சொல் தோன்றிற்று. மூ+அம்=மூலம். தமிழில் வகரம் லகரமாக வழங்கும், ஆவம், ஆலம் என வழங்கியது போல. ஆலம், ஆவம், அம்பின் கூடு.
வேர் என்பது மரத்தின் காரணம் ஆம்போது வேர் மூலமாம். மற்றும் பிற.
அருச்சனை
அருந்தல்– -உண்ணல். உட்கொள்ளல், மனநிறைவு பெறல், இது தன்வினை.
அருத்தல் – -உண்ணச் செய்தல், உட்கொள்ளச் செய்தல், மன நிறைவு பெறச் செய்தல். இது பிறவினை. இந்த அருந்தல் என்பது அருந்து+அன்+ஐ என இடையில் அன் சாரியையும் ஐ தொழிற் பெயர் இறுதிநிலையும் பெற்று வருதல் தமிழில் பெருவழக்கு, பொருத்தனை என்பது காண்க.
இனி அருத்தளை என்பதன் போலி அருச்சனை என்பது, இது இளைஞரும் அறிந்ததே. பொரிந்து – -பொரிச்சு, விரித்து- – விரிச்சு என்பவற்றையும் நோக்குக.
அருச்சனை எங்கள் வடசொல் என்று எவன் சொல்வான், எவன் கேட்கான்.
எனவே அருச்சனை தூய தமிழ்க் காரணப் பெயர் என்று கடைபிடிக்க.
(குயில்: குரல்: 2, இசை: 11, 22-9-1958)
வண்ணம்
இது வர்ணம் என்ற வடசொல்லின் சிதைவாம். வர்ணம் சிதைந்தால் வருணம் என்றல்லவா வரவேண்டும். அப்படித்தானே வந்தும் உளது.
சமநிலைக்குமேல் ஏற்படும் சிறப்பு நிலையை வளமை என்பர் தமிழர். வண்மை என்ற சமநிலைக்கு மேல் ஏற்பட்ட அழகு, நிறம் இவற்றை வண்ணம் என்றனர். வண்மை – –வண்மம்- வண்ணம், வண்ணம் என்பதில் அம் பண்புப் பெயர் இறுதிநிலை, சிவப்பு என்பதிற் போல.
வண்ணம்-தூய தமிழ்க் காரணப் பெயர்
ஏளனம்
எள்ளுதல்-இகழ்தல். அதன்படி எண். அதுமுதலீட்சி பெற்று அன்சாரியையும் அம் தொழிற் பண்பு இறுதி நிலையும் பெற்று ஏளனம் ஆயிற்று.
இந்த ஏள் என்பதே கேள் – –கேளி – –கேலி என மருவிற்று. அவலல்- – -கவலல் ஆனதும் காண்க. எனவே ஏளனம் கேலி தூய தமிழ்க் காரணப் பெயர்களே என்க.
(குயில்: குரல்: 2, இசை: 11, 22-9-1958)