திராவிடரை அவமதி்க்கும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடலாமா.?

அக்டோபர் 16-31

சாமி.சிதாம்பரனார்

பாட்டாளிகளை நசுக்குவதே பண்டிகைகளின் நோக்கம்

வருகிறது தீபாவளிப் பண்டிகை. அதன் அறிகுறிகள் இப்பொழுதே காணப்படுகின்றன. வெடிச் சத்தம் திடீரென்று கேட்கின்றது. சிறு குழந்தைகள் சீனவெடி கொளுத்த ஆசைப்-படுகிறார்கள்

. பணக்கார வீட்டுப் பிள்ளைகள் வெடி சுட்டுப் பரமானந்தம் அடைகிறார்கள். ஏழைகள் வீட்டுக் குழந்தைகள் “ அப்பா எனக்கு வெடி வாங்கிக் கொடு’’ என்று பெற்றோரைத் தொந்தரவு செய்கின்றனர். பிள்ளைகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஏழைப் பெற்-றோர்கள் என்ன செய்வோம் என்று ஏங்குகின்றனர்.

ஒரு மாதத்திற்கு முன்பே பல வீடுகளில் தீபாவளியைப் பற்றிய பேச்சு கிளம்பிவிட்டது. முதலில் தீபாவளிப் பேச்சைக் கிளப்பியவர்கள் பெண் மக்களேதான். தீபாவளிக்கு என்ன பலகாரம் சுடுவது? என்ன சமையல் செய்வது என்ற பேச்சல்ல அது.

தீபாவளிக்கு என்ன புடவை வாங்கப் போகிறீர்கள் என்ற பேச்சுதான் முதலில் புறப்பட்டிருக்க வேண்டும். பெண்ணுக்கு என்ன பாவாடை தைப்பது? பிள்ளைகளுக்கு என்ன சட்டை தைப்பது? என்ன வேட்டி எடுப்பது? என்ற பேச்செல்லாம் புடவைக்குப் பிறகுதான் புறப்படும்.

பணக்காரக் குடும்பங்களைப் பற்றிக் கவலையில்லை; துணி என்ன விலை விற்றாலும் சரி; கிடைத்தாலும் சரி; கிடைக்காவிட்டாலும் சரி; அவர்கள் வீட்டு அலமாரியிலே பட்டு, பட்டாடைகள் நிரம்பித்தான் இருக்கும்; அவர்கள் கடைக்குப் போய் துணியெடுக்க வேண்டிய அவசியங்கூட இல்லை. அவர்-களுடைய வாடிக்கை வியாபாரி, தானே கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போய்-விடுவான். அல்லது அவர்களே தங்கள் வாடிக்கைக் கடைக்குப் போனாலும் சரி; அவர்-களுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து விட்டுத்தான் மற்றவர்களுக்கு விற்பனை செய்வான் வியாபாரி.

புடவைக்காகவும், ரவிக்கைக்காகவும், குழந்தைகளின் உடைகளுக்காகவும் போராட்டம் நடப்பதெல்லாம் நடுத்தர வர்க்கக் குடும்பங்-களிலேதான்.

பாவம்! இந்த நாளில் எவ்வளவு சம்பாதித்தாலும் வயிறு கழுவவே போதவில்லை அவர்களுக்கு;

தொழிற்சாலைகளிலே வேலை செய்யும் தொழிலாளிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் திண்டாடுகின்றார்கள். ஏழை விவசாயிகள் வாழ்க்கையோ பட்டினியிலும் பசியிலும் அசைந்து அசைந்து ஊர்ந்து கொண்டிருக்கிறது. நிரந்தரமான வருமானமில்லாத கொத்தர், தச்சர், தினக்கூலிக்கு வேலை செய்வோர் போன்றவர்களின் வாழ்க்கையும் அவதிப்படும் வாழ்க்கைதான்.

இவர்கள் எல்லாம் என்ன செய்ய முடியும்? அன்றாட வாழ்க்கையை நடத்துவார்களா? அல்லது தீபாவளியுடன் மாரடிப்பார்களா?

பகுத்தறிவற்ற பண்டிகை

இத்தகைய பண்டிகை எப்படி உண்டாயிற்று? இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? என்பதை அறிந்தவர்கள் இந்தப் பண்டிகையைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்.

இரணியாட்சதன் என்பவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலிலே ஒளிந்துகொண்டான். தேவர்கள் திருமாலிடம் முறையிட்டார்கள். அவர் பன்றி உருவம் (வாராகவதாரம்) எடுத்துக் கொண்டு சமுத்திரத்திற்குள் புகுந்தார்.

இரணியாட்சதனைக் கொன்று பூமியை வெளியிலே கொண்டு வந்துவிட்டார்.

அந்தப் பன்றியின் மேல் பூமாதேவிக்கு காதல் பிறந்துவிட்டது. பன்றிக்கும் பூமாதேவிக்கும் பிறந்தான் ஒரு பிள்ளை. அவனுக்குத்தான் நரகாசுரன் என்று பெயர்.

இவன் தேவர்களுக்கு விரோதமான செயல்களைச் செய்து வந்தான். ஆரியக் கொள்கைகளை எதிர்த்துவந்தான். வேதங்களையும், வேதங்களின் பெயரால் மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த வேதியர்-களையும் எதிர்த்தான்.

ஆகையால், இவனுடைய தொல்லையைத் தீர்க்க வேண்டும் என்று தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். அவர் தானே கிருஷ்ணாவதாரத்தில் கொல்லுவதாக வாக்களித்தார்.

சதுர்த்தியன்று கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்றான். தந்தை மகனைக் கொன்றான். அப்பொழுது அவனுடைய தாயாகிய பூமாதேவியின் அவதாரம் என்று சொல்லப்பட்ட சத்தியபாமையும் உடனிருந்தாள். ஆகவே தாயும் மகனைக் கொல்லுவதற்கு உடந்தையாக இருந்தாள்.

நரகாசுரன் இறக்கும்போது தான் இறந்த நாளை எல்லாரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். கண்ணன் அவன் கேட்ட வாரத்தைக் கொடுத்தான். அதுமுதல் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இதுதான் தீபாவளிப் பண்டிகையைப் பற்றிச் சொல்லப்படும் கதை.

பூமி உருண்டை. பூமியில்தான் கடல் அடங்கியிருக்கிறது. பூமிக்கு அப்பால் வேறு கடல் இல்லை. அப்படியிருக்க எந்தக் கடலில் புகுந்தான்?

பூமியைப் பாயாகச் சுருட்டியவன் எங்கே நின்று கொண்டிருந்தான்? பூமி தட்டையாக இருந்தால் அல்லவா அதைப் பயாகச் சுருட்ட முடியும்? பூமி உண்மையில் உருண்டை ஆயிற்றே!

பன்றிக்கும் மண்ணுக்கும் (பூமிக்கும்) எங்கேயாவது குழந்தை பிறப்பதுண்டா? அறிவுள்ள மக்கள் இதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

திராவிடரை இழிவுபடுத்துவது

அடுத்தபடி இந்தக் கதை திராவிடர்களை அவமானப்படுத்தும் கதை என்பதை அறியவேண்டும்.

புராணங்களிலே அசுரர்கள், அரக்கர்கள் என்று சொல்லப்பட்டிருப்பவர்கள் கங்கை நதிக்குத் தெற்கேயுள்ள நாட்டை ஆண்டவர்கள்; இந்த நாட்டிலே வாழ்ந்த மக்கள்.

நரகாசுரன் என்பவன் ஒரு திராவிடன்; ஆரியக் கொள்கைகளை எதிர்த்தவன். ஆகையால்தான் அவனைப் பற்றிப் பன்றிக்குப் பிறந்தவன் என்று இழிவாகக் கதை கட்டிவிட்டனர். அவன்மீது கொண்ட ஆத்திரமே இம்மாதிரி கதைகட்டச் செய்தது.

திராவிடர்களின் நாகரிகத்தைக் காப்பாற்ற முயன்ற ஒரு திராவிடனை ஆரியர்கள் அழித்த நாளைக் குறிப்பிடுவதுதான் தீபாவளி. ஆரிய வருணாஸ்ரம தருமக் கொள்கைகளை எதிர்த்த ஒரு பகுத்தறிவுவாதியை ஆரியர்கள் கொலை செய்த நாளைக் குறிப்படுவதுதான் தீபாவளி.

ஆகையால் மானமுள்ள தமிழன் தீபாவளி கொண்டாட மாட்டான். சுயமரியாதையுள்ள திராவிடன் தீபாவளி கொண்டாடமாட்டான்; தன்னுடைய உரிமைக்குப் போராடும் உழைப்பாளி, தொழிலாளி, விவசாயிகள் தீபாவளி கொண்டாடுவது தங்களைத் தாங்களே மானபங்கப்படுத்திக் கொள்ளுவதாகும். அறிவுள்ளவர்கள் இந்த உண்மையை ஆராய்ந்து பாருங்கள்.

வருஷத்திலே ஒரு நாள் மக்கள் குதுகலமாயிருப்பதற்குத்தான் பண்டிகை. அதைத் தடுக்கலாமா? என்று சமாதானம் கூறுவோர் உண்டு. இவர்கள் மக்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்னும் கொள்கைக்கு முட்டுக்கட்டை போடுகிறவர்கள். ஆகையால் இவர்கள் சொல்லை நம்பி ஏமாறவேண்டாம்.

சுரண்டல் பண்டிகை

பல பழைய பொருட்களை விற்று கொள்ளை லாபம் ஈட்ட வியாபாரிகளுக்குத்தான் இப்பண்டிகை பயன்படுகிறது.

கெட்டுப்போன துணிகளையும் மூட்டை கட்டி வைத்திருந்து ஏழை _ எளியவர்கள் தலையிலே கட்டிக் காசு பறிப்பார்கள்.

தீபாவளிப் பரிசு, தீபாவளி இனாம், தீபாவளிப் பிச்சை என்பதன் பெயரால் பல சிப்பந்திகள் உயர்தர அதிகாரிகளிடம் கைகட்டி நிற்கிறார்கள்; பல தொழிலாளர்கள் வீடுகள்தோறும் சென்று பிச்சையெடுக்கிறார்கள். இவ்வாறு மக்களுக்குப் பிச்சையெடுக்கும் மனப்பான்மையை வளர்ப்பது தீபாவளி.
அரசாங்கம் விடுமுறை விடுவதைக் கூட எதிர்க்க வேண்டும். திராவிட நாட்டிலே இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகிறவர்கள் யாராயிருந்தாலும் சரி; அவர்கள் திராவிடர்-களை அவமானப்படுத்துகிறவர் களாகக் கருதப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *