சு.அறிவுக்கரசு
மராட்டியத்தின் மாமனிதர் (மகாத்மா) ஜோதிபா பூலே சூத்திர ஜாதியைச் சேர்ந்தவர். சூத்திர மக்களுக்காகவும் பெண்களின் கல்வி, உரிமைகள், விடுதலை போன்றவற்றிற்காகவும் அவர் இன்றளவும் போற்றப்படுபவர். அவர் போற்றிப் புகழ்ந்த மற்றொரு சூத்திரர், சத்ரபதி சிவாஜி என மராட்டியர்களால்
கொண்டாடப்படும் பெருமைக்குரிய மராட்டிய மன்னர். நிறையப் பேர் சிவாஜியைக் கடவுளின் அவதாரம் என்கின்றனர். சிலர் சிவனின் அவதாரம் என்கின்றனர். சிலர் விஷ்ணுவின் அவதாரம் என்கின்றனர். அவர் அற்புதமான ஆற்றல்களைப் பெற்றிருந்தவர் என்று இன்றும் கூறுகிறார்கள். அவர் பறவையைப் போலப் பறக்கும் ஆற்றல் பெற்றவர் என நம்புகிறார்கள். திடீரென்று மறைந்து போகும் சக்தி படைத்தவர் என்கிறார்கள்.
மாவீரன் சிவாஜி மனிதர்தான். நல்ல மனிதர். நேர்மையான தலைவர். ஒழுக்கம் நிறைந்த மன்னர். மாபெரும் வீரர். முகலாய மன்னர் அவுரங்கசீப் உடன் மோதியவர். முகலாய அரசுக்கு வைரி. ஆனால், தன் அரசைச் சார்ந்த இசுலாமிய மக்களிடம் அன்பு காட்டியவர். பாரபட்சம் இல்லாமல் ஆட்சி நடத்தியவர். சிவாஜி இந்து மதத்தைச் சார்ந்தவர். அந்த மதத்தின் உயர்ஜாதிகள் எனக் கருதப்படும் 96 ஜாதிகளில் ஒன்றைச் சார்ந்தவரல்லர். அந்த 96 ஜாதியினரால் தலைவராக ஏற்கப்பட்டவர் அல்லர். அவர்களால் அரசராக ஏற்றுக் கொள்ளப்பட்டவரும் அல்லர். இந்துமதத்தின் நால்வருணப் பாகுபாட்டினால் பகடைக்காயாக வெட்டப்பட்டவர். சூத்திர ஜாதிக்காரனான-தால் பாதிக்கப்பட்டவர். வெறுக்கப்பட்டவர்.
அவர் ஆட்சியின்போது, ஒரு நிகழ்ச்சி. ரஞ்சே பட்டீல் என்பான் ஏழை விவசாயி ஒருவரின் மகளைக் கற்பழித்துவிட்டான். மன்னர் சிவாஜியின் முன் விசாரணை நடந்தது. விசாரணைக்கு வருமாறு அரச சேவகர்கள் ரஞ்சே பட்டீலை அழைத்து வரச் சென்றார்கள். அவன் வர மறுத்துவிட்டான். “உன் சிவாஜியிடம் சொல். அவர் பெயரளவில்தான் அரசர். நான் உண்மையிலேயே பட்டீல் (கிராமத் தலைவன்). என் கிராமத்துப் பெண்கள் என் வைப்பாட்டிகளே!’’ என்று சொன்னானாம். மன்னராக இருந்தாலும் சூத்திரர்தானே! பார்ப்பனரின் வைப்பாட்டி மகன்தானே!
அத்தகைய சூத்திரர் சிவாஜியை சூத்திர ஜோதிபாபூலே “குலவாடி பூஷன்’’ எனப் புகழ்ந்து (விவசாயிகளின் மகுடத்தில் பொதிந்த வைரமணி) கதைப் பாடல் எழுதி, “சூத்திரனின் மகனை ஜோதிபாபூலே பாடுகிறேன்’’ என்று முடித்துப் பெருமிதப்பட்டார்.
மராட்டியத்தின் 96 உயர்ஜாதியினர் தங்களை சத்திரியர்கள் எனக் கூறிக்கொண்டு சிந்தே ராஜே, மூர் ராஜே என அழைத்துக் கொண்டு அரசர்கள் எனக் கூறிக் கொண்டனர். வேடிக்கை என்னவென்றால் இவர்களில் யாருக்குமே “ராஜ்யம்’’ எனக் கூறிக்கொள்ளக் கையளவு இடம்கூடக் கிடையாது. ஆனால், மகாராஷ்டிரம் (பெரிய ராஜ்யம்) எனப்படும் பகுதியை ஆண்ட மன்னர் சிவாஜியை இவர்கள் மதிக்கவில்லை. காரணம் ஜாதி! 96 ஜாதிகளில் போன்ஸ்லே ஒன்றல்ல. சிவாஜி இந்த ஜாதியாம்!
சத்திரியராகப் பிறக்காத சிவாஜிக்கு முடிசூட்டு விழா நடத்திட மராத்தியப் பார்ப்பனர்கள் எதிர்ப்பு. காசியிலிருந்து காகபட்டரை அழைத்து வந்து, அந்தக் காலத்திலேயே கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்து முடிசூடிக் கொண்டார் சிவாஜி. 1674ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 5ஆம் நாள் ராய்கட்டில் நடந்தது. முடிசூட்டு விழா நடந்த 13ஆம் நாள் சிவாஜியின் தாய் ஜீஜாபாய் இறந்துபோனார். அவரது படைத்தளபதி பிரதாப் ராவ்கவுர் சில நாள்களில் இறந்துவிட்டார். சிவாஜியின் மனைவியரில் ஒருவரான காசிபாய் இறந்தார்.
மூன்று சாவுகளைத் தொடர்புபடுத்திச் சரடுவிட்டார் ஒரு பார்ப்பனர். யஜுர் வேதம் படித்த தாந்திரீகரான நிச்சாவ்புரி கோசவி என்ற பார்ப்பனர் காகபட்டரைப் பற்றிப் புகார்ப் பட்டியல் படித்தார். பட்டாபிஷேகத்துக்குக் குறித்த நாள் நல்ல நாள் அல்ல. பல கடவுள்களைத் திருப்திப் படுத்திட விலங்குகளைப் பலி கொடுக்கவில்லை. அதனால் அந்தத் தெய்வங்கள் கோபமாக உள்ளன. முடிசூட்டுச் சடங்குகளில் காகபட்டர் ஏகப்பட்ட குளறுபடிகளைச் செய்துவிட்டார். தொழில் போட்டியோ? உள்ளூர் ஆளை விடுத்து காசியின் காகபட்டர் கோடிக்கணக்கில் பணம் பார்த்ததால் பொறாமையோ _ கோசவி வைத்தது பற்றிக் கொண்டது. இரண்டாவது முறையாக முடிசூட்டு விழா நடத்தப்பட்டது சிவாஜிக்கு! உலகில் எந்த மன்னருக்கும் நடக்காத வகையில் நடந்தது. பார்ப்பனர்க்கு வருமானம்!
இரண்டாம் முடிசூட்டு விழா நடந்து 6 ஆண்டுகள் மட்டுமே சிவாஜி வாழ்ந்தார். காகபட்டர் தோஷம் கழித்தும் அவ்வளவுதான் ஆயுள்! 44 வயதில் மீண்டும் தாலிகட்டித் திருமணம் செய்து கொண்டார்! என்றாலும் 50 வயதில் இறப்பு நேர்ந்தது!
உள்ளூர்ப் பார்ப்பனர்கள் சிவாஜிக்கு மகுடம் சூட்ட மறுத்தனர். எதிர்த்தனர். முகலாய மன்னரிடம் சேவகம் செய்த உயர்ஜாதிக்காரரான மிர்ஸா ராஜா ஜெய்சிங் என்பவரை மன்னராக்கிட யாகம் செய்யலாம் எனக் கூறினர். அவனும் ஒரு கோடி அர்ச்சனை செய்யவும், 11 கோடி லிங்க பூஜையையும் செய்யப் பணம் கொடுத்தான். மூன்று மாதங்கள் நடந்து இரண்டு கோடி ரூபாய் செலவிட்டு யாகம் முடிந்தது. பார்ப்பனர்கள் பாடு யோகம்! மிர்ஸா ராஜா ஜெய்சிங் மன்னன் ஆனானா? இல்லையே!
சிவாஜி மன்னரானார்! எப்படி? யாகம் செய்ததாலா? அல்லவே! தியாகம் செய்ததால்! அவர்தம் மக்களை அறிந்திருந்தார். விவசாயிகள் சந்தித்த பிரச்சினைகளை அவர் அறிந்திருந்தார். அவர்களின் வாழ்வு மேம்பாடடைய அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதைத் தம் லட்சியமாகக் கொண்டார். தங்கள் துயர் போக்க வந்தவர் என அவரை அடையளங் கண்டு கொண்டனர். அவருக்கு உதவினர். குறிப்பாகச் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் அவரைக் காப்பது தம் கடமையென உணர்ந்தனர். ஒரு சமயம், அவருடைய பன்ஹாவா கோட்டை முற்றுகை இடப்பட்டது. முகலாயப் படையைச் சேர்ந்த சித்திஜோகரும், ஃபசல்கானும் முற்றுகைப் போரை நடத்தினர். சிவாஜியின் படை தோற்றுவிடும் நிலை. கோட்டையை விட்டுத் தப்பிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. பல்லக்கில் ஏறித் தப்பிக்கும்போது முகலாயப் படைகளிடம் சிக்கிக் கொண்டார். கொல்லப்பட்டார். ஆனால், அது உண்மை சிவாஜி அல்ல. பிற்படுத்தப்பட்ட ஜாதியான நாவிதர் ஒருவர் சிவாஜி வேடம் தரித்து போக்கு காட்டி மாட்டிக் கொண்டார். அந்த நேரத்தில் உண்மை சிவாஜி முற்றுகையிலிருந்து தப்பி ஓடிவிட்டார். தம் உயிரைத் தந்து தம் தலைவரைக் காப்பாற்றிய நாவிதர் சிவா என்பவர்.
சிவாவைப் போலவே நூற்றுக்கணக்கான ஏழைகளான மாவ்லாக்கள் சிவாஜிக்கு அவர் வாழ்நாள் முழுவதும் உதவியுள்ளனர். அவுரங்கசீபின் தளபதி மிர்ஸா ராஜா ஜெய்சிங் என்பவரிடம் உடன்படிக்கை செய்துகொண்டு மன்னரைச் சந்திக்க ஆக்ரா சென்றபோது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் தப்பிக்க உதவியது இரண்டு சாமான்யர்கள். மாதாரி மெஹ்டர், ஹிரோஷி பர்ஜான்ட் எனப்படும் இருவரின் உதவியால் ஆக்ரா கோட்டையில் இருந்து தப்பினார். உதவிய இரவரும் தங்கள் உயிரை இழப்போம் என்பது தெரிந்திருந்தும் உதவினர் என்றால் சிவாஜி சாதாரண மக்களின் இதயம் கவர்ந்த தலைவர் என்பதால்தான். சிவாஜிக்காக உயிரையே பணயம் வைத்து உதவிய மக்களில் ஒருவர்கூட உயர்ஜாதியைச் சேர்ந்தவரில்லை. தேஷ்முக், தேஷ்பாண்டே, தேசாய், பட்டீல், குல்கானி, கோட், மிராஸ்தார் போன்றோர் ஒருவர்கூட இல்லை. மேட்டுக் குடியினர்க்காக மன்னர் சிவாஜி எதையும் செய்யவில்லை. மாறாக ஏழை, விவசாயி, பெண்கள் முதலியோரின் நல்வாழ்வுக்காகச் சட்டம் இயற்றிப் பாதுகாத்தார். மக்களின் மனதை வென்றார். நின்றார்.
சிவாஜி ஓர் இந்து மன்னர். அவர் கண்டது இந்து ராஜ்யம். ஆனாலும், அவர் முஸ்லிம்களை வெறுத்தவர் அல்லர். அவரது பீரங்கிப் படையின் தளபதி இப்ரஹிம்கான். மிக நீண்ட கொங்கணக் கடற்கரையைக் காவல் காத்திட வலுவான கடற்படையை சிவாஜி உருவாக்கினார். அதன் தளபதியாக இருந்தவர் தாரியாசரங் தவுலத்கான் எனும் முஸ்லீம்தான். சிவாஜியின் மெய்க்காப்பாளர் மாதாரி மெஹ்டர் என்ற முஸ்லிம் இளைஞன். மன்னர் சிவாஜியின் காலாட்படைத் தலைவர் ஷாமாகான். இவர்களெல்லாம் தனிநபர்-களல்லர். தம் வீரர்களோடு சிவாஜிக்காகப் பணிபுரிந்தவர்கள். சிவாஜிக்கும் முஸ்லிம்களுக்கு-மான உறவில் செங்குத்தான விரிசலோ பிளவோ இருந்திருக்குமானால் இது சாத்தியமா?
இதைப் போலவே, முகலாயர்களின் ஆட்சியில் இந்துக்கள் பதவி வகித்திருக்-கிறார்கள். எனவே, இந்திய மன்னர்கள் இந்துவாக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும், மதங்களின் அடிப்படையில் போர்களில் ஈடுபட்டவர்கள் அல்லர்.
முகலாயர்களின் பேரரசு இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டுகொண்டிருந்தபோது மராட்டியத்தில் இந்து ராஜ்யத்தை நிறுவியவர் சிவாஜி. அவர் கண்டது இந்து ராஜ்யம் என்பதாலேயே மராட்டிய இந்துக்களான மொஹிட், கோர்படே, மூர், சாவந்த், தாலவி, கர்வே, நிம்பால்கர், ஜாதிகளைச் சார்ந்தவர்கள் சிவாஜியை ஆதரித்தனரா? உதவினரா? இல்லையே! மன்னராகவே இருந்தாலும் அவரது ஜாதிதான் அவரது தகுதியை நிர்ணயிக்கிறது. மவுரிய சாம்ராஜ்யத்தைப் புஷ்யமித்ரசுங்கன் அழித்ததற்கும், குப்தர்கள் ஆட்சிக்காலம் பொற்காலம் எனப் புகழ்வதற்கும் ஜாதிதான் காரணம்.
சைஸ்டா ஏகான் படையோடு வந்து சிவாஜியோடு போரிட்டபோது உயர்ஜாதி “இந்து’’க்கள் முசல்மான்களோடு சேர்ந்துகொண்டு சிவாஜிக்கு எதிராகப் போரிட்டனர்! இதுதான் இந்து மதத்தின் உயர்ஜாதி மனோபாவம்! மாற்று மதத்தான் வந்தாலும் சரியே, சொந்த மதத்தைச் சேர்ந்த கீழ்ஜாதிக்காரன் வரக்கூடாது என்பது அவர்களது தத்துவம். வேறு வகையில் சொன்னால் மதத்தைவிட ஜாதியே முக்கியம். மதம் மாறலாம். ஜாதி மாறமுடியாதது அல்லவா?
சிவாஜி மகுடம் சூடுவதை மராத்தியப் பார்ப்பனர்கள் எதிர்த்தனர். இந்து மதத்திற்கே உரிய கொடுமையான சதுர்வருண அமைப்பு முறையின்படி பார்ப்பனர்களும் சத்திரியர்களும் மட்டுமே அரசராகலாம். இதையே மனு (அ)தர்மமும் கூறுகிறது.
“எல்லா சத்திரியர்களையும் பரசுராமரே அழித்து விட்டார். எனவே, சத்திரியனே இல்லாத நிலையில்… பார்ப்பனர்தான் ஆளலாம். சிவாஜி ஆளவே முடியாது என்றனர்.
உயர்ஜாதியினரின் எதிர்ப்பையும் பார்ப்பனர்-களின் எதிர்ப்பையும் மீறித்தான் சூத்திர சிவாஜி மராத்திய இந்து ராஜ்யத்தை ஏற்படுத்தினார். அதன் பின்னர் அவருடன் ஒட்டிக் கொண்டவர்கள் நிறையக் கதைகளைக் கட்டி விட்டனர். இந்துப் பெண் கடவுளான அன்னை பவானி ஒரு வாளை சிவாஜிக்குத் தந்து அவரை ஆசீர்வதித்த காரணத்தால்தான் அவர் ஈடுபட்ட எல்லா போர்களிலும் வெற்றி மேல் வெற்றி வந்து சிவாஜியைச் சேர்ந்தது என்று கதை கட்டினர். அந்த மாவீரனுக்குப் பெருமையும் புகழும் சேரக் கூடாது என்ற எண்ணத்தில் பெண் கடவுளைப் புகுத்திவிட்டனர். பவானியின் வாள்தான் வெற்றிக்குக் காரணம் என்று சிவாஜியின் வீரத்தையும் போரிடும் ஆற்றலையும் முகலாய மன்னர்களை ஒவ்வொரு முறையும் எதிர்கொண்டபோது கடைப்பிடித்த ராஜதந்திர அணுகுமுறைகளையும் குறைவு-படுத்துகின்றனர்.
பவானிதேவியின் அருளால்தான் சிவாஜி இந்து சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தினார் என்றால் சத்திரிய ராணா பிரதாப் சிங் மீது கருணை காட்டி அவரது பகுதியில் இந்து ராஜ்யத்தை அமைக்க பவானி ஒத்துழைக்கவில்லை? அதைப்போலவே பிரிதிவிராஜ் சிங் சவுகான் மீது கருணை காட்டி உதவிகள் செய்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிட கருணை காட்டிடவில்லை? ராஜபுத்ர சத்திரிய உயர்ஜாதி இந்துக்களிடம் காட்டாத கடாட்சத்தைச் சூத்திர சிவாஜியிடம் காட்டினாள் காளி பவானி? காரணம் பவானியல்ல _ சிவாஜியின் அறிவும் ஆற்றலும்!
காஷ்மீர் மன்னரான ஹர்ஷதேவ் இந்துக் கோயில்களைக் கொள்ளையடித்திட தனிப் பிரிவையே அமைத்து ஆட்சி செய்தார். இவர் இந்து சத்திரிய மன்னரே! “தேவோட்படன்’’ என்று அத்துரைக்குப் பெயர் வைத்து கடவுள் சிலைகளைக் களவாடி உருக்கி உலோகத்தை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தியதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. சிவாஜி அப்படி எதுவும் செய்யவில்லை, மசூதிகளை இடிக்கச் செய்தவருமல்லர். ஆனாலும், உயர்ஜாதி இந்துக்கள் அவரை எதிர்த்தனர். பார்ப்பனர் வெறுத்தனர். காரணம் சிவாஜி சூத்திரர்.
இன்றைக்கு என்ன நிலை? சனாதன இந்துக்கள் சிவாஜி மகராஜ் என்கிறார்கள். ஜெய் சிவாஜி, ஜெய் பவானி என்கிறார்கள். எல்லா இடத்திலும் சத்ரபதி சிவாஜி என்ற பெயரைப் பொறித்து மகிழ்கிறார்கள்.
அம்பேத்கரை தூக்கிப் பிடிப்பது போன்று இதுவும் ஓர் ஆரிய பார்ப்பன நாடகமே! பார்ப்பனரல்லாதார்தான் விழிப்போடிருக்க வேண்டும்.