ஒரு கோடி கடன் பெற்று ஊருக்குப் பாசன நீர் தந்த தமிழ்வாணன்! அரசு அவருக்கு உடன் உதவ வேண்டும்!

அக்டோபர் 01-15

 

 

 

“தேசிய நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி கொடுப்பேன்’’ என்று பந்தாவாக அறிவித்து-விட்டு, ஒன்றும் செய்யாத “பெரிய மனிதர்கள்’’ வாழும் சமுதாயத்தில், எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் தன் கிராமத்து ஏரிக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காக ஒரு கோடி ரூபாய்வரை கடன்வாங்கிச் செலவு செய்துவிட்டு, இன்று வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவும் வழியின்றி வேதனையுடன் அரசு உதவி கேட்டு அலைந்து கொண்டிருக்கிறார் தமிழ்வாணன் என்ற ஏழைத் தமிழன்.

சேலம் _ தர்மபுரிக்கு நடுவே உள்ள சேர்வராயன்மலை அடிவாரத்தில் இருக்கிறது பி.குறிஞ்சிப்பட்டி. இங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் எழுத்-தராகப் பணியாற்றுகிறார் தமிழ்வாணன். அடிப்படையில் இவர் ஒரு விவசாயி. இங்குள்ள அய்ந்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மரவள்ளிக் கிழங்கு, சோளம், கேழ்வரகு என்று பயிரிட்டு வருவாய் அதிகம் இன்றி வாழ்கிறார்கள்.

தண்ணீர்த் தட்டுப்பாட்டால் கடந்த 10 வருடமாக அங்குள்ளவர்களால் விவசாயம் செய்ய முடியாமல், 450 ஏக்கர் நிலங்களுக்கு மேல் கரம்பு நிலமாக மாறிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் தனியொரு மனிதராய் அவர் சாதித்ததை அவரே கூறுகிறார்:

“தண்ணீர்த் தட்டுப்பாட்டால், என்னுடைய நான்கரை ஏக்கர் நிலமும் சும்மா கிடந்தது. எனக்காவது மாதச் சம்பளம் வருகிறது. சமாளிச்சுக்குவேன். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் கதி? அதை யோசித்த-போதுதான் என் கிராமத்து விவசாய மக்களின் வறுமையும் வலியும் எனக்குப் புரிந்தது. விவசாயத்தின் ஆதாரமான கிராமத்து ஏரியை நிரப்பிட்டா பசியில் துடிக்கிற அவர்களது வயிற்றையெல்லாம் நிரப்பிட்ட மாதிரி இருக்குமே; அதற்கு என்ன செய்யலாம் என யோசித்தேன். எங்கள் ஊரிலிருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் வேப்பாடி காட்டாறு ஓடுகிறது. சேர்வராயன் மலையில் திடீர் திடீரென்று மழை பெய்யும். அப்போ-தெல்லாம் வேப்பாடி ஆறு வெள்ளமாய் ஓடி யாருக்கும் பயனின்றி வீணாகிப் போகும். அப்படி வீணாக ஓடுற தண்ணீரை ஊரிலே வறண்டு கிடக்குற கிருஷ்ணசெட்டி ஏரிக்கு எப்படி கொண்டு வரலாம்னு யோசிச்சேன். பைப்லைன் போட்டு கொண்டு வரலாமென்று தோணுச்சி. ஆனால், அதற்குக் கோடிக்கணக்கில் செலவாகும். நினைக்கும்போதே மலைப்பாய் இருந்தது. ஒரு தனிமனிதனான என்னால் இது முடியுமா? ஊர் கூடி முயற்சி செய்தால் எதுவும் சாத்தியமே என்று நம்பிக்கை வந்தது.

இதற்காக “விடியல் நீர் ஏற்றப் பாசனம் மற்றும் நிலத்தடி நீர்வள பராமரிப்பு சங்கம்’’ என்ற அமைப்பை ஆரம்பித்தேன். இதில், கிட்டத்தட்ட 40 விவசாயிகள் இணைந்தார்கள். அடுத்து செயலில் இறங்கினோம்.

எங்கள் திட்டத்துக்கு அரசாங்கத்திடம் அனுமதி கேட்டோம். பொதுப்பணித்துறை மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்துவிட்டு, “நல்லத் திட்டம் தாராளமாக பண்ணுங்க’’ என்று ஊக்கப்படுத்திப் பாராட்டிட்டுப் போனாங்க. எங்களுடைய வங்கிலேயே 40 விவசாயிகளின் பெயரிலும் 40 லட்ச ரூபாய் கடன் வாங்கினோம். அதனுடன் என்னுடைய கைக்காசையும் போட்டு வேலைகளை ஆரம்பித்தோம்.

ஆற்றிலிருந்து மேடான பகுதியில் இருக்கும் எங்கள் ஊர் ஏரிக்கு தண்ணீர்க் கொண்டுவர இரண்டரை கிலோ மீட்டருக்கும் பள்ளம் தோண்டி பைப் லைன் அமைத்தோம். ஆற்றுப் பக்கத்தில் ஒரு பழைய கிணறு இருந்தது. அந்தக் கிணற்றை கருங்கல் சிமெண்ட் கொண்டு புனரமைத்தோம். ஆற்றில் தண்ணீர் போகும்-போதெல்லாம் கிணறும் வடிநீரால் நிரம்பி-விடும். அந்தக் கிணற்றில் மோட்டார் எந்திரம் அமைத்து ஆற்றுநீரை உறிஞ்சி, ஏரிக்குக் கொண்டு வந்தோம். 50 ஹெச்.பி பவர் உள்ள பெரிய மோட்டார் அது.

ஒரு வருடக் கடும் போராட்டத்துக்குப் பிறகு ஏரியில் தண்ணீரை நிரப்பிவிட்டோம். விவசாயிகள் எல்லோரும் இப்ப நல்லா விவசாயம் செய்ய முடியுது. வானம் பார்த்த பூமியாய் காய்ந்து கிடந்த எங்கள் கிராமம் இப்ப பசுமையாய் பூத்துக் குலுங்குகிறது. மக்கள் என்னை அண்ணாந்து பார்த்து நன்றி சொல்லும்போது, ரொம்ப மன நெகிழ்ச்சியாக இருக்கிறது என்ற அவர், “வேலைகள் நடந்து-கொண்டிருக்கும் போதே எங்கள் திட்ட மதிப்பீட்டையும் கடந்து கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் வரை செலவாகிடுச்சு. தண்ணீரைக் கொண்டுவரும் 50 ஹெச்.பி. மோட்டாருக்கே 60 லட்ச ரூபாய் ஆகிவிட்டது. தொடங்கிய வேலையை இடையில் நிறுத்தக்கூடாது என்று கையில்  இருந்த காசு, நண்பர்களிடம் கடன், மனைவியின் நகைகள் விற்பனை என்று சகல வழிகளிலும் பணம் திரட்டி, செலவு பண்ணி நினைத்ததை வெற்றிகரமாக முடிச்சுட்டேன்.

ஆனால், 40 விவசாயிகளின் பெயரில் வாங்கிய 40 லட்ச ரூபாய் கடனுக்கும் வங்கியில் நான்தான் ஷ்யூரிட்டி கொடுத்திருந்தேன் என்பதால் அங்கேதான் என்னைச் சிக்கல் சூழ்ந்தது. 40இல் 24 குறுசிறு விவசாயிகளின் கடன்களை அரசாங்கம் தள்ளுபடி செய்து-விட்டது. மீதமுள்ளவர்களில் 4 விவசாயிகள்-தான் கடனை திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். மற்ற 12 பேர்களுடைய கடனை நான்தான் அடைக்க வேண்டிய சூழ்நிலை. ஏற்கெனவே, என் பெயரில் தனிப்பட்ட முறையில் வாங்கிய 50 லட்சம் ரூபாய் கடனை கட்டுகிறதுக்கே எங்கிட்ட பணமில்ல. இதில், 12 பேர் கடனுக்கும் சேர்த்து வட்டி கட்ட வேண்டிய சூழலில் கண்ணு முழி பிதுங்குது. நிம்மதி இல்லே. ராத்திரியில் சரியா தூங்கக் கூட முடியறதில்லே.

“தமிழ்நாடு நீர்வளப் பகுதி மேம்பாட்டு முகமை ஆனந்தக்குமார் அய்.ஏ.எஸ். அவர்-களிடம் நாங்கள் செய்துள்ள பணிகளையும் அதனால் ஏற்பட்ட கடன்கள் குறித்தும் கண்ணீ-ரோடு விவரித்தேன். என்னைப் பாராட்டி, நான் செய்த புராஜக்டை கள ஆய்வு செய்து, எனக்கு ஒன்றே கால்கோடி ரூபாய் அரசு கொடுக்கும் என அப்ரூவல் கொடுத்தார். ஆனால், தமிழக விவசாயத் துறையோ, “ஏற்கெனவே, முடிந்த வேலைக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் விதிமுறை இல்லை…’’ என்று சொல்லிவிட்டார்கள்.

வட்டியும் முதலுமாக கழுத்தை நெரிக்க வீட்டுலயும் பிரச்சினையாகி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளேன். தமிழக முதல்வர்தான் மனம் வைத்து என் நிம்மதியை மீட்டுத் தரவேண்டும்…’’ அரசு உடனடியாக அதற்கான தொகையை வழங்க வேண்டும் அல்லது நீதிமன்றம்தானே முன்வந்து இதற்கு உத்தரவு வழங்க வேண்டும் என்று கலங்கினார்.  
 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *