– நடேசன் கைலாசம்
1887ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 14ஆம் நாள் இராமசாமி (முதலியார்), இலட்சுமணசாமி (முதலியார்) ஆகியோர் அடுத்தடுத்துப் பிறந்த இரட்டையர்கள்.
தந்தையார் குப்புசாமி (முதலியார்), தாயார் சீத்தம்மாள். குழந்தைகளுக்கு 2 வயது ஆகும்போது தாயர் இயற்கையெய்தினார். பிறகு தந்தையாரின் அரவணைப்பில் மழலைகள் வளர்ந்தனர். ஆனால், தந்தை தமது 52ஆவது வயதில் மறைந்தார். ஆகவே, இரட்டையர்கள் அவர்களது தமையனார் துரைசாமி (முதலியார்) பாதுகாப்பில் வளர்ந்தனர். இருவரும் சென்னை கிருத்துவக் கல்லூரியில் (அப்போது பாரி முனையில் இருந்தது.) சேர்ந்து அங்குள்ள “கைந்நஸ்’’ விடுதியில் படித்தனர்.
கல்வி கற்க தொடங்கிய நாள் முதல் இருவரும் ஒன்றாகவே படித்து வந்தனர். பிறகு மேற்படிப்பிற்காக வேறு வேறு கல்லூரிகளுக்கு செல்ல வேண்டியவர்களாகினர். மூத்தவர் இராமசாமி சட்டக் கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்று வழக்கறிஞராக சென்னை உயர்நீதி மன்றத்தில் பதிவு செய்துகொண்டார்.
இளையவர் இலட்சுமணசாமி சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எல்.எம்.அண்டு எஸ். பட்டம் பெற்று அரசு மருத்துவமனையில் தமது பணியைத் தொடங்கினார். இரட்டையர்கள் வேலூரை அடுத்த ஆற்காடு நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆற்காடு சகோதரர்கள் என்றழைக்கப்பட்டனர்.
ஆ.இராமசாமி (முதலியார்)
வக்கீல் தொழிலில் திறமையாக பணிபுரிந்து நல்ல வருமானம் ஈட்டிய நிலையில் சமூகத்தில் நீதி நிலைநாட்டப்படாததைக் கண்டு அரசியலில் ஈடுபட்டார். “ஜஸ்டிஸ்’’ கட்சியில் சேர்ந்து மக்களின் நலனுக்காகப் பாடுபட்டார். பிறகு, அரசால் பல உயர்பதவிகள் அளிக்கப்பட்டு அரிய சேவைகள் புரிந்தார். அவர் புகழ் உள்நாட்டில் மட்டுமில்லாது வெளிநாடுகளிலும் பரவியது. 1945இல் அய்க்கிய நாடுகள் சபை அமைந்தபோது, இந்தியாவின் சார்பில் கையெழுத்திட்டவர் திரு.இராமசாமி. அய்தராபாத் பிரச்சினையைக் கையாள அன்றைய உள்துறை அமைச்சர் பட்டேல் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்விட்ஜர்லாந்து சென்று அங்கு அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவின் சார்பில் வாதாடி அய்தராபாத் நகரத்தை இந்தியாவுடன் இணைத்த பெருமை அவருடையதே.
சென்னை மாநகரத்தின் தலைவராய் பொறுப்பேற்றவுடன், மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்தார்.
பிறகு மத்திய அரசால் பல உயர்பதவிகள் அளிக்கப்பட்டு சிறந்த பணி ஆற்றினார். பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து பெருமைப்படுத்தின. மேலும், இந்திய அரசு சார்பில் பத்மவிபூஷன் பட்டம் அளிக்கப்பட்டது.
இரயில் நிலையத்தில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார்க்கு தனித்தனியே சிற்றுண்டிச் சாலை வைத்துள்ளதை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் போராட்டத்தில் இறங்கியபோது மத்திய அரசின் வர்த்தக அமைச்சராய் இருந்த சர்.ஏ.இராமசாமி அவர்கள் இந்த வேறுபாட்டை அகற்ற (20.03.1941) உத்தரவிட்டார்.
இராமசாமியைப் பற்றி பெரியார் கூறியதாவது: “இந்த நாட்டிலேயே அவர் ஒரு பெரிய மேதாவி. அதை யாரும் மறுக்க முடியாது. அவர் நம் நாட்டிலேயே உயர்ந்த அறிவும், திறமையும் உள்ள கெட்டிக்காரர். ஜாதிவெறி, ஜாதி ஆணவம், ‘தங்கள் ஜாதியைத் தவிர மற்ற ஜாதியாரை ஒழித்துக் கட்டுவதுதான் தம் ஜாதியின் தர்மம்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிற அக்கிரமம் இல்லாது இருக்குமானால் சர்.ஏ.இராமசாமி முதலியார் இன்றைய தினம் இந்திய நாட்டிற்கு ஜனாதிபதியாக இருக்க வேண்டியவர்.’’
வர்ணாசிரமம் ஒழியவும், பெண்கள் உரிமை பெறவும், அனைத்து ஜாதியினரும் கோயிலுக்குள் செல்லவும் அயராது பாடுபட்டவர்.
திரு.ஆ.இலட்சுமணசாமி (முதலியார்)
இளையவர் இலட்சுமணசாமி மருத்துவராகி சென்னை எழும்பூர் தாய்_சேய் மருத்துவமனையில் சேர்ந்து சிறந்த பணியாற்றி வந்தார்.
அன்றைய ஆங்கில ஆட்சியில் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பதவி ஆங்கிலேயர்களின் ஏகபோக உரிமையாக இருந்தது. ஆனால், ஆங்கிலேயர்-களைக் காட்டிலும் பல மடங்கு திறமைசாலி-யான இலட்சுமணசாமி முதலியார் அப்பதவிக்கு ஆங்கில அரசாலேயே நியமிக்கப்பட்டார். மருத்துவக் கல்லூரியின் முதல்வராக சிறந்த பணியாற்றினார்.
ஆகவே, அவர் சேவை கல்வியின் மற்ற துறைகளிலும் தொடர, 1942ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 19ஆம் நாள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராகத் தேர்ந்-தெடுக்கப்பட்டார். அதிலிருந்து 1969ஆம் ஆண்டு வரை 27 ஆண்டுகள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக சிறந்த பணியாற்றினார்.
1946ஆம் ஆண்டு சென்னை சட்ட மேலவைக்கு கல்வியாளர்கள் தொகுதியிலிருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு சட்ட மேலவை தலைவராகி, அரசுக்கு நல்ல பல ஆலோசனைகளை வழங்கினார்.
1952ஆம் ஆண்டு ஒரு அநியாயம் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது. அதுவே அப்பன் தொழிலை மகன் செய்ய வேண்டும் என்று கூறி இராசகோபாலாச்சாரியார் 6000 பள்ளிகளை இழுத்து மூடிவிட்டார். பல இலட்சக்கணக்கான மாணவர்களின் படிப்பு பாழானது. இதை பெரியார், “குலக்கல்வித் திட்டம்’’ என்று சாடி பெரும் போராட்டத்தில் இறங்கினார். நாடு முழுவதும் கொந்தளித்தது.
அப்போது மேலவையின் தலைவராக இருந்த இலட்சுமணசாமி, “இந்த கல்வித் திட்டத்தால் பெரும்பாலான சிறார்கள் படிப்பை இழந்துவிடுவர். பெண்களும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் பலர் அப்பன் தொழிலை செய்யாது கல்வி கற்கின்றனர். அவர்கள் எதிர்காலம் கல்வியில்லாமல் கேள்விக்குறியாகிவிடும்’’ என்ற தமது எதிர்ப்பைப் பதித்தார்.
ஆச்சாரியாருக்கு எதிர்ப்பு வலுக்கவே தமக்கு உடல்நலம் சரியில்லை என்று சாக்குபோக்குக் கூறி பதவியை விட்டு ஓடிவிட்டார். ஆனால், துரத்தப்பட்டார் என்பதே உண்மை!
இலட்சுமணசாமி இந்தியாவில் பல உயர்பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அய்க்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார்.
பல நாட்டு பல்கலைக்கழகங்கள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்தன. இந்திய அரசும் அவருக்கு 1963இல் பத்மவிபூஷன் பட்டம் வழங்கி பெருமைப்-படுத்தியது.
இலட்சுமணசாமி சிறந்த கட்டிடக் கலை நிபுணரும் ஆவார். சென்னை சேத்துப்பட்டில் இருக்கும் பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம், அங்குள்ள பட்டமளிப்பு மண்டபம் (இப்போது தொலைதூரக் கல்வி இயக்கமும், பல பெரிய அரசு விழாக்களும் அங்கு நடத்தப்படுகிறது.) ஆகியவைகள் இலட்சுமணசாமியால் கட்டப்-பெற்றன.
சென்னை தரமணியில் இயங்கிவரும் அய்.அய்.டி. நிறுவனமும் இலட்சுமணசாமி முயற்சியால் கொண்டுவரப்பட்டு இன்றும் உலகளாவிய புகழ்பெற்று வருகிறது. அந்நிறு வனத்தில் இலட்சுணசாமி முதலியாரின் வெண்கல சிலை நிறுவப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், இன்று பார்ப்பன ஆதிக்கத்தில் சிக்கிச் சீரழிகிறது.
அகில இந்திய பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு இந்தியில் எழுதப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, ஆங்கிலத்தில் தென்னிந்திய மக்கள் எழுதும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தவர் இவர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்த இருவருக்கும் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. ஸீ