உலகே வியந்து நோக்கும் ஒப்பிலா சாதனையாளர் உஜிசிக்

செப்டம்பர் 01-15

பிறந்தபோதே இரு கைகளும் இல்லை, கால்களும் இல்லை. இவரால் வாழ முடியுமா? முடியாது என்றே எவரும் சொல்வர். ஆனால், வாழ்ந்து காட்டியது மட்டுமல்ல, சாதனைகள் பல செய்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

ஆஸ்திரேலியாவில் வசித்துவந்த ஒரு தம்பதியினருக்கு 1982ஆம் ஆண்டில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இரண்டு கைகளும் இல்லாமல், இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்தது. பிறந்த குழந்தையைப் பார்த்துக் கண்ணீர்விட்டு அழுத பெற்றோர், தங்கள் மனதைத் தேற்றிக்கொண்டு அவனுக்கு நிக் உஜிசிக் என்று பெயர் வைத்தனர்.

அந்தக் குழந்தை¬க்கு கால்கள் இல்லாத நிலையில் உடலை அசைத்து நிமிர்ந்து நடக்கக் கற்றுக்கொடுத்தனர். இடுப்போடு ஒட்டி இருந்த இடது பாதத்தில் ஒட்டியபடி இருந்த 2 விரல்களையும் அறுவை செய்து பிரித்தனர். அந்த விரல்களுக்கு இடையே பென்சிலைப் பிடித்து எழுதுவதற்கு பயிற்சிக் கொடுத்தனர். வாயினால் ஓவியம் வரையவும் கற்றுக்கொடுத்தனர்.

பள்ளியில் சேர்க்கச் சென்றபோது, எந்தப் பள்ளியும் அவனைச் சேர்த்துக்கொள்ளத் தயாராக இல்லை. கைகளும் கால்களும் இல்லாத ஒரு குழந்தை, சாதாரணப் பள்ளிகளில் படிப்பதை ஆஸ்திரேலிய சட்டம் அனுமதிக்க-வில்லை. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து சட்டத்தையே மாற்றவைத்து நிக் உஜிசிக்கை பள்ளியில் சேர்த்தனர் பெற்றோர்.

அவனோடு பழகுவதற்கு நண்பர்கள் முன்வரவில்லை. கிண்டலும் கேலியும் உச்சத்தைத் தொட்டபோது, குளிக்கும் தண்ணீர் தொட்டியில் தற்கொலைக்கு முயன்ற நிக் உஜிசிக்கை அவரது பெற்றோர் காப்பாற்றினர். தங்கள் மகனுக்குத் தன்னம்பிக்கைக் கதைகளை எடுத்துக் கூறினர். நிக் உஜிசிக்கின் தாய், ஒரு செய்தித்தாள் கட்டுரையைப் படித்துக் காட்டினார். நிக் உஜிசிக் போலவே உடல் சவால்-கொண்ட ஒருவர் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராகப் பரிணமித்தது பற்றிய கட்டுரை அது. அந்தச் செய்தி, நிக் உஜிசிக் மனதுக்குப் பெரும் நிம்மதியைக் கொடுத்தது. தான் தனி ஆள் இல்லை என்றும், தன்னைப் போன்ற மனிதர்களும் சாதனை படைக்க முடியும் என்றும் முதல்முறையாக நம்பத் தொடங்கினார்.

நிக் உஜிசிக்கின் உள்ளத்தில் தன்னம்பிக்கை வந்தது. அவரது குரல் உயர்ந்தது. நகைச்சுவையாகப் பேசினார். சக மாணவர்கள் அவர் மீது அன்பு காட்டினர். ஆசிரியர்கள் பரிவு காட்டினர். வகுப்பு மாணவர் தலைவரானார் நிக் உஜிசிக். பின்னர் பள்ளி மாணவர் தலைவரானார்.

நிக் உஜிசிக்கின் பெற்றோர் பணி நிமித்தம் காரணமாக அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்துக்கு இடம் பெயர்ந்தனர். அங்குள்ள பள்ளியில் சேர்ந்த நிக் உஜிசிக், அங்கேயும் பள்ளி மாணவர் தலைவராக ஆனார். கல்லூரியில் சேர்ந்தபோது அங்கும் கதாநாயகனாகக் கலக்கினார். கணக்கியல் துறையில் பட்டம் பெற்றார். ஏழை மாணவர்களுக்கு உதவு-வதற்காக நிதிதிரட்டும் நிகழ்ச்சிகள் நடத்தினார்.

இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாத நிக் உஜிசிக், ஸ்கேட்டிங் செய்கிறார்; நீச்சலடிக்கிறார்;  கோல்ப் விளையாடு-கிறார்; நீர்ச்சறுக்கு ஆடுகிறார்; செயற்கை கை பொருத்தி கார் ஓட்டுகிறார்; தனது பாதத்தில் ஒட்டியிருக்கும் 2 விரல்களை ‘சிக்கன் ட்ரம்ஸ்டிக்’ என்று பட்டப்பெயர் வைத்து அழைக்கிறார். அந்த இரண்டு வில்களால் எழுதுகிறார். நிமிடத்துக்கு 45 வார்த்தைகள் டைப் செய்கிறார் எலெக்ட்ரானிக் ட்ரம்ஸ் இசைக்கிறார்; பந்துகளைத் தூக்கி வீசுகிறார்; உள்ளம் உறுதியாய் இருந்தால் உலகில் எதையும் சாதிக்கலாம் என்பதை எல்லா வகையிலும் நிரூபிக்கிறார். தன்னம்பிக்கையைக் கைகளா-கவும், கால்களாகவும் கொண்டு உயர்ந்து நிற்கும் நிக் உஜிசிக் மீது அன்புகொண்ட கானே மியாகரா என்ற பெண் அவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்-களுக்கு இப்போது 2 குழந்தைகள்.

விரக்தியின் எல்லைவரை சென்று, பின் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்ட நிக்உஜிசிக், இப்போது மற்றவர்களுக்குத் தன்னம்பிக்கையைக் கற்றுத் தருகிறார். சுய முன்னேற்றப் பயிற்சி வகுப்புகள் எடுப்பது, புத்தகங்கள் எழுதுவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றுவது போன்றவற்றையே வாழ்க்கையாகவும், வருமான வாய்ப்பாகவும் மாற்றிக்கொண்டார். இதுவரை 58 நாடு-களுக்குப் பயணம் செய்திருக்கிறார். 60 லட்சம் பேருக்குத் தன்னம்பிக்கைப் பயிற்சி அளித்திருக்கிறார்.

என்னாலேயே இவ்வளவு சாதிக்க முடிகிறது என்றால், உங்களால் எவ்வளவு முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள் என்று நம்பிக்கை ஊட்டுகிறார்.

இயற்கையாய் வந்த சவால்களை எதிர்-கொண்டு, சாதனையாளராக உயர்ந்து நிற்கும் நிக் உஜிசிக், காலையில் கட்டிலில் இருந்து குதித்து இறங்குவது, சோபாவில் குதித்து ஏறி அமர்வது, புத்தகத்தை எடுத்துப் படிப்பது, குறிப்பு எழுதுவது, போனை எடுத்துப் பேசுவது என எத்தனையோ வேலைகளை, தானே செய்கிறார்.

நான்  தோல்வி அடைந்தால் 1,000 முறை முயற்சிக்கிறேன். உத்வேகத்துடன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வது எனது பண்பாகி-விட்டதால், எனக்குக் கைகளும் கால்களும் இல்லை என்பதே மறந்துபோகிறது. கவலை-யில்லாமல் மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என்கிறார்.

கூலிக்குக் கொலை செய்து பிழைக்கும் இளைஞர்கள் இந்த மனிதரை எண்ணிப் பார்த்து உழைத்து வாழவேண்டும்!

தன்னால் முடியுமா? என்று தளர்வோர் இவரைப் பார்த்து உறுதிகொள்ள வேண்டும். பெற்றோர் ஒவ்வொரு வீட்டிலும் தவறாது இவர் படத்தை வைத்து பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *