தமிழ் திரைஉலகின் தன்னிகரில்லா சாதனை!
எளிய – வலிய – யதார்த்த படைப்பு!
இந்திய திரைத்துறையின் எதிர்கால திசைகாட்டியாய் இயக்குநர் ராஜூ முருகனை எல்லோர் இதயத்திலும் இடம்பெறச் செய்து விட்டதோடு, இயக்குநர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சியையும் இப்படம் ஏற்படுத்தி-யுள்ளது.
கழிப்பறை கட்டாயம் வேண்டும் என்ற கருத்துக் களத்தில் மலர்ந்து மணக்கும் புரட்சிப் பூக்கள் இதில் ஏராளம்! கிராமத்து வெகுளி இளைஞன் சோமசுந்தரத்தின் காதலி ரம்யா பாண்டியன். வலிய வலிய நெருங்கி நெருங்கி இவன் தன் காதலை வெளிப்படுத்த, அவளோ விருப்பம் இருந்தும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் விலகி விலகிச் செல்கிறாள். இறுதியில் தன் விருப்பத்தையும் வெளிப்படுத்தும் அவள், கல்யாணம் செய்ய வேண்டும் என்றால் வீட்டில் கழிப்பறை வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறாள்.
அரசு நிதி உதவியுடன் கழிப்பறை கட்ட மேற்கொள்ளப்படும் முயற்சியில் நடக்கும் ஊழல்கள், போலி விளம்பரங்கள், மோசடிகள், ஏமாற்றுகள் என்று கதை விரிகிறது. இடையிடையே எழுச்சியும், உணர்ச்சியும் மிக்க போராட்ட விதைகள் விதைக்கப்படுகின்றன. போராட்டங்களை மிக நேர்த்தியாக உயிரோட்டமாக, உண்மையாக, இயல்பாய், ராமசாமி முன்னெடுத்துச் செல்வது மக்கள் உள்ளப் பதிவுக்கும், பாதிப்பிற்கும் பயன்-படுகிறது.
இளம் வயது கணவனை மதுவுக்கு காவு கொடுத்த கொதிப்பில், அரசு முறை கேடுகளுக்கு எதிராய் போர்க்குரல் எழுப்பும் காயத்ரி நம்மைக் கவர்கிறார். செல்பேசி, இணைய பயன்பாடுகள் அருமை.
அரசின் கழிப்பறைத் திட்டத்தில் காதல் வாழ்வைக் கைகூடச் செய்ய, கடுமையாய் முயலும் சோமசுந்தரத்திற்கு கழிப்பறை பீங்கான் பொருட்கள் மட்டுமே கிடைத்த நிலையில், தற்செயலாய் அவர் வீட்டில், முழுமையாய் கழிப்பறைக் கட்டும் வாய்ப்பு வர, முக்கால் சுவற்றோடு அது நிற்க, அன்றைய மழையில் சுவர் சாய்ந்து ரம்யா மேல் விழ, அவர் வாழ்வே வெறுமையாக, அதன்பின் நிகழ்பவையே கதையின் மய்ய அச்சாக அமைந்து, காண்போர் கவனத்தை ஈர்ப்பதோடு, உள்ளத்தையும் உருக்கி, உணர்ச்சி கொள்ளச் செய்து, படத்தின் சாதனை, வெற்றி, தனித்தன்மைக்கு காரணங்களாய் அமைகின்றன.
விரக்தியும், வேதனையும், மனைவியின் கோமா நிலையும் அதற்குக் காரணமானவர்கள் மீது கோபம் கொள்ளச் செய்ய, தன்னை மக்கள் ஜனாதிபதியாய் அறிவித்துக் கொண்டு, குடையுடன் கூடிய மொப்பட்டில் பவனிவந்து வித்தியாசமாய் தூள் கிளப்பும் அவர், மனைவியைக் கருணைக் கொலை செய்ய நீதிமன்றங்களில் போராடும் காட்சிகள் மூலமும் உள்ளத்தை உருக்குகிறார்.
தருமபுரிக்கு அருகில் உள்ள கிராமத்தில் நிகழுகின்ற இக்கதைப் பின்னல், உயிரோட்டத்-துடன் உண்மையான நிகழ்வுகளின் மூலம் உணர்வூட்டுவது; ஊழலுக்கு, மோசடிக்கு, சதிகளுக்கு, கொள்ளைகளுக்கு, கொடுமைகளுக்கு எதிராய் இயல்பாய் கொதித்தெழுவது; அதற்கேற்ப செயற்கையில்லா இயற்கையாய், எளிமையாய் அதே நேரத்தில் வலிமையாய் அமைந்த உரையாடல்கள், கேலி கலந்த கிளர்ச்சியை, ஆவேசம் நிறைந்த உணர்ச்சியை, நியாயம் தேடும் வேகத்தை உருவாக்குவதில் முழு வெற்றி பெற்றுள்ளன.
“பாப்பிரெட்டிப்பட்டி பவன்ல இருந்து வந்த பெட்டிஷன் என்னாச்சு!’’
“ஒரு கண்ணு காந்தி, இன்னொரு கண்ணு பகத்சிங்… எனக்கு கோபம் வந்துருச்சி… பகத் சிங்கை அவுத்துவுட்டுவேன்!’’ போன்ற இயல்பான வசனங்கள் படத்தின் வெற்றிக்கு வழி வகுப்பதோடு, பாராட்டி விருது கொடுக்கவும் தூண்டுகின்றன.
பவா செல்லதுரை தன் நடிப்பாலும், பேச்சாலும், பாவங்களாலும் நெஞ்சில் நிலைக்கிறார்.
ராமசாமி உச்சக் காட்சியில் உணர்ச்சிவயப்-பட்டு பேசுபவை, உள்ளத்தை உருக்குவதாயும், உணர்ச்சியும் எழுச்சியும் கொள்ளச் செய்வதாயும் அமைந்து, படத்தின் இலக்கினை எட்ட உதவுகின்றன.
பொருத்தமான இடத்தில் தந்தை பெரியார் சிலையைக் காட்டுவதன் மூலம் உணர்த்த வேண்டிய உள்ளடக்கங்களை உணர்த்திய சிறப்பு பாராட்டுக்குரியது.
சில பெரிய பட்ஜெட் படங்களில், அதிரடிக் காட்சி ஆடம்பரக் காட்சி மூலம் சில இயக்குநர்கள் காட்டும் விருவிருப்பை, எளிய காட்சிகள், சாதாரண நடிகர்களைக் கொண்டு, குறைந்த பொருட்செலவில், உழைப்பையும், திறமையையும், நுட்பத்தையும் ஏராளமாய் தந்து விருவிருப்பு, பரபரப்பு, எதிர்பார்ப்பு என்று ஆர்வம் குறையாது படத்தைக் கொண்டு செல்லும் ராஜூ முருகனின் ஆற்றலும், அறிவு நுட்பமும், சமூகப் பொறுப்பும், துணிவும் எல்லாதரப்பு மக்களின் ஏகோபித்த பாராட்டை, வாழ்த்தை அள்ளிக்குவிக்கும் என்பதில் அய்யமில்லை.
கிராமத்து சந்து பொந்துகளில் ஒதுக்கிடங்-களில், அலுவலகங்களில், இயற்கைச் சூழலில் என்று எல்லா இடங்களிலும் தன் முத்திரையை முழுமையாய் பதித்து படத்திற்கு சிறப்பு வலு சேர்த்துள்ளார் ஒளிப்பதிவாளர் செழியன்.
யுகபாரதியின் “ஏல ஏல குடிசையில…’’ ரமேஷ் வைத்யாவின் “செல்லம்மா….’’ பாடல் வரிகள் ஷான் ரோல்டனின் இசையில் இனிமையாய், இதமாய், உள்ளத்தைக் கவர்கின்றன.
ஜனாதிபதி உருவ ஒற்றுமையில் ஒரு நடிகரைத் தேர்வு செய்த திறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
மக்கள் நலனுக்கு, உரிமைக்கு எழுச்சிக்கு, கிளர்ச்சிக்கு இனிவரும் தலைமுறையை உணர்ச்சியூட்டி கொண்டு செல்ல இப்படம் முழுமையாய் பயன்படும்.
இவ்வளவு இளம் வயதில் இத்தனை சமூகப் பொறுப்பும், ஆற்றலும், நுட்பமும் உடைய ராஜூமுருகன் மக்கள் உள்ளத்தில் என்றும் நிலையான இடத்தை இப்படத்தின் மூலம் பெற்றுவிட்டார் என்பதோடு இப்படமும் பெற்றுவிட்டது. ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
– நுண்ணோக்கி