அண்ணா அவர்கள் அமெரிக்கா சென்று சிகிச்சை பெறவேண்டிய நிலையில் விமானத்தில் புறப்படும் முன் அய்யா அண்ணாவை சந்தித்தார். விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என்று அண்ணா – அய்யாவை அப்போது கேட்டுக் கொண்டார். அன்று உணவு முடித்துச் சிறிது படுக்கையில் ஓய்வு எடுக்கும் பழக்கம் பொதுவாக இல்லை அய்யாவுக்கு-என்றாலும் கூட, மனச் சோர்வுடன் காணப்பட்ட அய்யா அவர்கள் ஏதோ ஒன்றை இழந்தவர் போல மிகுந்த கவலையுடன் கட்டிலில் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டவராக அமர்ந்திருந்தார்கள்.
விடுதலை அலுவலகத்தில் (சில அடிகள் தூரத்தில்) எனது அறையில் பணிபுரிந்த என்னை அய்யா அழைக்கிறார் என்ற தகவல் வந்தவுடன் சென்றேன்.
“ஏம்பா, அண்ணா விமானம் புறப்படுவது இன்று எத்தனை மணிக்கு?” என்று என்னைக் கேட்டார். நான் (பகல்) இரண்டரை மணிக்கு என்றேன். தமது கடிகாரத்தைப் பார்த்து 2.15 மணி. நாம் விமான நிலையம் சென்று அண்ணாவைப் பார்த்து வரலாமே என்றார். அவரது பாசமிகுந்த தவிப்பினை அருகில் இருந்த என்னாலும், புலவர் இமயவரம்பனாலும் உணர முடிந்தது!
சற்றுத் தயங்கிக் கொண்டே நான் அய்யா அவர்களிடம், “சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் போய்ச் சேர எப்படியும் 35 முதல் 45 மணித்துளிகள் ஆகும். நாம் போய்ச் சேருவதற்குள் விமானம் புறப்பட்டுப் போய்விடக் கூடும்; அய்யா! நம்மால் அண்ணாவைப் பார்க்க இயலாமல் ஆகிவிட்டால், என்ன செய்வது?” என்று கூறினேன்.
எந்த ஒரு சிறு முடிவு எடுத்துவிட்டாலும், எளிதில் அதை மாற்றிக் கொள்ளாதவர் அய்யா என்பது எங்களுக்கு மிக நன்றாகத் தெரியும், என்றாலும் அவர்கள் அங்கே போய் ஏமாற்றதிற்கு இரையாகக் கூடாதே என்பதற் காகத் தான், இப்படிக் குறுகிய கால அவகாசம் பற்றி அய்யாவுக்கு நினைவூட்ட வேண்டிய நிலைக்கு நான் ஆளானேன்!
அய்யா அவர்கள் உடனே, “அதனால் என்ன? அண்ணாவைப் பார்க்க முடியாவிட்டால் என்ன? அவர் விமானம் புறப்பட்டுச் செல்லும் அல்லவா? அதைப் பார்த்து வருவோமே” என்றார்!
அதில்தான் எத்துணை பாசப் பிழியல்கள்! குழந்தைத்தன கொஞ்சல் உணர்வுகள்! அடடா! நெகிழ்ச்சியால் தாக்குண்டோம், உடனிருந்த நாங்கள். அவசரமாக அய்யா வேனை எடுக்கச் சொல்லி, அய்யாவையும், தள்ளுச் சக்கர நாற்காலி உட்பட ஏற்றி, புறப்பட்டோம். ஓட்டுநருக்கு மிகமிக வேகமாகப் போக நாங்களே கட்டளை’யிட்டோம். வழமைக்கு மாறாக!
போக்குவரத்து விதிகளைக் கூடத் தற்காலிக மாகப் புறந்தள்ளி அய்யா ‘வேன்’ விமானம் போல பறந்து சென்று மீனம்பாக்கத்தினை அடைந்தது. விமானம் எதுவும் மேலே பறக்கவில்லை என்பதை வேனிலிருந்தே உறுதி செய்து கொண்டே போகிறோம்.
அப்பாடி! அண்ணா புறப்படவில்லை. மணி 2.45 அப்போது. சில மணித்துளிகளில் ஒரு காரில் அண்ணா, (முன் இருக்கையில் கலைஞர்) வந்தார். இருமருங்கிலும் இருந்தோரை நோக்கிக் கையாட்டி வந்த அவர், அய்யாவை அங்கு எதிர்பார்க்கவில்லை. அய்யாவும், பலருடன் ஒருவராக சக்கர நாற்காலியில் அமர்ந்து இருப்பதைக் கண்டவுடன், வண்டியை நிறுத்தச் சொன்னார். ஏன் கதவைத் திறந்து இறங்கும் உணர்ச்சிக்கும் ஆளானார் அண்ணா -_- கையெடுத்துக் கும்பிட்ட நிலையில்! அதைப் பார்த்த அய்யா, ஓங்கிய குரலில், “தயவு செய்து நிறுத்தாதீர்கள், செல்லுங்கள்’’ என்று கூறினார். அனைவருடைய கண்களும் கண்ணீர் அருவி களைக் கொட்டின!
– கி.வீரமணி,
(அய்யாவின் அடிச்சுவட்டில்… பாகம்-1)