செய்யக் கூடாதவை

ஆகஸ்ட் 16-31

தனிநபர் வளர்ச்சிக்குப் பெரும் தியாகம் கூடாது

ஒரு குடும்ப வளர்ச்சி, ஒரு தனிநபர் வளர்ச்சி, பாதுகாப்பிற்கு அளவிற்கு அதிகமான முக்கியம் கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்வது பெரும்பான்மையினரின் நலனை, பாதுகாப்பைப் பாதிக்கும். தலைவர் ஒருவர் வருகிறார் என்பதற்காகச் சாலைகளை முடக்குதல், மக்களை மணிக்கணக்கில் காக்கச் செய்தல், அளவிற்கு அதிகமான காவலர்களை அமர்த்துதல் கூடாது. ஆடம்பரத்திற்காகவும், போலி மரியாதைக்காகவும் இவற்றைச் செய்யவும் கூடாது.

ஒருவருக்காகக் கவனம் முழுக்கச் சென்றால் மற்றவர்களை அது வெகுவாகப் பாதிக்கும், எனவே, அந்த ஒருவருக்கு எப்படிச் செய்தால் இவற்றைக் குறைக்கலாம் என்று திட்டமிட்டு குறைவான அளவில் இவற்றைச் செய்து, மற்றவர்களுக்கு இவற்றை மடைமாற்றுவதே சரியான அணுகுமுறை, சரியான நிருவாகத்திற்கு உகந்த செயல்.

பிறருக்கு விளங்காமலும் கேட்காமலும் பேசக்கூடாது

நாம் பேசுவது நம் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கவே ஆகும். அப்படியிருக்கும்போது, பிறருக்கு விளங்காமல், கேட்காமல் பேசுவது சரியல்ல. நாம் பேசுவதைத் தெளிவாக, புரியும் வகையில், நிதானமாக, அளவான குரலில், அன்போடு, இனிமையாகப் பேச வேண்டும்.

மாறாக, படபடவென்று பதற்றத்துடன் செய்திகளைச் சொல்லுதல், வாய்க்குள் ஓசையின்றிப் பேசுதல், அளவிற்கு அதிகமாகக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தல் போன்றவை கூடாது. கேட்பவர் மனம் நோகாது, பாதிக்காது, மகிழும் அளவிற்குப் பேச வேண்டும்.

நம் மனம் கவர்ந்தவற்றை உடனே பாராட்டத் தவறக்கூடாது

பிறர் திறன், கலை, சாதனை நம்மை ஈர்க்கும்போது, நம்மைப் பெரிதும் கவரும்போது அதை உடனே வெளிப்படுத்தி பாராட்ட வேண்டும். பாராட்டுவதை அப்போதே செய்வதுதான் பாராட்டப்படுவோர்க்கும் ஊக்கத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

பாராட்டுவது என்பது ஒரு சிறந்த பண்பு. பாராட்டுவதால் பாராட்டுகின்றவர்க்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால், பாராட்டப்-படுபவர்க்க்குப் பெரிதும் நன்மை தரும். எனவே, பாராட்டத் தயங்கக் கூடாது. ஆனால், அளவிற்கு அதிகமாக, போலியாக, காரியம் சாதிக்க, சுயநலத்திற்காகப் பாராட்டுவது கூடாது. அது நம்மைப் பிறர் இழிவாக எண்ண வழிவகுக்கும்.

அப்பா கண்டிக்கும்போது அம்மாவும் கண்டிக்கக் கூடாது

பெற்றோரில் ஒருவர் பிள்ளையிடம் கடுமையாக நடந்து கொள்ளும்போது, இன்னொருவர் பிள்ளையை ஆறுதலாக நடத்த வேண்டும். இருவரும் ஒரே நேரத்தில் கடுகடுத்-தால் பிள்ளை தவித்துப் போய் திகைத்து நிற்கும். அதன் உளநிலை மிகவும் பாதிக்கப்படும். இந்நிலைத் தொடர்ந்தால் பிள்ளைகள் பெற்றோரை வெறுக்கும்.

பிள்ளைகளைக் கண்டிப்பது தண்டனையாக இருக்கக் கூடாது. அதைத் திருத்தும் நோக்கத்துடன் இருக்க வேண்டும். தந்தை கண்டிக்கும்போது, தாய் குழந்தையைத் தனியே அழைத்து அப்பா நல்லதுக்குத்தானே கண்டிக்கிறாங்க அழக்கூடாது. இனி தப்பு செய்யாதே! அப்பாகிட்ட வருத்தம் சொல் என்று பேசினால் குழந்தை திருந்தி நடக்கும்.

கணவன் மனைவி மனம்விட்டுப் பேசத் தயங்கக்கூடாது

கணவன் மனைவி இருவரும் ஒன்றுக்குள் ஓன்று என்று வாழ வேண்டியவர்கள். எனவே, மனம்விட்டுப் பேசினால் அவர்களுக்குள் வம்பே வராது. மனம்விட்டுப் பேசுவது என்றால் மற்றவர்மீது தனக்குள்ள வெறுப்பை, வருத்தத்தை உள்ளது உள்ளவாறு அப்படியே கொட்டுதல் அல்ல. தனக்குள்ள ஆதங்கத்தை, குறையை, எதிர்ப்பார்ப்பை, உணர்வை அன்போடு, நெருங்கியமர்ந்து கணவன் மனைவி சீண்டல்களைச் செய்து கொண்டே விளையாட்டாக வெளிப்படுத்தினால், எவ்வளவு பெரிய சிக்கலான செய்திகளைக் கூடச் சிரித்துக் கொண்டே சொல்லிவிட முடியும்.

இதற்கு மாறாக, நேரம், காலம், சூழல் பார்க்காது மற்றவர் மனநிலை அறியாது பரபரப்பா, படபடப்பாக உணர்ச்சிகளைக் கொட்டினால், மற்றவரும் உணர்ச்சி வசப்பட்டுப் பேச சிக்கல் சண்டையாக மாறி, விரிசல் விலகல் என்று விரும்பத் தகாத நிகழ்வுகள் நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *