தடகள வீரர்களை உருவாக்கும் தன்னலமற்ற தமிழர்

ஆகஸ்ட் 01-15

செயின்ட் ஜோசப் ஸ்போர்ட்ஸ் அக்காடமியின்  மூலம் ஒலிம்பிக் கனவுகளுடன் ஏராளமான தடகள வீரர்களை உருவாக்கி வருகிறார் மத்திய சுங்க மற்றும் கலால் வரித்துறை உதவி ஆணையர் திரு. நாகராஜ். அவர் தம்முடைய பணிகள் குறித்துக் கூறுகையில்,“அம்மா ஒரு சத்துணவு ஆயா. ஊர் பிள்ளைகளுக்குச் சமைத்துப் போட்ட அம்மாவால், தன் சொந்தப் பிள்ளைகளின் பசியைப் போக்க முடியவில்லை. வீட்டில் கடுமையான வறுமை. எனக்கோ விளை-யாட்டின் மீது அவ்வளவு ஆசை.

ஆனால், போட்டியில் கலந்துகொள்ள ஊரில் இருந்து தஞ்சாவூருக்குச் சென்று வரக்கூட காசு இருக்காது. அத்லெட் ஷு என எந்த அடிப்-படை வசதியும் அப்போது தெரியவில்லை. கிடைக்கவில்லை. இருப்பதை வைத்து உயரம் தாண்டுதலில் ஜூனியர் பிரிவில் தேசிய அளவில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். என் வறுமையையும் ஆர்வத்தையும் பார்த்த உடற்கல்வி ஆசிரியர் சண்முகசுந்தரம் என்னை முழுமையாக தத்தெடுத்துக் கொண்டார். அவர்தான் சென்னைக்கு பிபிஎட், படிக்க என்னை அனுப்பி வைத்தார். நீ படிச்சு பாஸ் பண்ணிட்டு வா, என் வேலையை ரிஸைன் பண்ணித் தர்றேன். அதில் நீ சேர்ந்துக்கலாம் என்று அவர் சொன்ன வார்த்தைகள் இப்போதும் தினமும் நினைவில் வந்து போகின்றன.

படித்து முடித்ததும் கலால் துறையில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை கிடைத்து சேர்ந்தேன். ஆனாலும், என் அத்லெட் ஆர்வம் தணியவில்லை. அண்ணா நகரில் ஒரு தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன்.

தினமும் வீட்டில் இருந்து கிளம்பி மைதானத்துக்குச் சென்று பயிற்சி கொடுத்துவிட்டு அப்படியே அலுவலகம் சென்று, மாலை மீண்டும் மைதானத்துக்குச் சென்று விடுவேன். இரவு 9 மணிக்கு வீட்டுக்குச் சென்று படுக்கையில் விழுந்-தால், மறுநாள் மீண்டும் மைதானத்தில்-தான் பொழுதுவிடியும். 24 வருடங்களாக இதுதான் என் தினசரி வாழ்க்கை. உறவுக்காரர்களின் திருமணம், விசேஷ நிகழ்ச்சிகள் எதற்கும் சென்றது இல்லை. ஒரு சினிமாகூடப் பார்த்தது இல்லை. இந்தப் பையன்கள்தான் என் உலகம். ஒருநாள் நான் வராமல்போனால்கூடச் சோர்ந்து விடுவார்கள்.

89ஆம் ஆண்டு என்னிடம் பயிற்சி பெற்ற சினேகா பிரின்சி ஹெப்டத்லான் போட்டியில் தேசிய அளவில் பதக்கம் வென்றாள். கே.என்.பிரியா 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் சர்வதேசப் பதக்கம் வென்றாள். அதுதான் தொடக்கம். பிறகு வரிசையாக என் மாணவர்கள் தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பங்கெடுத்தார்கள். பதக்கம் வென்றார்கள். இப்போது இவர்களில் 24 பேர் சர்வதேசப் போட்டியாளர்கள். அதில் 14 பேர் சர்வதேசப் பதக்கம் வென்றவர்கள். 100க்கும் அதிகமானோர் தேசிய அளவில் பதக்கம் வென்றிருக்கிறார்கள்.

இவர்கள் ஒவ்வொருவரையும் நான் தமிழ்நாடு முழுக்கத் தேடித்தேடிச் சேர்த்-தேன். தமிழ்நாட்டில் எங்கேனும் விளையாட்டு விழாக்கள் நடந்தால், அங்கு சென்று-விடுவேன். மாநிலம் முழுக்க உடற்கல்வி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி-களில் இருக்கும் திறமையான மாணவர்-களைப் பற்றி என்னிடம் சொல்வார்கள். தகுதியான மாணவர்களைப் பயிற்சிக்கு என சென்னைக்கு அழைத்து வருவது சாதாரணமான வேலை இல்லை. ஏழைக் கிராமத்துப் பெற்றோர்களிடம், ‘உங்க பையன் நல்லா ஓடுறான். என்கிட்ட கொடுங்க., சென்னையில் படிக்க வெச்சு விளையாட்டு சொல்லித் தர்றேன், நல்லா வருவான்’ என்று சொன்னால், ஆரம்பத்தில் மறுப்பார்கள். திட்டுவார்கள். ஏதேதோ சமாதானம் சொல்லி, உங்களுக்கு என்ன? பையன் நல்லாப் படிக்கணும், காலேஜ் போகணும், வேலைக்குப் போகணும், அவ்வளவுதானே? நான் பார்த்துக்குறேன்… விடுங்க என்று பொறுப்பேற்று அழைத்து வருவேன். ஓரிரு வருடங்கள் கழித்து, பையன் போட்டிகளில் மெடல் அடித்ததும், அந்த ஏழைப் பெற்றோரின் முகத்தில் மகிழ்ச்சி அரும்பும். புதுக்கோட்டை சாந்தி அப்படி வந்தவர்தான்.

இந்த மாணவர்கள் யாரிடமும் கட்டணம் என்று எதுவும் வாங்குவது இல்லை. மாசம் 50 ரூபாயைக் கட்டணமாக நிர்ணயித்தாலும், கிராமங்களில் வயல்களில் களை பறிக்கும் ஏழை மக்களுக்கு அது ஒருநாள் கூலி. அதனால் யாரிடமும் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்-பதைக் கொள்கையாக வைத்துக் கொண்டேன். 2000 வரை மாணவர்-களுக்குப் பயிற்சி கொடுப்பதற்கான இடவசதிக்கு மிகவும் சிரமப்பட்டோம். பிறகு, பச்சையப்பா பள்ளி அறக்கட்டளை இந்த மைதானத்தை வழங்கியது. இதற்கு 8000 ரூபாய் வாடகை. சோழிங்கநல்லூர் செயின்ட் ஜோசப்ஸ் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குநர் டாக்டர். பி.பாபு மனோகரன் இந்த வாடகையை வழங்குவ-தோடு, 37 லட்ச ரூபாய் செலவழித்து, புதர்க் காடாகக் கிடந்த இந்த இடத்தை மைதானமாக மாற்றிக் கொடுத்து விடுதி, பேருந்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். எங்கள் ‘பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ உருவானது இப்படித்தான். இதுவே இந்தியாவின் முதல் தனியார் தடகள ஸ்போர்ட்ஸ் அகாடமி. அரசை மட்டுமே நம்பினால் எந்தக் காலத்திலும் விளையாட்டுத் துறை முன்னேறாது. இப்படி-யான தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமிகள் பெருமளவில் உருவாக வேண்டும்.

இன்று சென்னையை விட கிராமங்களில் இளைஞர்கள் விளையாட்டில் அதிகம் அக்கறை காட்டுகிறார்கள் என்றால் அது மிகையல்ல. அதனால்தான் நான் அதிகமாக கிராமங்களில் நடக்கும் போட்டிகளைப் பார்க்க போய்-விடுகிறேன். அங்கே இருந்து திறமையான சிறுவர், சிறுமிகளை சென்னைக்கு அழைத்து வந்து, சிறந்த முறையில் பயிற்சி கொடுத்து, அவர்களைப் பெரிய விளையாட்டு வீரராகவும், வீராங்கனைகள் ஆக்கவும் முயற்சிக்கிறேன். இன்று என்னிடம் பயின்ற பலர் மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கு கொண்டு வென்றிருக்கிறார்கள். அதற்கு பலர் உதாரணமாக இருக்கிறார்கள். பிரேம்குமார் மற்றும் காயத்ரி இருவரும் முதலமைச்சரின் விளை-யாட்டு திட்டத்தில் தத்தெடுக்கப்-பட்டிருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல், 26 சர்வதேச விளையாட்டு வீரர்கள், 13 சர்வதேச விளை-யாட்டுகளில் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள், 200 தேசிய விளையாட்டுகளில் பதக்கம் வென்றவர்கள், அதில் 18 ரெக்கார்ட் செய்தவர்கள், மாநில அளவில் 1000 வீரர்கள், அதில் பாதிக்கு மேல் பதக்கம் வென்றவர்கள், பல்கலைக்கழகங்களில் நடந்த போட்டிகளில் 27 பேர் பதக்கம் வென்றவர்கள். இதிலும் அகில இந்திய அளவில் 5 பேர் இந்திய ரெகார்டை தன்னகத்தே கொண்டுள்ளவர்கள்’’ என்று உணர்வு பொங்கக் கூறினார் இத்தொண்டறச் செம்மல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *