ஒலிம்பிக்கில் ஓடவிருக்கும் தமிழகத்து கிராமப்புற இளைஞர்கள்!

ஆகஸ்ட் 01-15

2012-இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மட்டும் இந்திய வீரர்கள் இருவர் இறுதி சுற்று வரை முன்னேறியிருந்தனர். தற்போது ரியோ ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகளில் மட்டும் அதிக பட்சமாக 16 வீராங்கனைகள் உட்பட 36 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதில் ஆடவர் பிரிவில் 4 ஜ் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்ளும் இந்திய அணியில் ஆரோக்கிய ராஜீவ், தருண் அய்யாசாமி, குன்ஹூ முகமது, முகமது அனுஷ் ஆகிய நால்வர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் தருண் அய்யாசாமி, ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் தமிழ் மண்ணை சேர்ந்-தவர்கள். இந்த நால்வர் கூட்டணி பெங்களூருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் 13-ஆவது இடம் பிடித்தது.

இவர்கள் பந்தய தூரத்தை 3:00.91 விநாடி-களில் கடந்தனர். இது தேசிய சாதனையாகவும் அமைந்தது.

 

ஆரோக்கிய ராஜீவ்

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், வழுதியூர் சந்தியாகப்பர் தெருவைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் (கார் ஓட்டுநர்) -_ லில்லிசந்திரா (இல்லத்தரசி) தம்பதிக்கு ஆரோக்ய ராஜீவ் (25), டேனியல் ரஞ்சித், எலிசபெத் ராணி என மூன்று குழந்தைகள். தந்தை ஒருவரின் சம்பாத்தியமே நிதி ஆதாரம் என்பதால், குடும்பமே வறுமையில் உழன்றது. மூன்று பிள்ளைகளுக்கும் உணவளித்து படிக்க வைக்கவே கஷ்டமான சூழ்நிலை.

இதற்கிடையே தொடக்கக் கல்வியை வழுதியூர் ராஜா மானியப் பள்ளியிலும், பிளஸ்2 வரை லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்து வளர்ந்த ஆரோக்ய ராஜீவ், 9 வயதில் குக்கிராமத்தில் பயிற்சியைத் தொடங்கி பல்வேறு வெற்றி, தோல்விகளை சந்தித்து தற்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

“குடும்பத்தின் கஷ்டத்தை உணர்ந்த ராஜீவ், தன்னையும் உயர்த்தி, குடும்பத்தையும் உயர்த்தியுள்ளார். ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் அவர் கண்டிப்பாக பதக்கம் பெறுவார்’’ என்கிறார் ஆரோக்ய ராஜீவின் தந்தை சவுந்தர்ராஜன்.

“பள்ளி விளையாட்டுகளில் அவரது அதீத ஆர்வத்தையும், இடைவிடாத முயற்சியையும் கண்டு வியந்தேன். ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்கும் வகையில் அவரது உடல்வாகு இருந்ததைக் கண்டு, பயிற்சியளித்தேன். போட்டியில் பங்கேற்க ஷூ வாங்கக் கூட பணமில்லாமல்தான் அப்போதைய அவரது குடும்ப சூழ்நிலை இருந்தது. பலர் அவருக்கு உதவி செய்தாலும், தற்போது ஒலிம்பிக் செல்லும் அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு ராஜீவின் கடும் உழைப்பே காரணம்’’ என்றார் பள்ளி பருவத்தில் ஆரோக்ய ராஜீவுக்கு பயிற்சியளித்த பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன்.

பெங்களூரூவில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆரோக்ய ராஜீவ், “எனது தந்தை 100 மீ. ஓட்டப் பந்தயத்தில் மாவட்ட அளவில் தங்கம் வென்றவர். இதனை அடிக்கடி அவர் சொல்லிக் கொண்டே இருப்பார். தந்தையைப் பார்த்து நானும் சிறுவயது முதலே தடகளப் பயிற்சி மேற்கொண்டேன். இதைப் பார்த்த எனது பள்ளி விளையாட்டு ஆசிரியர் ராமச்சந்திரன், என்னை ஊக்கப்படுத்தினார். இதையடுத்து 10, 12-ஆம் வகுப்புகள் படிக்கும் போது நீளம் தாண்டுதலில் மண்டல, மாவட்ட அளவிலான போட்டிகளில் தங்க பதக்கங்கள் பெற்றேன். மாநில அளவிலும் பங்கேற்றேன்.

இதையடுத்து விளையாட்டு ஒதுக்கீட்டில் திருச்சி புனித வளனார் கல்லூரியில் பி.ஏ. (வரலாறு) சேர்ந்தேன். அப்போது பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில் நீளம் தாண்டுதலில் தங்கமும், மும்முறைத் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும் பெற்றேன்.

இதன்மூலம் எனக்கு ராணுவத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு பணி கிடைத்தது. அங்கு எனக்கு ராம்குமார் என்பவர் பயிற்சி அளித்தார். ஊட்டியில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் பயிற்சி பெற்றேன். இதைத் தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் 400 மீ. தனிநபர், தொடர் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றேன். ஆனாலும், நாட்டிற்காக ஒலிம்பிக்கில் பங்கேற்பதே எனது லட்சியமாக இருந்தது. அது தற்போது நிறைவேறியுள்ளது.

4ஜ்400 மீ. தொடர் ஓட்டத்தில் திருப்பூரைச் சேர்ந்த தருண், கேரள மாநிலத்தைச் சேர்ந்த குன்ஹு முகம்மது, முகமது அனஸ் ஆகியோருடன் பங்கேற்கிறேன். அதில் கடைசி 400 மீ. தூரத்தைக் கடக்கும் வீரராக களமிறங்க உள்ளேன்.

என்னுடைய வெற்றிகள் அனைத்திற்கும் கஷ்டங்களே காரணம். கஷ்டங்கள்தான் வளர்த்தெடுத்தன; நான் வளரவும் தூண்டி வருகின்றன. ஒலிம்பிக்கில் 4ஜ்400 மீ. தொடர் ஓட்டத்தில் பதக்கம் வெல்வதே தற்போதைய குறிக்கோள் என்று கூறிவிட்டு,“எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிடாது. துன்பங்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். அந்த துன்பங்களைத் தாண்டி வருபவர்களே உயர்நிலையை அடைகின்றனர். என்னை கஷ்டங்கள்தான் வளர்த்தெடுத்தன; வளரத் தூண்டி வருகின்றன’’ என்றார்.

தருண் அய்யாசாமி

தருண் அய்யாசாமி, திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள சின்னேரிபாளையம் ஊராட்சி, ராவுத்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை அய்யாசாமி. தாயார் பூங்கொடி. தருணின் ஏழு வயதில் தந்தை இறந்துவிட்டார். தாயார், தனியார் பள்ளி ஆசிரியர். இளம் வயதில் ஆரம்பித்த தடகள ஆர்வம் தற்போது தருணை ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அளவுக்கு இழுத்துச் சென்றுள்ளது.

தருண் தனது பள்ளிப் பருவத்தில் கோ-கோ விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். மாநில அளவிலான போட்டியிலும் அவர் பங்கேற்றுள்ளார். குழு விளையாட்டில் தனது தனிப்பட்ட திறன் வெளியே தெரியாது என கருதிய தருண் 10ஆம் வகுப்பு படிக்கும் போதுதான் ஓட்டப் பந்தயத்தின் மீது தனது கவனத்தை திருப்பினார்.

திருப்பூரை சேர்ந்த தடகள பயிற்சியாளர் ஜே.அழகேசனிடம் முறைப்படி பயிற்சி பெற்று தன்னை மெருகேற்றினார்.
2012 முதல் 2014 வரை உள்ள காலகட்டத்தில் மாநில தடகளப் போட்டிகளில் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டங்களில் தொடர்ந்து மூன்றாண்டுகள் தங்கம் வென்று அசத்தினார். 2014-இல் மாநில தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் 21.4 விநாடிகளிலும், 400 மீட்டர் ஓட்டத்தில் 48.6 விநாடிகளிலும் தருண் இலக்கை கடந்தது தற்போது வரை சாதனையாக உள்ளது.

இதே போன்று மாநில அளவில் 8 சாதனைகளையும், தேசிய அளவில் 6 சாதனைகளையும் தருண் படைத்துள்ளார். தேசிய அளவில் 40 பதக்கங்களை வென்றுள்ளார். 2016-இல் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தருண் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தனிநபர் பிரிவிலும் தங்கம் வென்றுள்ளார்.
‘மகன் ஒலிம்பிக்கில் ஓடுவதை நான் பார்க்க வேண்டும்’ என்பது கடந்த பிப்ரவரி மாதம் தெற்காசியப் போட்டியில் தருண் அய்யாசாமி தங்கம் வென்றபோது, அவரது தாய் பூங்கொடி சொன்ன வார்த்தைகள். இன்றைக்கு அது பலித்துள்ளது. ஒரு தாயின் கனவை தனயன் நிறைவேற்றியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டி தொடர்பாக தருண் அய்யாசாமி கூறும்போது, “பெங்களூருவில் நடைபெற்ற தகுதிச் சுற்று போட்டியில் நாங்கள் இலக்கை அடைந்த நேரம் இந்த ஆண்டில் உலக அளவில் 2ஆ-வது சிறந்த ஓட்டமாக பதிவாகி உள்ளது.

ஒலிம்பிக்கில் அமெரிக்க அணி சவாலாக இருக்கும் என கருதுகிறோம். இம்முறை நிச்சயம் இறுதி சுற்றில் கால்பதித்து தங்கம் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

கேரள இளைஞர்கள்

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள மற்ற இருவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் குன்ஹூ முகமது இந்திய ராணுவத்தில் சுபைதாராக பணியாற்றி வருகிறார். முகமது அனுஷ் இந்திய கப்பற்படையில் பணியாற்றுகிறார்.

கடந்த 3 ஒலிம்பிக் போட்டியிலும் தொடர் ஓட்டத்துக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை. மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் பதக்கம் கைப்பற்றவில்லை.

ஆனால் தற்போது இந்த ஆண்டில் உலகின் சிறந்த அணிகளில் 2ஆ-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்திய அணி இம்முறை தொடர் ஓட்டத்தில் பதக்கம் வெல்ல வாய்ப்புகள் இருப்பதாகவே கருதப்படுகிறது. ஏனெனில் ஒலிம்பிக் சாம்பியனான பஹாமஸ், வெண்கலப் பதக்கம் வென்ற டிரினிடாட் அணிகளின் பார்ம் மோசமாகவே உள்ளது. மேலும் இவர்கள் உலக தரவரிசையில் குறிப்பிடும்படியான இடத்திலும் இல்லை.

ஆனால் பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது. எனினும் தமிழக வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *