கிரீமிலேயர் : சட்டத்திற்கும் நியாயத்திற்கும் எதிரானது!

ஆகஸ்ட் 01-15

அண்மையில் மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வான பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கையில், கிரீமிலேயர் என்ற காரணம் காட்டி, அவர்கள் வெற்றி பெற்றும் பதவி தராமலிருப்பது சட்ட விரோதம் மட்டுமல்ல; நியாய விரோதம்; சமூக அநீதியும் ஆகும்!

அவர்கள் தேர்வு எழுது முன்னர், அக்காரணத்தைக் காட்டி, அவர்களது மனுக்களை நிராகரிக்காமல், அவர்களைத் தேர்வு எழுதவிட்டு, அவர்கள் வெற்றியும் பெற்றுள்ள நிலையில்- இப்படி கிரீமிலேயர் _- அதிக வருமானம் உள்ள பெற்றோர்களைக் கொண்டவர்கள் என்று காரணம் காட்டித் தடுப்பது இயற்கை நீதி (Natural Justice) என்பதற்கேகூட விரோதமான ஒன்றாகும்!

இது ஒருபுறமிருக்க, கிரீமிலேயர், கிரீமிலேயர் என்பது _- சதா, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கென்றே- _ இவர்களை பதவிக்கு வராமல் தடுக்க வைக்கப்பட்ட “கண்ணி வெடிகள்” ஆகும்.

கிரீமிலேயர் என்று வற்புறுத்துவோர், அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகட்டும், ஆதிக்க ஜாதியாய் இருந்து கொண்டு, ஊடகங்களை தங்களது “அஸ்திரங்களாக” ஆக்கி மற்றவர்கள்மீது எய்தி இன்புறும் எவராயினும், அவர்களை நோக்கி சில நியாயமான கேள்விகளை முன் வைக்கிறோம். அவர்கள் இந்த ‘கிரீமிலேயர்’ பற்றி பதில் கூறி விளக்க வேண்டும்.

1. இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள இடஒதுக்கீடு  சம்பந்தப்பட்ட – பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஏதாவது ஒன்றிலாவது “கிரீமிலேயர்” (பொருளாதார அடிப்படை) கூறப்பட்டுள்ளதா? வற்புறுத்தப்பட்டுள்ளதா?

2. மண்டல் கமிஷன் என்ற இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷனின் பரிந்துரைகளில் ஏதாவது ஒன்றிலாவது ‘கிரீமிலேயர்’ என்ற சொற்றொடரோ, கருத்துரையோ, பரிந்துரையோ உள்ளதா?

3. சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் தலைமையிலான அரசு தனது (மத்திய) அரசு சார்பில் செயல்படுத்திய ஆணை (Official Memorandum) யிலாவது இந்த கிரீமிலேயர் மூலம் வடிகட்டல் நடத்தப்பட்ட பிறகே, நியமனம் என்று கூறப்பட்டதா?

4. அரசியல் சட்டத்தின் முதலாவது சட்டத் திருத்தம் 1951இல் (First Amendment) பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் போன்றவர்களால் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டதில்,  Socially and Educationally  என்ற சொற்றொடர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளப்-படுத்தப் பயன்படுத்தப்பட்டன; ‘Economically’ என்பது நீண்ட விவாதத்திற்குப் பின், அதில் சேர்க்க மறுக்கப்பட்டது என்பதும் உண்மை அல்லவா?

5. ‘கிரீமிலேயர்’ என்ற மறைமுகமாக பொருளாதார அளவுகோல் ஏன் பிற்படுத்தப்-பட்டவர்களுக்கு மட்டும் அடிப்படையாக இருக்க வேண்டும்?
மேல் அடுக்கான திறந்த _- பொதுப் போட்டி _- தொகுதிக்கும் கிரீமிலேயர் கிடையாது;

அடியில் உள்ள .C., S.T., என்ற தாழ்த்தப்-பட்ட மலைவாழ் மக்களுக்கான தொகுதியிலும் கிரீமிலேயர் புகுத்தப்படவில்லை; கிடையாது.

(இப்படி நாம் கேட்பதனால் அவர்களுக்கும் வைக்க வேண்டும் என்பது நம்முடைய வாதம் அல்ல).

6. பிற்படுத்தப்பட்டோரில் உள்ள _ மண்டல் பரிந்துரைப்படி _ 52 விழுக்காட்டில், பரிந்துரைக்கப்பட்ட ஒதுக்கீடு 27சதவிகிதம் தானே. அதாவது பாதி அளவுதான்! இதிலும் ‘கிரீமிலேயர்’ என்ற வடிகட்டலுக்கு ஏது நியாயம்? இது சமூகநீதிக்கு விரோதமான-தல்லவா. (27 சதவீதத்திலும் இதுவரை 12 சதவீதத்துக்கு மேல் அவர்களுக்கு அளிக்கப்-படவில்லை என்பது கவனிக்கத்தக்கது)
7. பிற்படுத்தப்பட்டோரில் உள்ள வசதி படைத்தோரை இந்த இடஒதுக்கீடுகளை அனுபவிக்காமல் தடுக்கவே, பிற்படுத்தப்பட்-டோரில் உள்ள ஏழைகளைக் காப்பாற்றவே இந்த வடிகட்டல் என்பது அத்தரப்பு வாதமானால், நாம் ஒன்றைக்  கேட்கிறோம். பதில் கூறட்டும்!

எந்த பிற்படுத்தப்பட்ட ஜாதியினர்  பாதிக்கப்பட்டு, ஆட்சியாளரிடமோ, நீதிமன்றங்களிடமோ முறையிட்டு, அதன்பின் ஆட்சியாளரோ, நீதிமன்றங்களோ ஆணை-யிட்டு, புள்ளி விவரப்படி மேல் தட்டு வர்க்கத்தினரே அத்தனை இடங்களையும் கபளீகரம் செய்து விட்டனர் என்று கண்டறியப்பட்டதனால், இப்படி கிரீமிலேயர் அளவுகோல் புகுத்தப்பட்டதா? இல்லையே!

8. விருந்தில் முதல் பந்தியே பரிமாறப்பட-வில்லை; (அதாவது 27 சதவிகிதம் அமுலாகாத நிலையில்) அதற்குள் அவர்களே எல்லா-வற்றையும் சாப்பிட்டு விட்டுப் போய் விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மை-யாகுமா? அடாவடித்தனம் தவிர வேறு என்ன?

9. இந்திரா சஹானி வழக்கு என்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில், தீர்ப்பு எழுதிய 5 நீதிபதிகளால் – வழக்கிற்கே சிறிதும் சம்பந்தமில்லாத ‘கிரீமிலேயர்’ என்பதை தனியே, யாரும் கேட்காமலேயே ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ என்பதுபோல வலிய புகுத்தப்பட்டது தானே இந்தக் கிரீமிலேயர்?

10. பொருளாதார அளவுகோல் அடிப்-படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு வழி செய்த அன்றைய பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசின் முடிவு செல்லாது என்று தெளிவாக அதே தீர்ப்பில் கூறி விட்டு கொல்லைப்புற வழியாகப் புகுத்தல் போல, இந்த ‘கிரீமிலேயர்’ நுழைக்கப்படுவது ஏன்? ஏன்?

இப்பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்று “தேசிய பிற்படுத்தப்-பட்டோர் கமிஷன்” அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது _- வற்புறுத்தியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.

(இந்த ஆணையத்திற்குச் சட்ட ரீதியான அந்தஸ்து _ – இதுவரை கொடுக்கப்படாததும் ஓர வஞ்சனை, பிரித்தாளும் சூழ்ச்சி அல்லவா?)

ஆண்டுக்கு ஆண்டு வருமானம் கூடுவதும், குறைவதும் உண்டு. இது சரியான அளவுகோல் ஆகாது என்ற காரணத்தால்தான், அரசியல் சட்டப்பிரிவு, 1951இல் ஏற்பட்ட நாடளுமன்றக் குழு விவாதம் இவைகளில் எல்லாம் Economically என்ற சொற்றொடர் தவிர்க்கப்பட்டது; ஏனெனில் அது குழப்பம் உருவாக்கக் கூடியது. நிலையானவற்றை அளவுகோலாகக் கொள்வது-தானே அறிவுடைமை! மாறி மாறி வரும் நிலையற்றதை அளவுகோலாகக் கொள்வது அறிவுடைமையா?

ஆளுவோர் சிந்திக்கட்டும். கிரீமிலேயர் முறை _- அதுவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே என்ற ஓர வஞ்சனை ஒழியட்டும் _- அணி திரள்வீர்!

கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *