பெரியார் தொண்டின் மூன்று முக்கிய கூறுகள் !

ஜுலை 16-31

வ.அய்.சுப்பிரமணியம்

துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சாவூர்,

சிறப்பு இயக்குனர் பன்னாட்டு திராவிட மொழியியல் நிறுவனம் திருவனந்தபுரம்

தந்தை பெரியார் காலமாகி ஏறத்தாழப் பதினொன்றரை ஆண்டுகள் கழிந்துவிட்டன. அவர்களுடைய தத்துவக் கருத்துக்களை அறுதியிடும் நூற்களை மேனாட்டாரும், தமிழ் நாட்டாரும் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக அனிதா டிகல் 1973இல் வெளியிட்ட ‘பெரியார் ஈ.வெ. இராமசாமி’ என்ற ஆங்கில நூலும், பி.ஸ்ப்ராட் 1970இல் எழுதிய, ‘தி.மு.க. ஆட்சியில்’ என்ற நூலும், சி. இரயர்சன் 1971இல் எழுதிய ‘திராவிட முன்னேற்றக் கழகம் அதன் அரசியல் வருங்காலம்’, எச்.ஏ.கிளிம்கிட் செர்மன் மொழியில் 1978இல் வெளியிட்ட ‘தென்னிந்தியாவில் மத எதிர்ப்பு இயக்கம்’ க.எப்.இர்சிக் 1969இல் வெளியிட்ட ‘தென்னிந்தியாவில் அரசியலும், சமுதாய எதிர்ப்பும்’ என்ற நூலும், ஆர்.எஸ். ஆர்டுகிரேவ் எழுதி 1965இல் வெளியிட்ட ‘திராவிட இயக்கம்’, ‘தமிழ்நாட்டு நாடார்கள்’ என்ற நூல்களும், ஈ.சா.விசுவநாதன் 1983இல் வெளியிட்ட, ‘ஈ.வெ.இராமசாமி நாயக்கரின் அரசியல் வாழ்வுப் பணி’, கு. நம்பி ஆரூரன் 1976இல் வெளியிட்ட ‘தமிழ் மறுமலர்ச்சியும் திராவிட தேசீய உணர்வும்’ போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன. இவை பெரியாரின் ஆக்கக் கூறுகளின் சில அம்சங்களைத் தெளிவாக்கி, தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பெரியாரின் தொண்டால் நேர்ந்த விளைவுகளைக் குறிப்பிடுகின்றன. சில தவறுகள் இந்நூல்களில் காணப்படினும், சமுதாய இயல் அடிப்படையில் பற்றுச் சார்பின்றி தமது அளவீட்டைத் தெளிவாக்க இவை முயல்கின்றன.

பெரியார் தொண்டின் விளைவுகளை அறுதியிடவும், புகழ்ச்சி, இகழ்ச்சி இன்றித் தெளிவுகளின் அடிப்படையில் சீர்தூக்கவும் இன்று நாம் செய்ய இயலும்.

பெரியார் செய்த தொண்டில் மூன்று கூறுகள் முக்கியமானவை:

1.    மதப் பிடிப்பிலிருந்து மக்களை மாற்றி நிறுத்தும் முயற்சி.

2.    பொருளாதார முன்னேற்றம்

3.    பொதுக் கல்வியும், அறிவியற் கல்வியும் புகட்டல் என்ற மூன்றும் குறிப்பிடத்தக்கன.

முதற் கூறாகிய மதப் பிடிப்பிலிருந்து மக்களை மாற்றி நிறுத்தும் முயற்சியைப் பெரியார் மேடைப் பேச்சுக்களாலும், வெளியீடு-களாலும், தமது செயற்பாட்டினாலும் எல்லோரும் பாராட்டும்வண்ணம் வெற்றி-கரமாகச் செய்தார் என்பதில் மாற்றெண்ணத்துக்கு இடமிருக்காது. பொருளாதார முன்னேற்றத்தைப் பற்றிய பெரியாரின் கருத்துகள் பெரும் விளைவுகளை உடையவை. அயல்நாட்டில் தமிழர் குடியேறியதற்கு நாடு பிடித்தல், வாணிபம், மதத்தொடர்பு, வறுமையால் தொழில் தேடிச் சென்றது என்ற நான்கு காரணங்களில் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த இடப்பெயர்ச்சி பஞ்சமும் அதனால் ஏற்பட்ட வறுமையும் காரணமாக இருப்பதை இதுபற்றி ஆய்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

தமிழர் குடியேறிய பிற மாநிலங்களில் குறிப்பாக மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் -கணிசமான எண்ணிக்கையில் குடிபெயர்ந்துள்ளதும் பதினான்கிற்கு மேற்பட்ட பிறநாடுகளில் குடிபெயர்ந்துள்ளதும் அன்றுள்ள வறுமை நிலை முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அதனுடன் தன்மானம், மொழிப்பற்று திராவிட-தமிழ்ப் பண்பாட்டில் ஈடுபாடு இவை அனைத்தும் செல்வவளத்தை அடிப்படையாகக் கொண்டவை. வயிறு வாடும் ஒருவன் மொழியைப் பண்பாட்டைப் பற்றிச் சிந்திப்பது மிகக் குறைவாகத்தான் இருக்கும். பஞ்ச வறுமை நகர்ப்புறத்தைவிட ஊர்ப்புறத்தில் கூடுதலாக இருப்பதைப் பொருளியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பெரியார் ஊர்ப்புறம் மாறுதற்கு வகுத்த திட்டம் வருமாறு :

1.    விவசாயத்துடன் எந்திரத் தொழிலை ஏற்படுத்துக. 2.    உழுதற்கும், அறுவடைக்கும், நீர்பாய்ச்சலுக்கும் எந்திரத்தைப் பயன்படுத்துக.

3.    வேலை அதிகம் செய்யாது பயிரிடும் நிலம், வேலை அதிகம் செய்து பயிரிடும் நிலம் என்று இருவகைப்படுத்தி நில அளவீடு செய்க.

4.    கூட்டுறவுக் கழகங்கள் அமைக்க.

5.    ஒவ்வொரு ஊரையும் ஒரு நகரமாக மாற்றுக. பள்ளிகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், சினிமா, நூல்நிலையங்கள், போக்குவரத்துச் சாலைகள், காவல் நிலையங்கள் அமைத்து ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரையறிந்த ஒழுக்கமுடைய நீதிபதி ஒருவரையும் நியமிக்க.

6.    பொருட்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்க.

7.    அய்யாயிரம் பேர் வாழும் நகரங்களாக ஒவ்வொரு ஊரையும் மாற்றி அங்கு வாழும் மக்களை நகரத்தார்கள் என்று குறிப்பிடுக.

8.    சிறு எந்திரத் தொழில்களை ஏற்படுத்துக.
என்று எட்டுக் கூறுகளை உள்ளடக்கிய திட்டத்தை வற்புறுத்தியுள்ளார். சுருங்கச் சொன்னால் ஊர்ப்புறத்தை எந்திரத் தொழிலாலும், மக்களுக்குத் தொண்டு செய்யும் அமைப்புகளாலும் சிறு நகரமாக மாற்றுதற்குக் கருத்து தெரிவித்துள்ளார்.

இம்மாற்றத்திற்கு அடிப்படையாக எல்லோருக்கும் பொதுக்கல்வியும், அறிவியற் கல்வியும் புகட்டுவதற்குக் கருத்து தெரிவித்தார். இதற்காக தமிழுக்கு மாறாக ஆங்கிலம் இருக்க வேண்டும் என்றும் கூறினார். தமிழ் மொழிக்கு ஏற்றம் தாராது, அய்யா அவர்கள் ஆங்கிலத்திற்கு ஏற்றம் தந்துள்ளாரே என்று சற்றுச் சடைந்தவர்கள் தமிழ்மொழியிலும், பண்பாட்டிலும் ஊறிய அய்யா அவர்கள் அவ்வாறு கூறியது சூழ்நிலை காரணமாக என்று கருத வேண்டும். பொருளாதார முன்னேற்றத்திற்கு விவசாயமும், எந்திரத் தொழிலும் வேண்டும் என்று வாதித்துள்ளதால் ஊர்ப்புறத்தில் இதற்கு ஏற்ற தொழிலாளர்களை உருவாக்க வேண்டும். அதற்குத் தாய்மொழிக் கல்விதான் உகந்தது. அறிவியல் கருத்துகள் அனைத்தும் தாய்மொழி வழி புகட்ட வேண்டும். இல்லையேல் புரிந்து செயற்படும் பண்பு ஊர்ப்புற மக்களுக்கு ஏற்படாது. எனவே, பொருளாதார முன்னேற்றத்திற்கு விவசாயமும், எந்திரத் தொழிலும் அவசியம் என்று வற்புறுத்திய பெரியார் அறிவியலறிவு, தாய்மொழியிலிருக்க வேண்டும் என்று கருதியிருக்க வேண்டும். தாய்மொழி வழி, அறிவியல் படிப்பு எனின் பிறமொழி நீக்கம் என்று பொருளன்று.

ஆங்கிலம், இரஷ்யன், சப்பான் மொழி, செர்மன் முதலியவற்றையும் உயர் மட்டத்தில் பயில்பவர்களுக்கு தேவைக்கு ஏற்ப புகட்ட ஏற்பாடு செய்யலாம். எல்லோரும் மேதைகளாகி விட முடியாது. ஆனால், எல்லோருக்கும் அல்லது மேதைகளாவதற்குத் தகுதியுடைய ஒவ்வொருவருக்கும் பிறமொழி படித்து முன்னேற வாய்ப்பிருக்க வேண்டும். எந்திரப் புரட்சி தமிழகத்தில் ஏற்படாததால் நாம் அறிவியலில் சற்றுப் பின்தங்கியிருக்கலாம். பின்தங்கியவர்கள் உழைப்பால் விரைவில் முன்னேறுவதை நாம் கண்டுள்ளோம். எனவே, மதப் பிடிப்பிலிருந்து மக்களை மாற்றுவதில் வெற்றிகண்ட பெரியார் வழி நடப்பவர்கள் பொருளாதார மாற்றத்திற்கும், கல்வி பரப்புவதற்கும், அறிவியல் வளர்ச்சிக்கும் துணை நின்று வறுமையை மாற்றிச் செல்வச் செழிப்பை ஏற்படுத்துவதற்குப் பாடுபடுவது பெரியாருக்குச் செலுத்தும் நன்றிக் கடனாகக் கருதும் காலம் வந்துவிட்டது. வறுமை நீக்கமே நமது குறிக்கோள். அதற்குத் தாய்மொழி வழிக் கல்வியைக் கருவியாகப் பயன்படுத்துவதற்கு முயல்வது வெற்றிக்கு வழி வகுக்கும்.

இன்றையக் கருத்தரங்கு தமிழ்மொழி, பண்பாடு ஆகியவற்றில் வடமொழித் தாக்கம் என்பது பற்றியது. இதற்குச் சில நெறிமுறைகள் உண்டு. அவற்றை நாம் சற்று அறிந்து கொள்வது நன்று.

ஆரியர்கள், இந்தோ அய்ரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவிற்கு வந்ததும் வடநாட்டிலும், தென்னாட்டிலும் பரவி வாழ்ந்த திராவிடர்களோடு தொடர்பு கொண்டனர். மணவினையும் செய்தனர். இதனால் வடமொழி திராவிட மொழியிலிருந்து பல சொற்களையும், கருத்துகளையும் கடன் பெற்றது. இருக் வேதத்தில் கூட இருபது திராவிடச் சொற்கள் இருப்பதை பரோ, எமனோ போன்றவர்கள் கூறியுள்ளனர். இந்தோ அய்ரோப்பிய மொழிகளிலும், இலக்கியங்-களிலும் காணக் கிடைக்காத பல கூறுகள் இந்தியாவில் வந்தபின் ஆரியர்கள் உருவாக்கிய வேதங்-களிலும், இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. அவற்றில் இந்தோ அய்ரோப்பிய கூறு எது என்று நாம் பிரித்தறிந்தால் இந்தியக் கூறுகளை நாம் இனங்காண முடியும். இந்தியக் கூறுகளிற் பெரும்பகுதியும் திராவிடக் கூறுகளாக இருக்கும். கோலேரியன் அல்லது முண்டர்கள் (நாகவம்சத்தினர் இதில் அடங்குவர்) திபத்தோ-பர்மக் கூறுகள் மிகச் சொற்பமாக இருக்கும். எனவே, தமிழில் வடமொழித் தாக்கம் என்று நாம் ஆராயும்போது, வடமொழியில் திராவிடத் தாக்கம் என்பதையும் நாம் ஆராயவேண்டும். நாம் மட்டும் தாக்கப்படவில்லை. நாமும் பிறருக்குக் கொடுத்துள்ளோம். தூரகிழக்கு நாடுகளான இந்தோனேசியா, பர்மா, தாய்லாந்து, இலங்கை முதலிய நாட்டு மொழிகளுக்கும், பண்பாட்டிற்கும் திராவிடர்களின் கொடை கணிசமானது. இதனையும் நாம் நினைவிற் கொள்ளவேண்டும்.  அறிஞர்கள் பலர் கூடியிருப்பதால் இவ்விருநிலை ஆய்வின் தேவையை அவர்கள் முன் வைப்பதில் எனக்கு மகிழ்ச்சியுண்டு. இந்தக் கருத்தரங்கைத் துவங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *