“கையில் வில்லை எடுத்துவிட்டால் இலக்கு மட்டுமே கண்ணுக்குத் தெரியும். வேறெதிலும் கவனம் சிதறாது’’ _ வளைந்த வில்லை கையில் வைத்துக்கொண்டு நேர்படப் பேசுகிறார் பிரியதர்ஷினி. சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள வள்ளுவர் _ வாசுகி மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் வில்வித்தை வீராங்கனை இவர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கான்பூர், பலிக்கா ஸ்டேடியத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டியில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 360க்கு 225 புள்ளிகள் எடுத்து ‘ரீகர்வ்’ பிரிவில் தங்கம் வென்றவர். வரும் ஆகஸ்ட்டில் நேபாளத்தில் நடைபெறவிருக்கும் சர்வதேச அளவிலான வில்வித்தைப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
“என்னோட பயிற்சிக் களமே என் பள்ளிதான். முதலில் பள்ளிகள் அளவுல மட்டுமே ஜெயிச்சுட்டு இருந்த நான் இன்னிக்கு தேசிய அளவுக்கு வந்திருக்கேன்னா, அதுக்குக் காரணம் என்னோட பயிற்சியாளர் மதன்குமார் சார்தான்’’ என்கிறார் பிரியதர்ஷினி நெகிழ்ச்சியுடன். இந்த மதன்குமார் தேசிய அளவிலான வில்வித்தை வீரர் மற்றும் தமிழ்நாடு, ‘யூத் ரூரல் கேம்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோஸியேஷனின்’ ஜெனரல் செகரட்ரியாக பணியாற்றுகிறார்.
தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்ட அனுபவம் பற்றிப் பேசும் பிரியதர்ஷினி, “கான்பூரில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் கலந்துகிட்டது வித்தியாசமான அனுபவம். அங்கே நிறைய அனுபவம் வாய்ந்தவர்கள் வந்திருந்தாங்க. அவங்ககிட்ட இருந்து பல நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன். என் பயிற்சியாளரும் சக போட்டியாளர்களும் என்னை ரொம்பவே என்கரேஜ் பண்ணாங்க. கான்சன்ட்ரேஷன், அய் பவர், உடல் வலிமை என இந்த விளையாட்டுல பல நன்மைகள் இருக்கறதால என் படிப்பையும் ஈஸியா பேலன்ஸ் பண்ண முடியுது. வில்வித்தைப் போட்டிக்கு நம்ம நாட்டிலிருந்து பல வீரர்கள் உருவாகணும். வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியைப் போலவே இன்னும் நிறைய பேர் ஒலிம்பிக்கில் கலந்துக்கணும். எப்படியும் இந்த சர்வதேசப் போட்டியில் ஜெயிக்கணும்னு எனக்கு ஆசை’’ கண்கள் கூர்மையாகி புன்னகைக்கிறார் பிரியதர்ஷினி.
வாழ்த்துவோமா நண்பர்களே!