ஜான் வில்சன் எழுதிய “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா”

ஜூன் 01-15

புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் வில்சன் எழுதிய “India Three Thousand Years Ago” என்னும் ஆங்கில நூல் 1858 அக்டோபரில் மும்பையில் வெளியிடப்பட்டது. அது தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவருகிறது.

இத்தகைய கருத்துக்களை நாம் இன்னும் எளிதாக விரிவுபடுத்திப் பார்க்க இயலும். நான் எதற்காக அவற்றையெல்லாம் இங்கு எடுத்துக்காட்டினேனோ அதற்கு இது போதும் என்று நான் கருதுகிறேன்; அதாவது ‘ஜாதி’ என்பது தற்காலத்தில் எந்தப் பொருளில் எதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றதோ அந்தப் பொருளைப் பற்றித் தொன்மைக்கால இந்தியர்களுக்குத் தெரியாது.

‘ஜாதி’ என்பது அவர்கள் அறியாத ஒன்றாக இருந்தது. பிற சமுதாயங்களைச் சேர்ந்த கூட்டாளிகளைப் போல வெவ்வேறு தொழில்களும் அமைப்பு-களும் அவர்களிடையே இருந்தன என்பதுவே உண்மை. ‘பஞ்சு£க்ஷிதி’, ‘பஞ்சஜனா’ எனும் சொற்கள் வேதங்களில் சில இடங்களில் குறிப்பிடப்படுகின்றன. இவை நான்கு வருணங்களைக் (ஜாதிகளை) குறிப்பவை என்று ‘சாயன ஆச்சாரி’ கூறுகிறார். ஆனால் பேராசிரியர் லேசன் இது முற்றிலும் தவறான விளக்கம்; இதனை ஏற்க முடியாது என்கிறார். நம்முடைய ‘வேதங்களைப் பற்றிய ஆராய்சிக்கு இந்த உண்மையைப் பற்றிய கண்டுபிடிப்பு மிக இன்றியமையாததாக விளங்குகிறது. கடுமை வாய்ந்த மனவேதனை தருகின்ற, தங்களைத் தாழ்த்துகின்ற ஜாதி நுகத்தடியைத் தங்கள் கழுத்திலிருந்து தாங்களாகவே தூக்கியெறிய முடியாமல் துன்பப் பட்டுக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு இது உதவியாக இருக்கலாம். (வாய்ப்புண்டு).

வேதங்களை ஆராய்ந்ததன் விளைவாக நாங்கள் கண்டுபிடித்த மற்றுமோர் ஒத்த தன்மையை நான் உற்று நோக்கினேன். வேதங்கள் உருவாக்கப்பட்ட காலத்தில் அறிவுக்குப் பொருந்தாத இந்த ஜாதி உருவாக்கம் மக்களின் கற்பனையிலோ நடைமுறையிலோ இல்லை. மனிதனுடைய நிலைக்கு இந்த முறை உயர்த்தப்படவில்லை; (உகந்தததாகவும் இல்லை) ‘கடவுளின் படைப்புகளில், அவற்றில் மட்டுமே, அறிவாற்றல், நேர்மை உணர்வு ஆகியவற்றையும், அவர்களுக்கு, தெரிதல், அன்பு செலுத்துதல், மனமகிழ்வோடு பணிசெய்தல், படைத்த-வனிடத்திலும், காப்பவனிடத்திலும் பக்தியோடிருத்தல் ஆகிய தன்மைகள் வழங்கப்பட்டன’. ‘‘MAN’ என்ற சொல் சமஸ்கிருதத்தில் உள்ள‘Manas’ (லத்தீன் மொழியில் Mens) உள்ளம் என்று (மனம் என்று பொருள்படும்) என்ற சொல்லிலிருந்து தோன்றியதாகும் கீழ்நிலை விலங்குகளின் பெயர்கள் எல்லாம் சுவையான மொழியிலேயே அமைந்துள்ளன. ‘பசு’, கால்நடை, அல்லது விலங்குகள் ஆகியவை மனிதனின் உடைமைகளாகக் கருதப்பட்டன. லத்தீன் மொழியில் பெசு (Pecu) என்றும், பெசுனியா (Pecunia) என்றும் அழைக்கப்படுகின்றன. வேதகாலத்து இந்தியர்கள் வேள்வியில் விலங்குகளைப் பலியிட்டார்கள். ‘அசுவமேத யாகம்’ அல்லது குதிரையைப் பலியிடும் யாகம் அவர்களிடம் பழக்கத்தில் இருந்தது, என்பது வேதங்களில் உள்ள முகாமையான பகுதிகள் பலவற்றில் கூறப்படுகின்றது. கால்நடைகளோடு தொடர்புடைய விலங்குகளை வேள்வியில் பலியிடுவதும் அவர்களது நடைமுறையில் இருந்தது.

“பரதனின் வழிவந்த அக்னியே! கருவுற்ற பசுக்களையும், காளைகளையும், ஈனாப் பசுக்களையும் வேள்வியில் பலியிடும்போது நீ முழுமையாக எங்களுக்கு உரியவனாகிறாய்’’ என்று கிருட்சமாதா என்ற ரிசி கூறுகிறார். ஆனால், தற்காலத்தில் ‘இந்து என்ன சொல்கிறான்? “இவ்வாறு வேள்வியில் கொல்லப்பட்ட இந்த விலங்குகளை ரிசிகள் மீண்டும் உயிர்ப்பிக்கிறார்கள்’ என்று கூறுகிறான். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஒரு சிறிய அடிப்படைச் சான்றுகூட வேதத்தில் இல்லை. மேலும் வேள்விகளில் உயிர்ப்பலி கொடுப்பதற்காக மட்டும் இத்தகைய விலங்குகளைப் பண்டைக்காலத்து இந்தியர்கள் பயன்படுத்தவில்லை; இவற்றை உணவிற்காகவும், அவர்கள் தங்கு தடையின்றிக் கொன்றார்கள். இந்தச் செயலுக்குச் சான்றளித்து வேதங்கள் தெளிவுபடுத்துவதைப் போல ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதப் பேராசிரியர், ‘தொன்மைக் காலத்து இந்தியர்களிடையே மாட்டுக்கறியை உண்பதைப் பற்றி அச்சமோ தயக்கமோ ஏதும் இல்லை’’ என்று கூறுகிறார். இந்திரனின் ‘சுக்தா’க்கள் ஒன்றில் காணப்படும் குறிப்பை வைத்து அவர் இக்கருத்தைத் தெளிவுபடுத்துகிறார்! “ஒரு பசுவை வெட்டுவதைப் போல ‘விருத்தனின்’ கால்களைத் துண்டு துண்டாக வெட்டினான்’’ என்னும் இந்தக் குறிப்பே அவருக்குத் துணையாகின்றது. அவருடைய ரிக்வேத மொழிபெயர்ப்பின் மூன்றாம் தொகுதியில், வேதங்களில் உள்ள மேலும் இரண்டு பகுதிகளை நமக்கு எடுத்துக்காட்டுகிறார்; அவர் எடுத்துக்காட்டும் பகுதிகள், நம்முடைய துணிவான முடிவுகளின் நேர்மைத்தன்மையை உறுதி செய்கின்றன. “வான்முகில்களின் கதவுகளைப் போதுமான அளவு அவன் திறந்துவிட்டான்; தண்ணீரைப் பாய் நீரோடை போல அவன் வழங்கினான்; ஆதலின் பக்திமான்களெல்லாம் உணவிற்காக இந்திரனிடம் புகலிடம் தேடினார்கள்.

இந்திரன் அவர்களின் உணவிற்காக _ ‘கவுரா’, ‘கவாயா’ போன்ற விலங்குகள் அதிகம் நடமாடும் இடத்தைக் கண்டு அவர்களுக்கு அவற்றை உணவாக்கினான். “இந்திரனைப் பணிந்து வணங்குங்கள்; இந்தத் தெய்வீகமான _ புனித உணவை உங்களுக்கு அளித்து அவன் உங்களைப் பெருமைப்படுத்துகிறான்! இந்த உணவு வகையில் மிக உயர்ந்தது கால்நடை (பசு, காளை)களின் இறைச்சிதான்.’’ அந்தச் சமஸ்கிருதப் பேராசிரியரின் மொழிபெயர்ப்புக்கு முற்றிலும் வேதங்களே மூல ஆவணங்களாக விளங்குகின்றன. தொன்மைக்கால இந்தியர்கள் மாட்டுக் கறியை விரும்பி உண்டனர் என்பது கேள்விக்கிடமில்லாதது! இதனால் அவர்கள் தங்களைக் கொடுமையானவர்கள் என்றோ இரக்கமற்றவர்கள் என்றோ ஒருபோதும் கருதவில்லை. ஒரு காளை மாடானது ஒரு வண்டியில் அல்லது உழவுப் பணியில் நாள் முழுவதும் துன்பப்படுவதைவிட அதனை வெட்டுகின்றவன் விடுகின்ற குத்து, அடி, வெட்டு என்று அவனது கொலைக் கருவிகளின் மூலமாகத் தருகின்ற துன்பம் மிகக் குறைவுதான்; அல்லது இரைதேடி வருகின்ற காட்டு விலங்குடன் அந்தக் காளை மாடு சிக்கிக் கொண்டு அது நடத்துகின்ற சண்டை மிகப் பெரிய துன்பத்தைத் தருவதாகும். (இதனால் இறைச்சிக்காக அவர்கள் மாட்டைக் கொல்வது, அதன் துன்பத்தைத் தணிப்பதற்காக என்னும் கருத்துடையவர்கள் என்பது பெறப்படுகின்றது.)

கீழ்க்காணும் பகுதி நமக்கு ஒரு தெளிவைத் தருகின்றது. இதைப் பற்றிய ஒரு புரிதலை நமக்கு வழங்குகிறது. ‘ஆப்பிரிக்க கொலம்பஸ்’ என்று அழைக்கப்படுகின்ற டாக்டர் லிவிங்ஸ்டன் அவர்களின் சுற்றுப் பயண நூல்களின் ஒரு தொகுதியில் இப்பகுதி இடம் பெற்றுள்ளது:

“அந்தச் சிங்கம் திடீரென்று பாய்ந்து என் தோளைப் பற்றிக்கொண்டது; நாங்கள் இருவரும் ஒன்றாகத் தரையில் சாய்ந்தோம். என் காதருகில் பயங்கர சத்தத்துடன், ஒரு வலிமையான நாய் எலியைப் பிடித்து _ கவ்வி ஆட்டுவதைப் போல அந்தச் சிங்கம் என்னைப் பற்றி ஆட்டியசைத்தது. பூனை எலியைக் கவ்வி ஆட்டிய முதல் ஆட்டத்திலேயே அந்த எலி ஒரு மயக்க நிலைக்குப் போய்விடுவதைப்போல, அந்த அதிர்ச்சியால் மயக்க நிலைக்கு நான் போய்விட்டேன். அது ஒரு கனவு நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டது. அந்த நிலையில் வலி உணர்வு தெரியவில்லை; அச்சம் என்ற உணர்வில்லை; ஆனால் என்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் நன்கு உணர முடிந்தது. ஒரு நோயாளிக்குப் பாதி மயக்க மருந்து (குளோரோபார்ம்) கொடுத்த நிலையில், பாதி மயங்கிய நிலையில் அவரால் தனக்குச் செய்யப்படும் அறுவை மருத்துவத்தைக் கண்களால் பார்க்க முடியும்; ஆனால் கத்தியால் ஏற்படும் வலி தெரியாது; இதைப் போல எனது நிலை இருந்தது. அந்த அசைவு _ ஆட்டம் அச்சத்தைப் போக்கிவிட்டது. அந்த விலங்கை இப்போது அருகில் நின்று பார்ப்பதால் அச்ச உணர்வே சிறிதும் இல்லாதவாறு அந்த முதல் ‘ஆட்டம்’ செய்துவிட்டது. மற்றவற்றின் இறைச்சியை உண்ணுகின்ற விலங்குகளால் கொல்லப்படுகின்ற பிற விலங்குகள் அனைத்திற்கும் இந்த உணர்வே ஏற்படும். அதனால் பெருந்தன்மை வாய்ந்த நம் படைப்புக் கடவுள், மரணத்தின் வலியைக் குறைப்பதற்காக, நமக்கு முன்னேற்பாடாகச் செய்து கொடுத்த இரக்கமுடைய வழிவகை இதுவாகும்.’’

இதிலிருந்து என்ன கருத்தைப் பெறமுடியும் என்பதை இங்கே கூடியுள்ள பெருமக்களாகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இங்கு, குறிப்பிடப்பட்டுள்ள _ விலங்குகள் உருவாக்கம் ஆனவுடன் அவற்றின் மீதான ஆளுமையைப் பண்டைக்கால ஆரியர்கள் தொடர்ந்து பாதுகாத்து வந்தார்கள். அவற்றைத் தங்களின் பணியாளர்களாகவும், மனிதர்களின் உதவியாளர்களாகவும், உழைப்பிற்காகவும் தங்கள் உணவிற்காகவும் ஆரியர்கள் பயன்படுத்தி வந்தார்கள். மனித உயிர் இடம் விட்டு இடம் பெயர்ந்து வேறோர் உருவமாக _ விலங்காகவோ, பயிர்களாகவோ மறுபிறப்புக் கொள்ளும் என்ற கருத்துத் தோன்றாத காலம் அது. உயிர், கூடுவிட்டுக் கூடு பாயும் என்ற கோட்பாடு, தொன்மைக்கால வேதங்களில் இசைப் பாடல்களில் எந்த இடத்திலும் இல்லை; ஒரு சிறு அடையாளத்தைக்கூட அவற்றில் காண முடியவில்லை. அங்கிரர், ரிபஸ், சுதன்வன்  ஆகியோருடைய மகன்கள்.

இறுதியாக ஏழு ரிசிகளின் மகன்கள் ஆகியோர் தெய்வீகத் தன்மை வாய்ந்த விண்மீன்களாக உயர்த்தப்பட்டனர். இக்கருத்தானது மனித ஆன்மாவைத் தெய்வீகப் பொருளாக ஈர்த்துக் கொள்ளுதல் என்னும் கோட்பாட்டிற்கு எதிரானது. இதன்பின் உயிர்களின் கூடுவிட்டுக் கூடுபாய்தல் கொள்கை ‘கண்டுபிடிக்கப்பட்டு’ப் பரப்பப்பட்டது. இது இந்துக்களின் அறிவின் வீழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணியாக அமைந்துவிட்டது.

விலங்குகளை மனித நிலைக்கு உயர்த்திக் கொண்டுவந்த செயலானது மனிதனை விலங்கு நிலைக்குத் தாழ்த்திவிட்டது. இது மனிதப் படைப்பில், மனிதனது உயர்நிலையைச் சரியான நிலையைப் புரிந்துகொள்ள விடாமல் அவனை முழுமையாக நீண்ட தொலைவில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது. அது மனிதனை அலங்கோலமாக்கிச் சிதைத்துச் சீர்குலைத்து, விலங்குகள், பறவைகள், மீன்கள், ஊர்வன _ முதலான உயிரினங்களின் இழிந்த நிலைக்குத் தள்ளிவிட்டது; மற்ற விலங்குகளின் இழிந்த நிலைக்கு மனிதனை இறக்கிவிட்டது; தாவரங்களைப் போன்ற விலங்குகளின் நிலைக்கு, தாவர வகையில் ஒவ்வோர் உயிரிவகைக்கும் கீழான நிலைக்கு இந்துக்களைத் தள்ளிவிட்டது. இப்போது நான் அறிவுத்திறன் மிகுந்த மனிதனாக உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்; ஆனால், விரைவில் (மறுபிறப்பில்) குறும்பு செய்யும் ஒரு குரங்காக நான் பிறக்கலாம்! தற்போது நான் இளகிய மனம் படைத்த ஒரு பெண் என்று வைத்துக் கொள்ளுங்கள்; அடுத்து வரும் பிறவியில் கொள்ளையடித்துக் கொண்டு போகும் குள்ளநரியாகலாம்! இப்போது நான் நன்கு படிக்கும் மாணவன்; அடுத்து வரும் ஆண்டில் நான் முட்டாள்தனமான ஓர் எருமையாக இருப்பேன்! இப்போது நான் விளையாடி மகிழும் ஒரு சிறுமி; அடுத்த பிறவியில் நான் துள்ளிக் குதித்தோடும் ஒரு வெள்ளாடு! கரைந்து பறந்தோடும் அதோ அந்தக் காகம், காலஞ்சென்ற என் தந்தையாக இருக்கலாம்! பசியோடு அலைந்து கொண்டிருக்கும் அந்தப் பூனை, அன்பு நிறைந்த என் அம்மாவாக இருக்கலாம்! அதோ சீற்றம் கொண்ட அந்தக் கரடி, ஒரு காலத்தில் எனக்கு அண்ணனாக இருந்தது! ஊர்ந்து வருகின்ற பாம்பு, காலஞ்சென்ற என் தங்கை! மறுபிறப்புக் கோட்பாட்டின் சரியான வாசகங்கள் இவை! இந்த நாட்டின் மக்களிடையே தற்போதும் நடைமுறையிலிருக்கும் நம்பிக்கை இது! ஊர்ந்து செல்லும் உயிரினங்களுக்கும் கீழாக விலங்குகளைவிடக் கேவலமான _ அடிமைத் தன்மையும் அச்சமும் கொண்ட மக்களாக இந்த நம்பிக்கை அவர்களைக் கீழ்நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது. தற்போதைய ஜாதிய நடைமுறைப் பழக்க வழக்கங்களுக்கும் இவற்றைப் பாதுகாக்கின்ற நிறுவனங்களுக்கும் ஏற்ப இவை அமைந்துள்ளன. அதே நேரத்தில், இந்த நச்சுத்தன்மை வாய்ந்த உயிரினங்கள் இவர்களின் வாழ்விடங்களுக்குள் வந்துவிட்டாலும் அவற்றை இவர்கள் கொல்வதில்லை; இது வேதத்தின் கருத்தியலுக்கு எதிரானதாகும்.

(பாம்பின் நச்சுத் தன்மையிலிருந்து விடுபடும் வழிவகையைப் பற்றி ரிக் வேதம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. மேலும், நச்சுப் பாம்புகளை அடித்துக் கொல்வதைப் பற்றியும் வேதம் விளக்குகிறது.)

நம் கவனத்தை ஈர்க்கின்ற சுவை மிகுந்த ‘கண்டுபிடிப்புகள் பலவற்றை’ வேதங்களை ஆராய்ந்ததன் வழியாக நாம் பெற்றுள்ளோம்.

‘சதி’ எனும் கொடுமைச் சடங்கிற்கு வேதம் ஒப்புதல் தரவில்லை; வேதத்தின் எந்த இடத்திலும் ‘சதி’யை (உடன்கட்டை ஏறுதல்) ஏற்றுக் கொண்டமைக்கான சான்று இல்லை. இருந்தபோதிலும் வேதங்களிலிருந்து சில பகுதிகளை ‘பிராமணர்கள்’ அடிக்கடி எடுத்துக்காட்டி. ‘இவை கைம்பெண்களை உடன்கட்டை ஏற்றுமாறு’ கூறுகின்றன என்று எடுத்துக் கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தப் பகுதிகளை ஆழ்ந்து ஆராய்ந்த பேராசிரியர் வில்சன், ‘பிராமணர்கள் எடுத்துக் காட்டும் இந்தப் பகுதிகளெல்லாம் கைம்பெண்களைப் பேணிக் காப்பாற்ற வேண்டியதன் இன்றியமையாமையை எடுத்துக் கூறுகின்றனவே தவிர அவர்களை எரித்துக் கொல்வதைப் பற்றியல்ல என்று தெளிவாகக் கூறுகிறார். அறிஞர் கோல்புரூக் எடுத்துக்காட்டும் அந்தப் ‘பிராமண மொழிபெயர்ப்பு வருமாறு: ஓம்! இந்தப் பெண்கள் விதவைகளாக்கப்படக் கூடாது; அவர்கள் கண்ணுக்கு மைதீட்டிக் கொண்டு தங்களை ஒப்பனை செய்து கொண்ட நல்ல மனைவியர்கள்; நெய்க் கிண்ணங்களைக் கையில் ஏந்தியவாறு அவர்கள் இதோ எரிந்து கொண்டிருக்கின்ற இநத் நெருப்பிற்குத் தங்களை ஒப்படைக்கப் போகிறார்கள்! அவர்கள் அழிவற்றவர்கள்; குழந்தைகள் இருக்கிறார்கள்!

கணவன்மார் இருக்கிறார்கள். நல்ல அணிமணிகளால் தங்களை ஒப்பனை செய்துகொண்ட அவர்கள், இதோ இந்த நெருப்பில் இறங்கட்டும்! அதன் மூலக்கூறு தண்ணீர்தானே!’’ மொழிநூல் அடிப்படையிலான, திறனாய்வு வழிப்பட்ட இதன் மொழிபெயர்ப்பு வருமாறு: ‘இந்தப் பெண்கள் எல்லாம், விதவைகளல்லர்; ஆனால் நல்ல கணவன்மாரைப் பெற்றிருக்கிறார்கள்! கைகளில் எண்ணெய்க் கிண்ணத்தோடும் வெண்ணெய்யோடும் அருகில் வரட்டும்! பிள்ளைப் பேறடைந்து தாயானவர்கள், முதலில் அந்த வழிபாட்டு இடத்திற்குச் செல்வார்களாக! துன்பமோ கவலையோ இல்லாமல், அணிமணிகள் பூண்டு தங்களை நன்கு ஒப்பனை செய்து கொண்டு செல்வார்களாக!’’ இப்பகுதி ‘மிருத்யூ’ என்பவருக்கு அல்லது மரணத்திற்குச் சொல்லப்பட்ட ஓர் இசைப் பாடலில் இடம் பெற்றுள்ளது ரிக் வேத பிராமணர்களால் இறுதிச் சடங்கின்போது இது பயன்-படுத்தப்பட்டு வருகின்றது. இந்தப் பகுதியின் பொருள் மாற்றிக் கொள்ளப்-பட்டதற்குச் சொற்களின் உருத்திரிபே காரணமாக இருக்கலாம். (Agre என்பதற்குப் பதிலாக Agneh என்று பொருள் கொண்டார்கள்) “தாய்மார்கள் முதலில் அந்த வழிபாட்டு இடத்திற்குச் செல்வார்களாக!’’ என்ற தொடர், “தாய்மார்கள் முதலில், அந்த நெருப்பின் கருவளைக்குள் செல்வார்களாக’’ என்று படிக்கப்பட்டதன் விளைவாகப் பொருள் மாறாட்டம் ஏற்பட்டிருக்கலாம். டாக்டர் முல்லர் மிக நன்றாகவே சொன்னார்: ‘பழி பாவங்களுக்கு அஞ்சாத புரோகித வர்க்கத்தால் செய்ய முடிந்த மிக மிக இழிந்த செயல் இதுவாகத்தான் இருக்க முடியும்’’.

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *