மதிப்பெண்ணுக்காக மாணவர்களை வருத்தாதீர்!

ஜூன் 01-15

ஆண்டுக்காண்டு தேர்வு எழுதியதற்கு மறுநாள், தேர்வு முடிவு வெளிவந்தபின், தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இதற்குக் காரணம் என்ன? மதிப்பெண்தான் வாழ்க்கை என்று பெற்றோர் உட்பட எல்லோரும் நினைப்பதும், அதை மாணவர் மனதில் பதியச் செய்வதும் ஆகும்.

ஆனால், உண்மையில் மதிப்பெண் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை. முதல்தர மதிப்பெண் பெற்றவர்கள் பலர் உயர்கல்வியில் பின்தங்குகிறார்கள். அதிக மதிப்பெண் பெற்றவர்கள் வேலைக்கான போட்டியை எதிர்கொள்ள முடியாமல் ஒதுக்கப்படுகின்றனர். மதிப்பெண் குறைவாகப் பெற்ற பலர் தங்கள் பேச்சாற்றலால், செயலாற்றலால், ஆளுமைத் திறத்தால் அதிகம் மதிப்பெண் பெற்றவர்களை பின்னுக்குத் தள்ளி வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.

ஒரு மாணவனின் தகுதியை, மதிப்பை, உயர்வை மதிப்பெண் கொண்டு மதிப்பிடும் தவறான செயல்பாட்டால், மதிப்பெண் குறையும்போது தாழ்வு மனப்பான்மையில் குறுகி, பிறருடன் பழக வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு, தற்கொலைக்கு முயல்கிறார்கள்.

மனப்பாடம் செய்து தேர்வில் கக்கும் மாணவனால், நடைமுறையில் வாழ்வில் நிலைத்து நிற்க முடியவில்லையென்ற யதார்த்த நிலையை கல்வி நிறுவனங்கள் மறைத்து, மதிப்பெண்ணை முதன்மையாகக் காட்டி, விளம்பரப்படுத்தி, தங்கள் பள்ளியின் தகுதி, தரம் எல்லாம் மதிப்பெண்ணில்தான் அடங்கியுள்ளது   என்று போட்டியிட்டு, மாணவர்களை பள்ளியில் வாட்டிவதைக்கின்றனர்.

பெற்றோரும் அதுதான் வாழ்க்கையென்று நம்பி பிள்ளைகளை வீட்டிலும் வதைக்கின்றனர். நான்கைந்து மணி நேர தூக்கத்தைத் தவிர மற்றபடி படி படியென்று பள்ளியும் வீடும் மாணவர்களை வாட்டி வதைக்கின்றன.

மாணவனை விளையாட விடுவதில்லை, சிரித்து மகிழ வாய்ப்பளிப்பதில்லை. பொழுது போக்கிடங்களுக்கு அழைத்துச் செல்வதில்லை. நண்பர்களுடன் பழக அனுமதிப்பதில்லை. ஒட்டுமொத்தத்தில் மாணவர்களை மன நோயாளிகளாக்கி விடுகின்றனர்.

ஆனால், உண்மையில் மாணவர்களின் எதிர்காலம், வேலைவாய்ப்பு மதிப்பெண்ணை மட்டும் வைத்து அமைவதில்லை. தனித்திறன், ஆளுமை, கருத்துக்களை வெளியிடும் பாங்கு, அணுகுமுறை, பேச்சாற்றல், முடிவெடுக்கும் திறன் போன்று பலவற்றைச் சார்ந்தது.

எல்லாம் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அல்ல

ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். எழுத்து, கற்பனை, விளையாட்டு, பேச்சுத்திறன் என அந்தத் திறமையை மதிப்பெண்களால் அளக்க இயலாது. எந்தத் துறையில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்று அறிந்து, அதில் அவர்களைச் செலுத்தினால், அவர்களுக்கு வருங்காலத்தில் வெற்றி சொந்தமாகும். மேலும், பொதுத்தேர்வில் மனப்பாடம் செய்து கக்கி மதிப்பெண்கள் எடுத்து, வேலை கிடைத்து விட்டாலும், அறிவும் ஆர்வமும் இல்லை என்றால், அந்த வேலையில்தொடர்ந்து முன்னேற முடியாமல் போகும். இன்று உள்ளூர் வெற்றியாளர்களில் இருந்து உலக சாதனையாளர்கள்வரை எத்தனை பேர் பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவர்கள்? பெரும்பாலும் இல்லை. அதே சமயம், பத்தாம் வகுப்பில் ஃபெயிலான சச்சின் டெண்டுல்கரில் இருந்து பல விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், மீடியா பிரபலங்கள், தொழிலதிபர்கள் கல்வியில் ஃபெயில் ரெக்கார்டு வைத்திருப்பவர்கள் தான். கலைஞர் பள்ளி இறுதித் தேர்வை மூன்று முறை எழுதித் தேர்ச்சி பெறாதவர்.

மதிப்பெண்கள்தான் வாழ்க்கை என்ற தங்களின் விளம்பர யுக்தியை பள்ளிகள் கைவிட்டு, தங்கள் பிள்ளையின் திறமையை முடிந்தவரையில் வெளிக் கொணர்ந்து, அவன் எடுக்கும் மதிப்பெண்ணுக்கும் ஆர்வத்துக்கும் ஏற்ற மேற்படிப்புகளை அடையாளம் காட்டுவது தங்கள் கடமை’ என்று செயல்பட்டால் இந்த  பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். அப்போதுதான் கல்வியை மாணவர்களும், பெற்றோர்களும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் எதிர்கொள்வார்கள்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் பிள்ளைகள் தோல்வியடைந்தால், அவமான வார்த்தைகளால் திட்டாதீர்கள். ஆறுதல் சொல்லி, மறு தேர்வுக்குத் தயார்படுத்துங்கள். அதை எதிர்கொள்ள உறுதுணையாக இருங்கள். அரிதான இந்த வாழ்க்கை மதிப்பெண்களுக்காக அல்ல!.

பரந்து விரிந்த இந்த உலகத்தில் வேலைவாய்ப்புகளை கொடுக்கும் ஏராளமான படிப்புகள் இருக்கின்றன. அதைப் பற்றி அறியாத காரணத்தால், ஒன்றன்பின் ஒன்றாக குட்டையில் விழும் வாத்துக்கள்போல, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இன்ஜினீயரிங் படிப்புகளில் தள்ள நினைக்காமல், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ற துறைகளுக்குச் செவிசாய்க்கும்போதும், மதிப்பெண்கள் குறைந்தாலும் வாழ்க்கையை பாசிட்டிவாக எதிர்கொள்ளும் அணுகுமுறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும்போதும், மாணவர்கள் மன இறுக்கத்திலிருந்து மீட்கப்படுவர்.

தற்கொலைக்கான முக்கியக் காரணங்கள்!

பெற்றோர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய முடியவில்லை, சக நண்பர்கள் மற்றும் சமூகத்தில் அவமானம், கல்விச் சூழல் மற்றும் மனஅழுத்தம், எதிர்காலத்தை நோக்கிய லட்சியங்கள் நிறைவேறாமல் போனது என்பது போன்ற காரணங்களினால்தான் மாணவர்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்.
எனவே, பெற்றோரும் கல்வி நிறுவனங்களும் இவற்றை உணர்ந்து பிள்ளைகளைப் பயிற்றுவிக்க வேண்டும். அவர்கள் விருப்பம், திறமைக்கேற்ப சாதிக்க வாய்ப்பளிக்க வேண்டும்!
குழந்தை வளர்ப்பில் கடைபிடிக்க வேண்டியவை

“சில வாரங்களுக்கு முன் சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் சரியாக தேர்வு எழுதாததால் அவளுடைய தாயார் திட்டிய விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதும் தொடர்ந்து அந்த மாணவியின் தாயும் தற்கொலை செய்துகொண்டதும் அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள். கல்வியைப் பெற்றோர்கள் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், பிள்ளைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை, பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

சின்ன ஏமாற்றம், தோல்வியைக்கூட தாங்க முடியாத அளவுக்கு பிள்ளைகளை வளர்ப்பது, தேர்வில் தோல்வி, எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்று அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்குக் காரணமாகிறது. எனவே, ஏமாற்றங்கள், தோல்விகளை தாங்கப் பழக வேண்டும்.

பெற்றோர்கள் தன் பிள்ளைகளை ‘நல்லா படி’ என்று சொல்கிறார்களே தவிர, ‘நல்லதை படி’ வாழ்க்கைக்குத் தேவையானதைப் படி என்று கூறுவதில்லை. மதிப்பெண்ணுக்காகப் படி என்றே எல்லோரும் வழி காட்டுகிறார்கள். பள்ளியிலும், கல்லூரியிலும் தங்கள் ஆசைப்படி அதிக மார்க் எடுத்து, ‘அய்.டி. நிறுவனத்துல வேலை பார்க்கிறான் என் பையன்’ என்று பெருமையாகச் சொல்லும் பல பெற்றோர்களுக்கு, அங்கு தன் பையன் எவ்வளவு மன அழுத்தத்தோடும், சந்தோஷம் இல்லாமலும் வேலை செய்கிறான் என்பதை அறிவதில்லை. அதிக மதிப்பெண், அதிகச் சம்பளம் என்று அவர்களை வதைப்பதை நிறுத்துங்கள். குறைவான மார்க் எடுத்தாலும், மருத்துவம், இன்ஜீனியரிங் படிக்கவில்லை என்றாலும், அவர்கள் எதிர்காலத்தில் யாரையும் ஏமாற்றிப் பிழைக்காமல், சொந்தக் காலில் உழைத்து முன்னேறும் வகையில் வளர்த்தாலே போதும். அதுதான் நல்ல வளர்ப்பாக இருக்கும். பணம் நிறைவான வாழ்க்கையைவிட, மன நிறைவான வாழ்க்கையே முக்கியம்’’.

பிள்ளைகள் குறைவான மதிப்பெண் பெறும்போதோ, தோல்வியடையும்போதோ, “கவலைப்படாதே அடுத்து முயற்சி செய்’’ என்று உற்சாகப்படுத்த வேண்டும் மாறாக, மன உளைச்சலில் உள்ள பிள்ளையை மேலும் புண்படுத்துவது அவர்களைத் தற்கொலைக்குத்-தான் தூண்டும்! உயர்ந்த வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இளம் வயதிலே பிள்ளைகளை பலிகொடுக்கக் கூடாது! ஸீ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *