இன்னமும் கடவுள் நம்பிக்கை தேவையா? நியாயமா?

ஜூன் 01-15

1. கடவுள் சிலை உடைப்பு!
உசிலம்பட்டி, மே, 24-,

மதுரையை அடுத்த உசிலம்பட்டி அருகேயுள்ளது கருமாத்தூர் _ கோட்டையூர். இந்த கிராமத்தில் கோட்டமங்கள கொத்தள பெரிய கருப்புச்சாமிக் கோயிலில் உள்ள அச்’சாமி’?!யின் சிலையின் அரிவாள் கை உடைக்கப்பட்டு தனியாக விழுந்து கிடந்தது!
செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

2. திருத்தணி முருகன் கோயில் விடுதியில் சூதாட்டம்!

திருத்தணி, மே 22,

திருத்தணி முருகன் கோயில் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது! ரூபாய் 2 லட்சத்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது!

3. கோவில் திருவிழாவில் 3 பெண்களிடம் சங்கிலி பறிப்பு!

வாடிப்பட்டி, மே 22, வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் உள்ள பாலதண்டாயுதபாணி வைகாசி விசாகத் திருவிழாவிற்குச் சென்ற பக்தைகள் வீரம்மாள்(35), தேவகி(60), ஆகியோரின்
20 பவுன் சங்கிலி பறிப்பு. கிருஷ்ணவேணி (55), என்பவரின் 4 பவுன்கள் பறிப்பு. பக்தைகளின் தாலிக்கயிறும் பறிபோனது.

4. திருவண்ணாமலை கோவில் உண்டியல் திருட்டு!

திருவண்ணாமலை, மே 22,

திருவண்ணாமலை அருகே கோவில் உண்டியல் பூட்டை உடைத்து அதில் இருந்த பல லட்சம் ரூபாய்களை பக்த கேடிகள், யாரோ (பக்த கோடிகள்போட்ட பணத்தை) ‘அபேஸ்’  செய்துவிட்டார்கள். வழக்கம்போல் காவல்துறையிடம் புகார் -_ விசாரணை!

1. மேலே காட்டியுள்ள நான்கு நிகழ்வுகளும் கடவுளின் சர்வசக்திக்குச் சான்றுகளா? கடவுள் இல்லை என்பதற்கு மறுக்கமுடியாத சான்றுகளா? பக்தர்களே சிந்தியுங்கள்!

2. கடவுள் நம்பிக்கை, பக்தியால் ஒழுக்கம் வளர்ந்துள்ளதா? இல்லையே! கோயில் விடுதிகளில் தங்கி சூதாடித்தானே பணம் பண்ணுகின்றனர்.
சூதாடும் இந்த பஞ்சபாண்டவ தரும சகோதரர்களுக்கு பாரத கலாச்சாரத்தின் பிரதிநிதிகள் என்று பட்டம் வழங்குவதைத் தவிர, பக்தியால் ஒழுக்கம் வளர்ந்தது; அறம் உயர்ந்தது என்று காட்டமுடியாத தோல்விதானே மிச்சம்.

3. தந்தை பெரியார் பொதுக்கூட்டங்களில் கேட்பார். “தன்னைக் காக்கத் தெரியாத கடவுளா உன்னைக் காக்கப் போகிறான்?’’ என்று. அது சரிதானே!
தனது உண்டியலைக் காக்கத் தெரியாத கடவுளா உலகத்தைக் காக்கப் போகிறது?

பக்தி போதையில் உருளும் பக்தர்களே கொஞ்சம் சிந்தித்து, பக்தி போதை தெளிந்து, புத்தி மார்க்கத்திற்கு வருவீர்களாக!

காவல்துறையிடம் புகார் அளித்து, வழக்குபோடுவது என்பது தந்தை பெரியார் கருத்துக்கு ‘கல்வெட்டு செதுக்கல்’ அல்லவா?

“கடவுளை மற; மனிதனை நினை!’’

கி.வீரமணி,
ஆசிரியர், உண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *