பழைமைகளை ஒதுக்குவதோ புதுமைகளை எல்லாம் ஏற்பதோ கூடாது
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற சொற்றொடரின் பொருள் ஆழமானது. பழையன எல்லாம் தள்ளத் தக்கனவோ, புதியன எல்லாம் கொள்ளத்தக்கனவோ அல்ல. எதிலும், கொள்ளத்தக்கன கொண்டு, தள்ளத் தக்கன தள்ளுவதே தகுந்த அணுகுமுறை. கால ஓட்டத்தில் , உலக மாற்றத்தில் உகந்தது என்பதும் ஒவ்வாதது என்பதும் காலம், சூழல், தேவை, விளைவு இவற்றைப் பொறுத்து தீர்மானமாவது. எனவே, பழையது, புதியது என்ற அளவுகோல் சரியன்று. ஏற்றதாயின் ஏற்க வேண்டும்; ஒவ்வாதது என்றால் ஒதுக்க வேண்டும். பழையன கழிதல் என்றால் ஒவ்வாததைக் கழித்தல். புதியன புகுதல் என்றால், புதியதில் ஏற்புடையதை ஏற்றல் என்பதே பொருள்.
விதியை நம்பி வீழ்ந்துவிடக் கூடாது
சிலர் எதற்கெடுத்தாலும் விதிப்படியென்று ஊக்கமின்றி, உற்சாகமின்றி, முயற்சியின்றி சோம்பிக் கிடப்பர். விதி என்று ஏதும் இல்லை. அது யாராலும் நிர்ணயிக்கப்படுவதுமில்லை.
சுனாமியில் ஒரே நேரத்தில் இறந்த லட்சக்கணக்கானோரும் அப்போது சாக வேண்டும் என்றா விதியிருந்தது? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டவன், பிற்படுத்தப்பட்டவன் படிக்கக் கூடாது. அதுதான் இறைவன் விதித்த விதி என்று ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஏய்த்தனர். தற்போது எல்லோரும் படிக்கின்றனர். கடவுள் விதியை மாற்றி விட்டார் என்று அர்த்தமா? அன்றைக்கு காலராவில் கணக்கற்று இறந்தனர். இன்று இறக்கவில்லை. இறைவன் விதியை மாற்றி எழுதிவிட்டாரா?
நம் வாழ்வு நம் கையில். நம் வாழ்வை யாரும் தீர்மானிப்பதில்லை. சூழ்நிலை, இயற்கை, உளநிலை, உடல்நிலை இவை போன்றவையே நம் வாழ்வைத் தீர்மானிக்கின்றன. சூழ்நிலையை விதியென்று கற்பித்துக் கொள்கிறோம். இயற்கையையும், சூழலையும், உடலையும், உள்ளத்தையும் எந்த அளவிற்கு சரியாகப் பயன்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு வாழ்வு நலம் பெறும், வளம் பெறும், சிறக்கும், நீடிக்கும். எதிர்பாராமல் நிகழ்வது சூழல், இயற்கை விளைவு. இது விதியல்ல.
இயல்பறியாது நட்பு கொள்ளக் கூடாது
உறவு என்பது இயற்கையாய் அமைவது. தாய் தந்தை உறவு; அண்ணன் தம்பி உறவு. மாமன் மைத்துனர் உறவு நாம் உறவு கொள்வதால் வருவது. இந்த உறவை நாம் ஆய்ந்து, தேர்ந்து கொள்ளலாம். நட்பு என்பது முழுக்க முழுக்க நாமே தேடுவது. எனவே, இதை நாம் ஒருமுறைக்குப் பலமுறை ஆய்ந்து, தேர்ந்து கொள்ள வேண்டும். பழகுதல் வேறு நட்பு கொள்ளுதல் வேறு. எத்தனைப் பேருடன் வேண்டுமானாலும் பழகலாம். ஆனால் நட்பு என்பது ஆய்வு செய்யப்பட்டதாய், தேர்வு செய்யப்பட்டதாய் இருக்க வேண்டும். இல்லையென்றால் பெருங்கேடு நேரும். ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மைதான் சாந்துயரம் தரும் என்றார் வள்ளுவர்.
சட்ட ஆலோசனைப் பெறாமல் சொத்து வாங்கக் கூடாது
இன்றைக்கு எங்கு பார்த்தாலும் மனைவிற்பனை, வீடு விற்பனை பரவலாக, அதிக அளவில் நடைபெறுகிறது. அந்த அளவிற்கு ஏமாற்றும் மோசடியும், நிறைய நடக்கிறது. எனவே, விலைமதிப்புமிக்க எந்தவொரு பொருளை வாங்குவதாயினும் சட்ட ஆலோசனை பெற்று, அதில் குறை இல்லை, சட்டச் சிக்கல் இல்லையென்பதை வழக்குரைஞர் மூலம் உறுதி செய்யாமல் வாங்கக் கூடாது.
சட்டவல்லுநர் சம்மதமின்றி வாங்கினால், வாழ்நாள் முழுக்க வம்பு, வழக்கு, உளைச்சல், பொருள் இழப்பு என்று பலவற்றை எதிர்கொள்ள நேரிடும். எனவே, சட்ட ஆலோசனையும், ஒப்புதலும் பெற்றே வாங்க வேண்டும்.