சொத்துக்கள் வாங்க சட்டபடியான வழிமுறைகள்

மே 16-31

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தமக்கென்று சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவ்வாறு நிலம் வாங்கும்போது நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் நிலத்தைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, நிலம் வாங்கும்போதும், விற்கும்போதும் நாம் என்னென்ன ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். அது தமிழ்நாடு அரசின் எந்தெந்தத் துறைகளின் கீழ் வருகிறது என்பது பற்றிய விவரங்கள் நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நிலத்தை வாங்கும்போது ஆவணங்களை சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக இருக்கிறது. அதைப்பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன் சொத்தின் அடிப்படையான விஷயமான புல எண் (ஷிuக்ஷீஸ்மீஹ் ழிஷீ) என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

புல எண் (Survey No)

ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும், வட்டங்கள் பல உள்வட்டங்களாகவும், உள் வட்டங்கள் கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு எண் இடப்பட்டுள்ளது. அதற்கு புல எண் (Surve No) என்று பெயர்.

நிலம் தொடர்பான விவரங்கள் பதிவுத்துறை, வருவாய்த்துறை என இரண்டு துறைகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பதிவுத்துறை

ஒரு சொத்தை வாங்கும்போது அல்லது விற்கும்போது கிரயப் பத்திரத்தை (Sale Dead) சார்பதிவாளர் (Sub-registrar Office) அலுவலகத்தில்தான் பதிவு செய்ய வேண்டும்.

வருவாய்த்துறை

வருவாய்த்துறையில் நிலத்திற்கான அனைத்து விவரங்களும், அரசுப் பதிவேட்டில் பதியப் பட்டிருக்கும். அவை முறையே 1. பட்டா (Patta), 2. சிட்டா (Chitta), 3. அடங்கல் (Adangal), 4. ‘அ’ பதிவேடு (‘A’ Register), 5. நிலத்திற்கான வரைபடம் FMP ஆகும்.

பட்டா (Patta):

நிலத்தின் உரிமை நமக்குத்தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம்தான் பட்டா. பட்டாவை வைத்துத்தான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பது உறுதி செய்யப்படுகிறது.

மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர், கிராமத்தின் பெயர், பட்டா எண், உரிமையாளரின் பெயர், புல எண்ணும் மற்றும் உட்பிரிவும், நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா, நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை _ போன்றவை பட்டாவில் அடங்கியிருக்கும்.

சிட்டா

ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட அந்த கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு சிட்டா ஆகும். இதில் சொத்தின் உரிமையாளர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வைக் கட்டிய விவரங்கள் அனைத்தும் இதில் அடங்கும்.

அடங்கல்

கிராமத்தில் இருக்கின்ற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது. பட்டா எண், நிலத்தின் பயன்பாடு போன்ற விவரங்கள் இருக்கும்.

‘அ’ பதிவேடு

பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், ரயத்துவாரி(ர), சர்க்கார்(ச), அல்லது இனாம்(இ), நன்செய்(ந), புன்செய்(பு), மானவாரி(மா), தீர்வு ஏற்படாத தரிசு, புறம்போக்கு, பட்டா எண், மற்றும் பதிவு பெற்ற உரிமையாளரின் பெயர், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை போன்ற விவரங்கள் ‘அ’ பதிவேட்டில் இடம் பெற்றிருக்கும்.

நிலத்திற்கான வரைபடம்

நிலத்திற்கான வரைபடம், நிலம் எவ்வாறு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

கிரையப் பத்திரம்

சொத்து வாங்கும்போது அல்லது விற்கும்போது அந்தக் கிரையப் பத்திரத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். கிரையப் பத்திரத்தில் முக்கியமான பின்வரும் விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
எவ்வளவு அளவு
எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது.

சொத்து விவரம்

போன்றவை சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது. பட்டா எண், அது எந்த கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இதில் இருக்கும். நிலம் வீட்டுமனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பற்றிய விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும். கிரையப்பத்திர முதல் தாளின் பின்பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.

பதிவு எண் மற்றும் வருடம்

சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி

புகைப்படங்களில் சார்பதிவாளரின் கையொப்பம்

பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகத்தின் விவரம்
இரண்டு சாட்சியங்களின் கையொப்பம் மற்றும் முகவரி

மொத்தம் எத்தனைப் பக்கங்கள்,

மொத்தம் எத்தனை தாள்கள்

தமிழ்நாடு அரசின் முத்திரை போன்றவை

1.7.2006ஆம் ஆண்டுதான் கிரையப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும்முறை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும், சொத்து விற்பவரின் புகைப்படம் ஒன்றும் ஒட்டப்-பட்டிருக்கும். இதற்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படம் இருக்காது. 18.05.2009 முதல் இந்த முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு, சொத்து வாங்குபவரின் புகைப்படம் இரண்டிற்கு பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.
(தொடரும்)

——————————————————————————————————————————————————————-

லேடி ஜெக்

இந்தோனேஷியாவில் உள்ள லேடி ஜெக் (Lady Jek) எனும் நிறுவனம், பெண்களுக்காகத் தனி வாகன அழைப்புச் சேவையைத் தொடங்கியுள்ளது.

பெண்கள், தொலைபேசியின் மூலம் இந்தச் சேவையைப் பெறத் தொடர்பு-கொண்டால், இரு சக்கர வாகனத்தில் ஒரு பெண் வருவார். அழைத்த பெண்ணுக்கான ஹெல்மெட்டையும் அவரே தந்து, எங்கே செல்ல வேண்டுமோ அங்கே கொண்டு சேர்ப்பார். இதற்கு, குறைந்த கட்டணமே வாங்குகிறார்கள். லேடி ஜெக் மூலம் பெண்களுக்கான பாதுகாப்புப் பயணம் உறுதி செய்யப்படுவதால், இந்தோனேஷியப் பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *