மனித உரிமைப் போராளி “ஹென்றி டிபேன்”
மனித உரிமைகளுக்காகக் குரல் எழுப்பி வருபவர் ஹென்றி டிபேன். மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மக்கள் கண்காணிப்பகத்தின் தலைவரான இவரின் பணியைப் பாராட்டி, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (ஜெர்மனி) அமைப்பு விருது கொடுத்துக் கவுரவித்திருக்கிறது. இந்த விருதைப் பெரும் முதல் இந்தியர் இவர்தான்.
“உலகளாவிய மனித உரிமைச் செயல்பாடுகளில், அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் முக்கியத்துவம் என்ன?”
“தூக்குத் தண்டனைக்கு எதிராக வலுவாகக் குரல் எழுப்பி, அது பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தியது அம்னெஸ்டி அமைப்பின் மிகப் பெரிய வெற்றி. இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட அம்னெஸ்டி இன்டர்நேஷனல்தான் காரணம். காஷ்மீர் பனிமலைகளுக்குள் இந்திய ராணுவம் செய்த அப்பட்டமான மனித உரிமை மீறல்களை வெளிக் கொண்டுவந்து, அரசாங்கங்களின் மவுனத்தைக் கலைத்தது அம்னெஸ்டி. அது மக்களிடம் பற்றிக்கொண்ட பிறகே, இங்கு தேசிய மனித உரிமை ஆணையத்தின் தேவை உணரப்பட்டது. அதன்பிறகே நம் நாட்டில் 1993ஆம் ஆண்டு தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் மாநிலங்களில், மனித உரிமை ஆணையங்கள் அமைக்கப்பட்டன.
“உங்களுடைய எந்தப் பணியைக் கவனத்தில் கொண்டு அம்னெஸ்டி இந்த விருதை அளித்துள்ளது?”
“மனித உரிமைக் கல்வியை, பள்ளிகளுக்குக் கொண்டு சேர்த்ததற்காக இந்த விருதை அளித்திருக்கிறது அம்னெஸ்டி. இந்த விருது, ஹென்றி டிபேன் என்கிற தனிநபருக்குக் கொடுக்கப்பட்டது அல்ல; ஒட்டுமொத்த மனித உரிமைப் போராளிகளுக்காக, அவர்களின் பணிகளுக்காகக் கொடுக்கப் பட்டது. அத்துடன், மனித உரிமைகள் பற்றியப் புரிதலை _- விழிப்புணர்வைப் பரவலாக்கக் கொடுக்கப் பட்டுள்ளது என நான் கருதுகிறேன்.
“தேசிய மனித உரிமை ஆணையங்கள் இருக்கும்போது, இதுபோன்ற அரசுசாரா மனித உரிமை அமைப்புகளின் தேவை என்ன?”
“மனித உரிமைகளைக் காலில் போட்டு நசுக்குவதே அரசாங்கம்தானே. அதன் அதிகாரக் கரங்களில் படிந்திருப்பது எல்லாம், அது கொன்று அழித்த மனித உரிமைகளின் ரத்தக் கறைதானே. இலங்கையில் என்ன நடைபெற்றது? போரை நடத்தி லட்சக்கணக்கான மக்களைக் கொன்றது அரசாங்கம். ஆனால், அதே அரசாங்கம்தான் அய்.நா சபையில் உறுப்பினராகவும் உள்ளது. அப்படிப்பட்ட நியாயமற்ற ஓர் அமைப்பு இறுக்கமாக இருக்கும்போது, எங்களைப் போன்ற அரசுசாரா மனித உரிமை அமைப்புகளின் தேவை அதிகமாக இருக்கிறது. அய்.நா போன்ற அமைப்புகள் தங்களின் நோக்கத்தில் இருந்து விலகாமல் பயணிப்பதற்கு, எங்களைப் போன்ற அமைப்புகள்தான் அழுத்தம் கொடுக்க முடியும்; அதற்கான நிர்பந்தத்தை உருவாக்க முடியும். மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இதுபோன்ற அமைப்புகளின் பணி அத்தியாவசியம்.
“மக்கள் கண்காணிப்பகத்தின் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த பணிகளாக எவற்றைச் சொல்வீர்கள்?’
“மனித உரிமைக் கல்வியை, தமிழகத்தின் பட்டிதொட்டிகளுக்கும் கொண்டுசென்றதே மக்கள் கண்காணிப்பகத்தின் மிகச் சிறந்த பணி. ஆறு மாவட்டங்களில் 120 பள்ளிகளில் மனித உரிமைக் கல்வியைக் கொண்டுசேர்த்துள்ளோம். இதை, கடந்த 15 ஆண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறோம். இதற்காக தமிழில் நாங்கள் கொண்டுவந்த புத்தகம்தான், தற்போது இந்தியாவில் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படுகிறது. இதன்விளைவாக, பெண் குழந்தைகள் பற்றிய பார்வை மாறியுள்ளது. பெண் சிசுக் கொலைகள் பெரிய அளவில் குறைந்தன. குழந்தை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு வேர்விடத் தொடங்கி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரத்தில், தலித் மக்கள் தங்களின் அடிப்படைப் பிரச்சினை ஒன்றுக்காக கூடி போராட்டம் நடத்தினார்கள். அதில், சீருடை அணியாத காவலர் ஒருவர் தலையிட்டு இடையூறு செய்தார். அவர் அந்த ஊரின் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர். போராட்டம் நடத்திக்கொண்டிருந்த தலித் மக்களுக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஒருவர் ஒரு கல்லை எடுத்து காவலரை நோக்கி வீச, அதில் தாக்கப்பட்ட அந்தக் காவலர் மண்டை பிளந்து இறந்துவிட்டார். அந்த மாவட்டத்தின் அப்போதைய காவல் துறை கண்காணிப்பாளர், உடனடியாக போலீஸ் படையை இறக்கி, ஊரைச் சின்னாபின்னம் ஆக்கினார். 179 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஊருக்குள் கட்சித் தலைவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் தொடர் போராட்டத்துக்குப் பிறகு, காவல் துறையால் உடைத்து நொறுக்கப்பட்ட பொருட்கள், கண்காட்சியாக வைக்கப்பட்டன. இந்தச் சம்பவம் நடந்தபோது, ஓ.பி.எஸ் தமிழ்நாட்டின் முதலமைச்சர். பிறகு மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சராக வந்தபோது, அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு, உடனே சங்கரலிங்கபுரம் வந்தார். நொறுங்கிய பொருட்களை வைத்து நாங்கள் அமைத்திருந்த கண்காட்சியைப் பார்த்தார். உடனடியாக 10 பேர் தவிர்த்து 169 பேரை வழக்கில் இருந்து விடுவித்தார். 46 லட்ச ரூபாய் நஷ்டஈடு அறிவித்தார்.
`வீரப்பன் வேட்டை’ என்ற பெயரில் சிறப்பு அதிரடிப்படை சேலம், தர்மபுரி மாவட்டங்களில் மிகப் பெரிய கொடுமைகளை நிகழ்த்தியது. பலரை வீரப்பனின் கூட்டாளிகள் என தடா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது. நாங்கள் அந்த ஊர்களில் எங்கள் பணிகளைத் தொடங்கிய பிறகு சிறப்பு அதிரடிப்படையின் கொடுமைகள் பெரும் அளவில் கட்டுப்படுத்தப் பட்டன. ஆனாலும், 174 பேர் தடா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, நீதிபதி சபர்வால், `இவர்களுக்கு ஏன் தூக்குத் தண்டனை கொடுக்கக் கூடாது?’ எனச் சொல்லி, அவர்களில் நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தார். அதன்பிறகு உச்ச நீதிமன்றத்தில் போராடி அவர்களுடைய தூக்குத் தண்டனையை ரத்து செய்தோம். 120 குடும்பங்களுக்கு 2 கோடியே 80 லட்சம் ரூபாய் பெற்றுக் கொடுத்தோம். இது மிக மிகச் சிறிய தொகைதான். இதை வெற்றி எனச் சொல்ல முடியாது. ஏனென்றால், அங்கு பல கொடுமைகளைப் புரிந்த காவல் துறை அதிகாரிகளுக்கு எந்தத் தண்டனையும் வாங்கிக் கொடுக்க முடியவில்லை.”
“என்.ஜி.ஓ-க்கள் வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு அந்த நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறதே?”
“என்னைப்போல் மனித உரிமைச் சிந்தனை உள்ளவன், மனித உரிமைகளை மதிக்கும் ஒருவன் எங்கு இருந்தால் என்ன? அதே சிந்தனையுடன் ஏதோ ஒரு தேசத்தில் போராடும் ஒருவனுக்கு அவன் உதவினால் என்ன? ஏன் அவன் உதவக் கூடாது. இங்கு உள்ள அரசாங்கம், மற்றும் தனியார் பெரும் முதலாளிகள் ஆகியோர் நிதி உதவி கொடுக்கட்டுமே… அவர்கள் கொடுக்க மாட்டார்கள். கொடுத்தால், எங்கு இருந்தெல்லாம் பிரச்சினைகள் வரும் என அவர்களுக்கும் தெரியும்.