திடாவிடர் வரலாற்றின் சிகரம் திராவிடர் கழக ஜாதி ஒழிப்பு – சமூக நீதி மாநில மாநாடுகள்!

ஏப்ரல் 01-15

திடாவிடர் வரலாற்றின் சிகரம் திராவிடர் கழக
ஜாதி ஒழிப்பு – சமூக நீதி மாநில மாநாடுகள்!
(பெரியார் உலகம் திடல், சிறுகனூர், திருச்சி – 19,20 மார்ச் 2016)

– மஞ்சை வசந்தன்

அரசியல் கட்சிகள் எல்லாம் விரல்வைத்து வியக்க; ஆரிய பார்ப்பனர்களும், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும் அதிர்ந்து நொறுங்க கருஞ்சட்டைத் தியாக மறவர்களோடு, கழக பற்றாளர்களும் கலக்க தொடக்கம் முதல் முடிப்பு வரை, துடிப்புடனும், தூக்கலுடனும் எழுச்சியும், ஏற்றமும் மிக்கதாய் மாநாட்டு நிகழ்வுகள் அமைந்தன.

 

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் மறைவுக்குப் பின் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொறுப்பேற்ற பின், அய்யா போட்ட அடித்தளத்தில் கிளை பரப்பி ஒவ்வொன்றிலும் உச்சம் தொட்டதோடு, பல்துறைகளிலும் வளர்ச்சியை உச்சத்திற்கு உயர்த்தி வருகிறார்.

அவருக்குத் துணை நின்று வினையாற்றும் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் காலத்திற்கேற்ற செயல்பாடுகளால் கழகம் எழுச்சியும், எழிலும், நேர்த்தியும், கீர்த்தியும் பெற்று ஒளிவீசுகிறது.

பெரியார் திடலில் நடைபெறும் பொங்கல் விழாக்களானாலும், மற்ற விழாக்களானாலும் கண்ணையும், கருத்தையும் ஒருசேரக் கவர்ந்து வருகின்றன.

அவற்றின் உச்சமாக, அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்தில், அனைவரும் வியக்கும்படி, எந்த கட்சியும் இதுவரை இவ்வளவு பிரமாண்டமாய் பேரெழுச்சியாய் செய்ததில்லை என்று எல்லோரும் கூறும் அளவிற்கு திருச்சிக்கருகில் சிறுகனுரில் ஜாதி ஒழிப்பு, சமூக நீதி மாநில மாநாட்டைத் திராவிடர் கழகம் நடத்தி வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.
மாநாட்டிற்கு இடத்தைத் தேர்வு செய்ததிலே திராவிடர் கழகத்திற்கும் அதன் தலைவருக்கும் முதல் வெற்றி. பெரியார் உலகத்திடல் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதோடு, பெரியார் உலகப் பணிகளின் துவக்கப் பணிகளை இம்மாநாட்டின் மூலம் தொடங்கி வைத்துவிட்டார் ஆசிரியர்.

19.03.2016 அன்று காலை 9.30 மணிக்கு திருத்தணி முனைவர் பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசை நிகழ்ச்சியுடன் முதல் நாள் மாநாடு தொடங்கியது.

காலை 10.30 மணியளவில் கழகப் பொருளாளர் டாக்டர் சு.பிறைநுதல் செல்வி அவர்கள் கழகக் கொடியை 95 அடி உயர கம்பத்தில் ஏற்றிய பின், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் வரவேற்புரையாற்ற, செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் மாநாட்டைத் திறந்து வைக்க, மாண்பமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் அவர்கள் சமூகநீதிக் கண்காட்சியைத் திறந்துவைக்க, ஜாதி _ தீண்டாமை ஒழிப்பு மாநாடு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் தொடங்கியது.

தந்தை பெரியார் படத்தை, ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் இரா.அதியமான் அவர்களும்,

அன்னை நாகம்மையார், மணியம்மையார் படத்தை சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களும்,

அறிஞர் அண்ணா படத்தை மேனாள் தமிழக அமைச்சர் கே.என்.நேரு அவர்களும்,

சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தை தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராஜகிரி கோ.தங்கராசு அவர்களும் திறந்துவைத்து உரையாற்றினர்.

நிறைவாக சிறப்பு விருந்தினர் ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெர்மனி பெரியார் பண்பாட்டு அமைப்பைச் சேர்ந்த, முனைவர் உல்ரிக் நிக்லஸ் அவர்கள் தமிழில் சிறப்புரையாற்றினார்.

அடுத்த நிகழ்வாக தீர்மானங்கள் நிறைவேற்றும் நிகழ்வு நடைபெற்றது. முதல் நாள் மாநாட்டுத் தீர்மானங்களாக 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மான அரங்க நிகழ்விற்கு வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் அவர்கள் தலைமை ஏற்க, பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாநிலச் செயலாளர் மஞ்சை வசந்தன் அவர்கள் வரவேற்புரையாற்ற, தீர்மானங்களை கழகப் பொறுப்பாளர்கள் முன்மொழிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து உறந்தை ‘கருங்குயில்’ கணேஷ் குழுவினரின் இன எழுச்சி இசை நிகழ்வு நடைபெற்றது.

மாலையில் முதல் நிகழ்வாக ஜாதித் தீண்டாமை ஒழிப்பு கருத்தரங்கம். பொதுச்செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன் அவர்கள் தலைமை ஏற்க, பொதுச்செயலாளர் இரா.செயக்குமார் அவர்கள் வரவேற்புரையாற்ற, “அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்குப் பாதுகாப்பு’’ என்ற தலைப்பில் சு.குமாரதேவன் அவர்களும், “அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை’’ என்ற தலைப்பில் டாக்டர் க.அன்பழகன் அவர்களும், “ஜாதி ஒழிப்பில் திராவிடர் கழகத்தின் முத்திரை’’ என்ற தலைப்பில் இராம.அன்பழகன் அவர்களும், “பார்ப்பன ஆதிக்கக் கூடாரம் பா.ஜ.க._சங்பரிவார்’’ என்ற தலைப்பில் பூவை.புலிகேசி அவர்களும், “ஜாதி_அரசியல்’’ என்ற தலைப்பில்
இரா.பெரியார்செல்வன் அவர்களும் அரிய உரையாற்றினர்.

மாலையில் இரண்டாம் நிகழ்வாக பல்வேறு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் நுட்பமும், எழுச்சியும், விழிப்பும் உடைய மாணவர்கள் ஆற்றிய உரைகள் மாநாட்டின் முகப்பில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களாகும்.

ஜாதி ஒழிப்பையும், சமூக நீதியையும் உள்ளடக்கி, அவர்கள் ஆற்றிய அறிவு செறிந்த ஆழமான, உணர்ச்சியுரைகள் மதவெறிக் கூட்டத்தை நொறுக்கி மண்ணோடு மண்ணாக்கியது.

நிகழ்ச்சிக்கு மாநில மாணவரணிச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை தாங்க மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன் வரவேற்புரையாற்றிய பின், புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ஆனந்த கிருஷ்ணன் அவர்கள் ஆற்றிய ஆய்வுரை அனைவரையும் கவர்ந்ததோடு எழுச்சியும், உணர்ச்சியும் கொள்ளச் செய்தது.

அதேபோல் சென்னை அய்.அய்.டி. மாணவர், அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த க.ரமேஷ் ஆற்றிய உரையும் சிறப்புக்குரியதாகும். புனேயைச் சேர்ந்த இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவப் பேரவைத் தலைவர் க.ஹரிசங்கர் நாச்சிமுத்துவும், அய்தராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வு மாணவர் த.ஏக்னஸ் அமலா அவர்களும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சிவசங்கரன் அவர்களும், அறிவியல்சார் மாணவர் பேரவையைச் சேர்ந்த ஆந்திரா _ தெலங்கானா ஒருங்கிணைப்பாளர் ஜி.பிரசாத் அவர்களும் ஆற்றிய உரைகள் மாணவர்களின் கொள்கைத் தெளிவையும், வழிகாட்டு திறத்தையும், போர்க்குணத்தையும் புலப்படுத்தியதோடு, நாட்டு மக்களையும் எழுச்சி கொள்ளச் செய்தன.

இந்துத்துவத் தீவிரவாத சங்பரிவாரங்கள் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் பெயரில் இணையும் மாணவர்களை அரசியல் எதிரிகளாக கருதி, மாணவர்களை ஒடுக்கிவருகின்ற மத்திய இந்துத்துவ ஆட்சியின் வகுப்புவாத வெறியாடங்கள்குறித்தும், மாணவர்கள்மீதான ஒடுக்கு முறைகள் குறித்தும், தந்தை பெரியார் ஒருவர் மட்டுமே இதற்கு தீர்வு என்று மாணவர்கள் குறிப்பிட்டபோது மாநாட்டின் அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

மாணவர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாணவர்களுக்கு எப்போதும் கழகம் உறுதுணையாக இருக்கும் என்று குறிப்பிட்டபோதும் பலத்த கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது.

குடந்தை அறிவுவிழியின் இனஎழுச்சி நடனம் நடைபெற்றது. அடுத்து “பெரியார் காணும் சமதர்ம சமுதாயம்’’ ஒளி ஒலி நாடகம் நடைபெற்றது.

அன்றைய நிறைவு நிகழ்வாக அறிஞர் பெருமக்களின் சிறப்புரைகள் அமைந்தன. பொறியாளர் சைவத்திரு மு.பெ.சத்தியவேல் முருகனார், மேனாள் தமிழக அமைச்சர் வி.வி.சாமிநாதன், வழக்குரைஞர் த.வீரசேகன், வழக்குரைஞர் ச.இன்பலாதன், கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் சிறப்புரையாற்ற, நிறைவுரையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றினார். இந்நிகழ்விற்கு இணைப்புரையை தெ.வீரமர்த்தினி, இறைவி ஆகியோர் வழங்க, திருச்சி மாவட்டச் செயலர் சு.கணேசன் நன்றி கூற முதல் நாள் நிகழ்ச்சிகள் எழுச்சியோடு நிறைவுற்றன.

20.3.2016 இரண்டாம் நாள் சமூக நீதி மாநாடு. காலை 9 மணிக்கு திருத்தணி பன்னீர்செல்வம் தெற்கு நத்தம் சித்தார்த்தன் குழுவினரின் தமிழிசைப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்சுவை நிகழ்ச்சி.

காலை 10 மணியளவில் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில், லால்குடி மாவட்ட தே.வால்டேர் வரவேற்புரையாற்ற, இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் தமிழ்நாடு தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்கள் மாநாட்டைத் திறந்து வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி மாண்பமை து.அரிபரந்தாமன் அவர்கள் புரட்சியாளர் அம்பேத்கர் படத்தைத் திறந்து வைத்து அரியதொரு சமூகநீதி உரையை சட்டரீதியாக ஆற்றினார்.

அடுத்து முனைவர் ப.காளிமுத்து அவர்கள் மகாத்மா ஜோதிபா பூலே படத்தையும், எஸ்றா சற்குணம் அவர்கள் கல்வி வள்ளல் காமராஜர் படத்தையும் திறந்து வைத்து சமூகநீதி பற்றி உரையாற்றினர்.

சிறப்பு விருந்தினர் உரையை பூலே குடும்ப வழிவந்த அய்ந்தாம் தலைமுறை பேத்தி நீதாதாய் ஹேலோபூலே ஆற்றினர்.

அடுத்து தீர்மான அரங்கம். அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச்சங்கக் கட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி அவர்கள் தலைமையில், அரியலூர் மண்டல தலைவர் செயங் கொண்டம் சி.காமராஜ் அவர்கள் வரவேற்புரையாற்ற இரண்டாம் நாள் 25 தீர்மானங்கள் பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழி அவர்களால் முன்மொழியப் பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இரண்டாம் நாள் பிற்பகல் “சமூக நீதியை வென்றெடுப்போம்’’ என்னும் தலைப்பில் சுப.வீரபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில்,
தலித் முரசு ஆசிரியர் புனிதபாண்டியன் அவர்களும், எழுத்தாளர் ஓவியா அவர்களும், நிறங்கள் நிறுவனர் சங்கரி அவர்களும், டிசம்பர் 3 இயக்கம் தலைவர் தா.மீ.நா.தீபக் அவர்களும், தமிழ் லெமுரியா ஆசிரியர் சு.குமணராசன் அவர்களும், நாகை ஜீவா அவர்களும், எழுத்தாளர் வே.மதிமாறன் அவர்களும் உரையாற்றினர்.

அடுத்து கலை நிகழ்ச்சியாக தெலங்கானா நாத்திக சமாஜம் ஜி.டி.சாரய்யா குழு, சென்னை இனநலம் குழு, கலை அறப்பேரவை மு.கலைவாணன் குழு இணைந்து நடத்திய “போர் முழக்கம்’’ இசை நிகழ்ச்சி மற்றும் குறு நாடகங்கள் கிளர்ச்சியூட்டும் வகையில் துடிப்போடு நடைபெற்றன.

மாலை நிகழ்வாக முக்கிய தலைவர்கள் பங்கேற்ற சிறப்புரை நிகழ்வு நடைபெற்றது.

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் அவர்களும், எழுத்தாளர் பழ.கருப்பையா அவர்களும் உரையாற்றிய பின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா அவர்கள் இராகுல் காந்தி அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை படித்து கருத்துரையாற்றினார்.

தொடர்ந்து, நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் பேரவை அமைப்பாளர் வி.ஹனுமந்த ராவ் அவர்களும் சிறப்புரையாற்ற, மாநாட்டுப் பேருரையை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருமை பொங்க ஆற்றினர். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றால் ஜாதி ஒழிப்பும், சமூக நீதி காப்பும் கட்டாயம் நடைபெறும். தீர்மானங்களில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.

மாநாட்டுப் பந்தல் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிய மாநாட்டு நிறைவுரையை தமிழர் தலைவர் உணர்ச்சியுரையாக ஆற்றினார். இணைப்புரை கோவி.லெனின் வழங்க, நன்றியுரை திருச்சி மண்டலச் செயலாளர் மு.நற்குணம் ஆற்ற மாநாடு மனநிறைவுடனும், மகிழ்ச்சிவுடனும் நிறைவுற்றது.

மாநாட்டுத் தீர்மானங்களை செயல்படுத்தச் செய்ய அனைத்து தியாகங்களுக்கும் தயார் என்ற உறுதியுடன் கருஞ்சட்டைத் தோழர்களும், பெரியார் பற்றாளர்களும் புறப்பட்டுச் சென்றனர்.

திராவிடர் இயக்க வரலாற்றில்
இந்த மாநாடுகள் சிகரமாக என்றும் திகழும்!

—————————

மாநாட்டுப் பந்தலின் முகப்பும், அரங்கமும்!

எந்தப்பக்கமாக நின்று பார்த்தாலும் மாநாட்டுப்பந்தலின் நீளஅகலத்தினை ஒருசேர பார்க்க முடியவில்லையே என்பது ஏக்கமாக இருந்தாலும், அந்த ஏக்கமே அடேயப்பா… திராவிடர் கழகத்தின் மாநாட்டுப் பந்தலின் முகப்பாயிது! என்று நெஞ்சு கொள்ளாத பெருமையாக மாறிப்போகிற விந்தை பார்க் கின்ற யாருக்கும் ஏற்படுவதை தவிர்க்கவே முடியவில்லை.

இது திராவிடர் கழகத்தின் மாநில மாநாடா? இல்லை இந்திய துணைக் கண்டத்தின் சமூகநீதி மாநாடா? என்று அய்யுறுகின்ற அளவுக்கு சமூகநீதிக்காகப் பாடுபட்ட அனைத்து தலைவர்களும் முகப்பில் அலங்கரித்தனர்.

அம்பேத்கர் படத்துடன் கூடிய பந்தலின் முகப்பு ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களை அதிர்ச்சியுறச் செய்வதாய் இருந்தது-.

உள்ளே நுழைந்தால் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உள்ளரங்கம் கண்களைக் கவர்ந்தன. அப்பப்பா… எத்தனை தூண்கள், எத்தனை விசிறிகள், எத்தனை விளக்குகள்!  அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார் பெயரில் அமைந்த மேடையின்  வனப்பும் ஈர்ப்பும் அப்பப்பா… வார்த்தைகள் ஏது!

———–

பந்தலும் அரங்கமும்

முதல் நாள் ஜாதி – தீண்டாமை ஒழிப்பு மாநாடு. இரண்டாம் நாள் சமூக நீதி மாநாடு ஆகிவற்றுக்கான பந்தல் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரிலும், அரங்கம் அன்னை நாகம்மையார் அன்னை மணியம்மையார் ஆகியோர் பெயரிலும் அமைந்திருந்தன.

—————–

மாநாட்டில் தலைவர்களின்
வாழ்த்துச் செய்திகள் படிக்கப்பட்டன.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்த்துச் செய்தியை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும், காங்கிரசு கட்சியின் தேசியத் துணைத்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி அவர்களின்  வாழ்த்துச் செய்தியை தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் ஊடகப்பிரிவுத் தலைவர் கோபண்ணா அவர்களும், பிகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்களின் வாழ்த்துச் செய்தியை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களும், அய்க்கிய ஜனதா தளத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்யாதவ் அவர்களின் வாழ்த்துச்செய்தியை அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி அவர்களும், அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.தியாகி அவர்களின் வாழ்த்துச் செய்தியை திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன் அவர்களும் படித்தனர்.

—————

மறிய போராட்டம் தமிழர் தலைவர் அறிவிப்பு

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தும், செயல்படுத்தக்கோரும் போராட்ட அறிவிப்புத் தீர்மானத்தை முன்மொழிந்தார். பல்லாயிரக்கணக்கானவர்கள் எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர். வழிமொழிந்து ஏற்றுக்கொண்டனர்.

இரா.அதியமான் அவர்களைத் தலைவராகக் கொண்ட ஆதித்தமிழர் பேரவையும் இப்போராட்டத்தில் பங்கு கொள்ளும் என்று அதியமான் அறிவித்தார்.

சென்னையில் நடக்கவிருக்கும் போராட்டம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறும் என்றும்,
போராட்ட நாள் 18.4.2016, இது குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்ட நாள்! என்றும் அறிவிக்கப்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலும் வட்டாட்சியர் அலுவலகங்களின் முன்பும், மாவட்ட இந்து அறநிலையத் துறை அலுவலகம் முன்பும், மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டில் அறிவித்தபோது பலத்த கரவொலி கோடையிடியாக  ஒலித்தது.

6996 பேரின் பெயர்களைக் கொண்ட முதல் போராட்ட வீரர் பட்டியல் கழகத் தலைவரிடம் பலத்த கரவொலிகளுக்கிடையே கழகப் பொறுப்பாளர்களால் வழங்கப்பட்டது.
நமது முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் பொத்தனூர் க.சண்முகம், ராஜகிரி கோ.தங்கராசு ஆகியோரும் மறியலில் பங்கேற்க கையொப்பமிட்டுள்ளனர்.

———————

சமூக நீதி வரலாற்றுக் கண்காட்சி

திராவிடர் இயக்கம் உருவாக்கப்படுவதற்கு முன்பும், அதற்குப் பின்பும் கல்வி வேலை வாய்ப்புகளில் நமது நிலை எப்படியிருந்தது என்பதைப்பற்றிய அரிய விளக்கங்கள் படங்களுடன் தனியே ஒரு கண்காட்சி  மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்காட்சியைக் கண்டுகளித்தனர்.

அதில் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் பெண்களின் நிலை எப்படியிருந்தது என்பதில் தொடங்கி, டாக்டர் பல்புவுக்கு திருவிதாங்கூர் திவான் டி.ராமராவ் என்ற பார்ப்பனரிடம் ஏற்பட்ட அனுபவம், 1895இல் ரோமன் கத்தோலிக்க மதத்தில் அம்மக்கள் சேர்ந்த வரலாறு, 1899இல் பஞ்சமருக்கு இடமில்லை என்று அபிராமி சுந்தரி சரித்திர நாடகத்திற்கு  அறிவிப்பு செய்யப்பட்டிருந்தமை,

நீதிபதி முத்துசாமி அய்யரின் மனுநீதிமன்றத் தீர்ப்பு மற்றும் சமூகநீதிப்போராட்டங்கள் என்று ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெற்று மாநாட்டுக்கு வந்திருக்கின்ற மக்களை காந்தம் போல் கவர்ந்திழுத்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *